அமெரிக்காவில் 10ஆம் தமிழ் இணைய மாநாடு, 2011

1

ti2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), 10ஆம் தமிழ் இணைய மாநாட்டினை நடத்த உள்ளது. 2011 சூன் 17 – 19 வரை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு நிகழவுள்ளது. இது தொடர்பாக, உத்தமம் அமைப்பின் செயலர் – இயக்குநர் சு.மணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர்.  நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும்  இசைந்துள்ளார்.  உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுவார்.

இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் கட்டுரைகளைப் பெற்று அவற்றின் சிறந்த கட்டுரைகளை மாநாட்டில் படைத்திடும் வழிவகைகளைச் செய்வதோடு இம்மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் சிறப்புச் சொற்பொழிவு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும். இம்மாநாட்டின் மையக் கருத்தாக “கணினியினூடே செம்மொழி” என்னும் தலைப்பில் கணினி வழியாகத் தமிழ் மொழி இலக்கியங்களைச் செவ்வனே ஆய்ந்தறியும் வழிவகைகளைப் பற்றிக் கலந்துரையாட முனைந்துள்ளோம்.

இம்மாநாட்டில் கட்டுரைகளைப் படைக்க விரும்புவோர் கணினி வழித் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் வழிவகைள் குறித்தும் கணினி வழித் தமிழ் ஆய்வுகள் குறித்தும் தங்களின் கட்டுரைச் சுருக்கங்களை மார்ச்சு மாதம் 15ஆம் தேதிக்குள் ti2011@infitt.org என்னும் முகவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.  வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் தங்களின் பணி நிறுவனங்களினின்று இதற்கான நிதியுதவியை விரைவில் பெறவும் அமெரிக்க நாட்டின் கடவுச் சீட்டினை விரைவில் பெறவும் தங்களின் கட்டுரைச் சுருக்கம் எங்களை அடைந்தவுடன் எங்கள்  முடிவுகளை உடனுக்குடன் தங்களுக்குத் தெரிவிக்க முயல்வோம்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் உங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி வேண்டுகிறோம்.

· கணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு: தமிழ் இலக்கியத் தரவை அலசி ஆய்தல், தமிழ் இலக்கியங்களுக்கான தேடுபொறிகளை அமைத்தல், தமிழ் இலக்கியங்களின் காலங்களை அறுதியிடல், இலக்கிய ஆசிரியர்களின் நடையை அறிதல் போன்ற கணினி வழி இலக்கிய ஆய்வு குறித்தான கணினி நிரலிகள்.

· தமிழ்க் கணினி நிரல்கள்: சொற்பகுப்பு நிரலிகள், சொற்திருத்திகள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதிகள் அமைத்தல்.

· தரவு மென்பொருள், தமிழ் குறித்தான நிரலிகள் மற்றும் கணினி செயலாக்கிகள்.

· தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் தர நிர்ணயப்படுத்தல்.  இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள்.

· இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், தமிழ்த் தேடுபொறிகள்.

· தமிழ் இணையம்: தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா நிரலிகள், செய்திப்பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப் பக்கங்கள்,  தமிழ் மின்வணிக நிரலிகள்.

· இணையம் மற்றும் கணினி வழி தமிழ்க் கற்றல் மற்றும் கற்பித்தல்

· தமிழ்த் தரவுகள், மின்னகராதிகள், மின்வணிக முறைகள்.

மேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் தங்களது கட்டுரையைப் படைக்க விரும்புவோர், 2011 மார்ச்சு 15ஆம் தேதிக்குள் கட்டுரைச் சுருக்கத்தை எங்களுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.  உங்களது கட்டுரைகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம். தமிழில் உள்ள கட்டுரைகளைத் தமிழ் ஒருங்குறியில் மட்டும்தான் பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வேறு எழுத்துருக்களில் எழுதினால் தாங்கள் அதை ஏதாவது உரு மாற்றி நிரலி கொண்டு தமிழ் ஒருங்குறிக்கு மாற்றி எங்களுக்கு அனுப்பவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மாநாட்டுக் குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வுசெய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக் கட்டுரையை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும். கட்டுரைகளை மாநாட்டு மலரிலும் குறுவட்டிலும் வெளியிடுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்களை 2011 ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்வோம். கட்டுரைகளைப் படைத்தவர்கள் நேரில் மாநாட்டுக்கு வருகை தந்து தங்களது கட்டுரைகளைப் படைக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் வேறு ஒருவர் படைக்க நேரிட்டால், அவர் அக்கட்டுரையின் பொருளடக்கம் நன்கு அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு பக்கக் கட்டுரைச் சுருக்கத்தை மாநாட்டு அலுவலகத்துக்கு ti2011@infitt.org என்ற மின் முகவரிக்கு அனுப்புவதோடு கட்டுரைச் சுருக்கத்தின் ஒரு நகலை ti2011-cpc@infitt.org என்ற முகவரிக்கும் 2011 மார்ச்சு மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மாநாடு குறித்து உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் மாநாட்டு அலுவலகத்தை ti2011@infitt.org என்ற மின்முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வாறு உத்தமம் அமைப்பின் செயலர் – இயக்குநர் சு.மணியம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

தமிழ் இணையம் 2011, மாநாட்டு வலைப்பக்கம்:
http://www.infitt.org/ti2011
http://www.tamilinternetconference.org

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்காவில் 10ஆம் தமிழ் இணைய மாநாடு, 2011

  1. கட்டுரைச் சுருக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலம், 2011 மார்ச்சு 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பெற்றுள்ளது. மேலும் தகவல்களுக்குப் பார்க்க – http://www.tamilinternetconference.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.