குறுந்தொகை எனும் புதையல்

0

சக்தி சக்திதாசன்
sakthidasan இன்று காலை என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழுந்த ‘உயிரெழுத்து’ குழுமத்தின் அஞ்சல் தொகுப்பின் வாயிலாக பார்த்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

ஆமாம், இலண்டன் சுரங்க ரயில் பாதையில் உள்ள விளம்பரப் பலகை ஒன்றில் குறுந்தொகையும் அதன் ஆங்கில விளக்கமும் காணப்படுகிறது என்ற செய்தியே அது.

கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்துள்ள தருணத்தில் இச்செய்தி என்னை ஒரு முறை உலுக்கியது.

குறுந்தொகை என்னும் அந்த இலக்கியப் பேழையைத் திறந்து பார்க்கும்போது அதனுள் காணப்படும் முத்துகள் தான் எத்தகைவை? எண்ணிப் பார்க்கும் போதே நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. எம் சான்றோர்களின் எண்ணத்தில் மலர்ந்து விரிந்த தாமரைகளின் அழகு என்னை நான் தமிழன் என்று எண்ணும்போது பெருமைப்பட வைக்கிறது.

இது இன வெறியனின் / மொழி வெறியனின் கூக்குரல் அல்ல. மனிதாபிமானத்தின் உச்சத்தில் நாகரீகத்தின் எல்லையை மனு தர்மத்தின் வாயிலாக வரையறுத்த முன்னோர்களைக் கொண்ட ஒரு மொழியை எனது தாய்மொழியாகக் கொண்டவன் என்னும் பெருமிதத்தால் எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம். மற்றைய மொழிகளுக்கு உகந்த மரியாதை அளித்து மனிதாபிமானத்தின் அத்திவாரத்தில் நின்று ஆடிப் பாடும் ஒரு பொழுது இது.

இதோ குறுந்தொகையின் ஒரு பாடலை வியந்து நோக்கி, அதனுள் புதைந்திருக்கும் புதையலைக் கண்டு அதை என் வழியில் ஒரு கவிதையாக்கிப் பார்க்க என் மொழி எனக்குக் கொடுத்த சுதந்திரத்தை ஆழச் சுவாசிப்பதனால் உள்ளத்தில் எழும் ஆனந்த அலைகள் அளவிலடங்கா.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

உன் தாயும் என் தாயும் எவ்வகையில் உறவினர் என்பதை அறிவாயோ? போகட்டும் விட்டுவிடு, உன் தந்தை என் தந்தைக்கு என்ன முறை அதையாவது அறிவாயா? தந்தை, தாய் பற்றிப் பேசுவதை விட்டுவிடுவோம். அட நீயும், நானும் எவ்வழியால் ஒருவரை ஒருவர் அறிவோம் என்பதாவது உனக்குப் புரிகிறதா? மூட மனிதனே, எல்லாம் அறிந்தவன் என்னும் அகந்தையும் மற்றையோரை மதிக்காத உன் பண்பும் இவ்வுலகினில் எம்மாத்திரம்? ஒன்றை மட்டும் புரிந்துகொள் செம்மணலின் பெய்யும் மழையானது, அம்மண்ணுடன் எவ்வாறு கலந்து ஐக்கியமாகிறதோ அதுபோல கலக்கும் அன்பு கொண்ட நெஞ்சங்களில் மிகும் அன்பே உலகில் அறுதியானது. ஆமாம் அன்பே சிவம்.

குறுந்தொகையின் விளக்கத்தை விளங்கிக்கொள்ள என் மொழி கொண்ட அழகான சொற்களின் வழி நெஞ்சத்தினுள் கொள்ளும் கருத்தும் வேறுபடுகிறது அல்லவா?

மனிதாபிமானத்தின் அடிப்படையே அன்பு என்பது ஒருவகை இந்த அன்பின் வடிவங்கள் தான் எத்தனை பாசம், நட்பு, காதல்.

குறுந்தொகையினுள் புதைந்துள்ள புதையல் நறுமணங்களால் ஆன, அற்புத வாடா மலர்கள் அல்லவா?

இதோ என் அன்னை தந்த அழகு மொழி கொண்டு அலையாய் எழுந்த ஒத்த கவிதை,

என் அன்னைக்கு யாது உறவாம்
உன் அன்னை? கூறாய் மனிதா?
எந்தையும் உந்தையும் எவ்வகையில்
உறவானார்? அதுவும் நீ அறியாய்
உனை உனக்காக மனிதா
உள்ளத்தில் உதித்ததை
உரைக்கின்றேன் கேளாய்!
செம்மண்ணான நம் மண்ணின் மீது
புதுப்புனலாய் பாயும் மழைநீர்
கலந்தாங்கு சேறாய் மாறும்போது
பிரித்திட வழியில்லா வகையில்
கட்டுண்ட நெஞ்சங்களை இணைக்கும்
அன்பொன்றே உலகில் நிஜம் என்றே
அறிந்திடுவாய் அன்பு மனிதா

**********************************

நண்பர்களே! நான் இலக்கியம், இலக்கணம் முற்றாகக் கற்றவனில்லை. முத்தமிழின் சொற்சுவையில் என்னை இழந்ததனால் உணர்வுகளைத் தாளில் வடித்து, உன்னதமான உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்பவன். சுவைத்திருந்தால் வாழ்த்துங்கள். தவறிருந்தால் மன்னியுங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *