யதார்த்தா கி பென்னேஸ்வரன்

07 ஆகஸ்டு 2011

பெருமதிப்புக்குரிய நாராயணன் சார் அவர்களுக்கு

வணக்கம்.

நீண்ட ஆண்டுகள் கழித்து நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தை மிகவும் தாமதமாகப் பார்க்க நேர்ந்தது. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். டெல்லியில் என்னுடைய மகன் வீட்டில் ஆறுமாதங்களும் மகள் வீட்டில் ஆறு மாதங்களும் நான் மாறி மாறித் தங்குவதால் ஏற்பட்ட குழப்பம் இது.

பல ஆண்டுகளாக என்னுடைய மகனும் மகளும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது கிடையாது. ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போக்குவரத்து கிடையாது. நான் மட்டும் இருவர் வீட்டுக்கும் மாறி மாறிப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மகள் வீட்டில் இருக்கும்போது மகன் என்னுடன் தொலைபேசியில் கூடப் பேசமாட்டான். நானும் அவனை எதற்கும் அழைப்பது இல்லை. அதே போல, மகன் வீட்டில் தங்கியிருக்கும்போது மகளுடைய வீட்டுடன் தொடர்பு முற்றாக இருக்காது. என்னுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு இவர்கள் இருவரின் இடையில் இடைவெளி இன்னும் அதிகரித்து விட்டது.

கரோல்பாக்கில் நானும் என் மனைவியும் வாயையும் வயிற்றையும் கட்டி வாங்கிய வீட்டை ஏதோ ரியல் எஸ்டேட் ஆட்களுக்கு விற்பதிலும் அந்தப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வதிலும் துவங்கிய அவர்களுடைய பிணக்கு எல்லை கடந்து இப்போது வலுவான பகையாக முற்றிவிட்டது. என் மனைவி இறப்பதற்காகவே காத்திருந்தது போல, இவர்கள் இருவரும் என்னிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் ஆட்களை அழைத்து வந்து வீட்டைக் காண்பித்து பேரம் பேசி விற்று பணம் பிரித்துக் கொண்டு தங்களுக்கான தனித்தனி வீடுகளை வாங்கிக் கொண்டார்கள்.

இத்தனைக்கும் என்னுடைய மாட்டுப் பெண்ணும் மாப்பிள்ளையும் உடன்பிறந்தவர்கள். என் மகனுக்கும் மகளுக்கும் இடையில் சண்டை விஸ்வரூபம் எடுக்கக் காரணமே என் மாட்டுப் பெண்ணும் அவளுடைய அண்ணனான என் மாப்பிள்ளையும்தான்.

அந்த அண்ணன் தங்கையின் சண்டை இந்த அண்ணன் தங்கையின் உறவைப் பாழடித்து விட்டது என்று நினைக்கிறேன். எத்தனையோ சமாதானம் செய்ய முயற்சித்துப் பார்த்தேன். நானும் சண்டை போட்டேன்.ஒன்றும் பலன் இல்லை.

விசாலம் இறந்ததும் இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஏதாவது ஒரு மடத்தில் சேர்ந்து விடலாம் என்று கூட நினைத்திருந்தேன். ஆனால் இருபக்கமும் என் பேரப்பிள்ளைகள் என்மீது உயிரையே வைத்திருக்கிறார்கள்.

என் மகளுக்கும் மகனுக்குமான பகை உணர்வு என்று முடிவடையும் என்று தெரியவில்லை. ஒருநாள் ஏற்பட்ட சச்சரவின் போது என் மகன் என்னிடம் சத்தம் போட்டான். “நீ அந்த வீட்டுலே செத்துத் தொலைச்சு வச்சா கொள்ளி போடக்கூட நான் வர மாட்டேன் பார்த்துக்கோ” என்றான்.

அன்று அவன் கொஞ்சம் அதிகமாகக் குடித்திருந்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக அவன் குடித்துவிட்டு வரும்போது அவன் எதிரில் நான் போவதில்லை. சில நேரங்களில் அப்படி எப்போதாவது போக நேரும் வேளைகளில் அவன் எப்படி நடந்து கொள்வான் என்பது யாருக்கும் தெரியாது.

என்னுடைய மரியாதையை நான் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? பல நேரங்களில் இப்படியான இடியை என்மீது இறக்கி விடுகிறான். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

இவை போன்ற மனக்குறைகளுடனே நாட்கள் உருண்டு கொண்டிருக்கின்றன. இதை மற்றவர்களுடன் நான் அதிகமாகப் பகிர்ந்து கொள்வது இல்லை. ஆனால் என்னுடைய சிறுபிராயத்தின் ஆசிரியரான உங்களிடம் எப்போதாவது இவற்றைப் பகிர்ந்து கொள்ளும்போது ஏதோ இறைவனிடத்தில் என் குறையை எடுத்துச்சொல்வது போன்ற மனநெகிழ்ச்சி எனக்கு இருக்கும்.

நொய்டாவில் உள்ள என் மகள் வீட்டில் நான் தங்கியிருந்தபோது விகாஸ்புரியில் உள்ள என் மகன் வீட்டுக்கு உங்கள் கடிதம் போயிருக்கிறது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு உங்கள் கடிதம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் மகன் எனக்கு இந்தக் கடிதம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. அந்தக் கடிதத்தை அலட்சியமாக எங்கோ தூக்கி எறிந்திருக்கிறான். என் பேத்திதான் நேற்று உங்கள் கடிதத்தை என்னிடம் கொடுத்தாள். மிகவும் வருத்தமாக இருந்தது.

என்னுடைய தொடர்ந்த மௌனம் உங்களுக்கு ஒருவகையான அச்சத்தை அளித்திருக்கலாம். கண்டிப்பாகக் கோபத்தைத் தந்திருக்காது என்று நினைக்கிறேன்.  என்னுடைய நிலைமை அப்படி. 

நீங்கள் என்னுடைய குருநாதர். ஆசிரிய பிரான். என்னை மனத்தளவில் அதிகம் பாதித்தவர். எனக்கு பல விஷயங்களில் ஆதர்சமாக இருந்தவர் நீங்கள். வரலாற்றை எப்படிப் பார்க்க வேண்டும் என்று உங்களிடம் நாங்கள் கற்றுக் கொண்டோம். நல்ல இசையை எப்படிக் கேட்பது, நல்ல ஓவியத்தை எப்படிப் பார்ப்பது, நல்ல திரைப்படத்தை எப்படி ரசிப்பது என்று எங்களுக்கு அணுஅணுவாக சொல்லிக் கொடுத்தவர் நீங்கள்.

நீங்கள் இட்ட பிச்சை என்னுடைய ரசனை, என்னுடைய பார்வைகள். வயோதிகம் இப்போது அவை எல்லாவற்றையும் அசுரப் பசியுடன் கரைத்து விழுங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல சமயங்களில் யாருக்கும் கடிதம் எழுதும் மனநிலை எனக்கு இருப்பது இல்லை.

நேற்று உங்கள் கடிதத்தைக் கையில் எடுத்ததும் எனக்குள் கிளர்ந்த பரவசத்தை வெறும் வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம்.

என் பேத்தி கூட என்னிடம் கேட்டாள். “என்ன தாத்தா, உன்னோட டீச்சர் இன்னுமா உனக்கு லெட்டர் போட்டுக்கிட்டு இருக்காரு?” என்று.

இந்தக் காலப் பிள்ளைகளுக்கு இவை எல்லாமே மிகவும் ஆச்சரியமான விஷயங்கள். மணிக்கணக்கை அளவெடுத்து அதற்கான தொகையை பேரம் பேசி டியூஷன் வகுப்புக்கள் எடுக்கும் ஆசிரியர்களிடம் பாடம் படிக்கும் என் பேத்தியைப் போன்றவர்களிடம் உங்களைப் போன்ற ஆசிரியர்களைப் பற்றி எப்படி விளக்கிச் சொல்வது?  அவர்களுக்கு இதெல்லாம் எங்கிருந்து புரியும்? உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் என் பேத்திக்குச் சொன்னேன். பல விஷயங்கள் அவளுக்குப் புரிந்தது போல எனக்குத் தோன்றவில்லை. பல விஷயங்களை அவள் நம்பவும் தயாராக இல்லை என்பது போல் தெரிந்தது. பிறகு உங்கள் கடிதத்தை மிகவும் பரவசத்துடன் பிரித்துப் பார்த்தேன்.

எனக்குப் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது உங்கள் கடிதம்.

சுமார் இருபத்து மூன்று பக்கங்களுக்கு நீண்டிருக்கும் உங்களின் கடிதத்தில் முதல் பக்கம் துவங்கி இறுதிப் பக்கம் வரை எப்போதும் போல அல்லாமல் கோர்வையற்ற வெறும் கிறுக்கல்கள் மட்டுமே இருந்தன. எத்தனை கிறுக்கலாக இருந்தது என்று சொல்ல வேண்டும் என்றால் அது எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று கூட சுத்தமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாங்கள் படித்த பள்ளியில் எங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் உங்கள் கைவண்ணம்தான் மிளிரும். அச்சிட்ட எழுத்துக்களை விட மிகவும் அழகாகக் காட்சியளிக்கும் உங்களால் எழுதப்பெற்ற தமிழும் ஆங்கிலமும். இந்தக் கடிதத்தை எழுதியது நீங்கள்தானா என்று எனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது. ஒரு எழுத்து கூடப் புரியாத அளவுக்கு கிறுக்கல்கள் கொண்ட ஒரு கடிதத்தை இன்றுதான் என் வாழ்க்கையில் முதன் முறையாகப் படிக்கிறேன்.

நீங்கள் நலமாக இருக்கிறீர்களா சார். பிரச்னை ஒன்றுமில்லையே? எனக்கு மனது சுத்தமாகக் கேட்கவில்லை. மிகவும் மருட்சியாக இருந்தது.

சில மாதங்கள் முன்பு, மகேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களைப் பார்த்து விட்டு வரச்சொன்னேன். நீங்கள் எவ்விதப் பிரச்னையும் இன்றி வீட்டுக்குள் நடமாடிக் கொண்டு இருப்பதாகத்தானே சொன்னான் மகேந்திரன்.

அந்த வெடிகுண்டு விபத்துக்குப் பிறகு இழந்த உங்கள் கேட்கும் திறனை மீட்க எடுத்துக் கொண்ட மருத்துவ முயற்சிகள் எதுவும் வெற்றியடையவில்லை என்றும் சொன்னான். இதற்கு முன்பு எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்த நீங்கள் இப்போது கடும் மௌனம் சாதிப்பதாக சொன்னான். எனக்கு மிகவும் கலக்கமாகவும் அச்சமாகவும் இருக்கிறது.

சக்கர நாற்காலியில் உழன்று கொண்டிருக்கும் என்னால் டெல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வரை வருவது மிகவும் சிரமம். என்னுடைய பிள்ளைகள் இதற்கான உதவியை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். விசாலம் இருந்திருந்தால் அவள் காலில் விழுந்தாவது என்னை ஊருக்கு அழைத்துப் போகச் சொல்லி இருப்பேன். இப்போது அவளும் சோகமாக என் வருகைக்காக எங்கோ காத்திருக்கிறாள்.

இந்த நிலையில் உங்களிடம் தெளிவாக ஒரு கடிதத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன். மகேந்திரன் தொழில் ரீதியாக சிங்கப்பூர் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கிளம்பி விட்டானா என்று தெரியவில்லை. அவனை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனவே, என்னுடைய இக்கடிதம் கண்டதும் நீங்கள் அவசியம் எனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். உங்களுடைய பழைய, மிகவும் அழகான கையெழுத்தில் மிகவும் தெளிவாக ஒரு கடிதத்தை எதிர்பார்க்கிறேன். உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களிடம் இருந்து வரும் கடிதம் என்னுடைய என்னுடைய சோர்ந்த உடலுக்கும் உள்ளத்துக்கும் அருமருந்து.

உங்களுடைய பாதங்கள் பணிந்து நமஸ்கரிக்கிறேன். என் பிள்ளைகள் இருவருக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் உங்கள் கனிவான ஆசிகள் வேண்டும்.

உங்கள் அருமை மாணவன்

கிருபாசங்கர்

 

(ஆசிரியரிடம் இருந்து இந்த மாணவனுக்கு பதில் கடிதம் வந்ததா? காத்திருங்கள் அடுத்த திங்கள் வரை, வல்லமையில் இந்தக் கதையின் இறுதிப் பகுதியைக் காண !)

புகைப்படங்களுக்கு நன்றி: 

http://1.bp.blogspot.com/_nvnq0VFyaho/SzmX92aazAI/AAAAAAAAANc/i7w_2rtNNbo/s1600-h/av100.jpg

http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6963925998/in/pool-1426498@N21/

http://vanangaan.files.wordpress.com/2012/03/alcoholism.jpg?w=300&h=225

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கிறுக்கல்கள்

  1. இப்படி ஒரு ஆசிரிய, மாணவ உறவு, எவ்வளவு உணர்வுபூர்வமானது. நான் மிகவும் ரசித்துப் படித்தேன் பென் சார். நன்றி, இப்படி ஒரு படைப்பை வல்லமையில் தந்ததற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.