ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 7)

வெங்கட் நாகராஜ்

இயற்கை அன்னை தந்த நர்மதா நதியின் நீர்வீழ்ச்சிக் கோலத்தினைப் பார்த்து விட்டோம். இயற்கை என்றிருந்தால் அதில் மனிதன் தனது கை வண்ணத்தினைக் காட்டாது இருப்பானா? மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நதியான நர்மதை, அரபிக்கடலில் கலக்கும் முன் தனது மொத்த ஓட்டத்தில் ஆயிரம் கி.மீக்கு மேல் மத்தியப்பிரதேசத்திலே தான் ஓடுகிறது. அதன் குறுக்கே இது வரை முப்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. நதியின் குறுக்கே ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட அணைகளில் ஒன்று தான் பர்கி [Bargi] அணை.

1974-ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1990-ம் ஆண்டில் முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் 4000 சதுர கி.மீ பரப்பளவு விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. தற்போது 90 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தியாகிறது. மாலை ஐந்து மணிக்குள் அங்கு சென்றால் தான் படகோட்டம் செய்ய முடியும் என்பதால் நாங்கள் வேகமாக சென்றோம்.

”வேகம் விவேகம் அல்ல” என்பது சரிதான் போல. ஓட்டுனர் விரைவாகச் சென்று செல்ல வேண்டிய வழியைத் சரியாக தவற விட்டார். ஐந்து கி.மீ தாண்டிய பின்னரே அவருக்கும் தவறு புரிந்து, வண்டியைத் திருப்ப யத்தனித்தார். குறுகலான பாதையில் வண்டியைத் திருப்ப பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாகத் திரும்பி, சரியான பாதையில் சென்று மத்தியப் பிரதேசச் சுற்றுலாத் துறையின் “மைகல்” உணவகத்திற்குச் சென்று சேர்ந்த போது மாலை மணி 05.15.

ஆதவன் தனது பணியைச் செவ்வனே முடித்து விட்டு, வேறு கண்டம் செல்லத் தயாராக இருந்தான். எங்களைச் சுமந்து நர்மதையில் பயணம் செய்ய “நர்மதா ராணி” என்று அழைக்கப்படும் படகும் தயாராக இருந்தாள். இருட்டி விட்டால் பயணத்தினையும், நர்மதையின் அழகினையும் சுவைக்க முடியாது என்பதால் எல்லோரும் விரைவாக படகில் ஏறி உல்லாசப் பயணத்தினைத் தொடங்கினோம்.

படகினுள் வரவேற்று ”WELCOME DRINKS” கொடுத்தார்கள். “அடடா…. ம்.. எஞ்சாய் மாடி!….” என மனதுக்குள் பொறாமையாக சிலர் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவர்கள் கொடுத்தது ஆளுக்கொரு டெட்ரா பேக் மேங்கோ ஃப்ரூட்டி.

உள்ளே சென்று ஃப்ரூட்டி அருந்தியபடி நாங்கள் இருக்க படகு நதியில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. அந்தி மாலை வேளையில் சுகமான தென்றல் காற்று தவழ்ந்து வந்து எங்களை முத்தமிட்டது. கூடவே படகில் இருந்த பெரிய ஒலிபெருக்கிகளில் இருந்து பல ஹிந்திப் பாடல்கள் [டப்பாங்குத்துதேன்!] அலறத் தொடங்கியது. “நிலா அது வானத்து மேல” போடுப்பான்னு யாரோ கும்பலில் கோவிந்தா போட்டார்கள்.

வட இந்தியர்களுக்கு ஒரு பழக்கம் – கல்யாணமா, பிறந்த நாளா, அது எந்த விழாவாக இருந்தாலும் சரி – உடனே கையை மேலே தூக்கி ஒரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி இரு கைகளிலும் ஒரு விரல் காட்டி ஆட ஆரம்பித்து விடுவார்கள். படகிலும் அவர்கள் விடவில்லை. எல்லோரும் ஆட ஆரம்பித்து எங்களையும் ஆட்டுவித்தனர். அட ஆமாங்கறேன்… என்னையும் ஆடச் சொல்லி வற்புறுத்த கையை காலை உதறி விட்டு வந்தேன்! [யாருப்பா அது? அந்த வீடியோவைப் போடச் சொல்லி கேட்கிறது?]

ஒரு மணி நேரத்திற்கு படகில் ஆனந்தமான ஒரு உல்லாசமான பயணம் செய்தோம். மாலை மயங்கும் நேரத்தில் இந்தப் பயணம் நிச்சயம் ஒரு சுகமான நினைவுதான். அனைத்து நண்பர்களுக்கும் படகில் தொடர்ந்து பயணம் செய்ய ஆசை இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு மேல் படகுப் பயணத்திற்கு அனுமதி இல்லாததால் திரும்ப வேண்டியதாயிற்று. மைகல் உணவகத்திற்கு திரும்ப வந்து சிற்றுண்டி சாப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த “கல்சூரி ரெசிடென்சி” நோக்கி பயணித்தோம்.

அலைந்த அலைச்சலுக்கு, இன்றிரவு நல்ல உறக்கம் வரும் என உடல் சொன்னாலும், மனது தனது ஓட்டத்தினை நிறுத்த மறுக்கிறது. காலையில் சீக்கிரமே எழுந்து தயாராக வேண்டும் நீண்ட பேருந்துப் பயணத்திற்கு. ஆம் பயணம் எங்கள் அடுத்த இலக்கான “பாந்தவ்கர்” நோக்கி அல்லவா!

நாளை பேருந்தில் முதல் இருக்கையைப் பிடிக்க தயாராக இருங்கள். நான் தூங்கி எழுந்து வந்து விடுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

1 thought on “ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 7)

  1. ”வேகம் விவேகம் அல்ல” என்பது சரிதான் போல. ஓட்டுனர் விரைவாகச் சென்று செல்ல வேண்டிய வழியைத் சரியாக தவற விட்டார். 

    பயணங்களின் போது மிகவும் சங்கடம் தரும் விஷயம் …

    பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள்..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க