செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்
அண்ணாகண்ணன்
06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்விற்குச் சென்றேன். செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் மலேசியா சீனி நைனார் முகமது, பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.
சிங்கப்பூர் அமலதாசன் முதலில் பேசினார். சிங்கப்பூர்த் தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியைச் செம்மொழி மாநாட்டில் நினைவுகூரவி்ல்லை என வருந்தினார். தன் ஆய்வுக் கட்டுரையும் அவரைப் பற்றியதே எனக் கூறிய அவர், தமிழவேள் நினைவாக அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைய வேண்டும் எனச் சில கோரிக்கைகளைப் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய மலேசியா இளவழகு, தாம் எப்போதும் தம் அண்ணன் கவிஞர் ஐ.உலகநாதன் அவர்களின் பெயரால் நினைவுகூரப்பெறுவதை மறுத்தார். தாம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, புதினம் உள்ளிட்டவற்றைப் படைத்து வரும்போதும் தம் படைப்பு முகத்தை முன்னிறுத்தாது தம் தவறே என்றும் குறிப்பிட்டார்.
மலேசியா சீனி நைனார் முகமது, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.
தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.
முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் ல் என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.
செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். ‘அசத்தப் போவது யாரு?’ என்ற தலைப்பினை விமர்சித்த அவர், அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே எனக் கேட்டார்.
தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.
அடுத்துப் பேசிய பெஞ்சமின் லெபோ, செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை வந்தனைகள், நிந்தனைகள் என இரு பிரிவுகளாகப் பிரித்துப் பேசினார்.
எல்லோரையும் ஒன்று திரட்டியது, கட்சிக் கொடி இல்லாதது, அனைவருக்கும் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஊட்டியது, வணிகர்கள் மகிழ்ந்தது, தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் அரங்குகளை அமைத்தது, அதில் கம்பன் பெயரையும் சேர்த்துக்கொண்டது, ஆய்வரங்குகளின் பெயர்களுடன் கூடிய ஓவியங்களைத் தமிழ் ஓவியர்கள் வரைந்தது உள்ளிட்டவற்றை வந்தனைகள் என்று பாராட்டினார். எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதித்திட இந்த நிகழ்வு, வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறினார்.
தமிழர் மரபுப்படி கடவுள் வாழ்த்துப் பாடாதது (மதம் சாராமலும் அப்படி பாடலாம்; திருக்குறளும் சிலப்பதிகாரமுமே உதாரணங்கள்), தொடக்க விழாவில் தமிழறிஞர்கள் இருக்க வேண்டிய முன் வரிசைகளில் முதல்வரின் உறவினர்கள் அமர்ந்திருந்தது, ஆய்வரங்குகளில் ஒரே நேரத்தில் பல அமர்வுகளை அமைத்தது, பார்வையாளர் இருவர் – ஐவர் என்ற எண்ணிக்கையில் இருந்தமை உள்ளிட்டவற்றை நிந்தனைகள் என வரிசைப்படுத்தினார். இனி மேல் இப்படி ஒரு மாநாடு நடக்கவே முடியாது என உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதையும் கண்டித்தார். இதை விடச் சிறப்பாக அடுத்தது எனச் செல்வதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றார்.
தலைமை தாங்கிய மறைமலை, செம்மொழி மாநாடு கிளச்சியையும் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது உண்மை; அதே நேரம் இன்னும் செய்ய வேண்டியவையும் நிறைய உள்ளன என்று கூறினார்.
அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கெ.பக்தவத்சலம் வரவேற்புரையும் பு.ச.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையும் நிகழ்த்தினர். அரங்கு நிறைந்தது மட்டுமின்றி, பலரும் நின்றபடி செவி மடுத்தனர்.