வசந்தபாலன் இயக்கும் புதிய படம் ‘அரவான்’

0

இளைய திலகம் பிரபு நடித்த சின்ன மாப்ளை, சூப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த அரவிந்தன், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, தற்போது ஜெய் நடிக்கும் கனிமொழி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா. இவர்,  வெயில், அங்காடித் தெரு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய  ஜி.வசந்தபாலன் இயக்கத்தில்  புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார்.  மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்திற்கு வசந்தபாலன் ‘அரவான்‘ எனத்  தலைப்பு சூட்டியுள்ளார்.

அரவான் என்றால் ஆண்மை மிகுந்தவன், 32 சர்வ லட்சணங்கள் பொருந்தியவன், மாவல்லமை படைத்தவன், இளகிய மனம் கொண்டவன்.

இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக  மிருகம், ஈரம் விரைவில் வெளியாகவுள்ள அய்யனார், ஆடுபுலி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக  பேராண்மைத் திரைப்படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக, சிறப்பாக நடித்த தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அர்ச்சனா கவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பசுபதி நடிக்கிறார்.

உலக சரித்திரத்தில் எங்கும் கலை வடிவமாக பதிவாகாத, புறக்கணிக்கப்பட்ட, தோல்வியுற்றவனின் வாழ்க்கையை வெயில் திரைப்படமாக எடுத்தார். நூறு நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி வெயில், தேசிய விருது, தமிழக அரசு விருது உட்பட 26 விருதுகளைப் பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

இந்தியாவின் மிகப் பிரபலமான, பரபரப்பான, வணிக வீதியான ரங்கநாதன் தெருவின் வாழ்க்கையை அங்காடித் தெரு திரைப்படமாக பதிவு செய்தார். பத்திரிகை மற்றும் அனைத்து ஊடகங்களின் பாராட்டையும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனையும் வாரிக் குவித்த அங்காடித் தெரு,  இவ்வாண்டின் ஈடு இணையில்லாத வெற்றியாக நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்திற்குப் படம் வித்தியாசமான, சுவாரஸ்யமான திரைப்படங்களை  இயக்கி வரும் வசந்தபாலன், இம்முறை மிக மாறுபட்ட முயற்சியாக  18ஆம் நூற்றாண்டின் தமிழக வாழ்க்கையை, கலாச்சாரத்தை, வீரத்தை, காதலைப் பதியும்  முயற்சியாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இயல்பான கிராமத்து முகங்களைப்  பெருமளவில் நடிகர்களாக்கும் தேடுதல் முயற்சி, நூறு கிராமங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

வெயில் திரைப்படத்தில் பின்னணிப் பாடகர் ஜி.வி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர், வசந்தபாலன். அவர், இந்தப் படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக்கை  இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். யாரடி நீ மோகினி, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த் இப்படத்தின் ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பின் முன் தயாரிப்பு வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக, தமிழ் மற்றும் தெலுங்கு என ஓரே நேரத்தில், இரு மொழிகளிலும் பல  கோடி ரூபாய் பொருட் செலவில், இதுவரை திரையில் பதிவாகாத, இந்தியாவின் முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கும் இப்படம், 2010 ஜூலை மாத  இறுதியில் தொடங்குகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *