தடையறத் தாக்க – திரைப்பட விமர்சனம்
மோகன் குமார்
தடையறத் தாக்க படத்தின் டிரைலர் பார்த்த போது நடிகர் அருண் விஜய்யின் வழக்கமான இன்னொரு படம். திரைக்கு வந்து விட்டு சில நாட்களில் காணாமல் போகும் என்று தான் நினைத்தேன்.
சூர்யா, விஜய் போன்றோருடன் நடிக்க வந்தவர் அருண் விஜய். நடனம், சண்டை எல்லாம் செய்வார். நடிப்பு, காமெடி இரண்டும் நன்கு வரும். இருந்தும் ஏனோ அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஓடுவது இல்லை. அவ்வப்போது பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களில் நடிப்பார். அந்த வரிசையில் ஒரு நல்ல படம் “தடையறத் தாக்க”.
கதை:
செல்வா (அருண் விஜய்) ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார். இவர் காதலி மம்தா மோகன் தாஸ். கந்து வட்டியில் பணம் வாங்கி விட்டு கஷ்டப்படும் ஒரு பெண்ணுக்கு உதவப் போகும் போது அந்த கும்பலின் வலைக்குள் வருகிறார்.
கந்து வட்டி கூட்டத்தின் தலைவரான மகா என்பவர் மோசமாக தாக்கப்பட்டு சுய நினைவு இழக்க, அருண் விஜய் மீது சந்தேகம் வருகிறது. வில்லன் கும்பல் அருண் விஜயைக் கொல்ல அலைகிறது. அவர்களின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்கினார் என்பதே இறுதி கதை
***
இது முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் படம்.
கதையாக சொல்வதில் இதே போல பல படங்களை நாம் பார்த்தோம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் திரைக் கதையில் நிச்சயம் செம விறுவிறுப்பு.
படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள். அவை பற்றி அதிகம் யோசிக்காது படத்தை ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குனர்.
மகாவின் சின்ன வீடு என சொல்லப்படும் பெண் கடத்தப்படும் போதே, யார் என்கிற நினைவை இழக்கிறாள் என்பது கதை ஓட்டத்துக்குத்தான் உதவுமே தவிர, அதற்கு எந்த லாஜிக்கும் இல்லை.
அருண் விஜய் ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துபவரையும், காதலரையும் அப்படியே பிரதிபலிக்கிறார். சண்டை காட்சிகளில் நல்ல வேகம். இனியாவது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்த் திரை உலகில் நீடிக்கலாம்.
மம்தா மோகன் தாஸ் -ஹீரோயின். நிஜ வாழ்வில் புற்று நோயில் இருந்து மீண்டு வந்தவர். மிக அழகாக இருக்கிறார். நடிப்பும் ஓகே. ஆனால் பெண்கள் அணியும் உள்ளாடைக்கு பட்டர்பிளை என பெயர் வைத்து ” இன்னிக்கு என்ன கலர் பட்டர்பிளை?” என ஹீரோ இவரிடம் அடிக்கடி கேட்பது ரொம்ப டூ மச். பெண்கள் எப்படித்தான் இத்தகைய காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்களோ?
ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் (காலம் காலமாய் ஹீரோவின் நண்பர்கள் செய்வது அது தானே?)
இரண்டே பாடல்கள்- முதல் பாதியில் முடிந்து விடுகிறது. இடை வேளைக்கு பின் ஒரே ஓட்டம் தான் !
வில்லன் மகாவை அடித்தது யார் என்று ஒரு கேள்வி- எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண் யார்- அவள் கதை என்ன என்ற இரு கேள்விகளும் தான் படத்தின் பெரிய சஸ்பென்சுகள் . அவை இரண்டும் நாம் ஊகிக்க முடியாத படி உள்ளது. படம் நிமிர்ந்து நிற்பது இந்த ஆர்வம் கலந்த சஸ்பென்சில் தான்.
திரைக்கதை அருமை எனினும் இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம். படம் பார்க்கும் சிலருக்கு திரைக்கதை புரியவில்லை. படம் பெண்கள் குழந்தைகள் இரு பிரிவினருக்கும் பிடிக்காது, சண்டைகள் மற்றும் ரத்த வாடை அதிகம் என்பதால்.
மொத்தத்தில் – இந்த படம் மூலம் இயக்குனர் மகிழ் திருமேனி – கவனிக்கப்பட வேண்டியவராகிறார். அருண் விஜய் மீண்டும் ஒரு இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு.
தடையறத் தாக்க – ஒரு முறை பார்க்க !