நமது பண்பாட்டைக் காக்கும் நற்பணியில் பங்கேற்க ஒரு நல் வாய்ப்பு
மலர்மன்னன்
சமஸ்கிருத அறிஞர் ஸ்ரீ குப்புஸ்வாமி சாஸ்த்ரியார் அவர்களால் 1927-ல் நிறுவப்பட்ட சமஸ்க்ருத ஆய்வு நூலகம் / மையம் சென்னை மயிலாப்பூர் சமஸ்க்ருதக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. என் தந்தையார்கூடச் சிறிது காலம் இந்நூலகத்தில் கெளரவ நூலகராகப் பணியாற்றியதுண்டு.
இந்த நூலகத்தை ஓர் ஆய்வு மையம் என்று சொல்வதே பொருந்தும். சமஸ்க்ருத மொழி தொடர்பாகவும் இந்தியவியல் சார்ந்தும் பல்வேறு ஆய்வு நூல்களை இது வெளியிட்டுள்ளது. தத்துவம், நியாயம், யோகம், கலைகள், இலக்கியம் எனப் பல பிரிவுகளை உள்ளடக்கிய அரிய நூல்கள் இங்குள்ளன. இந்த ஆய்வு நூலகத்தின் குறிப்பிடத்தக்க இன்னொரு பணி ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை முதன் முதலில் மொழி பெயர்த்து வெளியிட்டதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய ஓலைச் சுவடிகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வு நூலகத்திற்கு 1995 வரை மத்திய அரசின் நிதி உதவி கிடைத்து வந்தது. நூலகத்தின் நிர்வாகத்திற்கென மத்திய அரசு நியமித்த குழு உறுப்பினரிடையே உருவான கருத்து வேறுபாடு களின் விளைவாகவோ என்னவோ மத்திய அரசின் நிதி உதவி நின்று போனது. நிதிஉதவியைத் தொடர வேண்டி ராஷ்ட்ரிய சமஸ்க்ருத ஸம்மானுக்கு ஆய்வு மையம் விடுத்த விண்ணப்பம் இன்றளவும் செயல்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. ஆகவே தனிப்பட்ட ஆர்வலர்களின் கூட்டு முயற்சியினாலேயே இந்த ஆய்வு நூலகம் தொடர்ந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த ஆய்வு நூலகத்தின் பயனாளிகளாக இருபத்து நான்கு மாணவர்கள் இன்று பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். பல அறிஞர்களும் தமது ஆய்வுகளுக்கு இதனை நம்பியுள்ளனர். இவர்கள் தவிர அவ்வப்பொழுது ஏற்படும் ஐயங்களைத் தெளிவித்துக் கொள்ளவும் பல துறை சார்ந்த நூலாசிரியர்கள் இங்கு வந்து குறிப்பெடுத்துக் கொள்வதுண்டு. இவர்கள் அறிவுச் செல்வம் மட்டுமே உள்ளவர்கள்.
இன்று போதிய நிதி வசதியின்மையால் இந்த ஆய்வு மையம் தொடர்ந்து இயங்குவதில் பெரும் பற்றாக்குறையினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நம்மைப் போன்ற சாமானியர்கள் புரவலராக இருந்து உதவுமாறு அது வேண்டுகிறது. ரூபா இரண்டாயிரம் மட்டும் ஒருமுறை செலுத்துவோரை ஆயுட் காலப் புரவலராக ஏற்றுத் தனது நன்றியறிதலுக்கு அடையாளமாகத் தான் வெளியிட்டுள்ள சமஸ்க்ருத மொழி நூல்களை அனுப்பி வைக்கவும் ஆய்வு மையம் விழைகிறது.
நமது பாரம்பரியச் செல்வங்களைப் போற்றிப் பாதுகாக்கும் அரிய பணியில் பங்கேற்கிற வாய்ப்பு நம்மைத் தேடி வந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ தாக்குதல்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் தாக்குப் பிடித்து நிற்கின்ற ஆதார பலம் நமது பண்பாட்டிற்கு உண்டு என்றாலும் அதன் கண்கூடான அடிப்படை களைப் பாதுகாத்து வரும் அமைப்புகளுக்குத் துணை நிற்க வேண்டியது நமது கடமையே அல்லவா?
சில நாட்கள் முன்பு ஏதோவொரு கட்டுரைக்குப் பின்னூட்டம் இடுகையில் ஏதோவொரு பலவீனமான மனநிலையில் எனது உடல் உபாதை குறித்துத் தெரிவித்துவிட்டேன். அதனைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இன்றளவும் எனது மருத்துவச் செலவுக்கு உதவ விரும்புவதாகப் பலர் மின்னஞ்சல் அனுப்பி வருகிறார்கள். நன்றி யுடன் அதனை ஏற்க மறுத்து வருகிறேன் என்றாலும், இத்தகைய அன்பர்கள் இந்த ஆய்வு மையத்திற்குத் தம்மால் இயன்ற நன்கொடையை அனுப்பி உதவுவார்களேயானால் அதனை எனக்கே செய்த உதவியாகக் கொள்வேன். நன்கொடை அளிக்க விரும்புவோர்,
THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE.
Account No. 395702010007408
Union Bank of India – Mylapore Branch NEFT NO: UBIN0539571
IFSC CODE NO.600026009
என்ற வங்கிக் கணக்கில் தொகையை நேரடியாகச் செலுத்தி,
Dr. K.S.Balasubramanian , Dy.Director, Kuppuswamy Sastri Research Institute, Sanskrit College, Mylapore, Chennai – 600004.Phone- 044-24985320
Email: ksrinst@gmail.com
என்ற முகவரிக்குத் தங்களின் முகவரியுடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். டாக்டர் கே. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களின் மேற்குறிப்பிட்ட முகவரிக்கே Kuppuswamy Sastri Research Institute என்ற பெயரில் செக் அல்லது டிடி அனுப்புவதாக இருந்தாலும் சரியே..
++++++
பவள சங்கரி
மனித வாழ்க்கை அற்புதப் பாடுடையது. ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்று இல்லாமல் நாம் பிறந்த மண்ணிற்கும், நம் அன்னை மொழிக்கும், அதனைக் காக்கும் பணியில் தம் வாழ்நாள் முழுவதும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டோரின் தன்னலமற்ற சேவைக்கு துணை நிற்கும் பொருட்டும் நம் எல்லையை சற்றே விரிவடையச் செய்யும் போது, நமக்குக் கிடைக்கும் மன நிறைவே அலாதிதான். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திடும் பொருட்டே இறைவன் நம்மைப் படைத்துள்ளான்.
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”
குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
என்பார் ஐயன் நாவுக்கரசர்.
“தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்”
என்பார் வள்ளுவப் பெருந்தகை.
அவ்வகையில் ஒரு நல்ல அறப்பணியில் நம் உதவிக்கரங்களை நீட்டுவோம். ”நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்” என்று கேட்டுக் கொள்கிறோம்.