சிவா பிள்ளையுடன் சிறு உரையாடல்

சந்திப்பு: அண்ணாகண்ணன்

இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் பணியாற்றுபவர் சிவா பிள்ளை. தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் கற்பிப்பதில் முனைப்புடன் இயங்குபவர். அவரைப் பற்றி ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய கட்டுரையை முன்பு தமிழ் சிஃபியில் வெளியிட்டுள்ளேன். அதன் பின்னர் சிவா பிள்ளையுடன் மின்னஞ்சலில் தொடர்பு இருந்தது. ஆனால், கோவையில் செம்மொழி மாநாட்டின் போதுதான் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன்.

சிவா பிள்ளை, அண்ணாகண்ணன், நா.கணேசன்

பி்ன்னர் சென்னை திரும்பிய பிறகு, 2010 ஜூலை 3ஆம் நாள், மீண்டும் ஒரு முறை அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன்.

அப்போது தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கோவலன் உடனிருந்தார்.

முனைவர்  கோவலன், அண்ணாகண்ணன்

கோவையில் நடந்த 9ஆவது தமிழ் இணைய மாநாட்டில் சிவா பிள்ளை பங்கேற்றார். இங்கிலாந்தில் தமிழ்க் கல்வி கற்பிப்பதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பாவனை என்ற தலைப்பில் அவர் தம் கட்டுரையை வழங்கினார்.

அவருடைய கட்டுரையில் ‘தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் கற்றல் கற்பிப்பதில் இங்கிலாந்திலும் உலகளாவிய ரீதியிலும் கூட பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்குப் புதிய வழிமுறைகளில் கற்பதில் கற்பிப்பதில் ஊக்கத்தை உண்டுபண்ணி உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். (தமிழ் இணையம் 2010 கோவை – மாநாட்டுக் கட்டுரைகள், பக்.82)

அவரை நேரில் சந்தித்தபோது நான் சில கேள்விகளைக் கேட்டேன். எங்கள் உரையாடல் இப்படிச் சென்றது:

அண்ணா: தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தும்போது மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது என்பது உண்மை. ஆனால், அத்தகைய வகுப்பில் பாடத்தினை விடத் தொழில்நுட்பமே அதிக முக்கியத்துவம் பெறுகிறதா? மாணவர்களின் கவனம் தொழில்நுட்பத்தின் மீதே அதிகமாகச் செல்கிறதா?

சிவா: இரண்டும் இணையான முக்கியத்துவம் பெறுகின்றன. இரண்டின் மீதும் மாணவர்களின் கவனம் செல்கிறது.

அண்ணா: தொழில்நுட்பம் இல்லாமல் வழக்கமான முறையில் பாடம் நடத்துகையில், பல நேரங்களில் மாணவர்களுக்கு அந்த வகுப்பு ‘போர்’ அடிக்கிறது என்கிறார்களே. எப்படி பாடத்தின் மீது மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது?

சிவா: ‘போர்’ அடிக்கிறது என மாணவர்கள் கூறக்கூடிய பாடங்களைத் தொடங்கும் முன் ஆசிரியர்கள், அந்தப் பாடத்தின் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் சில செய்திகளைக் கூறிவிட்டுத்தான் பாடத்திற்குள் புக வேண்டும். அப்போதுதான் ஈர்ப்பினை ஏற்படுத்த முடியும்.

அண்ணா: தமிழ்நாட்டிலேயே தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லை என்கிற நிலை இருக்கிறது. இந்தத் தமிழை நான் ஏன் கற்க வேண்டும்? இதனால் எனக்கு வேலை கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இதே மாதிரி கேள்வியை இங்கிலாந்தில் எதிர்கொண்டுள்ளீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?

சிவா: அங்கே தமிழ் படிக்க வரும் பலரும் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். அவர்களிடம் நான் கூறுவது, தமிழ் மக்களுடன் இணைந்து பழக, அவர்களின் பண்பாட்டினையும் பழக்க வழக்கங்களையும் உணரத் தமிழ் மொழி உங்களுக்கு உதவும் என்பதே. வேலை என்ற கண்ணோட்டத்தில் அங்கு மொழியைக் கற்க இயலாது. தமிழர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதும் ஆங்கிலேயர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதும் வெவ்வேறு. இரண்டுக்குமான ஆசிரியர்களும் வேறு வேறானவர்களே.

அண்ணா: மொழிபெயர்ப்பு என்ற துறை சார்ந்து தமிழுக்கு வேலை வாய்ப்பு இருக்குமே? ஒரு சொல்லுக்கு இவ்வளவு எனக் கட்டணம் நிர்ணயித்திருப்பார்களே?

சிவா: உண்டு. தமிழ் அகதிகள் பலரும் அங்கே தங்கியுள்ளதால், இங்கிலாந்து நீதித் துறை, நிர்வாகத் துறை ஆகியவற்றில் தமிழர் தொடர்பான செய்திகளைப் பதிய அரசு சார்பிலேயே தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு. ஆனால், தனிப்பட்ட வகையில் தமிழ் மொழியைவிட, இசை – நடனம் போன்ற தமிழ்க் கலைகள் கற்பிப்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உண்டு. தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் குறைவான ஊதியமே நிர்ணயித்துள்ளார்கள். அதிகத் தேவை உள்ள மொழிகளுக்கு ஒரு சொல்லை மொழிபெயர்க்க 50 ரூபாய் கூட கொடுப்பார்கள். தேவையைப் பொறுத்துக் கட்டணம் மாறும்.

அண்ணா: செம்மொழி மாநாட்டு அனுபவங்கள் எப்படி இருந்தன?

சிவா: சிறப்பாகவே இருந்தன. அதனால்தானே உங்களை எல்லாம் சந்திக்க முடிந்தது! ஆனால், மாநாடு முடிந்த பிறகு ஒரு கல்லூரியில் பேசச் சென்றிருந்தேன். அங்கு பி.டெக் போன்ற தொழில்நுட்பம் பயிலும் 300 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே செம்மொழி – இணைய மாநாட்டுக்கு வந்திருந்தார். மற்றவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. மாநாட்டுக்கு இலட்சக் கணக்கானோர் வந்திருந்தனர். ஆனால், பளளி – கல்லூரி மாணவர்களை அதிகம் இடம் பெறச் செய்திருக்கலாம். ஒரு பள்ளிக்கு இவ்வளவு பேர் என அனுப்பச் சொல்லியிருந்தால், மாநாட்டின் பயன் அதிகம் பேரைச் சென்றடைந்திருக்கும்.

இவ்வாறு எங்கள் உரையாடல் அமைந்தது.

பின்னர் மகிழ்வுடன் விடை பெற்றோம்.

முதல் படம் தவிர, மேற்கண்ட இரு படங்களை முனைவர் கோவலன் எடுத்தார். கோவலன் இருக்கும் படத்தினைச் சிவா பிள்ளை எடுத்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.