நடராஜன் கல்பட்டு

இறைவனது படைப்புகள் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை. அது தாவரங்கள் ஆகட்டும். புழு பூச்சிகளாகட்டும், பறவைகளாகட்டும் அல்லது மிருகங்களாகட்டும். அவை ஒவ்வொன்றயும் கூர்ந்து நோக்கினால் பல வியக்கத்தக்க உண்மைகள் நமக்குப் புரியும். உண்மைகள் புரியும்போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நமக்குத் தெரியாமலா போவார்?

என் அனுபவத்தில் கண்டறிந்த சில விஷயங்கள் பற்றித் தொடராக எழுத நினைக்கிறேன். அவ்வப்போது நான் எடுத்த சில புகைப் படங்களையும் இணைக்கவிருக்கிறேன்.

1. தேன் சிட்டு

பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (bird watching) என்பது ஒரு ஆனந்தமான பொழுது போக்கு.

காலை ஆறு மணிக்கு “கீ…வூ…கிக்வூ..கிக்வூ…” என்ற சத்தம் கேட்டு படுக்கை அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். இரண்டு சிறிய குருவிகள் ஒன்றை ஒன்று துரத்தியவாறு பறந்து கொண்டிருக்கின்றன தோட்டத்தில் உள்ள ஒரு செம்பருத்திச் செடியின் கிளைகளின் ஊடே.

சற்று நேரத்துக்குப் பின் அவை தனது நீண்டு வளைந்த அலகு மற்றும் குழாய் போன்ற நாக்கைக் கொண்டு செம்பருத்தி மலர்களில் இருந்து தேனை உரிஞ்சுகின்றன.

                                                                                                    (வண்ணப் படம் – சுதீர் ஷிவராம்)

அவை பறந்து மலரை அடையும் போது, சில சமயம் ஒரே இடத்திலும், சில சமயம் முன்னும், சில சமயம் பின்னுமாகப் பறக்கின்றன.

தேன் சிட்டு ஒரு மலரில் உட்காரும்போது கிளை வளைந்து குருவி தலைகீழாக திரும்பினாலும் அது தேன் அருந்துவதை நிறுத்தாது.

அமெரிக்காவில் உள்ள ‘ஹம்மிங்க் பேர்ட்’ ரகத்தைச் சேர்ந்த இப்பறவைகள், உருவத்தில் சிட்டுக்குருவியை விடச் சிறியவை. ‘ஹம்மிங்க் பேர்ட்’ஐ விடப் பெரியவை. பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டது. ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதன் பெயர் ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்’ என்பதாகும்.

நம் நாட்டில் காணப்படும் சன் பேர்ட்கள் இருவகைப்படும். ஓன்று பர்பிள் சன்பேர்ட். மற்றொன்று பர்பிள் ரம்ப்ட் சன்பேர்ட் என்பதாகும். இரண்டாவது வகையே நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும். முதல் வகையை ஸ்க்ரப் ஜங்கிள் என்று அழைக்கப்படும் சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.

பர்பிள் ச‎ன்‎ பேர்ட் வகையி‎ன்‎ ஆண் குருவி முற்றிலும் கருநீல நிறத்தில் இருக்கும். அதன் கழுத்து மயில் கழுத்துப் போல மின்னும்.

தேன் சிட்டின் கூடு செடிகளின் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும். காய்ந்த சருகு, வேர்கள் இவற்றால் சிலந்தியின் வலைத் துண்டுகள் கொண்டு ஒட்டப் பட்டிருக்கும். வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும் உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீடர் விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப் பட்டிருக்கும். இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப் படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கூட்டிற்குள்ளே செல்ல பக்கவாடில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீடர் அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு ஒரு ‘சன் ஷேடும்’ அமைக்கப் பட்டிருக்கும். கூட்டின் கீழ் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச் சரகுத் துண்டுகள் தொங்கிக் கொண்டு இருக்கும். கூட்டினைக் கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூடக் கூட பறந்து கொண்டிருக்கும். கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த் துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும். குழந்தைகளுக்கு உறுத்தக் கூடாதல்லவா?

பறவைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றின் உணவும் ஒரு விதம். தேன், தானியம், பழம், கொட்டைகள், தேனீ, புழு பூச்சிகள், பல்லி, ஓணான், எலி, பாம்பு, இறந்த மிருகங்களின் இறைச்சி, ஏன் மனிதனின் மலம் கூட பறவைகளின் உணவு. ஆனால் எல்லாப் பறவைகளுமே தங்கள் குஞ்சுகளுக்கு மாமிச பதார்த்தங்களையே உணவாக அளிக்கும். காரணம் என்ன தெரியுமா? குஞ்சுகள் குறைந்த கால அவகாசத்தில் வளர்ந்து பறக்கும் திறமையை அடைய வேண்டும். அதற்குப் புரதச் சத்து (protein) அதிகமுள்ள உணவு தேவை.

கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு சிறிது நேரம் உணவளித்த பின் தாய்ப் பறவை தங்களுக்கே தெரிந்த மொழியில், “நீ இவ்வளவு நேரம் உணவு உட்கொண்டுவிட்டாய். இனி மலம் கழிக்க வெண்டும்”, என்று சொல்லும். குஞ்சும் திரும்பிக் கொண்டு மலம் கழிக்கும். அவ்வாறு வெளியேற்றப் படும் மலத்தினை தாய்ப் பறவை அலகில் கொத்திக் கொண்டு வெகுதூரம் எடுத்துச் சென்று எறிந்துவிடும். மலமும் கூட்டிலோ அல்லது தாயின் அலகிலோ ஒட்டிக் கொள்ளாத வகையில் ஒரு மெல்லிய தோல் பொன்ற பொருளால் மூடி இருக்கும். மலப்பை (fecal sac) என்று அதற்குப் பெயர். இவ்வாறு மலம் கூட்டில் படாமல் வெளியேற்றப் படுவதற்கு கூட்டின் சுத்தம் (nest hygiene) என்று சொல்வார்கள்.

                                                                                      (கூட்டினை சுத்தமாக வைத்திட மலத்தினை அகற்றல்)

இதற்கு நேர் எதிர் புறாக்கள். குஞ்சுகள் கூட்டிலேயே மலம் கழிக்கும். ஆனால் கூடு இடைவளி அதிகம் கொண்டு குச்சிகளால் கட்டப் பட்டு இருக்குமாதலால் மலம் வெளியே விழுந்து விடும்.

தேன் சிட்டு தன் குஞ்சுக்கு உணவூட்டும் அழகினைப் பாருங்கள்.

தேன் சிட்டினை நான் படம் பிடித்த போது ‘பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட்’ அதிகம் கலவரப் பட வில்லை. ஆனால் ‘பர்பிள் சன் பேர்டோ’ மிகுந்த கலவரப் பட்டு ஆத்திரத்தில் கேமராவையே தாக்கியது. அதை மற்றொரு கேமிரா மூலம் பதிவு செய்தேன். அந்தப் படம் இதோ

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்பது எளிதுதானே?

(கருப்பு வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்(1)

  1. நடராஜன் கல்பட்டு அவர்களின் பதிவுகளை கருவூலத்தில் வைத்துக் காப்பாற்றவும், ஆசிரியரே.
    இன்னம்பூரான்

  2. அருமையான படங்கள். மூன்றாவதானது த.புகைப்படக்கலையின் தளத்தில் கண்டு மிகவும் ரசித்த படம் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.