தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 27

5

 இன்னம்பூரான்

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -26

இந்த 2ஜி விவகாரத்தில் வசையும் திட்டும் அதிகம் வாங்கிய ஆடிட்டர் ஜெனெரலுக்கு இன்று சாபவிமோசனம்! ஆனானப்பட்ட வழக்கறிஞரும், மத்திய அமைச்சருமான அழகிய திருமகன் திரு. கபில் ஸைபல், ஆடிட் ரிப்போர்ட்டை, எள்ளி நகையாடி.’…காலணா பொறாத விஷயத்தை ரூ. 1.76 லக்ஷம் கோடி நஷ்டம் என்று உளருகிறார், இந்த ஆடிட்டர் ஜெனெரல்..’ என்று அன்று கொக்கரித்தார்.

இன்றோ, அந்த திருமகனாரே வரப்போகும் 2ஜி ஏலத்திற்கு அடிமட்ட அரசாங்க விலையாக ரூ.14,000 கோடி என்ற சூத்திரத்தை நிர்ணயம் செய்து, ஆடிட்டர் ஜெனெரலின் கூட்டலும், கழித்தலும் சரியே என்று ஒத்துக்கொண்டார். இந்த டெலிக்காம் அத்தாரிட்டியும் அவ்வாறே, 20% அதிகமாகவே, சுட்டிக்காட்டியது. அந்த அதிபுத்திசாலிக்கு, ரூ.0/-க்கும் ரூ. 1.76 லக்ஷம் கோடிக்கும் உள்ள இடைவெளி புரிந்து விட்டது. மீசையில் மண் அப்பிக்கொண்டார் என்றாலும், அதைத் துடைத்து எறிந்து, ‘புல் தடுக்கி விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை‘ என்று பிரகடனம்! வக்கீலோல்லியோ! அவர்களுக்கெல்லாம், வி வாதம் என்றால் விதண்டாவாதம் தான்! 

இத்தனைக்கும், நான் இந்தத் தொடரின் 23 வது கட்டுரையில் விவரித்த மாதிரி, ஆடிட்டர் ஜெனெரல், தான் போட்ட கணக்கின் வழியெல்லாம்  ஆதாரத்துடன் எழுதிக் காட்டியது மட்டுமல்லாமல், ஊடகங்களுக்கு நிதானமாக போட்டு காண்பித்தார். ஆளும் கட்சியின் பிரதிவாதிகள் (மன்னிக்கவும்: ‘பிரதிநிதிகள்’!) பொது கணக்கு மையத்தில் கூச்சல் போட்டு, கூக்குரலிட்டு, கலாட்டா செய்து, ‘சத்யமேவ ஜயதே’ என்ற தேசீய இலச்சனையை ‘அஜயதே’ செய்ய பார்த்தார்கள்.

அவர்களுக்கென்று பிரத்யேக மையமான கூட்டு மையத்தின் தலைவரும் ஆளும் கட்சியினருமான திரு.சாக்கோ, ஆடிட்டர் ஜெனெரலை சாக்கு மூட்டை கட்ட முயன்றாலும், ஆடிட்டர் ஜெனெரல்  ‘நக்கீரனாக’ முரண்டு பிடித்தார். அவருடைய பாயிண்ட்: திரு. ஆ.ராஜா அவர்களின் ஆளுமையில், மற்ற பிரமுகர்கள் ஒளிந்தும், ஒளியாமலும் ஒத்து ஊத, தாராளக்கையாக (சிலர் ‘கன்னா பின்னா’ என்று வர்ணிக்கிறார்கள்.) 2001ம் வருட விலையில் 2ஜி நன்கொடை நடந்தது தவறே. ‘அடுத்த வீட்டுக்காரன் நெய்யே! என் பெண்டாட்டி கையே’ என்றானாம். இன்று பெருங்கணக்கு போட்டால், இந்தியாவுக்கு இந்த 2ஜி முறைகேடு கொடுத்த நஷ்டம் கோடானு கோடி டாலர்; மானமும் கப்பலேறியது. 

ஒரு கொசுறு சமாச்சாரம்: தணிக்கைத்துறை தன்னையே ஒரு தணிக்கை செய்து கொண்டது; முடிபு: 1. கொள்கைகள் களவாடப்பட்டால், ஆடிட் எஃப்.ஐ.ஆர். போடத்தான் வேண்டும். அப்போது தான் ‘என்ன ஆச்சு’ என்று எட்டிப்பார்ப்பார்கள். 2. மக்களின் விழிப்புணர்ச்சி அதிகமாக, அதிகமாக, உண்மை வெளிப்பட ஆரம்பித்தவுடன், தணிக்கைத்துறை மீது கடுமையான விமர்சனம் (வசை, திட்டு) கூக்குரலில் அலறியது. 

யார் கண்டார்கள்? திரு.விநோத் ராய் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின். திரு. ஆ.ராஜா அவர்களை, அவரது கட்சித்தலைமையின் ஆசியோடு, ஆடிட்டர் ஜெனெரலாக நியமித்தாலும் நியமிப்பார்களோ! ‘அப்படி நடந்தால்..’ என்ற கற்பனையில் பின்னூட்டங்கள் வந்தால்,சுவை கூடும்.

இன்னம்பூரான்

ஜூலை 4, 2012

http://3.bp.blogspot.com/_jPg4ii0EfUk/TQTReASAh6I/AAAAAAAACI8/fuSkD_HeZUI/s1600/1_34950.jpg

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 27

 1. சந்தை மதிப்பு என்ற ஒன்று இருப்பதைப் பற்றியே அக்கறைப்படாமல், இயன்றவரை வாசிப்பவர்களைக் குழப்பியிருக்கிறீர்கள் ஐயா. கணக்காளர்களுக்கும் தணிக்கையாளர்களுக்கும் நடைமுறைகளை விடவும், கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல்தான் பூதாகரமாகத் தென்படும் என்பதை மீண்டும் புரிந்து கொள்ள முடிகிறது. :-)))))

 2. அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய இன்னம்பூரார் அவர்களே1
  கபில் சிபலின் விதண்டாவாதங்களை அருமையாகப் பிட்டுபிட்டு வைத்து விட்டீர்கள். ஆனால் வெட்கம் கெட்ட ஐமுகூ ஜன்மஙகளுக்கு இதெல்லாம் புரியாது. மன்னிக்கவும். புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பார்கள்.
  ஸம்பத்

 3. நன்றி, திரு. ராமஸ்வாமி சம்பத். தொடரை, நேரம் கிடைத்த போது முழுதும் படித்து, உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். சொல்ல வேண்டிய மர்மங்கள் எக்கச்சக்கம்.

  நன்றி, வசந்த முல்லை. சந்தை மதிப்பு என்ற மாயாஜாலம் பற்றி ஒரு கட்டுரை வரையுங்கள். உற்ற விளக்கம் தருகிறேன். குழப்பம் தீர ஒரே வழி. முழு தொடரையும் நிதானமாக் படித்து, பிறகு என்னிடம் வினாக்களை வீசுவது. அது எனக்கு பெரிய உதவி. நான் மிகவும் சுருக்கி எழுத வேண்டி இருக்கிறது. இந்த 2ஜி புராணத்தின் மூதாதை பி.ஜே.பி. இந்த அலை வரிசை விவகாரத்தை 1964லிலேயே, ராணுவத்தின் தேவைகளுக்கு நானே கையாண்டவன் என்பதால், உள்குத்து கும் கும் எல்லாம் அறிவேன். கேளுங்கள். விளக்கப்படும்.
  நன்றி,
  இன்னம்பூரான்

 4. ஆ.ராசா, சட்டக் கல்வி பயின்றவர். 

  Educational Qualifications –
  B.Sc., B.L., M.L. Educated at Government Arts College, Musiri, Distt. Trichy Government
  Law College, Madurai and Government Law College, Trichy, Tamil Nadu
  (Ref: http://realityviews.blogspot.in/2010/11/detailed-biography-and-profile-of-raja.html)

  ஆடிட்டர் ஜெனரலாக, குறைந்தபட்சம் பட்டயக் கணக்காளர் படிப்பில் தேர்ச்சியும் அத்துறையில் மிகுதியான அனுபவமும் தேவை என நினைக்கிறேன். இப்போதைய நிலையில் ராசா, பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர்ந்து பயின்று தேர்ச்சி பெறுவதும் கூடச் சாத்தியம் ஆகலாம். ஆனால், அத்துறையில் ஆழமான புலமையும் பல்லாண்டு அனுபவமும் பெறுவது உடனே நிகழக் கூடியவை அல்ல. ராசாவின் மகள் மயூரி, இத்துறையில் வர நினைத்தால், அவரால் எதிர்காலத்தில் இத்தகைய உயர் பதவிகளுக்கு வர இயலும்.

 5. ஆடிட்டர் ஜெனரலுக்கான தகுதி அரசியல் சாஸனத்தை வகுக்கும் போது விவரமாக விவாதிக்கப்பட்டது. எப்படி முதல்வருக்கோ/பிரதமருக்கோ/ அமைச்சருக்கோ தகுதி வகுக்கப்படவில்லையோ, அம்மாதிரி ஆடிட்டர் ஜெனெரலுக்கும் விதிக்கப்படவில்லை. பிரபலமான, யோக்கியமான பெருந்தகையாக இருந்தால் (பெருந்தலைவர் காமராஜரை போல) போதும். முதல் மூன்று ஆடிட்டர் ஜெனெரல்களும், ஐந்தாவது ஆடிட்டர் ஜெனெரலும் மட்டுமே அத்துறையில் அனுபவம் பெற்றவர்கள். பாக்கி ஆறு பேரும் ஐ.சீ. எஸ்/ ஐ.ஏ.எஸ். இது நியாயமற்ற அரசு போக்கு. எனினும், ஒருவரை தவிர, அவர்களில் ஐந்து பேரும், 150 வருட மரபு கொண்ட தணிக்கைத்துறையின் மேன்மையில் ஈடுபட்டு, அரசின் தரம் குறைந்த எதிர்ப்பார்ப்பை பொய்த்து விட்டனர். திரு. வினோத் ராய் அவர்களின் பதவிக்காலம் முடியும் போது, ஜனாதிபதி (அதாவது: பிரதமர்) புதியவரை நியமிப்பார். அதற்கு முன்னால், இந்த விவகாரத்தை அலசுவதாக இருந்தேன். நீங்கள் கேட்டீர்கள். பதில் இங்கே, சுருக்கமாக. பிறகு, வாசகர்களின் ஆர்வத்தைப் பொருட்டு, அது வரலாம்.மத்திய அரசின் மெத்தனங்களை முன்னிறுத்தவே, நான் திரு.ராஜா-ஆடிட்டர் ஜெனெரல் கற்பனையை எழுதினேன் – மதுரை பொற்கொல்லனை சோழநாட்டின் முதலமைச்சராக நியமிப்பது போல.இன்னம்பூரான்ஜூலை 7, 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *