வண்ணதாசன் கடிதங்களில் வாழ்வின் வண்ணங்கள்
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
2010ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் பன்னிரண்டாம் நாளின் பொன் மாலைப் பொழுது. மழைபெய்து ஒய்ந்து இரு நாட்களாகியதால் காய்ந்தும் காயாமலும் அடி ஈரம் காக்கப்பட்ட மண் தரை. இதை ரகசியமாய்ப் பாதுகாத்த வாதாம் இலை பழுப்புச் சருகுகள். சருகுகள் மேல் விழுந்த பூக்கள். பூக்களின் மேலும், ஓரத்திலும், சருகுகளின் மேல் விளையாடும் கறுப்பு எறும்புகள். விலக்கினால் அங்காங்கே கூட்டம் கூடிப் பேசவும் சிற்றெறும்புகள், சருகுகள் மறைத்த வாதாம் பழங்கள், மரங்களின் குறுக்கும் நெடுக்குமாய் கொடிகள், கொடிகளில் உலரும் சிறிதும் பெரியதுமாய்த் துணிகள் உலர்ந்தும் உலராத ஈர வாடை. இவற்றிற்கிடையே கம்பீரமாய் நிற்கும் கேணிக்கு இணையான உயரத்துடன் கூடிய தன் மென்கரங்களை மெல்லிய கதைகளாய் மனித உறவுகளை இலக்கியமாய்ப் படைக்கும் வண்ணதாசன் நின்று நம்முடன் பகிர்ந்துகொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறதல்லவா. மேலும் அந்த வாதாமரங்களும் தென்னை மரங்களும் மா மரங்களும் இன்னும் அழகாய்த் தெரிந்திடும் அல்லவா. நம் அதிர்ஷ்டம் & அன்று ‘ஞானியின் கேணி’ வீட்டினுள் அமைக்கும்படி நேர்ந்துவிட்டது. அது எல்லோர்க்கும் வருத்தம் தான். அவருக்கும்தான். நாற்காலி கூட போட முடியாதபடி ஈரமான தரையாகி இருந்தது.
நாஞ்சில் நாடன் போல் வண்ணதாசனும் எனக்குக் கேணி மூலமாகத்தான் அறிமுகம் ஆனார். ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ முன்பே படித்திருந்ததால், அன்று அவரது பகிர்தலும் அவரது எழுத்தின் நெருக்கத்தை அறிய உதவியது. நமது சுண்டு விரலைத் தொட்டும் தொடாமலும் குரலும் பிடித்து நம்மை அழைத்துச் சென்று, மனித உறவுகளின் மெல்லிய இழைகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதன் வன்மையையும் உணர வைக்கிறார். நம் கண்களுக்குத் தென்படாதவற்றைத் தென்பட வைக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட அவரது நூல்கள் அனைத்தையும் கேணியில் வாங்கிவிட்டேன்.
இப்போது பழைய கிணறுகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுல்தான் அவர்களின் இணையத்தளத்தில் வண்ணதாசன் கடிதங்கள் என்று ஒன்று பார்த்தேன். சென்ற வாரம் சந்தியா பதிப்பகம் சென்ற போது, இது பற்றி கேட்டேன். ‘வச்சிருந்தேன். என்னிடம் ஒரு காப்பி தான் இருக்கிறது. இந்தாருங்கள்’ என்று உடனே கொடுத்துவிட்டார். பணமும் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். இப்படித்தான் தமிழினி வசந்தகுமார் அவர்களும் நம் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்துச் சில சமயங்களில் பணம் வாங்க மறுத்துவிடுகிறார். கேட்டால், நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உழவன் கணக்குப் பார்ப்பானா? என்கிறார். இவை யாவற்றுக்கும் நான் ஞாநியின் கேணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்றென்றும் கடமைப்பட்டவளாகி விடுகிறேன்.
அது இருக்கட்டும். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன். அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும். அவரது உள்ளமென்னும் முப்பட்டகத்திலிருந்து தெறித்துச் சிதறிய வாழ்வியல் சிந்தனைகளை எடுத்து உங்கள் முன் அளித்தால் உன்னதமாய் இருக்கும் என எண்ணி அளிக்கிறேன்.
*****************************
வாழ்க்கை எப்போதும் ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை. ஆதாரத்தின் புள்ளியும் அவ்வப்போது மாறிச் சமன் செய்துகொண்டிருக்கின்றன.
வாழ்வின் மர்மமும் புன்னகையும் ஒளியும் நிறைந்தது. தனிமை நிரம்பியது. உங்களின் முகத்தில் ஜீவனைத் தரிசிக்க முடிந்தது. நீங்கள் எவ்வளவு அழகு.
*****************************
தனிமை நிரம்பிய கண்களின் பிற்பகுதி வாழ்க்கையை நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தர முடிவதில்லை. நெருக்கமான சிநேகிதர்களின் வருகையின் போது, “மனம் & மொழி & மெய் களிக்க” வாழ்வது போல இருப்பதை நானே அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்.
ஊருக்கு இளைத்தவர்களைக் காயப்படுத்த நிறையப் பேர் உலகத்தில். ஆனால் கற்கும் படியாக இருப்போம், எல்லாக் காயங்களுக்கும் காயமே இது பொய்யடா”.
*****************************
திட்டமிட முடியாத வாழ்வின் எல்லைக் குறைவால் ஆசைகளின் பழுப்பு இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். எதையாவது தொடர்ந்தும், அதனாலேயே தொடரப்பட்டும் கடைசி வரை செய்வினை, செயப்பாட்டு வினை ஆகிவிட்டது. வாழ்க்கையில் விருப்பமில்லாத திருப்பங்கள் எத்தனையோ. அவை தவிர்க்க முடியாதவை. காதலினால் அல்ல. கருணையினால் என்றும் “கருணையினால் அல்ல காதலினால்” என்றும் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவீதங்களுடன் நிகழ்கின்றன. இன்றும் பௌர்ணமி நிலா, நிலா மாதிரியே இருந்தது.
*****************************
இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும் இந்த மண்விளக்குகள் போல நானும் இருந்து விடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும், ஈரப் புல்லில் ஓரமாவது ஒரு தரம் மினுக்கும் நடுங்குகிற ஒளியில். எல்லாவற்றையும் நீருக்கும் நெருப்புக்கும் காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் உண்மையாக இருக்க அனுமதியுங்கள். இயல்பு நம்மை வழி நடத்தும், புல்லை யாரும் தருவதில்லை தானாகவே வளர்கிறது.
*****************************
சிக்கல்களின் நெரிசல்களுக்குக்கு இடையில் மனிதர்கள் சதா நோம்பிருப்பது அன்பெனும் சிறு வரத்திற்கு. பந்தியில் போட்ட வாழை இலையின் குருத்துப் பச்சையை ரசித்துப் புற விரல்களால் நீவிக் கொடுத்த நமக்குத்தான் சரியான இடத்தில் விழுந்து போகிறோம். மருகியுருகித் தவிப்பவர்களின் மேல்தான் மெழுகுவர்த்திச் சொட்டாக எல்லாம் விழுந்து இறுக அடிக்கின்றன. என்றாலும் நாம் இதையெல்லாம் தாண்டிப் போகிறோம்.
*****************************
நல்லவையாக எழுதியவையெல்லாம் உடலும் மனமும் உயரப் பறந்து, ஓய்ந்த காலத்தில் தான். ஒரு முழு நாளில் சிறகடிப்பிற்க்கு முன் கோபுரத்தில் உட்கார்கிற அந்த மயங்கும் நேரத்தில் தான். இது போன்ற சமயங்களில் குழுந்தையைவிட மனைவி பெரிய ஆறுதல். எல்லாம் அறிவது இம்சை போதும்.
*****************************
ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான தேக்குத்தடி, மரக்கடையில் நுழைவதற்காக நட்ட நடுத் தெருவில் கிடக்கிறது. கடற்கரையில் ஒதுங்குகின்ற சுறா மீன்கள் போல அது அப்படியே இறங்கிக் கிடக்கிறது.
*****************************
வாசிக்கிறவனை வீணை மீட்டத் தொடங்குகிற நேரம் அபூர்வமானது. இசையின் கொடுமுடிகளைத் தொடரப் பிரயாசைப்பட்டு, அடையும் போது இடையே இன்னும் சில சிகரங்களுக்கும் பாடகனை நகர்த்தும்.
*****************************
குளிப்பதற்கு முந்தைய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறு வேறு அல்ல, நீங்கள் பார்க்கிற ஆறும் நான் பார்க்கின்ற ஆறுமே வேறு வேறு. எதுவும் ஒன்றல்ல. எதுவும் வேறு வேறும் அல்ல.
*****************************
அன்போ, காதலையோ கல்வியையோ தன்னை மறந்து அல்லது தன்னை மறக்கச் செய்கிறபடி எப்போதாவது வாய்க்கிறது. மனைவியுடன் சினேகிதினுடன், குழந்தைகளுடன், எந்தச் சலனமுமற்ற நிறைந்த நதி நகர்வது போல, கரை தொட்டு கரை அற்றுக் கலந்திருப்பதால் தனித்த நீண்ட அருமையான இரவுகளும் அப்படித்தான். சுற்றிப் பிரகாரத்தில் கடைசியில் தெரிகிற கருணைச் சுடர் போல் தெரிகிறது. ஒரு பந்து மல்லிகையைவிடக் கிள்ளித் தலைமையில் செருகிய ஒரு இணுக்குப் பூ படுத்துகின்ற பாடு ஜாஸ்திதான். அலை அலையான ஆண் பொண்ணுமில்லாவிட்டால் திருவிழா ‘நிரம்பாது’. ரோடு என்ஜின் மாதிரிக் தேர் அளந்து போகமுடியாது. வாழ்க்கை முதல் மரியாதைகள் நிரம்பியது.
*****************************
பாசாங்குகளற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும் எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும்.
எல்லா மனிதனும் எல்லா மனுஷியும் அழகாக இருக்கும் போது, இந்த வாழ்வும் இந்த உலகும் மேலும் அழகுறும். உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடன் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் இந்த ஆரோக்கியம் இல்லை, இந்த சினேகிதம் இல்லை. நான் மற்றவர்களுக்கும், மற்றவர்கள் எனக்கும் என்றாகிவிட்டது என் மார்புக் காம்பிலிருந்து நான் பாலருந்த முடியாது. வளர்வதும், வளர்வதைக் கண்டு மகிழ்வதும்தான் வாழ்வாக இருக்க வேண்டும். ஒன்றுமில்லை என்று உணர்வது போல் உன்னதம் வேறு உண்டோ!
*****************************
சில பேரை நிஜமாகத் தொட முடிந்திருக்கிறது. நிஜம் தொட்டால் நன்றாகத்தானே இருக்கும். தற்செயல்கள் எல்லாம் எவ்வளவு அழகாகப் பூவைப் போல மலர்ந்துவிடுகின்றன.
*****************************
நான் எதையும் சுருதி பாடவில்லை. எதையும் எதிர்த்துத் தர்க்கமிடவில்லை. நான் இதுவுமில்லை, அதுவுமில்லை, எதுவுமில்லை. எதுவாகவேனும் நான் நிர்ப்பந்தமாக என்னைச் சொல்லிக்கொள்ள வேண்டுமெனில் என்னைப் புல் என்று சொல்லுங்கள். புல்லாக இருக்க எனக்கு முற்றும் சம்மதம்.
*****************************
இனிப்போ, கசப்போ எதிர்கொள்ளுங்கள். கசப்பைப் போல் ருசியில்லை. காலம் போல் அமுதில்லை. விழுங்குங்கள். செரித்துக்கொள்ள முடிந்ததெனில் செய்யுங்கள். விழுங்கவும் முடியவில்லை, அப்போதும் தோன்றவில்லை எனில் நீலகண்டனாக நிறுத்துங்கள். மனிதர்களைச் சம்பாதிப்பதற்காக, முதலில் ஒடுங்கள். சம்பாதிப்பதற்காக அப்புறம் ஒடுங்கள். ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுகின்ற புள்ளிமான் சூட்சுமம் பிடிபடுகிறபோது, நீங்கள் வெற்றிபெற ஆரம்பிக்கிறீர்கள்.
*****************************
மனிதர்கள் தான் சூழல். சூழல்தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது முன்னே செல்வது. முன்னே செல்வது உழைப்புச் சார்ந்தது. உழைப்பு என்பது உள்ளிருந்து எழுவது. உள் என்பது வெளி.
*****************************
மண்ணை அறிவது மனிதர்களை அறிவது மாதிரிதான். ஒரு விதை முளைத்தலை மீறிய உன்னதக் கவிதையை என்னால் ஒருக்காலும் எழுதி விட முடியுமா என்ன! நிகழக் கூடியதுதான் என்பதற்காக நிகழ அனுமதித்து விடமுடியுமா?
*****************************
உலகம் முழுவதும் ஆயிரம் நடந்து கொண்டிருக்க அவரவர் வாழ்விலேயே பெரிதும் சிறிதுமாக நிறைய தூரம் வந்துவிட்டோம். செய்யத் தோன்றியதே மிகக் கொஞ்சம். அதையும் செய்துவிட்ட பாடில்லை. போய்க்கொண்டே இருக்கிறோம். அன்றன்றே சரியாகிப் போகிறது. மலையும் வனமும் நதியும் சதா அழைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அழைப்புக்கு உடன்படாத ஹிம்சை இருக்கிறதே தவிர, இந்த அழைப்பின் குரல் ஒருபோதும் இம்சையாகிவிடாது இருக்கிறது.
*****************************
என்னைப் பொறுத்தவரை குரல்கள் எனக்கு முக்கியமானவை. அவரவர்களைக் காட்டுகிற அவரவர் குரல்கள், முகம் மாதிரி, முகத்தை விடவும் எல்லாம் காட்டவல்லவை.
*****************************
அம்மாவுக்குப் பேச்சு வேண்டும். சத்தம் வேண்டும். சலசலப்பு வேண்டும். சிலபேர் அன்பை அப்படி வெளிப்படுத்துகிறார்கள். யாருக்கு எழுதினேன் என்பதும் என்ன எழுதினேன் என்பதும் ஞாபகம் இருப்பதில்லை தற்போது. வாழ்தல் இருத்தலாகிவிடும்போது இதுபோன்று ஆகும். மறுபடியும் ஒன்றுக்கொன்று இடம் மாறிச் சமன் செய்துகொள்ளும். அதனதனை அதுவே கவனித்துக் கொள்ளும். மிக உள்ளடங்கி, மிகத் தொலைவில், மிக அடர்த்தியுடன் பூக்கும் மரங்களும் எங்கெங்கோ இருக்கின்றன. உடனடி வாழ்வில் எங்கெங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*****************************
வாழ்க்கைக்கு எது எல்லாம் தேவையோ, அல்லது போதுமோ அது அவற்றுக்கும் பொருந்தும். ஒன்றின் ஜீவன் மற்றொன்றில் இருக்கிறது. எதுவும் வேறு வேறில்லை. எல்லாம் புரியும் தினம் வரும். எல்லாம் தானாகப் புரியவும் செய்யும். அந்த நேரம் முன் & பின் எனினும் அருமையானதாக இருக்கும். எனக்கு எதிர்த்தாற் போல உன்னதமான மனிதர்கள் தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். என்னால்தான் எதையும் திருப்பித் தர முடியவில்லை.
*****************************
மனிதர்கள் நம் கையைப் பற்றுகிற நேரம் எவ்வளவு உன்னதமானது. அவர்களின் கண்களில் திரள்கிறதும் கசிகிறதும் எவ்வளவு ஒப்பற்றது.
உங்களுடைய துணைவியாருக்கும் சற்று நெருக்கமான நேரம் ஒதுக்குங்கள். ஸ்தாபனமோ, இலக்கியமோ அந்தப் பெண்களை அவர்களுடைய இடத்திலேயே விட்டுவிட்டு நீங்கள் மட்டும் எங்களுடைய காரியங்களைப் பார் என்று சொல்லவில்லை. நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் அருமையான மனுஷிகள், பூமி உருண்டையைப் புரட்டி விடுகிற நெம்புகோல்களுக்கு அடியில் அவர்கள்தான் செங்கா மட்டை. நசுங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். என்னையும் உங்களையும் அப்படியெல்லாம் அனுசரணையாயும் பத்திரமாகவும் வைத்திருக்கிற பெண்களுக்கு நாம் அப்படியொன்றும் அதிகம் செய்துவிடவில்லை.
*****************************
யாரையும் பயன்படுத்திக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. மனிதன் பயன்படுத்திக் கொள்ளப்படுவதற்கு உண்டானவனாக எனக்குப் படவில்லை, அதிகபட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் உண்மையாக இருப்பதையே முயல்கிறேன். விட்டுக் கொடுத்துக்கொண்டே செய்கிற உறவு நிலையில் எந்த இழப்பும் இல்லை எனத் தோன்றுகிறது. குடும்பத்திலும் அலுவலகத்திலும் என்னைக் காயப்படுத்த, சிறுமைப்படுத்த முனைந்த மனிதர்களை இன்னும் நெருங்கியிருக்க என்னால் முடிகிறது.
*****************************
மண் புழுக்களை நேசிக்கிற மனம் இன்றும் இருக்கிறது. அதனதன் காரியங்களை அவை யாவையும் அவரவர் காரியங்களை அவரவர்களும் செய்து விடுகிறோம். இதில் ஒப்பிட ஒன்றுமில்லை. ஒரு கூழாங்கல் போல் இன்னொன்றில்லை. ஒரு குன்னி முத்துப்போல் மற்றொன்றில்லை. ஒரு வேப்பங்கன்றின் காற்றை இன்னொன்று தருவித்து விடாது. இன்றைய சூரியன், நேற்றைய சூரியன் அல்ல. நாளைய கல்யாணி, இன்றினுடையவன் அல்ல. எதன் எதன் நீட்சியாகவோ, எல்லாம். அடிக் கணு இனிப்பு நுனிக் கரும்புக்கு அகப்படவில்லை. இதற்கிடையில் ஆரக்கானை நொந்துகொள்ள கடையாணிக்குத் துப்பில்லை. எல்லாம் உருண்டு உருண்டு நடந்து நடந்து கடந்து கடந்து.
*****************************
நான் சிப்பியைப் போல ஒதுங்கிக் கொண்டிருப்பேன். சிறு கீரையைப் போல என் பாத்தியில் தழைத்துக் கொண்டிருப்பேன். அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குற்ற உணர்வு. அசைபோட அசைபோட அத்தனையும் பிரம்படி. வேண்டும் என்று யாரும் கிழிப்பார்களா தலைவாழை இலையை! ஒரு பூட்டில் அஞ்சு இலை என்ற கணக்கு இன்னும் மாறவில்லை. ஆண்டாள் தோளில் தொங்கினால் மாலையும் அழகு. கிளியும் அழகு. இடைச்சி கடைந்தாலும் மோர் சிலும்பாமல் இருக்குமா? தெறிக்கத் தெறிக்கத் திரளும் வாழ்வு.
*****************************
ஒரு ஸ்டில் லைஃப் ஓவியத்தின் பழக்கிண்ணத்தில் நிறையத் திராட்சைத் தொங்குவது போல. சில சமயம் நெரிசல் அழகு. நெரிசல் ஜீவன்.
யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறார்களோ, அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியை நாம் தியானிப்போமாக! எப்போதுமே சற்று முந்தைய பருவங்கள் அழகானவை. அப்பழுக்கற்றவை. உண்மையை ஏந்தி நிற்பவை. காலைக்கு முன் விடியற்காலை, வேனிலுக்கு முன் இளவேனில், பூப்பதற்கு முந்தைய பூ, பேறுக்கு முந்தைய இளம் தாய், கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு மண்டபம், யோசிக்க யோசிக்க இன்னமும் நிறைய இப்படி…
*****************************
வீடு அதில் உள்ள மனிதர்களால் நிறைகிறது. அழுந்துகிறது. ஒன்றுமே இல்லை என்று ஞானமும் தர்க்கமும் அறுதியிடுகிறவற்றிலிருந்து எல்லாச் சந்தோஷமும் பெருகி வழிவது போல் இருக்கிறது. கொட்டின ஆரத்தியில் கிள்ளின வெற்றிலையை அப்பியிருக்கிற வாசல் மாதிரி, ஏற்றினால் இன்னொன்று அழகாகி… காலத்தின் சிறகுகள் அகன்றவை. வீச்சு நிறைந்தவை.
*****************************
நீரைப் போன்ற அற்புதமில்லை. அதுவும் வனாந்திரங்களில் மீன் மொய்த்துக் கிடக்க, சதுர கூழாங்கல்லுக்கு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், காற்றின் பாடல்களுக்கு இசைந்து கொண்டுமிருக்கிற நீரைப் போன்ற உயிருள்ள திரவம் வேறில்லை.
*****************************
உள்ளங்கைகள் மிக அழகாக இருப்பது, அப்படி ஒரு சேர அந்தத் தண்ணீரை அள்ளும்போதுதான். சில பதிலற்ற கேள்விகள், தொடர்ந்து நம்மிடம் இருந்துகொண்டே இருக்கின்றன. போன தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறைக்கு வம்சாவளியாக அந்தக் கேள்விகளையும் அங்கீகரித்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஓடுகிற ஆறு, கூழாங்கற்களைத் தராது இருக்காது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவுதான் ஒருத்தி எழுந்திருக்க முடியாமல் இம்சைப்படுவது என்று உன்னைப் போல் ஒரு மனுஷிக்குத் தோன்றிவிடக் கூடாது. கைப்பிள்ளையோடு வேனா வெயிலில் லொங்கு லொங்கு என்று ஓடுகிற கிராமத்துப் பெண்பிள்ளைகளுக்கு ஆதரவு சொல்ல முடியாதபடி ரஸ்தாக்கள் நீளக் கிடக்கின்றன.
*****************************
பேசினதைவிட என் வீட்டு கேட் வரை வந்து விட்டுப் போனீர்களே அது அல்லவா பெரிய பேச்சு. மனது சூடுற்றும் புடைத்துப் பரபரப்புக் கொள்ளும்போது எழுத்து சரியான வடிகாலாக இருக்கும்.
*****************************
இந்தத் தாளின் கசங்கலைப் பொறுத்துக்கொள்வீர்கள்தானே. மனித குணாம்சங்களின் கசங்கல்ளைப் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கவும், அனுசரிக்கவும் விலகி நின்று ரசிக்கவுமான பக்குவமும் வாழ்வனுபவமும் உடைய புத்தகக் கூர்மை உடைய மனிதனாக நீங்கள் இல்லாவிட்டால், இந்த இரண்டு கதைகளையும் இதற்கு முந்தைய கதைகளையும் எப்படி எழுதியிருப்பீர்கள். கசங்குவது கசக்கப்பட்ட வஸ்துவின் குற்றமாகாது என்பதும் இன்னொரு நிஜம்.
*****************************
தெரிவதுதான் உண்மை. உண்மை சுடுவது மட்டுமல்ல, உண்மை தன்னைக் காட்டிக்கொள்ளவும் செய்யும். சுட்டிக்கொள்ளவும் செய்யலாம், செய்யக்கூடும்.
*****************************
புரட்சி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் துவங்குகிறது என்று ஆவேசமாகச் சொல்வார்கள். புரட்சி மட்டுமல்ல, அறிவு ஜீவிகள் எடுத்து வைக்கிற, மிகவும் சுலபப்படுத்தியும் சுதந்திரப்படுத்தியும் பேசுகிற இன்ஹிபிஷன் சார்ந்த விஷயங்களும் வீட்டிலிருந்து துவங்க வேண்டும் என்று நினைக்கிறேன். துவங்க முடியாத படியும் துவங்கக் கூடாத படியும் இந்த வாழ்க்கையின் அமைப்பும், மனங்களின் வார்ப்பும் நமக்கிருக்கிறது. நடமாட்டத்தை அவரவர் வீட்டு அடுக்களைக்குள் புழங்க விட்டுக்கொண்டும், அதைப் பெரிதுபடுத்தாது மீசை ஒதுக்கி இதில் என்ன என்று புகைத்துக்கொண்டும் வெற்றிலை உமிழ்ந்துகொண்டும் இருக்க முடியாத நோய்மையுடனேயே மரபு வார்க்கப்பட்டிருக்கிறது. உலக மரபு என்று கூடச் சொல்லலாம். அன்றைய தினத்துக் காற்றில் அசைகிற இலைகளை ஏன் இன்றைக்கே அனுமானிக்க வேண்டும்.
*****************************
ஊற்றுகிற எண்ணெய்க்கும் ஏற்றுகிற திரிக்கும் ஏற்ப, ஒளிரும் சுடர். வெளிச்சம் விளக்குக்கு அப்பாலிருந்தும் வருகிறது, அல்லது அப்பால் இருந்துதான். அதிர்ச்சிகளைத் தருகிற வாழ்க்கையே அதிர்ச்சித் தாங்கிகளையும் தரத்தானே செய்யும். பாதையிடுக்குகளில் புல் தானாக வளர்கிறது. மழைத் தண்ணீரில் தானே வாய்க்கால் வகுத்துக்கொள்கிறது. திடமான தாயின் கர்ப்பம் தானாகவே தலை பிறக்கிறது. நானாக உணராதது எல்லாம் தானாக.
*****************************
சாவு எனக்கு மரண பயம் தரவில்லை. சாகச் சம்மதம். அமைதியும் நிறைவுமான ஒரு விடுதலை இது. வாழ்க்கை அழைக்கிறது போல, சாவும் சதா அழைத்துக்கொண்டிருக்கிறது. இரண்டிற்கும் இடையில் நாம் தீவிரமாக முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறோம். வியர்வை ஒழுகிக்கொண்டிருக்கின்றது. கடைக்கண்ணில் நீர் பெருகி, காதோரம் சிகை கலைகிறது. அகலாது அணுகாது எரிகிறது தீ. தான் எவ்வளவு குரூபி எனினும் கண்ணாடி பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? எல்லோரும் அவரவர்களைத் தெரிந்துதானே இருக்கிறோம். நல்ல பட்டியலின் நீட்சிக்கு மத்தியில் என் பெயர் விட்டுப் போகிறதை எதிர்கொள்கிற எத்தனையோ இடங்களில் இதுவும் ஒன்று. உண்மை எதிர்கொள்ள வேண்டிய வகையிலேயே மிகவும் உறுதியுடன் தன்னை வைத்துக்கொள்கிறது. காலம் காலமாக இழந்த காதல்தானே கொண்டாடப்படுகிறது.
*****************************
நெல் வயலில் ரோஜா கூட ஒரு களைதான். நான் நெல்வயல் ரோஜாவாக இருக்கக் கூடாது இல்லையா? ஒரு நேரத்தில் ஒன்றை மாத்திரம் கவனியுங்கள். இலக்கியத்தில் திளைக்கும்போது எதற்கு இலக்கியவாதிகள் ஞாபகம். விதை பரவுதல் என்று சின்ன வயது சயன்ஸ் பாடத்தில், நீரால், காற்றால், பறவைகளால், மனிதர்களால் விதைகள் பரவுவது பற்றி வரும். நம்முடைய பிள்ளைகள் மனிதர்களையும் பறவைகளையும் அன்றி இந்தக் காற்றால் பரவுகிற எருக்கலஞ்செடி, இலவம் பஞ்சு, வாரியப்புல் வகைத் தாவரங்கள் ஆகிப் போனார்கள். முகவரியற்றுப் போவது ஒரு துன்பம் எனில் அப்படி முகவரியற்றுப் போனதை உணர முடியாதவர்கள் ஆனார்கள் என்பது இன்னும் ஒரு பெரிய துன்பம். வலியை உணர்வது அதிக வலி.
*****************************
நாம் உணர்வுபூர்வமானவர்கள். மனத்தைப் பார்க்கிறவர்கள், கரைந்து போகிறவர்கள். ஆனால் தொலைந்து போகிறவர்கள் அல்ல.
அப்படியெல்லாம் வாழ்வை, செயல்களை இன்னொருத்தரிடம் ஒப்படைத்துவிட முடியாது. வெயில், நிழல், பாதுகாப்பு, பாதுகாப்பின்மை எல்லாம் தான் எனக்கு வேண்டும். ஒரேயடியாக நிழலிலும் ஒரேயடியாகப் பாதுகாப்பிலும் இருந்தால் அது வாழ்வாக இருக்கிறதில்லை. மனம் அனுபவங்களின் நாற்றங்கால். பசுமையுடன் இருக்கும்போதே செய்ய வேண்டிய காரியங்களை வைக்கோல் பழுப்புக்கு வந்த நேரத்தில் செய்வதில் அர்த்தமில்லை.
*****************************
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்றுவிக்கப்படுகிற இந்த ஒளி துலங்குகிற வரை எனக்கு முகம் பார்க்க அலுக்காது. ஒளி பெருகுக, ஒளி பெருக்குக.
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
*****************************
கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. போன தடவை வந்திருக்கும்போது பஸ் ஸ்டாண்ட் வரை வந்து அம்மா வழியனுப்பிய கருணையினால் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யாராவது வழியனுப்பவும் துணையிருக்கவுமாக இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு அடர்த்தியாகி விடுகிறது. உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் ரோஜா இதழ்.
*****************************
தொடர்ந்து செயலாற்றுங்கள், எந்தக் கதவு எப்போது திறக்கும் என்று தெரியாத ரகசியத்தின் சுவாரசியத்தில் தான் இந்த வாழ்வின் பந்தயம் நிகழந்துகொண்டு இருக்கிறது. வீட்டில் எல்லோரும் அவரவர் உலகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றும்போது எல்லாக் கிரகங்களும் முக்கியமாகச் சூரியன் & நன்றாகத் தானே இருக்கும்.
*****************************
திட்டமிட்டு எல்லோரையும் அனுச்சரித்துக்கொண்டு உங்களுடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் மேலும் தாமதமின்றி வெற்றி பெறுங்கள்.
மீட்சியில் தேடலாகவும் தேடலில் இருந்து துவங்கும் மீட்சியுமாகவே மிச்சமுள்ள வாழ்வு இருக்கும். உச்ச மகிழ்ச்சியில் கசிந்துகொண்டிருக்கிறது, இந்தக் காலத்தின் கண்ணீர்.
*****************************
அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் அறியாத பரசுரமாகவே நாளிருக்கிறேன். என் தந்தையின், தாயின், மனைவியின், நண்பர்களின், சிறகுகளிலிருந்து உதிர்ந்திருக்கிறது, என் எழுத்தின் ஒற்றைப் பீலி. ஒற்றைப் பீலி பறந்து வருமே தவிர பறக்கச் செய்யுமா!
=========================================
படங்களுக்கு நன்றி – http://vannathasan.wordpress.com
‘நெல் வயலில் ரோஜா கூட ஒரு களைதான்.’
– சிறிய சொற்றொடர்; அருமையான சிந்தனை. பள்ளியிலே படிக்கும் போது, ‘இடம், பொருள், ஏவல்’ என்ற வினா நினைவுக்கு வருகிறது. உடனே தோன்றிய எண்ணம்: ‘ தமிழ்நாட்டின் அரசியலில் (நெல் வயல்) ஜனநாயகம் (ரோஜா) ஒரு களை தான்.
மிகவும் சிறப்பான கட்டுரை. கதைகளை, கட்டுரைகளை இத்தனை சிறப்பாக படித்து ரசித்து விமர்சிக்கும் தங்களது எழுத்து நடை அருமை.
வாழ்த்துகள்.
பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு, எவ்வளவு அருமையானது. அதுவும் சொந்த வீட்டு அடுக்களையில் மண் அடுப்பில், விறகு எடுத்துச் சுடுகிற நேரத்தின் நெருப்பும், அடுப்பின் உட்பக்கத்துத் தணலும், தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா அல்லது ஆச்சி அல்லது அத்தைகளின் முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது.
வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு எப்போதுமே வேலைதான் வாழ்க்கையாகி விடுகிறது – வண்ணதாசன்
‘வண்ணதாசனின் கடிதங்கள்‘ புத்தகம், அண்ணா சாலை ஹிக்கின்ஸ் பாதம்ஸில் கிடைக்கிறது.
நான் நான்கு மாதம் முன்பு வாங்கினேன். படிக்கும் பொழுது பிடித்த நல்ல வரிகளைப் பேனாவால் அடிக் கோடிடலாம் என்று புத்தகத்தைத் திறந்தேன். அப்புறம்தான் தெரிந்தது. அட்டை டூ அட்டை அடிக் கோடிட வேண்டும் என்று.