சாந்தி மாரியப்பன்

இரண்டு நாட்களாய் எப்படியெப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்து விட்டாள் ரங்கம்மா. நயமாகவும் பயமாகவும் விசாரித்துப் பார்த்தாலும் பயல் பிடி கொடுத்துப் பேசவில்லை. சரி,.. அவன் போக்கிலேயே விட்டுப்பிடிக்கலாம் என்று அவன் ஓரளவு நல்ல மன நிலையில் இருக்கும்போது, “உனக்கு எந்தூருப்பா.. சொல்லு மக்கா.” என்று கொஞ்சலாகக் கேட்டாள். கீழுதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தபடி தலை குனிந்து நின்றான். சட்டென்று கண்ணீர் திரையிட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தியது.

அவன் மோவாயை விரலால் பற்றி நிமிர்த்தியபடி, “சொல்லுடா தங்கம்..” என்று கேட்டவளின் அடிவயிறு குழைந்தது. கண்ணீரும் சோகமும் உறைந்த அவனது பார்வை அவளது நெஞ்சில் ஈட்டியெனப்பாய்ந்து உயிர்வரை ஊடுருவியது. “ஐயா,.. நான் ஒண்ணும் கேக்கலைப்பா.. நீயே உனக்கு எப்பத் தோணுதோ அப்பச் சொல்லு, போதுமா.. அழாதே” என்று அவனை இறுக்கிக்கொண்டாள்.

மளிகைக்கடையில் வேலை பார்க்கும் கணவனின் சம்பாத்தியத்தை மட்டும் நம்பியிருந்தால் மூன்று குழந்தைகளின் வயிற்றுப்பாட்டையும், வீட்டுச்செலவையும் இந்தக் காலத்து விலைவாசியில் சமாளிக்க முடியாது என்றெண்ணிக் காய்கறி வியாபாரம் செய்து கணவனின் சுமையைக் கொஞ்சம் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

“சுமையைச் சுமந்துக்கிட்டு இந்த வேகாத வெய்யில்லயும் கொட்டற மழையிலயும் தெருத்தெருவா அலைஞ்சு நீ சம்பாதிச்சுத்தான் ஆகணுமா?.” என்று கேட்டவனின் வாயை, “சும்மாருங்க.. நமக்கு ஒரு பொம்பளைப்புள்ளையும் இருக்குங்கறதையே சமயத்துல மறந்துடறீங்க. இப்பமே ஏதாச்சும் சேர்த்து வெச்சாத்தானே நாளைக்கு அதுக்கு காதுல கழுத்துல ஏதாச்சும் தங்கத்தை ஒட்ட வெச்சு அனுப்ப முடியும். மூணு புள்ளைங்களையும் எப்பாடு பட்டாச்சும் படிக்க வெச்சுட்டா, நம்ம குடும்பம் நிமிர்ந்துரும். நாளைக்கு அதுங்க சவுகரியமா இருக்கறதைப் பார்த்துட்டா நமக்க கஷ்டமெல்லாம் பறந்துராதா” என்று அடைத்து விட்டாள்.

அப்படி வியாபாரத்துக்குப் போயிருந்த ஒரு சமயத்தில், ஒரு வாரத்துக்கு முன் கதிரேசனைக் கண்டெடுத்துத் தன்னுடன் கூட்டி வந்த அந்த நாள் நினைவில் வந்தது ரங்கம்மாவுக்கு.

“என்னப்போ ஈஸ்வரா.. இப்பமே வெய்யில் என்னா போடு போடுது. எக்கா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடேன்..” என்றபடி காய்கறிக்கூடையைக் கீழே இறக்கி வைத்து விட்டுச் சும்மாடாகத் தலையில் சுற்றி வைத்திருந்த புடவைத்தலைப்பை உதறி, வேர்த்துக் கசகசத்த கழுத்தையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள். அதற்குள் பக்கத்து வீடுகளிலிருந்த பெண்கள் பையும் கையுமாக அங்கே குழுமி விட்டனர். பரபரவென்று கண்ணும் கையும் காதுகளும் தராசும் வேலை செய்ய ஆரம்பித்தன. நாலு தெரு சுற்றி வருவதற்குள் கூடை முக்கால்வாசி காலியாகி விட்டது. அலமேலுப்பாட்டி நேற்றே சொல்லி வைத்திருந்தபடியால் வாங்கித் தனியாக வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து முடித்து விட்டு, காய்கறிக்கூடையின் சுமை சுருக்குப்பைக்கு இடம் மாறி விட்ட திருப்தியுடன் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தாள்.

‘அடடா!!.. இந்தச் சின்னவன் நேத்தே நாவப்பழம் வேணுமுன்னு கேட்டானே. இந்தா எதுக்காப்புலதானே சந்தை இருக்குது. வாங்கிட்டுப் போயிரலாம். ஹூம்.. ஒரு காலத்துல ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வளந்து பறிக்க ஆளில்லாம சீப்பட்டுக் கிடந்த பழத்தை இப்போ காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. எல்லாம் காலக்கொடுமை. ஒரு மரத்தையாவது விட்டு வைக்கிறாங்களா பாவிப்பசங்க’ என்ற நினைப்புடன் திரும்பினாள்.

பேருந்து நிலையத்தையும் சந்தையையும் பிரித்த சுவரை யாரோ ஒரு புண்ணியவான் கொஞ்சமாக உடைத்து வழி உண்டாக்கியிருந்தார். பழத்தைக் கொடுத்ததும் சின்னவனின் முகம் எப்படியெல்லாம் மலரும் என்பதைக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தபடி அந்தத் திட்டி வாசல் வழியே நுழைந்து பழக்கடையில் போய் நின்றாள்.

கால் கிலோவுக்குப் பழத்தை வாங்கிக்கொண்டு திரும்பும்போது எப்போதும் போல் அவள் பார்வை மரத்தடியை நோக்கிச் சென்றது. இன்றும் அந்தப்பையன் அங்கே உட்கார்ந்திருந்தான். கடைக்காரனிடம் விசாரித்தபோதும் ஒன்றும் தெரியவில்லை. “நானூறு பேரு வரப்பட்ட இடம். இதுல நாம என்னத்தைன்னு கண்டோம், யாருன்னு கண்டோம். பாவப்பட்டு நேத்திக்கு ரெண்டு பழம் கொடுத்தேன். தின்னுட்டு ‘இங்கே வேலை தருவீங்களா?’ன்னு கேட்டான். சின்னப்புள்ளையை வேலைக்கு வெச்சுட்டு அப்றம் நாம ஜெயில்ல களி திங்கவா?. பாவம் யாரு பெத்த புள்ளையோ. ” என்றுவிட்டு அவன் பாட்டைப் பார்க்கப் போய் விட்டான்.

‘சின்னவன் வயசுதான் இவனுக்கும் இருக்கும். என்னா ஒரு ரெண்டோ மூணோ கூடக்குறைய இருக்கும் போலிருக்கு. பெத்தவங்க எப்பிடிப் பரிதவிக்காங்களோ. நம்ம புள்ளயப் போலிருக்கு. சவம்… விட்டுட்டுப் போறதுக்கும் மனசு வர மாட்டேங்குதே” என்று தனக்குள் அரற்றியவள், அவனருகே சென்று, “மக்கா,.. எதுக்கு இங்க தனியா உக்காந்துருக்கே. ஒங்க அம்மை எங்கயும் போயிருக்காளா? இல்ல வீட்டுக்கு வழி தெரியலையா? நா வேண்ணா கொண்டு போயி விடவா?” என்று ஆதுரத்துடன் கேட்டாள்.

“இல்ல.. வேணாம்”

“மக்கா.. மழ வரும் போல இருக்குப்பா. வாரியா?.. எங்க வீட்டுக்குப் போலாம்”

அவள் முகத்தைப் பார்த்தவன், அதில் தாய்மையின் கனிந்துருகும் கருணையைத்தவிர ஏதோன்றும் காணாததால் சற்றுத்தெளிந்தான். ‘சரி’ என்பதுபோல் தலையாட்டியவனை வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டாளே தவிர கணவன் என்ன சொல்வானோ என்று அவள் மனம் கலங்கத்தான் செய்தது. அவள் நினைத்தது போலவே எகிறினான் அவன்.

“ஊரான் புள்ளைய அழைச்சுட்டு வந்துட்டியே. பெத்தவங்களை நினைச்சுப் பார்த்தியா”

“நினைச்சதுனாலதான் இங்கே கூட்டியாந்தேன்”

“என்ன ஒளர்றே.. புத்தி பிசகிப்போச்சா உனக்கு?”

“மூணு நாளாப் பாக்கேன். சின்னப்புள்ளை அங்க தனியா கெடக்கான். அந்தச் சூழல்ல அவனை விட்டுட்டு வர மனசில்லை எனக்கு. அங்கிருந்து வேற எங்கயாச்சும் போயிட்டா அப்றம் எங்க போயி இவனைப் பிடிக்கிறது?. நம்மூட்டுக்குக் கூட்டியாந்து வெச்சுக்கிட்டு மெதுவா பெத்தவங்களை விசாரிச்சு அவங்களுக்குத் தகவல் அனுப்பிரலாம். அது வரைக்கும் பாதுகாப்பா இருக்கட்டுமேன்னுதான் இங்கே கூட்டியாந்தேன்” என்ற அவளது பதிலில் சற்றுச் சமாதானமானான்.

வந்த சில நாட்களிலேயே இறுக்கம் தளர்ந்து, கொஞ்சம் கலகலப்பானான் கதிரேசன். ரங்கம்மாவின் குடும்பத்தோடு நன்றாக ஒட்டிக்கொண்டாலும், அவனது சொந்த விவரங்களைப் பற்றிப்பேச்செடுத்தால் அவனிடமிருந்து பதில் வராது. ரங்கம்மாவும் சந்தையில் தான் வாடிக்கையாகக் காய் வாங்கும் கடைக்காரர்களிடம் பையனைத்தேடிக்கொண்டு யாரேனும் வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படிச் சொன்னதுடன் பக்கத்து வீட்டுப் போன் நம்பரையும் அவர்கள் அனுமதியுடன் கொடுத்து வைத்திருந்தாள்.

அவனிடமிருந்து ஒன்றையும் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையுடன் அன்றும் பேருந்திலிருந்து இறங்கியவள், வியாபாரத்துக்காக காய்கறி வாங்குவதற்காக வழக்கம்போல் சந்தைப்பக்கம் நடந்தாள். சரேலென்று அவளைக் கடந்து போய் நடை மேடையில் நின்றது ஒரு பேருந்து. “ஆத்தாடி,.. போற போக்கைப் பாரு. இடிச்சுத்தள்ளீருவாம் போலுக்கே” என்று அந்தப் பேருந்தைப் பார்த்து வைது விட்டு நடையைத்தொடர்ந்தவளின் மூளையில் பளீரென்று மின்னல் வெட்டியது. பேருந்தின் பின்பக்கம் ஓடிச்சென்று பார்த்தாள். அங்கே போஸ்டரில் கதிரேசன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனது அம்மா படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தகவலறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டிய முகவரியையும் போன் நம்பர் உட்படச் சொன்னது போஸ்டர்.

அதன் பின் போன் செய்து தகவல் சொன்னதும், அவர்கள் குடும்பத்தோடு வந்து ரங்கம்மாவுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னதுமாக நடந்தவைகளெல்லாம் அவளுக்குக் கனவு மாதிரியே இருந்தது. கதிரேசனைக் கண்டதும் கதறித்தீர்த்து விட்டாள் அவன் அம்மா. இறுக்கிக்கொண்டு முத்த மழை பொழிந்த அவளிடமிருந்து தன்னை முரட்டுத்தனமாக விடுவித்துக்கொண்டு ரங்கம்மாவின் முந்தானையின் பின் ஒளிந்து கொண்டு விட்டான்.

‘நான் வர மாட்டேன்..’ என்ற ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தவன், கடைசியில், ‘உனக்கு உன் புள்ளையத்தானே பிடிக்கும். எல்லோரும் அவனையே விழுந்து விழுந்து கவனிக்கிறீங்க. அவன் என்ன சொன்னாலும் கேக்கறீங்க. என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கறீங்க. எங்கூட மட்டும் யாரும் அத மாதிரி அன்பாப் பேச மாட்டேங்கறீங்க. பாட்டி என்னடான்னா அவன் எதையாவது ஒடைச்சா என்னையத்தான் திட்டுறாங்க. என்னைய யாருக்குமே புடிக்கல. நீங்க அவனையே வெச்சுக்கோங்க. நான் இங்கியே இருக்கேன்’ என்று வெடித்து அழவும் பெற்ற மனம் சுக்கு நூறாய்ச் சிதறியது.

இதற்கிடையில் கதிரேசனின் தந்தையிடமிருந்து ரங்கம்மாவின் கணவன் ஒருவாறு விஷயத்தைக் கிரகித்து விட்டிருந்தான். பிறப்பிலேயே சற்றே மன நலம் குன்றிய கதிரேசனின் அண்ணனைச் சற்று அதிகமாகக் கவனித்ததும், மூத்தபேரன் மேலுள்ள பாசத்தால் பாட்டி சற்று அதிகப்படியான கடுமையுடன் கதிரேசனிடம் நடந்து கொண்டதும் அவனது பிஞ்சு மனதில் தன் குடும்பம் தன்னை நேசிக்கவில்லை என்ற நஞ்சைக் கலந்து விட்டிருப்பதை அறிந்து கொண்டான். “உண்மையில் இவங்கிட்டயும் நாங்க பாசமாத்தான் இருக்கோம்ன்னு எத்தனையோ முறை புரிய வைக்க முயற்சி செஞ்சும் இவன் புரிஞ்சுக்கலே” என்று அழுத அந்தத்தந்தையைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது ரங்கம்மாவுக்கும்.

“ஒங்களை என் கூடப்பிறந்தவங்களா நினைச்சுச் சொல்றேன் அண்ணே. நீங்க தப்பா நினைக்கலைன்னா கதிரேசன் கொஞ்ச நாளைக்கு இங்கியே இருக்கட்டுமே. பள்ளியூடத்துல இப்ப பெரிய லீவுதானே. ஒங்க அக்கா தங்கச்சி வீட்டுக்கு அனுப்பியிருக்கறதா நெனச்சுக்கோங்க. சின்னப்புள்ளதானே. விளையாட்டுத்தனமா செஞ்சுட்டான். அவன எப்பிடியாவது தேத்தி நானே கூட்டியாறேன். உங்கூடு அளவுக்கு இங்க வசதியில்லதான். ஆனாலும் அவனை நல்லாக் கவனிச்சுக்குவோம்” என்ற ரங்கம்மாவைக் கையெடுத்துக் கும்பிட்டார் கதிரின் அப்பா. மனதில்லா மனதுடன் விடைபெற்றுச் சென்றனர் அனைவரும்.

இனிமேல் இங்கேயே இருக்கப்போகும் நினைப்பே கதிரேசனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், அவனறியாமல் அவனது குடும்பத்தார் அவனைப் பார்த்துச் செல்வது அவனுக்குத் தெரியாது. விளையாட்டுப்போல் ஒரு மாதம் ஓடி விட்டது. தெருவிலேயே அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகி விட்டிருந்தான் அவன்.

அன்று மதியம் அரக்கப்பறக்க ரங்கம்மாவிடம் ஓடி வந்தவன், “அத்தை.. சந்தையில சொல்லி வெச்சு வாழைப்பழத்தொலி கொண்டாரச்சொன்னேனே. கொண்டாந்தீங்களா?.. கொடுங்க” என்று கேட்டு வாங்கிக்கொண்டு, ”இத எங்கே கொண்டுட்டுப் போறே?” என்ற அவளின் கேள்வியைக் காற்றில் கலக்க விட்டு வெளியே ஓடினான். இது போல் அடிக்கடி ஏதாவது நடக்கவும், ஒரு நாள் பிடித்து வைத்து விசாரித்தாள்.

“அத்தை,.. நம்ம கோடி வீட்டு சம்முவம் மாமா இல்லே. அவுங்க வீட்ல ஒரு ஆடு வளக்காங்கல்லா, அது குட்டி போட்டிருக்கு. அதுல ஒரு குட்டிக்கு பாவம் கண்ணு தெரியாதாம். நல்லாருக்கற ஆட்டுக்குட்டி தானே நடந்து போயி சாப்பாடு எல்லாம் சாப்பிடும். இது பாவமே பாவம். அதான் நாங்கல்லாம் சேர்ந்து அதைக் கிட்டயே ஒக்காந்து கவனிக்கோம்.” என்றான்.

“ம்.. இப்படி ஒக்காரு” என்று அவனைத் தன் அருகில் அமர்த்திக்கொண்டவள், “ரெண்டு குட்டி இருக்கப்பட்ட எடத்துல ஒண்ணை மட்டும் நல்லாக் கவனிச்சா சரியா?.. இன்னொண்ணு பாவமில்லே” என்றாள்.

“இன்னொண்ணு நல்லாத்தானே இருக்கு. அதுக்கு எந்தக் கொறையுமில்லையே. இந்தக்குட்டிதான் பாவம். கண்ணு தெரியாம எவ்ளோ கஷ்டப்படுது தெரியுமா?. அதப் பாக்கவே பாவமா இருக்கு.. இதுக்குத்தான் ஒதவி தேவை அத்தை. ”

“ம்.. அப்படின்னா ஒதவி தேவைப்படுறவங்களைத்தான் கூடுதலாக் கவனிக்கணும்ன்னு சொல்லு,”

“ஆமா,.. அதுதான் சரி..”

“ஏன் கதிரு,.. ஒடம்பு சரியில்லாததுனால ஒதவி தேவைப்படற ஒங்கண்ணனையும் இப்படித்தானே ஒங்க வீட்டுக்காரங்க பாத்துக்கறாங்க. நீ ஆரோக்கியமாவும், புத்திசாலியாவும் இருக்கறதுனால ஒனக்கு அந்தளவு கவனிப்பு தேவையில்லேன்னு அவுங்க நெனைச்சிருக்கலாம். அவுங்க செஞ்சது தப்பு,… நீ செய்யறது சரியா?.. இது என்னப்பா ஊருலே இல்லாத ஞாயம்” என்று அதிசயித்தவாறே மோவாயில் கை வைத்துக்கொண்டாள்.

பொளேரென்று பிடரியில் அடி வாங்கியது போல் இருந்தது கதிரேசனுக்கு.

பிரபஞ்சமே தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டாற்போல் பெருத்த அமைதி நிலவியது.

“அப்பாவும் அம்மாவும் பாவம் இல்லே.. என்றவன், சிறிது நேரம் கழித்து, “அத்தை, எனக்கு அண்ணனைப் பார்க்கணும் போலிருக்கு. நாளைக்கு எல்லோரும் போலாமா என்றான்.

“என் தங்கம்,… ஊருக்குப் போனாலும் இந்த அத்தையை மறக்க மாட்டியே” என்று பிரிவுத்துன்பத்தால் குரல் பிசிறடிக்கக் கேட்டவள் அவனை அப்படியே கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்தாள்.

“ம்ஹூம்.. மறக்க மாட்டேன்.” என்றபடி அவனும் அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உதவிக்கரங்கள்

  1. மேடம் தங்கள் கவிதைகள் ஏற்படுத்தும் பாதிப்பு தங்கள் கதையில் மிஸ்ஸிங்.
    அதற்காக கதை நன்றாக இல்லை என்று அர்த்தமல்ல….ஓ.கே!

  2. ரொம்ப வித்தியாசமான கதை…வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.