முகில் தினகரன்

தான் பணி புரியும் தனியார் தொலைக்காட்சிக்காக பிரபல நடிகர்…லட்சோப லடசம் ரசிகர்களின் தானைத் தலைவர்…ஆக்ஷன் ஸ்டார் ‘உதய காந்த்’தை பேட்டி எடுத்துக் கொண்டிருந்த அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரி இறுதியாகக் கேட்டாள்.

‘ஓ.கே.உதயகாந்த் சார்…எங்க ‘க்ரீன் டி.வி’ நேயர்களுக்காக நீங்க என்ன ஸ்பெஷல் கருத்துச் சொல்லப் போறீங்க?’ கேட்டுவிட்டு அவள் சிரித்த சிரிப்பு தொலைக்காட்சிக்கான செயற்கை சிரிப்பு என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

‘ம்ம்ம்….’சில விநாடிகள் யோசித்த உதயகாந்த், ‘யெஸ்…அதாவது ‘ஆண்டவன் எப்பவும்…ஒரு கதவை மூடினா…கண்டிப்பா இன்னொரு கதவைத் திறப்பான்’…இது உறுதியான உண்மை….கான்கிரீட் கான்செப்ட்…!..பட்..நம்பணும்…அப்படி நம்பினாத்தான் இதனோட நிஜம் புரியும்!’

‘வாவ்….ஃரொம்ப நன்றி சார்….நிச்சயம் நீங்க சொன்ன கருத்து எங்க நேயர்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நெனைக்கறேன்…ஆனா இதை நீங்க இவ்வளவு உறுதியாச் சொல்லறீங்கன்னா நிச்சயம் இதுக்குப் பின்னாடி ஏதாவதொரு நிகழ்வு இருக்கணும்….ஆம் ஐ கரெக்ட்?’ சொல்லிவிட்டு அவள் தன் பச்சரிசிப் பற்களைக் காட்டி குளோசப் சிரிப்புச் சிரிக்க.

உதயகாந்த் அழகாய்ப் புன்னகைத்தபடி மேலும் கீழுமாய்த் தலையாட்டினார்.

‘ஓ…அப்ப இருக்கா?…சார்;;….சார்; அதையும் சொல்லிடுங்களேன் சார்..’

‘அதை முழுசா சொல்லணும்னா…ரொம்ப நேரமாகுமே?’

‘இட்ஸ் ஓகே!…உங்க புரோகிராமை ரெண்டு எபிஸோட் ஆக்கிடறோம்’ இன்னொரு பச்சரிசி சிரிப்பு.

‘தட்ஸ் குட்!…’ என்றவர் மேலே பார்த்து, தன் வழக்கமான ஸ்டைலில் தாடையைச் தேய்த்;தபடியே சொல்ல ஆரம்பித்தார்

ஈரோடு பேருந்து நிலையம். மதிய வெயில் தாளித்துக் கொண்டிருந்தது. கையில் பேக்குடன் ஓடி வந்து, நகர்ந்து கொண்டிருந்த கோயமுத்தூர் பஸ்ஸில் தாவலாய் ஏறினான் உதயகுமார்.

இருக்கை பிடித்து அமர்ந்ததும், இடது கையைத் தூக்கி மணி பார்த்தான். சரியாக ஒன்றே கால். ‘எப்படியும் மூணு….மூணே காலுக்கு கோயமுத்தூர்ல இறங்கிடலாம்…அங்கிருந்து டவுன் பஸ் பிடிச்சு ரயில்வே ஸடேஷன் நாலு மணி ஆயிடும்…நாலரைக்குத்தான் ஹைதராபாத் ட்ரெயின்…பிடிச்சுடலாம்’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

டிக்கெட் எடுத்த பின் லேசாய்க் கண்ணயர்ந்தவன், ஷகசா…முசாஷ வென்ற பேச்சு சப்தத்தில் கண் விழித்துப் பார்க்க, பேருந்து நின்றிருந்தது.

‘ஏன் சார்…என்னாச்சு?….ஏன் பஸ் நின்னுடுச்சு?’

‘ஏதோ ரிப்பேராம்…பாவம் டிரைவரும்…கண்டக்டரும்…அரை மணி நேரமாப் போராடறாங்க…ஒண்ணும் ஆக மாட்டேங்குது’

‘அடக் கடவுளே…மணி இப்பவே ரெண்டே முக்கால்…இவங்க எப்ப ரிப்பேர் பண்ணி…எப்ப வண்டிய எடுத்து….எப்பப் போய் நான் ஹைதராபாத் டிரெய்னைப் பிடிக்கறது?’ புலம்பியடியே கீழிறங்கிப் போய் நடத்துனரிடம் கேட்டேன்.

‘ம்ஹும்…இப்போதைக்கு ரெடியாகாது சார்….கோயமுத்தூர் போற வண்டி ஏதாவது ஒண்ணை நிறுத்தி அதில் உங்களையெல்லாம் ஏத்தி விடறதைத் தவிர வேற வழியில்லை’

‘அப்ப அதையாவது கொஞ்சம் சீக்கிரம் செய்யுங்க சார்’ பறந்தான் உதயகுமார்.

‘யோவ்…அதைத்தான்யா பண்ணிட்டிருக்கோம்…இதோட அஞ்சு கோயமுத்தூர் வண்டி போயாச்சு…ஒருத்தன் கூட நிறுத்த மாட்டேங்குறான்…என்னை என்ன பண்ணச் சொல்லுறீங்க?’ கண்டக்டர் பொறுமையிழந்து கத்த,

‘என்னது நிறுத்த மாட்டேங்கறாங்களா?…ஏன்?…ஏன்?’

‘ம்ம்…அவனே ஃபுல்லா சீட் ஏத்தி நெறைச்சிட்டுத்தான் பஸ் ஸ்டாண்டை விட்டே விட்டே வெளிய எடுக்கறான்…அப்புறம் எப்படி இத்தனை ஜனங்களை அதுல ஏத்துவான்?’

‘நாங்க நின்னுட்டே போக ரெடி’

‘ம் நீங்க நிக்கறதுக்கு ரெடி…ஆனா பஸ் நிக்கணுமே?’

தொடர்ந்து அதே போல் நான்கு கோயமுத்தூர் பஸ்கள் நிற்காமலேயே செல்ல,

உதயகுமார் டென்ஷனாகி மணி பார்த்தான். மூணு ஐம்பது. ‘போச்சு…என் வாழ்க்கையே போச்சு….அந்த ஹைதராபாத் கம்பெனில இண்டர்வியூக்குக் கூப்பிடறதே பெரிய விஷயம்…பெரிய அதிர்ஷ்டம்…எனக்கு அந்த அதிர்ஷ்டம் அடிச்சுது…ஆனா…அது கடைசில ஒரு உதவாக்கரை பஸ்ஸினால கெட்டுப் போயி…என் எதிர்காலமே அழிஞ்சு;;; இருட்டாப் போச்சு….இதுக்கு மேல நான் கோயமுத்தூர் போயி ரயிலைப் பிடிக்கறது நடக்காத காரியம்’ அழுதே விட்டான்.

அந்த அழுகை சிறிது நேரத்தில் ஆவேசமாக மாறிவிட, ‘யோவ்;;…நாமெல்லாம்…காசையும் குடுத்துட்டு இப்படி நடு ரோட்டுல நின்னுட்டிருக்கோம்….போற…வர்ற வண்டிக்காரனெல்லாம் நம்மை மனுசனாவே மதிக்காமப் போயிக்கிட்டிருக்கானுக…இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்காம நாம இப்படியே நின்னுக்கிட்டிருந்தா…நாளைக்குக் காலைல வரைக்கும் இங்கியேதான் நின்னுட்டிருக்கணும்….’ கத்தலாய்ச் சொன்னான்.

‘சரி…என்ன பண்ணணும்கறீங்க…சொல்லுங்க!’ ஒரு பயணி கேட்க,

‘ரோடு மறியல் பண்ணுவோம்…எந்த வண்டியையும்…இந்தப் பக்கம் அந்தப் பக்கம் போக விடாமல் தடுப்போம்…பிரச்சினை பெரிய லெவல் வரைக்கும் போகட்டும்’

‘ஆமாம்…இந்தத் தம்பி சொல்றதுதான் சரி…’

திடீரென்று உதயகுமாருக்கு ஆதரவு பெருகி விட, அத்தனை பயணிகளும் அவன் சொன்னபடியே ரோட்டின் குறுக்கே அமர்ந்து விட,

போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அந்தச் சாலை பிரதான சாலை என்பதால் நிமிடத்திற்கு நிமிடம் வாகன எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய காவல் துறை உயர் அதிகாரியிடம் தன் ஆற்றாமையைக் கொட்டினான் உதயகுமார், ‘சார்..நான் மிஸ் பண்ணியது அந்த ரயிலை அல்ல….என்னோட எதிர்கால வாழ்க்கையை…! எதுக்கு சார் இந்த மாதிரி ஹைதர் காலத்து பஸ்களையெல்லாம் ரூட்டுல ஓட விடறாங்க?…அதே மாதிரி ரிப்பேரிங் மெக்கானிசம் அறவே தெரியாத டிரைவரையும்…கண்டக்டரையும்…எதுக்கு சார் சர்வீஸ்ல வெச்சிருக்காங்க?…கேட்க யாருமில்லைங்கற தைரியமா,…இல்லை…எவன் என்ன செஞ்சிடுவான்கற தெனாவெட்டா?’ சிறிதும் பயமில்லாமல், உண்மையை ஆவேசத்துடன்…யதார்த்த முகபாவத்துடன் உதயகுமார் பேசிய பேச்சை. நின்று கொண்டிருந்த வாகன வரிசையில் மூன்றாவதாய் நின்று கொண்டிருந்த பி.எம்.டபிள்யூ. காரிலிருந்து ஒரு உயர்தர மனிதர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

முக்கால் மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டு, பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏற்றி அனுப்பப் படும் போது மணி சுத்தமாய் ஐந்து.

‘இதுக்கு மேல கோயமுத்தூர் போய் நான் என்ன பண்ணப் போறேன்?…எப்படியும் ஹைதராபாத் டிரெய்ன் போயிருக்கும்….பேசாம திரும்பி ஈரோடே போயிடலாமா?’ குழப்பமாய் நின்று கொண்டிருந்த உதயகுமாரை,

‘சார்…சார்!’ யாரோ அழைக்க, சலிப்புடன் திரும்பினான்.

‘கொஞ்சம் அந்தக் கார்கிட்ட வர்றீங்களா?…எங்க அய்யா உங்க கிட்டப் பேசணும்கறார்’ டிரைவர் போலிருந்த அவன் அந்த உயர்தரக் காரைக் காட்டிச் சொன்னான்.

‘யாருப்பா உங்க அய்யா?’

அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, சன்னமான குரலில் ‘சினிமா டைரக்டர்..இந்திர சேனன்’

‘என்னது…பிரபல டைரக்டர் இந்திர சேனன் அந்தக் கார்ல இருக்காரா?…அவரு…என்னைய…என்னையக் கூப்பிடறாரா?’ நம்ப முடியாமல் தன் பேக்கைத் தோளில் போட்டுக் கொண்டு அந்தக் காரை நோக்கி நடந்தான் உதயகுமார்.

புpன் சீட் கதவு திறக்கப்பட்டு, ‘ம்..கெட் இன் மை பாய்’ என்ற அழைப்பு வர,

உள்ளே புகுந்த உதயகுமாருக்கு நடப்பதெல்லாம் கனவு போலிருந்தது. ‘இதெல்லாம் நிஜந்தானா?…டைரக்டர் இந்திர சேனன் கார்ல…அவரு பக்கத்துல…நானா?’

‘ம்ம்..உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா?…மிஸ்டர்….’ டைரக்டர் இந்திரசேனன் தன் பிரத்யேக ஷகர…கரஷ குரலில் கேட்க,

‘உதயகுமார்’

‘ம்ம்ம்…மிஸ்டர் உதயகுமார்…நீஙக…இப்ப கோயமுத்தூர் போகணுமா?…இல்ல…ஈரோடு போகணுமா?’

‘சார்…ஆக்சுவலா..நான் நாலு மணிக்கே கோயமுத்தூர் போயிருக்கணும்….இங்க நடந்த ஒரு குளறுபடில அது மிஸ்ஸாயிடுச்சு…இனி நான் அங்க போயும் பிரயோஜனமில்லை…ஸோ….நான் ஈரோடே போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்’

‘குட்…மிஸ்டர் உதயகுமார்…நீஙக…என்னோட படங்களைப் பார்த்திருக்கீங்களா…?’

‘சார்…நீங்க என்னோட ஃபேவரிட் டைரக்டர் சார்’

‘ஓ…தேங்க்யூ…!..பை த பை அடுத்த மாசம் ஒரு புதுப்படம் ஒண்ணு பூஜை போடப் போறோம்…தொழிற்சங்கம் சார்ந்த கதை…அதுல ஆவேசமாப் பேசி…ஆர்ப்பாட்டமா போராடுற ஒரு இளைஞன்தான் கதாநாயகன்…என்னோட கணிப்புப்படி நீங்க அந்தக் கேரக்டருக்கு கனகச்சிதமாப் பொருந்தறீங்க…’

‘சார்…நான்….எப்படி…?’

‘பார்த்தேனே…கொஞ்சம் முன்னாடி உங்களோட ஆவேசக் கத்தலை…உணர்ச்சிப் பூர்வமான போராட்ட குணத்தை…!…ஸோ…நீங்க சம்மதிச்சா…மேற்கொண்டு பேசலாம்’

‘அன்னிக்கு அப்படி ஆரம்பிச்சதுதான் என்னோட திரையுலக வாழ்க்கை…ஹைதராபாத் கம்பெனிக்கு வேலைக்குப் போயிருந்தா அதிகபட்சமா..’ஆர்.உதயகுமார். ஜெனரல் மேனேஜர்’ ஆகியிருப்பேன்…ஆண்டவன் ஏனோ அந்தக் கதவை மூடினான்…அப்ப அதுக்காக வருத்தப்பட்டேன்…ஆனா அவனே இன்னொரு கதவைத் திறந்து என்னை ‘சூப்பர் ஸ்டார் உதயகாந்த்’ ஆக்கிட்டான்..இப்பப் புரிஞ்சிருக்குமே…நான் சொன்ன கான்கிரீட் கான்செப்ட்டோட நிஜத்தன்மை?’

கைதட்டி ரசித்த தொலைக்காட்சிப் பெண், ‘சார்…இந்த பேட்டியோட ஹைலைட்டே இந்தக் கான்செப்ட்தான் சார்’

‘தேங்க் யூ….தேங்க் யூ’ சொல்லி விட்டு எழுந்து தன் வழக்கமான வேக நடையில் வெளியேறினார் ‘சூப்பர் ஸ்டார் உதயகாந்த்’

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒரு கதவும்…இன்னொரு கதவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.