தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 28

0

இன்னம்பூரான்

ருத்ராக்ஷப்பூனைக்கு…

Inline image 1

ருத்ராக்ஷப்பூனைக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17, 2012) காலை மூன்று மணிகளைக்கட்டி விட, பங்குச்சந்தை மட, மட என்று சரிந்தது. அந்த ஆராய்ச்சி மணிகள், ஆடிட் ரிப்போர்ட்கள் (N0. 5, 6 & 7 :2012 -13): 1. மாபெரும் சக்தி உற்பத்தி மையங்களின் கட்டுமானம் + 2. டில்லி சர்வதேச விமான நிலைய கட்டுமானம் + 3. நிலக்கரியை தோண்ட, பணமூட்டையை புதைத்த காதை: கிட்டத்தட்ட 4 லக்ஷம் கோடி ரூபாய் நஷ்டம், பாரதவர்ஷத்தின் பிரஜைகளுக்கு, என்று அந்த ரிப்போர்ட்கள் குற்றம் சாட்டின. அடுத்த கட்டங்களில் எத்தனை நஷ்டமோ? நிலக்கரியின் அதிக விலை, சங்கிலித்தொடரில், கிள்ளுக்கீரை விலையை உயர்த்தும்; பயணிகளுக்கு விமானநிலைய வரி ஏறினால், பன்னாட்டு விமானங்கள், லாஹூரையும், ஹாங்காங்கையும், கொழும்புவையும் ஆதரிக்கும். நஷ்டம் நமதே. மின்சக்தி விலை உயர்ந்தால், பன்னாட்டு கம்பெனிகள் ஓடிடுவார்கள். குடியானவன் தலையை சொறிவான். மின்வெட்டு: ஜனத்தொகை கூடும்.  அந்த வகை எண்ணில் அடங்கா நஷ்டங்களை, குத்து மதிப்பாக, இன்னுமொரு நாலு லக்ஷம் கோடி எனலாம்.  ஆடிட்டர் ஜெனெரலுக்கு ஆரூடக்கணக்கெல்லாம் ஊகிப்பதில் ஆர்வம் இல்லாததால், சரிந்த பங்குச்சந்தை மேலும் யாரை எந்த அளவு குலைத்து நாசம் செய்தது, குலைக்கப்போகிறது என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம். கடிச்சதென்னெமோ கடிச்சாச்சு. குதறியுமாச்சு.

நமது பிரதமர் திரு. மன்மோஹன் சிங் அவர்கள் தன் பணி யாதாயினும், கண்ணியமாக, நாணயத்துடன், காசு, பணம் வாங்காமல், செய்தவர் என்ற புகழ் பெற்றவர். அதனால், அவரை யாராவது குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது. இன்று நானே குறை கூறுவதால், தலையில் அடித்துக்கொண்டு, எழுதுகிறேன். அமைச்சர்கள் யாவருக்கும் எஜமானன் என்ற முறையிலும், அடிபட்ட துறை ஒன்று சிலகாலம் அவரது நேரடி கண்காணிப்பில் இருந்ததாலும், அவருடைய பொறுப்பும், அதை தட்டிக்கழித்த ஸ்வபாவமும் தாங்கொண்ணா விசனம்.

இன்று நான் எழுதப்போவது அறிமுகக்கட்டுரை கூட இல்லை. இது ஒரு முகாந்திரம் மட்டுமே. மூன்று ரிப்போர்ட்டுகளையும் எளிதில் படிக்க முடியவில்லை. நேற்று, இன்னேரம், ஆடிட்டர் ஜெனெரலின் இணையதளம் உறைந்து கிடந்தது. எந்த புண்ணியாத்மா செய்த கைங்கர்யமோ? ரிப்போர்ட்களை வலையில் ஏற்றுவதில் இன்னல்கள் பல இருந்ததாக, என் ஊகம். எப்படியோ ஒரு பார்வை பார்த்தாய்விட்டது. கண்களும் கலங்கின, அண்ணல் காந்தியை நினைத்துப்பார்த்து. 

அவற்றின் சாராம்சம்: 

ஆடிட் ரிப்போர்ட் 7: (என் விஷயதானம்: நிலக்கரி ஊழல்கள் பழம்பெருச்சாளிகள். தான்பாத் நகரில் ஒரு நாள் கழித்தால் போதும். கறுப்புப்பணத்தின் மகிமை அறிவீர்கள், கொல்லப்படாமலிருந்தால்!) எனினும், தனியார் துறை பணமூட்டைகளுக்கு நிலக்கரி சுரங்கங்களை, ஏலம் போடாமல், தாந்தோன்றித்தனமாக தாரை வார்த்த வகையில் ` 10.67 லக்ஷம் கோடி நஷ்டம் என்று தணிக்கைத்துறை சொல்லப்போவதாக, மார்ச் 2012ல் ஒரு பிரபல நாளிதழ் கூறியது. நிலக்கரித்துறையோ, குய்யோ முறையோ என்று அலறி, அரசு நடத்தும் கம்பெனிகளின் அதீத லாபத்தை விட்டு விடுமாறு கெஞ்சினர். மேலும், திறந்த வெளி சுரங்கங்களை (நெய்வேலி மாதிரி) மட்டும் கணக்கில் போட்டுக்கொள்ளுங்கள். தோண்டும் சுரங்கங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன, என்றார்கள் ஆடிட்டர் ஜெனெரலும் இசைந்தார்; நஷ்டம் ` 1.86 லக்ஷம் கோடி என்றார். ( முதல் பார்வையில் எனக்கு இசையவேண்டியதாக தோன்றவில்லை என்பது வேறு விஷயம்.) ஆக மொத்தம், எஸ்ஸார் குழுமம், ஜிண்டால், அதானி, ஆர்செலார்மிட்டல், டாடா ஸ்டீல் வகையறா கம்பெனிகளுக்கு தடால்புடால் ஆதரவு தந்த இந்த முறைகேட்டினால் வந்த நஷ்டம் ` 1.86 லக்ஷம் கோடி என்று மதிப்பீடு செய்தது, பிரதமரின் ஆளுமைக்குட்பட்ட மத்திய அரசு தான். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அமைச்சர்கள் திருவாளர்கள் வி.நாரயணசாமியும், ஸ்ரீபிரகஷ் ஜெய்ஸ்வாலும், அபிஷேக் சிங்வியும், தணிக்கைத்துறையை நிந்தித்து, ஏன் சாமியாட்டம் ஆடுகிறார்கள் என்று புரியவில்லை. கஷ்டகாலம்!

ஆடிட் ரிப்போர்ட் 6: மற்ற விஷயங்களை பிறகு பார்க்கலாம், பெரும்பாலான வாசகர்களுக்கு விழிப்புணர்ச்சி உந்தினால். முக்கிய ஆக்ஷேபணை: விதிக்கு மீறிய ‘பண்டமாற்றம்’ உதவியால், ரிலையன்ஸ் பவர் என்ற அனில் அம்பானி கம்பெனிக்கு, ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட, அதிகப்படி லாபம் `29,033 கோடி கிடைக்க வகை வகுத்தது.

ஆடிட் ரிப்போர்ட் 5: டில்லி தேசத்தின் தலைநகரம். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் தரமுயர்த்த ஜீ எம் ஆர் என்ற கம்பெனியின் கூட்டாளிகள் உட்பட்ட நிறுவனத்துக்கு `240 பிலியன் விலை பெறக்கூடிய 240 ஏக்கர் நிலம் பத்தில் ஒரு பங்கு விலையில் கணக்கிடப்பட்டு, அதுவும் கம்பெனியின் பங்குகளாக ரசவாதம் செய்யப்பட்டு, (அதாவது விலை பெற்றுக்கொள்ளாமல்), தாரை வார்க்கப்பட்டது.

இந்த முகாந்திரம் கூட என் மனநிம்மதிக்காக எழுதப்பட்டது. பெரும்பாலான வாசகர்கள் விரும்பினால் ஒழிய, இந்த கருமாந்திரத்தில் என் மனதை செலுத்தப்போவதில்லை. அப்படிச்சொல்லவேண்டியது அதிகம். வேணுமானால், அந்த ரிப்போட்டுகளை இணைத்து விடுகிறேன்.

(தொடர் என்னமோ தொடரும், ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள்!)

இன்னம்பூரான்

18 08 2012

சித்திரத்துக்கு நன்றி:

http://nanavuhal.files.wordpress.com/2010/03/up02.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.