கனம் கோர்ட்டார் அவர்களே! – 13

0

இன்னம்பூரான்
எரிய வீட்டில்….!

நேற்று (ஸெப்டம்பர் 7, 2012) நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட நீதிபதி எம்.பி.ஷா கமிஷனின் ரிப்போர்ட் நம்மை உலுக்குகிறது. கோவா மாநில அரசையும், மத்திய அரசையும் தெளிவாகக் குற்றம் சாட்டும் அந்த அறிக்கை, அந்த மாநில முதல்வர் திகம்பர் காமத் தலைமையில் 2000ம் ஆண்டிலிருந்து 12 வருடங்கள் நடந்த ‘எரிய வீட்டில் பிடுங்கிய ஆதாயம்’ 35000 கோடி ரூபாய் என்கிறது. அந்த மாநிலத்தின் இயற்கை வளத்தை ‘தங்கு தடையில்லாமல், கணக்கு வழக்கில்லாமல், ‘போனால் போகட்டும் போடா’ என்ற தேசவிரோத மனப்பான்மையுடன் சைனாவுக்கு இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள் என்கிறது.

சட்டமீறல்களைக் கன்னாபின்னாவென்று தாதுவை பிறாண்டியதொன்று, சுற்றுப்புற சூழலை மீறியதொன்று, வேலியே பயிரை மேய்ந்த கதையொன்று, மற்றவர் சொத்துகளை அபகரித்ததொன்று என்றெல்லாம் பட்டியலிடுகிறது, அந்த அறிக்கை. அங்கு பல வருடங்களாகக் கோலோச்சி வரும் டிம்ப்ளோ, ஸலகாவ்ங்கர், செளகுலே குடும்பங்களையும், ஸேஸே கோவா போன்ற கம்பெனிகளையும் நேரடியாக இந்தச் சட்டவிரோதங்களுக்குக் குற்றம் சாட்டியிருக்கிறது. மத்திய அரசின் சுரங்க இலாக்காவையும், மத்திய அரசின் சுற்றுப்புற சூழல், வன பாதுகாப்பு இலாக்காவையும், கோவா மாநில இலாக்காக்கள் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குச் சாடும் இந்த ரிப்போர்ட்டை நாடாளுமன்றம் என்ன செய்யும் என்பது நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

ஏனென்றால், வனத்துறைக்கு இழைக்கப்பட்ட அட்டூழியம் ஏற்கனவே ஆறாத புண் ஆயிற்று. குற்றம் சாற்றப்பட்ட முதலாளித்துவம் அழுச்சாட்டியமாக சட்டவிரோதமாக இயங்கின; அதற்கு அரசு இலாக்காக்கள் துணை போயின என்று கனம் கோர்ட்டார் அளவுக்கு மதிக்கப்படவேண்டிய ஒரு கமிஷன் ஆதாரத்துடன் கூறியும், அது புறக்கணிக்கப்படுமா என்பது தான் கேள்வி. தாது வெட்டுவதை முழுதும் நிறுத்த வேண்டும் என்கிறது, அந்த அறிக்கை. உரிமம் பெறாமலே தோண்டப்பட்ட தாதுவை எடுத்துச்செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்கிறது. தீர விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறது. நடக்குமா? தமிழிதழ் ஆகிய வல்லமையில் கோவாவை பற்றி என்ன பேச்சு என்பார்கள், சிலர். ஐயா! கர்நாடக பூமி குடைச்சலும், ஆந்திர மயில் ராவணமும், மேலூர் மலைமுழுங்கிகளும், இப்படித்தான் மாமாங்கம், மாமாங்களாகக் கொழித்து வருகின்றன. அடிபடுவது பாமர மக்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.