முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஜனநாயகம் பற்றி சர்ச்சில் கூறியதாகக் கூறப்படும் ஒரு வசனம் இது: “ஜனநாயகம் என்பது மனிதன் கண்டுபிடித்தவற்றுள் மிகவும் மோசமான அரசியல் அமைப்பு முறை. ஆனால் இப்போதைக்கு இதைவிடச் சிறந்தது வேறு இல்லை”. ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி என்பது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வகுத்த வரையறை. இப்படிப்பட்ட ஜனநாயக ஆட்சியில் வலியவர்களுக்குச் சமமாக எளியவர்களின் உரிமைகளும் பாதுக்காக்கப்படுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஜனநாயகம் வெற்றிகரமாக நடைபெறுவதாக வெளியில் தோற்றமளிக்கும் சில நாடுகளிலேயே ஜனநாயகம் எப்படி நடைபெறுகிறதென்று பார்ப்பதற்கு முன்பு, இந்தியாவில் எப்படி நடைபெறுகிறது என்று சில வரிகள்.

தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் தலைவர்களின் செயல்களையும் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறைகளையும் பார்த்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நாம் சுதந்திரம் அடைந்து, அறுபத்து மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் முதிர்ச்சி அடையாத ஜனநாயகம் நம் ஜனநாயகம் என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டிருப்பது? இந்திய ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதை விடப் பேசாமல் இருப்பதே மேல் என்று கொள்ளலாம். இந்தியா இருக்கட்டும், அமெரிக்காவிலேயே எப்படி ஜனநாயகம் நடக்கிறது என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் ஆளுநர் ஸ்காட் வாக்கர் (Scott Walker)  (நாம் முதலமைச்சர் என்று அழைப்பவரைத்தான் அமெரிக்காவில் ஆளுநர் என்று குறிப்பிடுகிறார்கள். இவர் மத்திய அரசின் பிரதிநிதி அல்ல. அமெரிக்கக் கூட்டாட்சியில் (Federalism) அமெரிக்கா என்ற நாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் இருப்பது போல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அரசியல் சாசனம் உண்டு; தனிக் கொடி உண்டு. அரசியல் சாசனத்தைத் திருத்தவோ, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடவோ மத்திய அரசுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை) அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உரிமையை மறுத்து ஒரு சட்டம் இயற்றியிருக்கிறார். இவர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அந்த மாநில செனட்டில் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் அதைத் தடுக்க எவ்வளவோ முயன்றும், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தும் ஒன்றும் பலிக்கவில்லை.

WISCONSIN-UNION-PROTEST

இந்த கவர்னர் தேர்தலில் ஜெயிப்பதற்கு கோச் சகோதரர்கள் இருவர் எக்கச்சக்கமாகப் பணம் செலவழித்திருக்கிறார்கள். இவர்களுடைய தந்தையே நிறையப் பணம் சம்பாதித்தார். இப்போது இவர்கள் நிறையக் கம்பெனிகள் நடத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள். கம்பெனிகளின் நடைமுறைகளில் அரசாங்கம் கட்டுப்பாடுகள் கொண்டுவரக் கூடாது என்பவர்கள். அரசாங்கம் தன் ஊழியர்களைக் குறைத்துச் சிறிதாக வேண்டும் என்பவர்கள். பெரிய பழைமைவாதிகள். அமெரிக்காவை அமெரிக்கர்கள் திருப்பி எடுக்க வேண்டும் என்று ஆரவாரிக்கும் டீபார்ட்டி கட்சியின் பெரும் ஆதரவாளர்கள்.  இவர்கள் விரும்புவது எந்த அமெரிக்கா தெரியுமா? இனத் துவேஷம் மிகுந்த, ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஏழை வெள்ளயர்களும் சமூகத்தின் அடித்தளத்தில் இருந்த அமெரிக்கா. அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்கள், எப்போதும் சுதந்திரமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா. கருப்பர் ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாக வரலாம் என்று கனவு கூடக் காண முடியாத அமெரிக்கா.

விஸ்கான்சினை அடுத்து இன்னும் சில மாநிலங்களும் இதே மாதிரிச் சட்டங்களை இயற்றின. மக்களுக்காக நடத்தப்படும் ஜனநாயக ஆட்சியில் இந்தக் குடிகளின் நிலை என்ன? இவர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வழியை அடைக்கும் ஜனநாயகம், என்ன ஜனநாயகம்?

Obama mad magazine coverஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவின் திசையைத் திருப்புவோம் என்று முழக்கமிட்டு இளைஞர்களையும் கருப்பர்களையும் ஏழைகளையும் தன் பக்கம் ஈர்த்து, அவர்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்தார். ஆனால் அவரால் அவருடைய தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை  இடதுசாரிக் கொள்கைகளின் பக்கம் சாய்ந்துகொண்டிருந்தவரை இப்போது வலதுசாரிக் கொள்கைகளின் பக்கம் சாயவைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது. மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க முடியாத ஏழைகளுக்காக அவர் கொண்டுவந்த மருத்துவச் சீர்திருத்தச் சட்டத்தை எப்படியும் நீக்கிவிட, ஏழைகளைப் பற்றியே கவலைப்படாத பழைமைவாதிகள் முயன்றுகொண்டிருக்கிறார்கள். ஒபாமாவின் நிதி அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து, அரசின் செயல்பாட்டையே நிறுத்தி வைக்க முனைந்தார்கள். இவர்களுக்கு ஏழைக் குடிமக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. அரசின் செலவைக் குறைக்க வேண்டுமென்று கூறி, ஏழை மக்களுக்கான பல திட்டங்களை நிறுத்திவைக்குமாறு கூறுகிறார்கள். இவர்கள் நடத்த முயலும் அரசு ஜனநாயக அரசா? லிங்கன் கூறிய மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசா இது?

செனட் அங்கத்தினர்களும் மக்களவை அங்கத்தினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர்களுக்கு நிறையப் பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை அவர்களுக்கு வாரி வழங்குபவர்கள் பெரிய பணக்காரர்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து, தங்கள் நலன்களுக்குத் தக்கவாறு சட்டங்கள் இயற்றத் தரகர்களை நியமிக்கிறார்கள். புகையிலை உபயோகத்தைக் குறைக்கச் சட்டம் போடப் போகிறார்களா, உடனே புகையிலை உற்பத்தியாளர்கள் தங்கள் தரகர்கள் மூலம் அந்தச் சட்டங்களை முழுவதுமாக முறியடிக்கிறார்கள் அல்லது அதன் வீரியத்தைக் குறைத்துவிடுகிறார்கள். துப்பாக்கிகளின் விஷயத்திலும் இதே கதைதான். பணம் படைத்தவர்களின் கைகள்தான் ஜனநாயக அமைப்பிலும் ஓங்கி நிற்கின்றன. ஒபாமாவின் உதவியாளர்கள் அவர் இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலில் ஜெயிப்பதற்கு இப்போதே நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜனநாயக சமூகத்தில் எல்லோரும் மன்னர்கள் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறிச் சென்றார் வள்ளுவர். அது எத்துணை உண்மை. மனித சமூகங்கள் ஜனநாயக ஆட்சி முறையைத் தழுவினாலும் பொருள் இல்லார்க்கு அதில் இடமில்லை.

============================

படங்களுக்கு நன்றி: http://www.huffingtonpost.com, http://www.americanthinker.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எது ஜனநாயகம்?

  1. நல்வரவு. எனினும் சில விளக்கங்கள் தேவை.

    1. தமிழ்நாட்டில் நாம் அழத்தான் முடியும். சிரிப்பு உகந்தது அல்ல.
    2.அமெரிக்காவின் ‘ஆளுநர்’, இந்திய மாநில முதல்வர் போல அல்ல. அங்கு தேர்தல் முறை வித்தியாசமானது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் (வெஸ்ட்மினிஸ்டெர் மாடல்) அரசாளவில்லை.
    3. ஸ்காட் வாக்கர் இயற்றிய சட்டம் மட்டரகமானது. அந்த வகையில், அமெரிக்க அரசியல் முறையும் தவறு செய்கிறது.
    4.’இடதுசாரிக் கொள்கைகளின் பக்கம் சாய்ந்துகொண்டிருந்தவரை இப்போது வலதுசாரிக் கொள்கைகளின் பக்கம் சாயவைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது.’ – பாயிண்ட் மேட்.
    5. ஒரு மின் தளத்தில், ராஜாஜி அவர்களின் ‘நமது குடியரசு’ என்ற கட்டுரையை மொழியாக்கம் செய்து வருகிறேன் அவரது தீர்க்க தரிசனம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இங்கும் நினைவில் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.