பழநி இளங்கம்பனுக்கு இரங்கற்பா
வாழ்த்திப் பாடிய வாயால் உந்தன்
மறைவைப் பாடுவனோ?
வாழ்த்திப் பாடிய வாயால் உந்தன்
மறைவைப் பாடுவனோ
வாழ்த்த வானதி தன்னை யேர்மனி
வருவாய் எனமகிழ்ந்து
பூத்த வாயால் உந்தன் நண்பன்
புவனேந்திரன் சொல்ல
ஆர்த்தேன் ஐயா இளங்கம் பாநீ
அதற்குள் மறைந்தனையோ?
கலைமா மணியே கவிமா மணியே
கன்னித் தமிழ் மணியே
அலைமா கடலோ ஆறா தாறோ
யாதோ என நாமும்
மலைபோல் வியக்க வையம் தழைக்க
மழைபோற் பொழிந்தாயே
தலைமா மணியாம் பழநி முருகன்
தாள்கள் பற்றினையோ?
பழநி முருகன் அருளால் மெத்தப்
பழுத்த வாசுகவி
பழநி இளங்கம் பன்தன் பாட்டால்
பைந்தமிழ் பூரித்தாள்
அழகிய பேச்சால் நாமகள் ஆர்த்தாள்
அந்தோ மறைந்தனையோ
பழகுதற் கினிய பண்புறு நண்ப
பாரெங்கும் வாழ்வாயே!
===========================================
படத்திற்கு நன்றி: http://musingsofamaiden.blogspot.com
பழனி இளங்கம்பன் மறைவிற்கான இரங்கற்பா, நெஞ்சை உருக்கிவிட்டது. கவியரங்கக் கவிதைகளில் இயல், இசை, நாடகம் என்ற தமிழின் முப்பரிமாணத்தையும் கொண்டு வந்து காட்டுபவர் கவிஞர் இளங்கம்பன். நாட்டுப்புறப் பாடல்களில் நல்ல தோய்வு! அதையும் இசையோடுதான் பாடுவார். எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர். ஈடு செய்ய முடியாத இழப்புத்தான்! அவர் மறைந்தாலும் அவருடைய கவிகள் மறையாது!
– இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.