தமிழ்த்தேனீ

Tamil_thenee“ஆமா சார். எங்க அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்துக்கப் போறாங்களாம்”. வைத்தியநாதனின் மகன் ரமேஷ் சொன்ன செய்தியைக் கேட்டு வைத்தியநாதனின் பால்ய நண்பர் கிருஷ்ணன் திகைத்துப் போய்விட்டார்! “என்னப்பா சொல்றே!? என்னால நம்பவே முடியலையே. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு” என்றார்.

“நீங்க மட்டும் இல்லே, நாங்க எல்லாருமே அதிர்ச்சியாய்ட்டோம். எங்களாலேயே நம்ப முடியலை. இருந்தாலும் அதுதான் உண்மை. அப்பா தீர்மானமா பேசறார். எங்க அண்ணா ராமநாதனுக்கு சொல்லிட்டோம். அவரும் அதிர்ச்சியாய்ட்டார். நாளைக்குக் காத்தாலே அண்ணாவும் எங்க மன்னியும் வராங்க. இன்னும் எங்க தங்கை லக்‌ஷ்மிக்கும் மாப்பிள்ளை கணேஷுக்கும் சொல்லலை. எங்க அண்ணா ராமநாதன் வரட்டும்னு காத்திண்டு இருக்கேன்.”

கண்களில் கண்ணீர் பொங்க, தழுதழுத்த குரலில் ரமேஷ் பேசிக்கொண்டிருந்தான்.

“எங்க அம்மாவுக்கு வயசு 58. எங்க அப்பாவுக்கு வயசு 60 போன வருஷம் முடிஞ்சுது. அடுத்த மாசம் 60ஆம் கல்யாணம் செய்யலாம்னு இருந்தோம். கிட்டத்தட்ட நாற்பது வருஷம் அன்னியோன்னிய தம்பதியா இருந்து, இவ்ளோ வருஷமா எவ்வளவோ கஷ்டத்திலேயும் தளராம பாடுபட்டு எங்களையெல்லாம் நல்ல நெலமைக்குக் கொண்டு வந்துட்டு, இந்த நேரத்திலெ எங்க அப்பா ஏன் இப்பிடி அபத்தமா ஒரு முடிவு எடுத்தார்ன்னே புரியலை சார். காரணமும் சொல்ல மாட்டேங்கறார். அம்மா பிரமை பிடிச்சா மாதிரி இருக்கா. எதுவுமே பேசமாட்டேங்கறா. நீங்க வந்து என் அப்பாகிட்ட பேசிப் பாருங்க. நீங்க சொன்னா ஒருவேளை அவர் மனசை மாத்திக்கலாம். அதுனாலேதான் உங்ககிட்ட வந்தேன்” என்றான் ரமேஷ்.

“ரமேஷ், இந்த விஷயத்தை நீ வந்து எங்கிட்ட சொன்னதா உங்க அப்பாவுக்குத் தெரியவேண்டாம். நானும் யதேச்சையா வீட்டுக்கு வரா மாதிரி  நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன். பேசிப் பார்ப்போம். உங்க அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியும். லேசுலே முடிவு பண்ணமாட்டார். ஆனா முடிவு பண்ணிட்டா மாத்திக்க மாட்டார்” என்றார் கிருஷ்ணன்

“நாளைக்கு மறக்காம வந்திருங்க சார்”ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினான். மறு நாள் வைத்தியநாதன் வீட்டில் ரமேஷ், அவன் மனைவி கீதா, ராமநாதன், அவர் மனைவி ஜெயா என அனைவரும் குழுமியிருந்தனர்.

பேராழியா வந்து தாக்கின சுனாமிலே அடிபட்டு, பயத்திலே உறைந்து ஆங்காங்கே தொங்கிண்டு இருக்கற உயிர்கள் மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொரு சுவரில் சாய்ந்து, பிடிமானமே கிடைக்காமல் உட்கார்ந்திருந்தனர்.

வைத்தியநாதன் எதிரே உட்காந்து கிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார். வைத்தியநாதன் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு வாயே திறக்காமல் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார். கிருஷ்ணன் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். வாசலில் வைத்தியநாதனின் மகள் லக்‌ஷ்மியும் மாப்பிள்ளை கணேஷும் வந்து இறங்கினர். அவர்கள் கண்களில் அதிர்ச்சி.

லக்‌ஷ்மி அப்பாவிடம் போய், அவர் பின் பக்கமாகப் போய் அவரைக் கட்டிக்கொண்டு, அவர் தோளில் தலையை வைத்தபடி, அவர் காதில் இளகிய குரலில், “என்னப்பா இது. ஏன் இப்பிடிப் பண்றேள்?” என்று அவர் முதுகைத் தடவிக் கொடுத்து, “வேணாம்பா. எப்பவுமே எல்லாருக்கும் அமைதியா யோசனை சொல்ற நீங்களே இப்பிடிப் பண்ணலாமா? அதுவும் இந்த வயசிலே இப்பிடிச் செய்யலாமா? குடும்ப மானமே போயிடும்பா. சொன்னாக் கேளுங்கோப்பா… எனக்காகப்பா.. நான் உங்க செல்லப் பொண்ணு இல்லையா. நான் சொல்றேன் உங்க முடிவை மாத்திக்கோங்கப்பா” என்றாள் லக்‌ஷ்மி. வாயைத் திறக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் வைத்தியநாதன்.

வைத்தியநாதனுக்குச் செல்லப் பெண் லக்‌ஷ்மி, கடைக்குட்டி. எப்போது வைத்தியநாதனுக்குக் கோபம் வந்தாலும் அவள் வந்து அவர் முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு எளிதாக அவரைச் சமாளிப்பாள். வீட்டில் யாருக்கு எது வெண்டுமென்றாலும் லக்‌ஷ்மி மூலமாக வைத்தியநாதனிடம் நிறைவேற்றிக் கொள்வது அந்தக் குடும்பத்தில் வழக்கம். அவள் சொல்லியும் பிடிகொடுக்காமல் இறுக்கமாக உட்கார்ந்திருந்தார் வைத்தியநாதன்.
லக்‌ஷ்மி  வைத்தியநாதனின் அங்கவஸ்திரத்தை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டு அவர் போலவே நிமிர்ந்து நின்று, “சொன்னாக் கேளு வைத்தியநாதா. பெரியவா சொன்னாக் கேக்கணும். யோசிக்காம முடிவெடுக்கப்படாது. முன்னாலே யோசிக்காம அப்புறமா வருத்தப்பட்டு யாருக்கு என்ன லாபம், புரியறதா?” என்றாள், வைத்தியநாதன் பேசுவது போன்ற பாணியில் அவருடைய குரலிலேயே.  மறுபடியும், “அப்பா வேண்டாம்பா” என்றாள் கண்ணீருடன்.

அது வரை மௌனமாய் இருந்த வைத்தியநாதன் எழுந்தார். லக்‌ஷ்மியை அருகே அழைத்துத் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டு, “நான் எதோ  கோவத்திலே முடிவெடுத்துட்டேன். யானைக்கும் அடி சறுக்கும். என் வாழ்க்கையிலேயே முதல் முறையா என் முடிவை மாத்திக்கறேன். உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். டேய் கிருஷ்ணா என்னை மன்னிச்சுடுப்பா. உன்கிட்டயும் நான் பேசாம இருந்துட்டேன்” என்றார்.

அது என்ன மாயமோ! பாசத்தில் வழுக்காதவர் யார்? கடைக்குட்டி பேச்சுக்கு இவ்வளவு மதிப்பா..? வைத்தியநாதனின் மனைவி சாவித்ரி எழுந்து உட்கார்ந்தாள். வந்த பூகம்பம், சுனாமி, புயல்…. எல்லாமே சினிமாலே ரிவர்ஸ் ஷாட் காட்றா மாதிரி திடீர்ன்னு விலகிப் போச்சு. பதற்றம் நீங்கி ஒரு அமைதி வந்தது.

கிருஷ்ணன்,  “அதெல்லாம் பரவாயில்லே. நல்ல முடிவெடுத்தேளே, அதுவே சந்தோஷம். அப்போ நான் கிளம்பறேன். வைத்தியநாதா, உன்னோட அறுபதாம் கல்யாணத்தைத் தடபுடலா செய்யணும்னு எல்லாரும் ஆசைப்படறா. அதுக்கு வேணூங்கிற ஏற்பாட்டைக் கவனி. நாளைக்கு வரேன்” என்றபடி கிளம்பியவர், ரமேஷைத் தனியாக அழைத்து, “உங்க அப்பா அம்மாவை யாரும் ஒண்ணும் கேக்கவேண்டாம். அவாளைத் தனியா விடுங்கோ. அவா மனசு விட்டு பேசட்டும்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

அன்று மாலை லக்ஷ்மியும் அவள் கணவன் கணேஷும் ஒரு அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.  “என்னை மன்னிச்சிருங்கோ. என் பிடிவாதம் தப்புன்னு எனக்கு புரிஞ்சுடுத்து. ஏதோ அசட்டுத்தனமா உங்களைப் புரிஞ்சுக்காம தப்புத் தப்பா பேசிட்டேன். நல்லவேளை நான் பேசினதைக் கேட்டு நீங்களும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்திருந்தா என் நெலமை என்ன ஆயிருக்கும். நெனைச்சாவே பகீர்ங்கறது. நீங்க பொறுமைசாலி. அதுனாலெ நான் தப்பிச்சேன். இந்த வயசுலே  அப்பாவும் அம்மாவும் டைவர்ஸ் பண்ணிண்டாவே இவ்ளோ பாதிக்கறதே. நான் யாரைப் பத்தியும் கவலைப்படாம முட்டாள்தனமா டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தேனே. என்னை மன்னிச்சிருங்க” என்றாள், தன் கணவன் கணேஷைக் கட்டிக்கொண்டு.

ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த வைத்தியநாதன், சாவித்ரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் “நான் சொல்லிக் குடுத்தா மாதிரியே நல்லா நடிச்சே சாவித்ரி நீ. உனக்கு நடிகையர் திலகம்னு பட்டமே குடுக்கலாம்” என்றார். “சரி சரி… அவா காதுலே விழப்போறது. அசடு வழியாதீங்கோ” என்றாள் சாவித்ரி.
அறையிலிருந்து கணேஷும் லக்ஷ்மியும் வெளியே வந்து, “நாங்க கிளம்பறோம். குழந்தைகளைத் தனியா விட்டுட்டு வந்திருக்கோம்” என்றபடி கிளம்பினர்.

மாப்பிள்ளை கணேஷ், மாமனாரைப் பார்த்து, கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *