கவிஞர்கள் திருநாள் விருது – 2010
கவிஞர் வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவை நடத்தும் கவிஞர்கள் திருநாள், ஜூலை 13 காலை 10 மணியளவில் சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் நிகழ்ந்தது.
2010ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது, முதுபெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பரிந்துரையால் ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் வாய்ப்புப் பெற்று, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலையில் எதிரொலிக்கும்” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் பூவை செங்குடுவன்.
“நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே” உள்ளிட்ட அவரின் பல பாடல்கள் புகழ்பெற்றவை.
திருக்குறளில் உள்ள ஈடுபாடு காரணமாய், 133 பாடல்களில் ‘குறள் தரும் பொருள்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்குப் பாராட்டுப் பட்டயத்தையும் ரூ.20,000 பணமுடிப்பையும் வைரமுத்து வழங்கினார். திரைக் கலைஞர்கள் ராஜேஷ், விவேக், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.