சினிமா டுடே 2010 பொருட்காட்சி

0

சினிமா டுடே பொருட்காட்சி தொடர்பாக பைசெல் இன்டராக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு

சினிமா டுடே 2010 பொருட்காட்சி, 4ஆம் ஆண்டாக, 2010 ஜூலை 23, 24 & 25 தேதிகளில் சென்னை வாணிப மையத்தில் (சென்னை டிரேட் சென்டர்) நடைபெறுகிறது. இது, திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி & பொழுதுபோக்குத் துறை ஆகியவற்றுக்கான ஆசியாவின் மிகப் பெரிய முழுமையான பொருட்காட்சி ஆகும். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மட்டுமே நிகழ்ந்து வந்த இத்தகைய காட்சியை நடத்தும் வாய்ப்பினைச் சென்னையும் பெற்றுள்ளது. உலகம் முழுதும் அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பங்களும் பொருட்களும் இந்தக் காட்சியை அலங்கரிக்க உள்ளன.

இந்த ஆண்டு நிகழவுள்ள கண்காட்சி மிகப் பெரிதாகவும் மிகச் சிறப்பாகவும் நடக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்பட உருவாக்கம் மற்றும் வானொலித் துறையில் டிஜிட்டல் புரட்சி, முப்பரிமாணத் (3டி) தொழில்நுட்பம், சிறப்பு ஒளிக் கலவைகள், ஒப்பனை, அனிமேஷன் (அசைநிலை வரைகலை) துறையின் முன்னேற்றங்கள், சிறப்புக் காட்சி அமைப்புகள், நேரடி நிபுணத்துவம் கொண்ட ஒலி-ஒளிச் செயல்முறைகள் ஆகியவற்றின் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு & ஊடகத் துறை சார்ந்த அமைப்புகளின் ஆதரவு பெற்ற இக்காட்சி, இத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மிக முக்கிய பங்கினை ஆற்றவுள்ளது.

இக்காட்சியின் சில சிறப்பம்சங்கள் வருமாறு:

* இந்தியாவில் முதல் முறையாக அலெக்சாவை அறிமுகப்படுத்துவதற்காக ஆனந்த் சினி சர்வீசஸ், அர்ரி (ARRI) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அர்ரி அலெக்சா என்பது, புதிய தலைமுறை டிஜிட்டல் கேமராவின் அதிநவீன வெளியீடாகும். இந்தக் கேமரா, திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படம், ஆவணப் படம், இசை ஒளிப்படம் உள்ளிட்ட பலவற்றுக்கும் உதவும். இதற்கான செயல்முறைகள், பயிற்சி வகுப்புகளை ஆகியவற்றையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

* ஹெச்டி, 2கே, 4கே மற்றும் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி ஆகியவற்றுக்கான பாப்லோ-அடிப்படை வண்ணத் திருத்தங்களை குவான்டெல் நிறுவனம் செயல்படுத்திக் காட்டவுள்ளது.

* முழுமையான ஹெச்டி 3டி எல்சிடி திரை & 3டி இமேஜ் பிராசசர் ஆகியவற்றுக்கான தனது புதிய தொழில்நுட்பத்தை ஜேவிசி நிறுவனம், காட்சிக்கு வைக்கவுள்ளது.

* தொழில்முறை ஹெச்டி/எஸ்டி பல வடிவப் பதிவுக்கான அதிநவீன நாடா இல்லாத கேமரா-ரெக்கார்டர் கருவியைப் பானசோனிக் நிறுவனம் செயல்படுத்திக் காட்டவுள்ளது.

* தனித்துவமான, பன்முகத் திறன் பெற்ற ஸ்கார்பியோ என்ற டெலஸ்கோபிக் கிரேன், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

* புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞரான இத்தாலியைச் சேர்ந்த செல்வி சமந்தா பெலூசோ, கிரயோலான் பயிலரங்கு என்ற தலைப்பில் தனித்துவமான ஒப்பனைக் கலையைப் பயிற்றுவிக்கிறார்.

* இந்தியாவில் மோஷன் கேப்சர் ஸ்டுடியோவைக் கொண்டுள்ள ஒரே நிறுவனமான ஆக்செல் அனிமேஷன் ஸ்டுடியோவும் அமெரிக்காவின் மோஷன் அனலைசிஸ் நிறுவனமும் இணைந்து தங்களிடம் உள்ள வசதிகளை முதல் முறையாகச் சென்னையில் காட்டவுள்ளன.

* அனிமேஷன் & சிறப்பு ஒலி-ஒளிச்சேர்ப்பு தொடர்பாக, CGI-VFX  ஆகியவற்றைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்தரங்கும் மாநாடும் நிகழவுள்ளன.

* குறும்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக,  தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரை வணங்கும் வகையில் மிக நீண்ட, தொடர்ச்சியான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது. இது, உலக சாதனைக்கான ஒரு முயற்சியாகும்.

1) கலைஞர், திரைப்படத் துறைக்குச் சுமார் 70 ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார். இது, உலகத் திரை வரலாற்றில் வேறு எவரும் சாதித்திராத, மிக நீண்ட, தொடர்ச்சியான பங்களிப்பிற்கான மகத்தான உலக சாதனையாகும்.

2) கலைஞர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கும் வகையில், கலைஞர் (கலை வல்லுநர்) என்ற பெயரைப் பெருமையுடன் தாங்கிய ஒரே ஒரு தலைவர், இவரே.

3) இந்த அழுத்தமான சாதனைக்காகக் கலைஞரை வணங்கவும் கெளரவிக்கவும் வேண்டும்.

4) திரைத் துறைக்கு மிக நீண்ட, தொடர்ச்சியான பங்களிப்பினால் உலக சாதனை புரிந்துள்ள கலைஞரை வணங்கும் வகையில், மிக நீண்ட, தொடர்ச்சியான கையெழுத்து இயக்கத்தினை நடத்தி, உலக சாதனை நிக்ழத்தப்பட உள்ளது.

5) இந்தக் கையெழுத்து இயக்கத்திற்காக ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான காகிதம் பயன்படுத்தப்பட உள்ளது.

6) தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம், தமிழ்நாடு வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி, நிகழவுள்ளது.

பொழுதுபோக்கு & ஊடகத் துறையைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் இந்தக் கண்காட்சி, உள்ளார்ந்த பயன்களை அளிக்கவுள்ளது. இத்துறையில் உலகம் முழுதும் உள்ள அதிநவீன ஆக்கங்களை உங்கள் வாயிலுக்கே அழைத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளுங்கள்: பைசெல் இன்டராக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை

044 28353739 / 42177899 :  www.buysellint.com

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *