திருப்பூர்த் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்காட்சி

0

சா. குமாரசாமி

மாணவர்களிடையே புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் விதமாக, திருப்பூர் வள்ளலார் நகர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் 04.04.2011 அன்று படைப்பாற்றல்  கண்காட்சி நடைபெற்றது. இதனை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பினைப் பெற்றதில் மகிழ்ந்தேன். அவ்வமயம், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் அவர்களையும், ஆசிரியப்  பெருமக்கள் அனைவரையும் வணங்கினேன். குழந்தைகளின் ஓவியம் மற்றும்  அறிவியல் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்தேன்.

Tiruppur thai tamil palli exibition

பெற்றோர்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், பொதுமக்கள் என்று பள்ளி வளாகமே விழாக் கூட்டம், எல்லா வகுப்பறைகளிலும் இடம்  பெற்றிருந்த கண்காட்சியை நானும், கோவை சதாசிவம் அவர்களும், என்னுடன் வந்த எம் பள்ளி தமிழாசிரியர் வேல்முருகன் அவர்களும்  கண்டு இரசித்து மகிழ்ந்து வந்தோம்.

ஐந்தாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் வெளிப்படுத்தி இருக்கும் இந்தப் படைப்பாற்றலைக் கண்டு விழிகள் விரிய வியந்து போனேன், சில  இடங்களில் உறைந்தும் போனேன்.

Tiruppur thai tamil palli exibition

வளர்ந்து தேய்கின்ற நிலவை வானில் பார்த்திருக்கிறேன். ஒரு சின்ன அட்டைப் பெட்டியை என்னிடத்தில் காட்டிய மாணவி ஒருத்தி, ‘இந்தத் துளை வழியே பாருங்கள் ஐயா. அதில் அமாவாசை முதல் முழு நிலவாக மலரும் காட்சி தெரியும்’ என்றாள். நானும் சாதாரணமாகத் தான் வாங்கிப்  பார்த்தேன். அந்தப் படைப்பு, என் சாதாரணப் பார்வையைச் சில்லுச் சில்லாக உடைத்தது.

காற்றாலையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள் மாணவி ஒருத்தி. பக்கத்தில் போனேன். காற்றாலையால் நமக்கு நன்மையும் உண்டு. தீமையும்  உண்டு என்றாள். என்னவென்று கேட்டேன்.

Tiruppur thai tamil palli exibition

நன்மை:- மின்சாரம் எடுக்க முடியும்.
தீமை:- இவை இருக்கும் பகுதியில் மழை குறைவாக இருக்கும் என்றாள்.
எவ்வளவு பெரிய செய்தியை இந்தப் படைப்பின் மூலம் எளிதாய்ப் புரிய வைத்தாள்.

செல்பேசிக் கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக் குருவிகளின் வருகை குறைந்து போனது என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். சிலர்  மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் இங்கொரு மாணவி அந்தக் காட்சியைப் படைப்பாக வைத்திருந்தாள்.

Tiruppur thai tamil palli exibition

குழந்தைகளின் உள்ளம் இயற்கையாகவே இயற்கையின் உன்னதத்தை வெளிப்படுத்துவதாகவும், அவை அழிந்து வருவதைப் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்துவதாகவுமே இருப்பதற்குச் சான்றாக மரங்கள், பறவைகள், விலங்குகள், விலங்கியல் பூங்கா, சுற்றுச் சூழல், மழைநீர் சேமிப்பு போன்ற  படைப்புக் காட்சி அதிகப்படியான எண்ணிக்கையில் அமைந்திருந்தது. இதைக் கூரிய பார்வையோடு வரவேற் வேண்டும். கூடவே ஆங்காங்கே  இடம் பெற்றிருந்த காவல் நிலையங்களும் என்னை யோசிக்க வைத்தது.

“கல்லூரிகளுக்கு இணையாகவும், நிகராகவும் அமைந்திருந்தது இந்தக் குழந்தைகளின் படைப்புகள்” என்று கோவை சதாசிவம் அவர்கள்  சொன்னதும் உண்மையில் வரவேற்க வேண்டியதொன்று. இவை மட்டுமல்ல…….

Tiruppur thai tamil palli exibition

ஒவ்வொரு குழந்தையும் வரிசையாய் வந்து மகிழ்ச்சியோடு “நன்றி  அய்யா” என்று சொல்லி, சான்றிதழ்களைப் பெற்றுச் சென்றபோது, என்  குழந்தைகளின் நாவிலும் இதேபோல் இன்பத் தமிழும் பண்பாடும் மலர வேண்டும் என்று ஏங்கச் செய்தது அந்த நிகழ்ச்சி.

குழந்தைகளின் ஆர்வத்தினை ஊக்கப்படுத்தியும், படைப்புகள் தயாரிக்க உதவியும் செய்து குதூகலிக்க வைத்த ஆசிரியர்களையும்  நிறுவனத்தினரையும் உளமாரப் பாராட்டிப் பெருமையுறுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.