ஸ்ரீ சத்திய சாயி பாபா மறைந்தார்
ஆன்மீகத் தலைவரும் சமூக சேவகருமான புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயி பாபா (85), 2011 ஏப்ரல் 24 அன்று காலை 7.40 மணிக்கு மறைந்தார். பகவான் என்றும் சாயி கிருஷ்ணா என்றும் பல பெயர்களால் அவரை அழைத்த, உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான சாயி பக்தர்கள், இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அண்மைக் காலமாகப் பல்வேறு நோய்களால் பாபா அவதிப்பட்டு வந்தார். ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சத்திய சாயி அறக்கட்டளை மருத்துவமனை ஆகியவற்றில் அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு எந்தப் பயனும் கிட்டவில்லை. எனவே அவரது உடல்நிலை மிக மோசமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 அன்று காலை அவரது சுவாச உறுப்புகள் செயலிழந்ததால், 7.40 மணிக்கு அவர் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
‘பாபாவின் உடலை விட்டு உயிர் பிரிந்துள்ளது. ஆனால் அவரது ஆன்மா, இந்த மக்களிடையேதான் உள்ளது’ எனப் பிரசாந்தி நிலையம் அறிவித்துள்ளது. சாய்பாபாவின் உடல், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இருக்கும். பொதுமக்கள் அஞ்சலிக்காகத் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான அதிமுக்கிய பிரமுகர்கள், புட்டபர்த்திக்கு வரவுள்ளனர். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்மீகக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல், சாயி பாபா, சமூக சேவைகள் பலவற்றில் தம் பக்தர்களை ஈடுபடுத்தியவர். தம் பக்தர்களுக்கு நல்ல நெறிகளைப் போதித்து, அவர்களின் மனக் குறைகளை அகற்றியவர். சாதனைகள் பல படைத்த பாபாவின் மறைவுக்கு வல்லமை, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
வாழ்க்கைக் குறிப்பு
ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் 1923 நவம்பர் 23 அன்று பாபா பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம். பகவான் பாபா இவர்களுக்கு 8ஆவது குழந்தையாகப் பிறந்தார். பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் தனது மகிமைகளை வெளிப்படுத்தினார். தெரு நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர்கள் வீட்டில் இருந்த இசைக் கருவிகள் தானாகவே இசைத்தன. சத்திய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருக்கு சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர்.
இவரது ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. இவரின் சுய அறிவிப்பின் மூலம் இவர் சீரடி சாயி பாபா வின் மறு அவதாரம் என இவரின் ஆதரவாளர்களால் நம்பப்படுகின்றது
சமூக சேவைகள்
சத்திய சாயி பாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் ஒரிசாவில் நிகழ்ந்த வெள்ளத்தினால் வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. சத்திய சாயி நிறுவனம், உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை. சத்திய சாயி நிறுவனம், உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும் பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.
தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைச் சத்திய சாயி மத்திய அறக்கட்டளை வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்டக் குடிநீர் பிரச்சினை, சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாதது. இதனைச் சத்திய சாயி பாபா, சாதனை காலத்தில் அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
சென்னை மக்களின் தாகத்தைத் தீர்கக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கை திட்டத்தினைச் சீர் செய்து, சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சத்திய சாயி மத்திய அறக்கட்டளை நிரந்தர தீர்வு வழங்கியது.
ஆன்மீகக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல், சாயி பாபா, சமூக சேவைகள் பலவற்றில் தம் பக்தர்களை ஈடுபடுத்தியவர். தம் பக்தர்களுக்கு நல்ல நெறிகளைப் போதித்து, அவர்களின் மனக் குறைகளை அகற்றியவர்.
சாதனைகள் பல படைத்த பாபாவின் மறைவுக்கு வல்லமை, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
=========================================
படத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி – விக்கிப்பீடியா
சாய்பாபாவுக்கு அஞ்சலி.. இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள
நதிநீர் தாவாவை, அரசியல்வாதிகளால் தீர்க்க முடியாத தாவாவை
ஆன்மீகத் துறவி, பணமும் கொடுத்துத் தீர்த்து வைத்தது ஆன்மீகத்தின்
புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது. ஆன்ம பலம் உள்ளோர்
ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டிய வரலாறு நமக்கு உண்டு. இன்று
அவ்வழிகாட்டுதல் இல்லாததாலும், வழிகாட்டத் தெரியாதவர்களாலும் நாடு சிக்கலில் மாட்டியுள்ளது. சிக்கல் தீரும் என்று நம்புவோம்.
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.
தனி ஒரு மனிதராக ,தம் ஆத்ம சக்தியை வளர்த்துக்கொண்டு
அந்த சக்தி மூலமாக அனைவரையும் இணைத்து ,
சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று நிரூபித்த மகான்
அவரது சாதனைகள் நம் நாட்டுக்கும் அனைத்து உலக மக்களுக்கும் பயன்பட்டது.
அன்புடன்
தமிழ்த்தேனீ