இறந்த பாலகனுக்கு 4ஆம் நாள் உயிர் வந்தது

விசாலம்

Vishalamகுழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என மனமுருகி அம்பிகை மீனாட்சியிடம் வேண்டினர். அத்துடன் இந்த வேண்டுதல் பலித்தால் அந்த குழந்தையைக் கோயிலிலேயே மீனாட்சி அன்னையின் ஆதரவில் விட்டுவிடுவதாகவும் வேண்டிக்கொண்டனர். மனமுருகி வேண்டினால் அன்னை வராமல் இருப்பாளா என்ன! அவர்கள் வேண்டிக்கொண்டதையும் நிறைவேற்றினாள்.

ஆலயத்தில் அந்தத் தாய் தான் சொன்னபடி ராமன் என்ற குழந்தையை விட்டுவிட, ராமன் என்ற பெயர் மாற்றப்பட்டு, ராஜகோபாலன் என்ற பெயரில் கோயிலிலேயே வளர்ந்தான் அந்தச் சிறுவன். கோயிலிலேயே ஒரு பட்டர் கனவில் அம்பாள் வந்து, அவனுக்கு உபநயனம் செய்து வைக்கும்படி கூற, கோயில் பட்டர்களே பூணலும் போட்டு, அந்தச் சம்ஸ்காரத்தை மிகச் சிறப்பாக நடத்தினர்.

ஒரு நாள் காசியிலிருந்து ஒரு மகான், மதுரை மீனாட்சியிடம் வந்தார். துறுதுறுவென்று பல வேலைகள் செய்த ராஜகோபாலனைக் கண்டார். அவன் முகத்தில் இருந்த தேஜசைக் கண்டு வியந்தார். பின் அவனிடம் கேட்டார்.

“மகனே இங்கே வா. நீ யார்? உன் பெயர் என்ன?”

“நான் தான் ராஜகோபாலன். இந்தக் கோயிலிலேயே தான் இருக்கிறேன். என் தாய், இந்த மீனாட்சி”

“ரொம்ப மகிழ்ச்சி. நான் உன்னை என்னுடன் அழைத்துப் போக விரும்புகிறேன். என் சீடனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னுடன் கிளம்பு.”

அவனும் பெரியவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவருடன் கிளம்பினான். அந்தப் பெரியவர்தான் ஸ்ரீ கணபதி பாபா. அந்த மஹானிடம் பலவும் கற்ற பின், இந்தச் சீடர் இமாலயத்தில் பல இடங்கள் சஞ்சரித்தார். அதற்குப் பின் வந்து தங்கியது, காசி க்ஷேத்திரம். அங்கே அவர் சமாதி நிலை அடைந்து, உள்ளொளியைக் கண்டார்.

kulandaiyanandarதிருவண்ணமலையில் பல சித்த புருஷர்கள் உண்டு. அந்த வகையில் இந்த ராஜகோபாலனும் ஒருவர். இங்கும் ஒரு குகையில் அமர்ந்து தியானத்தில் இருந்து, சமாதி நிலையில் பேரானந்தம் பெற்றார். அவர் அங்கிருந்து வெளியே வரும்போது முகத்தில் அத்தனை தேஜஸ். பார்க்க ஒரு குழந்தையைப் போல் காட்சியளித்தார். குட்டையாகவும் பெரிய தொந்தியுடன் வாயில் எச்சில் வழிந்தவண்ணம் சிறு குழந்தையைப் போல் இருக்க, அவருடைய பெயர், குழந்தையானந்த ஸ்வாமிகள் என்று ஆனது.

இவரை ராஜபூஜித ஸ்வாமிகள் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் பல ராஜாக்கள். நேபாளம், பரோடா, திபெத், காஷ்மீர் போன்ற இடங்களை ஆண்டவர்கள், இவரைப் பூஜித்தார்கள்.

சுவாமிகள் தென்காசிக்கும் சென்று, மூன்றாம் முறை சமாதியடைந்து ஜோதியாக வெளியே வந்தாராம். இவர் கடைசியில் சுற்றிய இடங்கள், பழனி திண்டுக்கல், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை.

ஸ்வாமிகள் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். அதில் ஒன்றைப் பார்ப்போம்.

திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் இது.

மண் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன், திடீரென்று மயக்கம் போட்டுக் கீழே சாய்ந்தான். எல்லோரும் கூடி அவனை எழுப்பினார்கள். ஒரு சிலர் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அப்போதும் அவன் எழுந்திருக்காதலால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். டாக்டர் அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது என்றார். அவன் பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் அழுதபடி இருக்க, அந்த நேரத்தில் குழந்தை ஸ்வாமிகள் அங்கு வந்தார். விவரம் அறிந்து பின் பெற்றோர்களிடம்  சொன்னார்.

kulandaiyanandar“வருந்தாதீர்கள். இந்தப் பையனை என் அறையில் ஒரு மூன்று நாள் வரை பூட்டி வைத்து விடுங்கள்.”

இதைச் சொல்லியபடியே ஸ்வாமிகள் அங்கிருந்து நகர்ந்தார்.

மூன்று நாட்கள் ஆயின. நான்காம் நாள், ஸ்வாமி வந்தார். தன் கதவைத் திறந்தார். பையன் அங்கு உயிர்ப் பெற்றெழுந்து, “ஸ்வாமி  நான் ஆற்றில் குளித்துவிட்டு வருகிறேன்” என்றபடி ஓடினான்.

இதைப் பார்த்த பலரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.

இவர் கடைசியில் சமாதியடைந்து, ஒளியுடன் கலந்த இடம், மதுரை. இவர் பிறந்த இடமும் மதுரைதான். இவருக்காக அங்கு அதிஷ்டானம் கட்டி,  சுவாமிகளின் அம்பாளான ஸ்ரீ சக்ரரூபிணிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. இதைப் போல் சித்தர்கள் பலர் இருந்த நாட்டில் நாம் இருப்பது நாம் செய்த பாக்கியமன்றோ?

=========================================

படங்களுக்கு நன்றி: https://ramanans.wordpress.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இறந்த பாலகனுக்கு 4ஆம் நாள் உயிர் வந்தது

Leave a Reply

Your email address will not be published.