உலகளவில் சாலை விபத்துகளால் 50 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகளவில் சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலர் கே. சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் 2011 ஏப்ரல் 26 அன்று சாலைப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசிய போது, செயலர் இவ்வாறு தெரிவித்தார். சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் காயங்களும் பொருளாதார முன்னேற்றத்திற்குக் குந்தகம் ஏற்படுத்துவதாகவும் சந்திரமௌலி குறிப்பிட்டார். எனவே, முறையான செயல் திட்டத்தில் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் செயலாளர் கூறினார்.
2011 முதல் 2020ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வரைவு செயல்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான இரண்டு நாள் கருத்தரங்கிற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் சுகாதாரச் சேவைகள் இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம், ஐஐடி, மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சொசைட்டி ஆகியவற்றின் வல்லுநர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சாலை விபத்துகளில் காயமடைவோர்க்கு உடனடி சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் திறன் கட்டுமானத்திற்கான உதவி என்ற திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் அவசர கால விபத்து சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் திட்டம் செயல்படுத்தி வருவதாக சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் ஆர். கே. ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.
தில்லி-கொல்கத்தா-சென்னை-மும்பை தங்க நாற்கர சாலை திட்டத்தில் 340 அவசர கால விபத்து சிகிச்சை மையங்கள், ரூ.732.75 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2011 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுக் காலத்தைச் சாலை பாதுகாப்புக்கான செயல் திட்ட காலம் என்று, 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐநா பொதுச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச அளவிலான சாலைப் பாதுகாப்பு குறித்த அறிக்கையானது, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் காயமடைவதாகவும், சுமார் 50 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கிறது.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://dme.ap.nic.in/roadtraffic.html