திரை இயக்குநர் கே. பாலசந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது

0

K.balachandar

திரைப்படத் துறையில் அனுபவமும் சிறப்பும் புகழும் பெற்ற மிகப் பெரும் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தருக்கு 2010ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தனது பங்கை வழங்கிய அனுபவம் மிக்க திரைப்பட இயக்குநருக்கு இந்த விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. தங்கத் தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் பொன்னாடை ஆகியவை இவருக்கு வழங்கப்படும்.

கடந்த 45 ஆண்டுகளாக திரைப்படத் துறையின் இயக்குநராகவும், திரைக்கதை வசன கர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் கே. பாலசந்தர் புகழ் பெற்று விளங்கினார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். இவரது திரைப்படங்கள், தனித்துவம் மிகுந்தவை. பெரும்பாலான இவரது படங்கள், சமூகச் சிந்தனை இழையோடு இருக்கும். திறமையான மிகச் சிறந்த நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், பிரகாஷ்ராஜ், விவேக் போன்றவர்களைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை, இவரைச் சாரும்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 1930ஆம் ஆண்டு பிறந்த இவர், மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நாணல், நீர்க்குமிழி ஆகிய மிகச் சிறந்த நாடகங்களின் மூலம் நாடக ஆசிரியராக வெளியுலகுக்குத் தெரிய வந்தார்.

1965ஆம் ஆண்டு திரையுலகில் காலடி பதித்த இவர், தயாரித்து நாகேஷ் நடித்து வெளி வந்த நீர்க்குமிழி திரைப்படம், இவருக்குத் திரையுலகில் ஒரு மிகப் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், இதர நிறுவனங்களின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்ற பல திரைப்படங்களை இவர் இயக்கி, தயாரித்துள்ளார். இவற்றில் அபூர்வ ராகங்கள், அவர்கள், 47 நாட்கள், சிந்து பைரவி, ஹிந்தியில் வெளிவந்த ஏக் துஜே கேலியே, தெலுங்கில் மரோ சரித்ரா, ருத்ர வீணா, கன்னடத்தில் பெக்கியல்லி அரலிதா ஹூவு உள்ளிட்டவை மிகச் சிறந்த படங்களில் சில.

சமீப காலங்களில் அவர் தனது கவனத்தைச் சின்னத் திரையின் மீது செலுத்தி, மிகவும் கவனத்துடனும் திறமையுடனும் தனது தயாரிப்புகளையும் அளித்து வருகிறார்.

தமிழக அரசு 1973ஆம் ஆண்டு இவருக்குக் கலைமாமணி விருதை வழங்கியது.  1987ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ஆந்திர மாநில அரசு இவருக்கு தங்க நந்தி விருது, வெள்ளி நந்தி விருது ஆகியவற்றை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.  சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

பாலசந்தர், தேசிய விருது பெற்ற திரைப்படங்களில் சில.

  • 1969ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த இரு கோடுகள்,
  • 1975ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள்.
  • 1981ஆம் ஆண்டு வெளிவந்த தண்ணீர், தண்ணீர்,
  • 1984ஆம் ஆண்டு வெளிவந்த அச்சமில்லை அச்சமில்லை,
  • 1988ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ருத்ர வீணா திரைப்படத்திற்கு நர்கீஸ் தத் திரைப்பட விருதும்,
  • 1991ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒருவீடு இருவாசல் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

======================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.