கனம் கோர்ட்டார் அவர்களே! – 15
இன்னம்பூரான்
புதிய தொடர் ~ 1
சில வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தினால் ஆஸ்பத்திரியில் இறந்த ஒரே மகனின் உடலுறுப்புகளை அவனுடைய பெற்றோர்கள் தங்கள் துயரத்தை அடக்கிக்கொண்டு, தானம் செய்தார்கள். 20 நிமிடங்களுக்குள் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அவனுடைய இதயத்தை எடுத்துச் சென்றால் தான், மற்றொருவர் உயிர் பிழைக்கலாம். சென்னை வீதிகள், போக்குவரத்துச்சிக்கல்கள்படி இந்த இதயப்பயணம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். முன்னும் பின்னும் அலறும் சங்குகளும், ஒளி வீசும் சிவப்பு விளக்கு வண்டிகள் கட்டியம் கூற, சென்னை போலீஸ் டிரைவர்களில் திறன் மிக்கவர் ஒருவர் 19 நிமிடங்களில் நின்று போன இதயத்தை ஓடோடிச் சேர்ப்பித்தார். அது ஒரு சாதனை மட்டுமல்ல. சிவப்பு விளக்கும், சங்கொலியும் இட்ட பணியை செவ்வனே செய்தன. அவருக்கு சலாம். சிவப்பு விளக்குக்கும் சங்கொலிக்கும் சலாம். சலாம்.
சிவப்பு விளக்கும், சங்கொலியும் கன்னாபின்னாவென்று அதிகார துஷ்பிரயோகமாக, மானிடப்பதர்களுக்குக் கூட கட்டியம் கூறுவது அன்றாடக்காட்சி, பாரத தேசம் என்னும் பெயரை தாங்கி வரும் இந்தியாவிலே. அது மட்டுமல்ல. பெண்களுக்கு உரிய பாதுகாப்புத் தர இயலாத போலீஸ் படை, உருப்படாத மனித ஜன்மங்களுக்குக் கூட, பல வகை துப்பாக்கிகள் ஏந்தி பந்தோபஸ்து அளிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் இந்த ‘குட்டிச்சுவர்’ கைங்கர்யத்தில் விரயமாகிறது.
ஒரு மனுதாரர் இதை குறை கூறி, நிவாரணம் நாடி உச்சநீதி மன்றத்தை அணுகினார். அவர் தமிழ்நாட்டில் இருந்து ஒரு உதாரணத்தை முன் வைத்தார். கட்டபொம்மன் முதற்கொண்டு பலர் பட்ட இன்னல்களுக்குக்காரணம், கும்பினிக்காரனிடன் அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப் பட்ட அபரிமிதமான கடனே. செலவாளியும், கடனாளியும் ஆன அந்தக்காலத்து ஆற்க்காட்டு நவாப், நிலம், புலன், மானம், மரியாதை எல்லாவற்றையும் பரங்கிக்காரனிடன் அடகு வைத்தார். மக்களுக்கு அவர் மீது ஏகப்பட்ட வருத்தம். அதனால் அவருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று கும்பினிக்காரன் அவருக்குக் கொடுத்த ரக்ஷணை, இன்று மக்களுடன், பண்புடனும், நேசமுடனும் பழங்கி வந்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற இன்றைய ஆற்காட்டு நவாப் அவர்களுக்கு எதற்கு? சிவப்பு விளக்கும், சங்கொலியும் எதற்கு? அது மட்டுமல்ல. கிரிமினல் பின்னணி உடைய மண்டை வீங்கிகளுக்கும் கூட இந்த மரியாதை சாங்கோபாங்கமாக அளிக்கப்படுவதை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி அவர்களும், ஹெ.எல். கோகலே அவர்களும் கண்டித்திருக்கிறார்கள். மனுதாரர் ஹரீஷ் ஸால்வே அவர்கள் பிரபல வழக்கறிஞர். ‘இந்த ‘சிவப்பு விளக்கு/ சங்கொலி’ கலாச்சாரம் ஒரு தொத்து வியாதியாகி விட்டது என்று அங்கலாய்த்தார். இது பொதுஜனவைரியாகி விட்டது என்றார். வர, வர, நமது ராஸ்தாக்கள் பெரும்புள்ளிகளின் பயணத்துக்கு ஆபத்து ஆகிவிட்டன என்ற சால்ஜாப்புக்கு, நீதிபதி. ஜி.எஸ். சிங்வி அவர்கள் சாட்டையடியாக ஒரு கருத்துத் தெரிவித்தார். அதை மட்டும் சொல்லி, இன்றைய கட்டுரையை முடித்து விடுகிறேன். கனம் கோர்ட்டார், லேசுபாசு அரசு மந்தகதி, ஊழலுலகம், தணிக்கை தடாலடி எல்லாம் பற்றி சொல்ல விஷயம் நிறைய இருக்கிறது. வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இது தொடரும். இல்லையெனில் இது முற்றுப்புள்ளி.
“ மக்களுக்கு இந்த ராஸ்தாக்கள் பாதுகாப்பாற்றவை என்றால், அமைச்சருக்கும் அப்படியே தான் இருக்கவேண்டும். அவர் உசத்தி ஒன்றுமில்லை.” ~ நீதிபதி. ஜி.எஸ். சிங்வி.
இன்னம்பூரான்
15 02 2013
தொடருங்கள் ஐயா, மிகச் சுவையாய் இருக்கிறது, சாட்டை ஒலியாக கட்டுரை முழுவதும் சொடேர்…சொடேர் சத்தம்தான்..
///பெண்களுக்கு உரிய பாதுகாப்புத் தர இயலாத போலீஸ் படை, உருப்படாத மனித ஜன்மங்களுக்குக் கூட, பல வகை துப்பாக்கிகள் ஏந்தி பந்தோபஸ்து அளிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் இந்த ‘குட்டிச்சுவர்’ கைங்கர்யத்தில் விரயமாகிறது.//
விளாசித் தள்ளுகிறீர்கள்..ஹ..ஹ..ஹா..
….. தேமொழி