செம்மொழி அறிஞர்கள் 17 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், மத்திய அரசு வழங்கும் செம்மொழி விருதுகளைக் குடியரசுத் தலைவர், 2011 மே 6 அன்று தில்லியில் வழங்கினார்.
செம்மொழி விருது என்பது, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு இந்திய நடுவண் அரசினால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்றைக் குறிக்கும். இவ்விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கும் வழங்கப்படுகிறது.
முதன் முதலாக 2005 – 2006, 2006 – 2007, 2007 – 2008 காலப்பகுதிகளுக்குரிய செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மூதறிஞருக்கான விருதுகள் மற்றும் இளம் அறிஞர் விருதுகள் சென்ற நவம்பர் 2009-இல் அறிவிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது என்ற பெயர்களில் இரண்டு மூதறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் பணம் என்பவற்றை உள்ளடக்கியன.
தொல்காப்பியர் விருதுக்குப் பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களும் குறள்பீடம் விருதுக்கு அமெரிக்காவில் வாழும் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களும் தேர்வுபெற்றனர்.
இவற்றோடு இளம் அறிஞர் விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இளம் அறிஞர் விருதானது சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2005-2006ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருது பெற்றவர்கள்
- முனைவர் இரா. அறவேந்தன்,
- முனைவர் ய. மணிகண்டன்
- முனைவர் சி. கலைமகள்
- முனைவர் வா.மு.செ. முத்துராமலிங்க ஆண்டவர்
- முனைவர் கே. பழனிவேலு
2006-2007ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருது பெற்றவர்கள்
- முனைவர் சு. சந்திரா
- முனைவர் அரங்க பாரி
- முனைவர் மு. இளங்கோவன்
- முனைவர் மா. பவானி
- முனைவர் இரா. கலைவாணி
2007-2008ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருது பெற்றவர்கள்
- முனைவர் அ. செல்வராசு
- முனைவர் ப. வேல்முருகன்
- முனைவர் ஆ. மணவழகன்
- முனைவர் ச. சந்திரசேகரன்
- முனைவர் சா. சைமன் ஜான்
28.03.2010 அன்று சென்னையில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற “பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை” என்ற தலைப்பிலான கருத்தரங்கத் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக இவ்விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கும் விழாவும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாத, குறள்பீடம் விருது பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர், முனைவர் ஜார்ஜ் ஹார்ட்க்கு பின்னர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, மே 6, 2011 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்குத் தில்லியில் தமது மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கிக் கௌரவித்தார்.
விருது பெற்ற அறிஞர்கள் அனைவரையும் வல்லமை வாழ்த்துகிறது.
==============================================================
நன்றி: விக்கிப்பீடியா | படத்திற்கு நன்றி: http://muelangovan.blogspot.com
‘முதன் முதலாக 2005 – 2006, 2006 – 2007, 2007 – 2008 காலப் பகுதிகளுக்குரிய செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மூதறிஞருக்கான விருதுகள் மற்றும் இளம் அறிஞர் விருதுகள் சென்ற நவம்பர் 2009-இல் அறிவிக்கப்பட்டன,’
=>நல்லவேளை! மாமாங்கத்துக்கு மாமாங்கம் என்று செய்யாமல், துரித கதியில் இயங்கினார்களே!