அண்ணாமலை சுகுமாரன்

Annamalai_SUGUMARAN“நீங்களே சொல்லுங்க, நான் என்ன அப்படிப்பட்ட பெரிய தவறு செய்துவிட்டேன்? வலது பக்கம் கழுத்தைத் திருப்புவதற்குப் பதில், இடது பக்கம் கழுத்தைத் திருப்பியதற்கு இத்தனை பெரிய தண்டனையா?”

இதுதான் மெதுவாகக் கண்ணைத் திறந்த பின் தன்னைச் சுற்றிலும் தெரிந்த ஆஸ்பித்திரி உபகரணங்களையும் காற்றால் இழுத்து உயரே கட்டப்படிருந்த தனது காலையும் கையில் அந்தக் காலத்து கலவடை போல் பிருணை பிருணையாகச் சுற்றி இருந்த வெள்ளைத் துணிக் குவியலையும்  கண்டபோது எனக்கு  எழுந்த முதல் எண்ணங்கள்.

அன்றும் எப்போதும் போல் மதியம் சாப்பிட்ட பிறகு, படித்துக்கொண்டு இருக்கும் போதே சிறிது நேரம் வழக்கமான உறக்கம் வந்தது. அன்று கல்லூரிக்கு மதியம் போகவேண்டி இராததால் அந்தத் தூக்கம் நாலு வரை நீடித்தது. பிறகு “குமரா, குமரா” என்று எனது அம்மா அழைத்த குரல் கேட்டுத்தான் முழிப்பு வந்தது.

பிறகு எப்போதும் போல் முகம் கழுவிக்கொண்டு செட்டித் தெருவில் இருக்கும் இந்தியன் காப்பி ஹௌசில் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு, அப்படியே அதே தெருவில் நேரே போய் அரவிந்தரின் சமாதியும் அன்னையின் சமாதியும் ஒருங்கே அமைத்திருக்கும் ஆஸ்ரம வளாகத்தில் சிறிது நேரம் கண்ணை  மூடியபடி அமர்ந்தாலாவது மனம் சற்று அமைதியாகுமா என்று எண்ணி வீட்டில் இருந்து கிளம்பியது எனக்கு நினைவு இருந்தது.

பெரும்பாலும் நேரம் இருக்கும் போதெல்லாம் ஆஸ்ரமத்தில் போய் அமர்வது எனக்கு ஒரு வாடிக்கையாகவே இருந்தது. அங்கே நிலவும் சுத்தமும் வனப்பும் சிலிர்க்கவைக்கும் சூழ்நிலையும் என்னை அங்கே ஈர்த்து வந்தன. எத்தனையோ பேர்கள் எத்தனையோ முறையில் இறைத்தன்மையைப் பற்றி, வாழும் வழிபற்றிப் போதித்திருந்தாலும் அன்னையின் போதனைகள் அடிப்படையில் இந்தக் காலத்துக்கு உகந்ததாக இருப்பதாகவே எனக்குப் படும்.

இந்தியா காப்பி ஹவுசில் காப்பி சாப்பிட்டு விட்டு, அங்கே அன்று உட்கார்ந்திருந்த சிரிக்காத சிங்காரத்திடம் (இது அவருக்கு நான் வைத்த மானசீகப் பெயர், அவர் உண்மைப் பெயர் எனக்குத் தெரியாது. தெரியவில்லை என்றாலும் ஒரு அடையாளம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது அல்லவா?) பணத்தைக் கொடுத்துவிட்டு, எனது அப்பா தனது எத்தனையோ குடும்ப நெருக்கடியிலும் கூட எனக்காகத் தினமும் காலாபட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிக்குப் போய்வர வாங்கிக் கொடுத்த ஒரு பழைய டீ.வீ.எஸ். வண்டியில் கிளம்பியது நினைவிருக்கிறது.

செட்டித் தெருவில் இருந்து ஆஸ்ரமம் போகும் வழியில் ஓடும் கழிவு நீர் கால்வாய் ஒன்றின் கரையில் இரண்டு பக்கமும் இரண்டு சாலைகள் இருக்கின்றன. ஒன்றில் வலத்தில் இருந்து இடது பக்கம் வாகனங்கள் போகலாம். மற்றதில் இடது பக்கம் இருந்து வலது பக்கம் வாகனங்கள் போகலாம். இரண்டும் ஒரு வழிப் பாதைகள்.

எனக்குக் காலையில் இருந்து இருந்து வந்த மனக் குழப்பம், காப்பி குடித்தும் போகவில்லை போலும். ஒரு வேளை ஆஸ்ரமம் போய் அமர்திருந்தால் சற்று தெளிவாகி இருந்திருப்பேன். ஆனால் அதற்குள் விதி தன் வேலையைக் காட்டிவிட்டது. காலமும் இடமும் சேர்ந்து விட்டால் விதி தனக்கு விதிக்கப்பட்ட வேலையைத் தவறாமல் செய்துவிடுகிறது.

அதுவரை சீராக வண்டியை ஒட்டி வந்த நான், முதலில் வந்த சாலையை வலது பக்கம் பார்த்து வாகனங்கள் வராமல் இருந்தால் அதைக் கடக்க வேண்டிய நான், எதோ நினைவில் இடது புறம் பார்த்துக்கொண்டு கடக்க முற்பட்டு விட்டேன்.

திடீர் என்று நான் சுண்டி எறியப்பட்டது நினைவுக்கு வருகிறது.

காற்றில் எந்தப் பிடிப்பும் இல்லாது சுமார் பத்து, பன்னிரண்டு அடி தூரம், திறக்கப்பட்ட சோடா மூடிபோல் பறந்து “சொத்” எனக் கீழே விழுந்தது நினைவுக்கு வந்தது. கணத்தில் கண்ணை மூடுவதற்குள் என்னை நம்பி உயிர் வாழும் எனது குடும்பம், எனது அப்பா, எலும்பும் தோலுமாக எனது அம்மா, நான் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து, தனக்குத் திருமணம் செய்து வைப்பேன் என நம்பி, படிப்பை நிறுத்திவிட்டுக் காத்திருக்கும் ஒரே தங்கை, அவ்வப்போது உதவி செய்து வரும் நண்பர்கள் சிலர், நான் அவர்களுக்குத் தரவேண்டிய தொகைகள் அத்தனையும் கண நேரத்தில் காட்சிகளாக விரிந்தது நினைவிருக்கிறது.

பிறகு ஒரே இருள்.

கசாமுசா குரல்கள் எங்கோ தூரத்தில் கேட்பது போல் கேட்டது. பிறகு  அதுவும் ஓய்ந்துவிட்டது.

Pedestrian crossing road

இப்போதுதான் விழித்துப் பார்க்கிறேன். கையும் காலும் முழுமையாகத் துணிக் கவசத்துடன் வெவ்வேறு கோணத்தில் இழுத்துக் கட்டிய நிலையில் ஆஸ்பத்திரிப் படுக்கையில், படுத்துக் கிடக்கிறேன்.

நான் எனன பெரிய தவறு செய்துவிட்டேன்? வலது பக்கம் பார்ப்பதற்கு பதில் இடது பக்கம் பார்த்தது தவறா? அதுக்கு இத்தனை பெரிய தண்டனையா? நீங்களே சொல்லுங்கள்.

நான் கண் விழித்தது தான் தாமதம், அங்கே காத்துக் கிடந்த என் அம்மாவும் தங்கையும் அருகில் ஓடி வந்தனர்.

“என்ன குமரா இப்படி செஞ்சிட்டே? உன்னையே நம்பி வாழும் எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டியே”

இரவெல்லாம் கண் விழித்து வாடிப் போயிருந்த என் தங்கையும் “அண்ணே, எப்படி எங்களை எல்லாம் விட்டுப் போக உனக்கு மனசு வந்துது?”  என்று கேட்டபடி என் கையைப் பிடித்துக்கொண்டாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னமா, நான் வேணும்னா போய் விபத்தில் மாட்டிக்கொள்வேன்? என்னமோ நடந்து விட்டது….”  என்றேன்.

“இல்லப்பா நீ போய் தற்கொலை செய்துகொள்ள, வேகமாக வந்த லாரியில், வேணும் என்று நீயே மோதியதாகத்தான் விபத்தைப் பார்த்த எல்லோரும் கூறிருக்காங்க”

“போலீஸ் இன்னும் கேசே எழுதாம, நீ எப்போ கண்ணு முழிப்பென்னு காத்துக் கொண்டிருக்காங்க” என்று அம்மா வருத்தத்துடன் சொல்லி முடிச்சாங்க.

“என்னம்மா இது? நான் அப்படியெல்லாம் செய்வேனா? எல்லாம் இந்தக் கழுத்தைத் தப்பாகத் திருப்பியதால் வந்த வினை. வலது பக்கம் பார்த்து கிராஸ் பண்ணுவதற்கு பதில், இடது பக்கம் பார்த்துக்கொண்டு அருகில் வநது விட்ட லாரியில் நேரே விட்டுவிட்டேன் போலிருக்கிறது”

“இல்லப்பா, காலையில் நீ உங்கள் கல்லூரிக்கு வந்த காம்பஸ் இண்டர்வியுவில் நடந்ததைச் சொன்னியா? அந்த வருத்தத்தில் ஏதாவது தப்பா மனசு உடைந்து முடிவேடுத்தயோ என்று நாங்களும் நம்பிப் பதறி விட்டோம். இதுவரை இங்கு காத்துக் கிடந்த அப்பா கூட எங்காவது போய் கொஞ்சம் காசு தயார் பண்ணிக்கிட்டு வரேன் என்றுக் கூறிவிட்டு இப்போதான் போனார்” என்றார் என் அம்மா.

அதற்குள் “ஸ்ஸ்ஸ்….” என்றபடி உள்ளே வந்த நர்ஸ், “அவருக்குத் தூக்க மருந்து ஊசிப் போட்டிருக்கு. வலிக்கு ஊசி போட்டிருக்கு. அவரைக் கொஞ்சம் தூங்க விடுங்க. இல்லாட்டி அவர் வலியில் கத்த ஆரம்பித்துவிடுவார். காலில் பெரிய காயம் இருக்கு. டாக்டர் இப்போ வந்து பார்த்துத்தான் ஆபரேஷன் எப்போ செய்யணும் என முடிவெடுப்பார். நீங்கள் எல்லாம் போய்க் கொஞ்சம் வெளியில் உட்காருங்க” என்று சிடுசிடுத்தார்.

அம்மாவும் தங்கையும் வெளியே சென்றதும் நர்சும் “சரி சரி கண்ணை மூடிச் சிறிது தூங்குங்க” என்று கூறியபடி வெளியே சென்றார்.

தனியே விடப்பட்ட எனக்கு, கல்லூரியில் காலையில் ஏற்பட்ட நிகழ்வுகள் நினைவுக்கு வர ஆரபித்தன.

காம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கவில்லை என்றால், பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு வெளியில் மாதச் சம்பளம் ருபாய் 10,000 கிடைப்பதே பெரிய விஷயமாகிவிடும் என்பது இப்போதெல்லாம் படிக்கும் போதே மாணவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

எனது குடும்பமோ மிக நடுத்தரக் குடும்பம். என் அப்பாவும் அந்தக் காலத்தில் டிகிரி முடித்தவர்தான். எல்லோரையும் போல் அவரும் ஏதாவது அரசாங்க வேலைக்குப் போயிருந்தால், எங்கள் வாழ்வும் சற்று சுகமாக, சுலபமாகப் போயிருக்கும்.

என் அப்பாவோ சற்று பொது நல நோக்குள்ளவர். ஏதோ தான் வேலைக்குப் போவதற்குப் பதில், ஏதாவது தொழில் செய்தால் அதனால் சிலருக்கு வேலை தர இயலும். நாட்டுக்கும் ஏதாவது தொண்டு செய்த மாதிரி இருக்கும் எனச் சுயமாகத் தொழில் ஒன்றைத் தனது குடும்பச் சொத்து அனைத்தையும் விற்று ஆரம்பித்தார்.

திறமையும் அறிவும் மட்டும் ஒரு தொழில் நடத்தப் போதாது என அனைத்தையும் இழந்த பிறகு தெரிந்துகொண்டார். முடியெல்லாம் போன பின் சீப்பு கிடைத்து எனன பயன்? அவரால் வாழ்வில், பொருளாதாரத்தில் மீண்டும் எழவே முடியவில்லை.

எப்படியாவது படிப்பு முடிவதற்குள் வரும் காம்பஸ் இண்டர்வியுவில் தேர்வாகி விடவேண்டும் என்றுதான் என்னால் முடிந்த வரை கடுமையாகப் படித்தும் 75% மார்க் தாண்ட முடியவில்லை. பாடங்கள் கேட்பதெல்லாம் வறுமை வெல்ல மறந்து போகும்போலும். இளமையில் துன்பம் உலகில் கொடுமையிலும் கொடுமை என்பேன்!

நல்ல வேலை கிடைத்தால்தான் தன் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து விடுபடும். என் தங்கைக்கும் ஒரு சுமாரான திருமணமாவது செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

இதுவரை வந்த மூன்றும் கைநழுவிப் போனது. இதுதான் வரும் கடைசி வாய்ப்பு என்று அந்த இண்டர்வியுவுக்குப் போனேன். அதுவும் காலையில் கைநழுவிப் போனது. வருத்தத்துடன் வீட்டுக்கு வந்த நான், இப்போது இப்படி விபத்தில் மாட்டிக்கொண்டு படுத்திருக்கிறேன். எனக்கு வாழ்வே இருளாகத் தோன்றியது.

மாலையில் என்னைப் பார்க்க வந்த அப்பாவின் முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அத்தனை கருமை முகத்தில் படித்திருந்தது. துன்பத்திலேயே உழன்று, விடிவை எதிர்நோக்கி இருந்த அவரை எனக்கு நேர்ந்த விபத்து இடி எனத் தாக்கி, அவரின் மனத்தை மிகவும் பாதித்துவிட்டது, பார்க்கும் போதே தெரிந்தது.

போதாதற்கு, காலில் அவசியம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்களாம். அதற்கு ஐம்பது ஆயிரம் செலவாகும். ஆனால் பிறகும் கூட காலை விந்தி விந்திதான் நடக்க வேண்டி வரும் என்று கூறிவிட்டனராம். வாழ்வில் இத்தனை காலம் அனைத்துத் துன்பங்களையும் என்மேல் கொண்ட நம்பிக்கையினால் இதுவரை தாங்கி வந்தவருக்கு, இந்தச் சோதனை, தாங்க இயலாததாக ஆகிவிட்டது. அவர் உடலுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது என்ற பயம் எனக்கு உண்டாகிவிட்டது.

“அப்பா கவலைப்படாதீர்கள்” என்று அவருக்கு நானே தெம்பில்லாமல் ஆறுதல் கூறினேன்.

கா என்றும் சிந்தாமணி என்றும் சொல்லி எனக் கையில் அள்ளித்
தா என்று கேட்காத தரித்திரம் பின் நின்று தள்ளி எனைப்
போ என்று உரைக்கவும் நாணம் அங்கே என்னைப் போவதிங்கு
வா என்று இழுக்கவும் வந்தேன் விராலி மலைக் கந்தனே!

என்று எப்போதோ படித்த பாடலொன்று சோகப் பின்னணியில் இசைத்தது.

ஏன் மனிதர்கள் சிலரின் வாழ்வில் மட்டும் வறுமை இப்படி விளைவை ஏற்படுத்தி விடுகிறது என்று எண்ணும் போதே, கண்ணில் நீர் வடிய ஆரபித்துவிட்டது. ரோஜா மலர் போல் மணம் வீசவேண்டிய எனது இளமைப் பருவம், இப்படி வறுமை என்னும் சூட்டில் வெம்பிப் போய்விட்டதே, இளமையின் வறுமைத் துன்பம் சகிக்க இயலாதது. அதுவும் விடிவு வரப் போகிறது என்று எண்ணி இருக்கும் தருணத்தில் இப்படி ஆனதை என்னால் சகித்துக்கொள்ளவே இயலவில்லை.

இத்தனை நாள் கை கால்கள் நன்றாக இருந்தபோதே நல்ல வேலை கிடைக்கவில்லை. இனி எப்படி ஆகப் போகிறதோ? என்னை நம்பி இருக்கும் எனது குடும்பத்திற்கு என்னதான் விடிவு? என்ற எண்ணம் வேதனையாக என்னுள் ஊடுருவ ஆரம்பித்தது.

இறைவா, என்னை ஏழையாக மட்டும் படைத்திருக்கலாம். அல்லது அறிவாளியாக மட்டும் படைத்திருக்கலாம்! அறிவாளியாகவும் ஏழையாகவும் சேர்த்துப் படைத்து ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்?

என்ன செய்வது? நெஞ்சம் கலங்கியது. செய்வதறியாது பரிபூரண சரணாகதியில், இனி இழப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று ஏங்கி உறங்க ஆரம்பித்தேன்.

அடுத்து வந்த நாட்களில் எனக்கு ஆபரேசன் ஆனது. அப்பா எப்படியோ பணம் புரட்டிக் கட்டிவிட்டார். இன்னும் சில நாட்களில் கட்டுப் பிரிக்க இருக்கிறார்கள். தினமும் என் அம்மா வந்து பார்த்துக் கண்ணீர் விடுத்துச் செல்வார். முன்பே வத்தலும் தோலுமாக இருக்கும் அம்மா, இப்போது நடைப் பிணம் போல் களை இழந்து விட்டார்கள். என தங்கையின் முகத்தைப் பார்க்கவே எனக்கு இப்போதெல்லாம் தெம்பிருப்பதில்லை. கவலைகளைச் சுமந்தபடி நாட்கள் உருண்டோடின. நண்பர்கள் கும்பல் கும்பலாக வந்து போயினர்.

காம்பஸ் இன்டர்வியுவில் தேர்வானவர்கள் தங்கள் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு, சோகம் ததும்ப என்னைப் பார்த்து, “கவலைப் படாதே, கவலை படாதே” என்று தேற்றியவாறு சென்றனர்.

நானோ வாழ்வின் இறுதிக்கு வநது விட்டதாக உணர ஆரம்பித்தேன்.

காலில் குறையுடன் இனி எப்படி சாதாரண வேலைக் கூட கிடைக்கும் என நம்பிக்கை இழந்து, வாழ்வை முடித்துக்கொள்ளலாமா என்றுகூட ஏங்க ஆரபித்தேன்.

ஆனால் எனக்காக இத்தனை செலவு செய்த என் பெற்றோருக்கு நான் எப்படி உதவி செய்வது என்பது புரியவில்லை. என் மறைவு அவர்களை இன்னும் கொஞ்சம் சோகத்திலும் துக்கத்திலும் அல்லவா ஆழ்த்திவிடும் எனக்  குழம்பினேன்.

சரணாகதி! சரணாகதி! என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. தருவதற்கும் சரணாகதியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அன்னையே நீயே துணை! உன்னைத்தானே பார்க்கவந்தேன். எல்லாச் செயல்களுக்கும் பின்னே நீதானே இருக்கிறாய். சரணம் சரணம்! உன் அருள் இன்றி வேறு விடிவு ஏது? எனது மனத்திலும் ஆன்மாவிலும் இதயத்திலும் பிராணனிலும் உடலின் அத்தனை உயிரணுக்களிலும் சரணம் சரணம் என்னும் சொல்லே உணர்வாகத் துடித்துக்கொண்டிருந்தது.

அடுத்த இரண்டு நாளில் மருத்துவமனையை விட்டுப் போகவேண்டிய தருணம் வந்துவிட்டது.  எங்கே கடன் வாங்க முடியும் என்று அலைவதிலேயே என் அப்பா தனது அத்தனை சக்தியையும் செலவிட்டு வந்தார். அவரைப் பார்க்கவே எனக்குச் சக்தி இருப்பத்தில்லை. இப்போதெல்லாம் யார் முகத்தையும் நான் ஏறிட்டுப் பார்ப்பதில்லை.

அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது!

கும்பலாக ஓடி வந்தார்கள் என் கல்லூரி நண்பர்கள்.

“குமரா, நம் முதல்வர் உனது விபத்தைப் பற்றிச் சொல்லி, நீ கடைசியில் அட்டென்ட் செய்த கம்பனியில் உனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் வேலை வாங்கிவிட்டார்டா!” என்று குதித்துக்கொண்டு கூவினர்.

எனக்குத் திகைப்பு! இந்த வேலை வாங்கத்தான் கழுத்தைத் தவறாகத் திருப்பினேனா?

எப்படியோ நான் பணக்காரன் ஆகப் போகிறேன்!

===================================

படத்திற்கு நன்றி: http://www.freefoto.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நீங்களே சொல்லுங்க!

  1. சில நேரங்களில் சாபமே வரமாக மாறிவிடும் அற்புதம், தசரதன் காலத்திலிருந்து நடந்துகொண்டிருக்கிறது.

    இறைவன் சித்தம் யார் அறிவார்!

    நல்ல நடை. தொடர்ந்து எழுதுங்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *