கட்சி வேறுபாடில்லாதது ஊழலே

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalai

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த முதல் தேர்தலில் ஜனசங் கட்சிக்கு பாராளுமன்றத்தில் இரண்டே இரண்டு இடங்கள்தான் கிடைத்தன. 1977இல் பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் முதல் முதலாக காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. அப்போது மற்ற எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு இல்லாததால், பல எதிர்க் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஜனதா கட்சி என்று ஒரு கட்சியை உருவாக்கின. அப்படி ஏற்பட்ட ஜனதா கட்சியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒன்று, பின்னால் பி.ஜே.பி. என்று பெயர் மாற்றிக்கொண்ட ஜனசங். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரச் சட்டத்தால் பொதுமக்களுக்கு காங்கிரஸின் மேல் மிகுந்த கோபம் இருந்ததால் ஜனதா கட்சிக்கு வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சியின்மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால் பதவிக்கு வந்த ஜனதா கட்சி, மக்கள் கொடுத்த ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. தங்களுக்குள் ஒற்றுமையாகச் செயல்பட அவர்களால் முடியவில்லை. பதவிக்கு வந்து முன்றே வருஷங்களுக்குள் அக்கட்சிகளுக்குள் ஏற்பட்ட சண்டை முற்றி அவர்கள் அரசு முறிந்தது. ஒரு பதவிக்காலம் கூட ஆள முடியாத ஜனதாக் கட்சியை மக்கள் உதறிவிட்டு மறுபடி காங்கிரஸுக்கே வாக்களித்தனர்.

ஜனதா கட்சி உடைந்து அதை உருவாக்கிய பல கட்சிகள் தனித் தனியாகச் செயல்படத் தொடங்கிய போது, மக்களிடையே ஆதரவு வேண்டுமானால் ஜனசங் என்ற தன் பெயரை மாற்றியாக வேண்டும் என்று நினைத்து பாரதீய ஜனதா கட்சி என்று மாற்றம் செய்தது. இப்படிப் பெயர் மாற்றம் செய்துகொண்ட போதிலும் பி.ஜே.பி. தன் வலதுசாரிக் கொள்கைகளிலிருந்து மாறவில்லை. இந்து மதமும் இந்தி மொழியுமே இந்தியா என்ற கொள்கையைக் கொணட இந்தக் கட்சிக்கு வட மாநிலங்களில்தான் செல்வாக்கு இருந்தது. திராவிடக் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உருவான திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால் பி.ஜே.பி.யின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளரவேயில்லை. தேர்தலின் போது திராவிடக் கட்சிகள் குறுகிய, சுயநல அடிப்படையில் பி.ஜே.பி.யோடு தேர்தல் உடன்பாடுகள் வைத்துக்கொண்டன. அவ்வளவே.

தங்கள் கட்சி, ஊழலை அறவே ஒழித்துவிடும் என்றும் தங்கள் கட்சியில் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்றும் தங்கள் கட்சி ஒரு வித்தியாசமான கட்சி (party with a difference) என்றும் பி.ஜே.பி.யின் தலைவர்கள் தங்கள் கட்சியைப் பற்றிப் பறைசாற்றிக்கொண்டனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசியவாதிகளால் தொடங்கப்பெற்ற காங்கிரஸ், போகப் போக வலுவிழக்கத் தொடங்கியது. ஆங்காங்கே மாநிலக் கட்சிகள் தோன்றத் தொடங்கின. இவை மாநில ஆட்சியைக் கைப்பற்றின. பி.ஜே.பி.யும் பலம் பெறத் தொடங்கி சில மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. தொண்ணூறுகளில் மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தியாவை இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை உள்ள நாடாக மாற்ற முயன்றது. பி.ஜே.பி.யின் ஒரு ஆதர்சமான ஆர்.எஸ்.எஸ். தன் வகுப்புவாதக் கொள்கைகளை அரசின் மூலம் மக்களிடையே திணிக்க முயன்றது.  இந்தியாவை உலக அரங்கில் ஒரு இந்துமத நாடாகக் காட்ட விரும்பியது. இதையெல்லாம் விரும்பாத மக்கள் பி.ஜே.பி.யைப் பதவியிலிருந்து விலக்கினர்.

சுதந்திரத்திற்காகப் போராட ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ், சுதந்திரத்திற்குப் பிறகு பல காலம் ஒரே முதன்மைக் கட்சியாக விளங்கியது. எழுபதுகளுக்குப் பிறகு பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் பலம்பெற்ற பின், காங்கிரஸ் மத்தியிலும் மாநிலங்களிலும் இத்தகைய கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சில மாநிலங்களில் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்த பி.ஜே.பி.யின் மீது காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த அதிருப்தியால் மக்களுக்கு நாடளவில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் பி.ஜே.பி. ஆட்சி நடத்தும் இரண்டு மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கர்நாடகத்தில் பி.ஜே.பி. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் லோக்அயுக்தாவின் தலைவர் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக இரும்புத் தாது எடுக்கப்படுவதாகவும் தேவையான அரசு அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அதை விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்த அதிகாரியை அரசே தற்காலிக வேலைநீக்கம் செய்ததாகவும் ஊழலை ஒழிக்கத் தான் செய்யும் காரியங்களுக்கு அரசு ஆதரவு தரவில்லை என்றும் குற்றம் கூறி, பதவியை விட்டு விலகினார். ஆட்சி நடத்தி வரும் பி.ஜே.பி., கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, இரும்புத் தாது ஊழலில் முக்கியப் பங்கு வகித்தாக லோக்அயுக்தவினால் குற்றம் சாட்டப்பட்ட தன் சக மந்திரிகள் இருவரைக் கர்நாடக முதல்வர் தீவிரமாக ஆதரித்து வந்தார். நிலைமை சற்று சூடாகியதும் பி.ஜே.பி.யின் மேலிடம் தலையிட்டு லோக்அயுக்தாவின் தலைவரின் பதவி விலகலைத் திரும்பப் பெறச் செய்தனர். இன்னும் இந்த விவகாரம் முடியவில்லை. இரும்புத் தாது ஊழல் பற்றிய முழு விபரங்களையும் சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும் என்று கர்நாடகத்தில் முதன்மை எதிர்க் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் வாதாடிக்கொண்டிருக்கிறது. ஜூலை 25 முதல் அதற்காகப் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யோ சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை, மாநில அளவில் புலன் விசாரணை நடத்தினாலே போதும் என்று வாதாடி வருகிறது.

சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் ஆளும் கட்சி பயப்பட வேண்டும் என்று புரியவில்லை. யார் விசாரணை நடத்தினால் என்ன? மாநில அளவில் விசாரணை நடந்தால் அரசின் தலையீடு இருக்கும் என்பதற்காகத்தானே நாடளவில் செயல்படும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கேட்கின்றன. சி.பி.ஐ. விசாரணையில் உண்மையின் முழு சொரூபம் வந்துவிடும் என்று பயப்படுகிறதோ?

குஜராத்தில் நடந்து வரும் பி.ஜே.பி. ஆட்சியில் இன்னொரு வகையான அராஜகம். ராஜஸ்தானில் உள்ள பி.ஜே.பி. ஆதரவாளர்களான பெரிய பெரிய பளிங்குக் கல் (marble) வியாபாரிகளைப் பயமுறுத்திப் பணம் சேகரித்த, குஜராத்தைச் சேர்ந்த ஷோரப்புதின் (Sohrabuddin) என்பவரைத் தீர்த்துக் கட்டும்படி ராஜஸ்தானின் பி.ஜே.பி. கட்சித் தலைவர்களிடமிருந்து வந்த ஆணையைப் பின்பற்றி, குஜராத் மாநிலத் துணை அமைச்சர் அமித் ஷா (இவர் உள்துறையைச் சேர்ந்த சிறைகளின் கண்காணிப்பாளர்) ஷோரப்புதினைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களில் முதல் எதிரியாக சி.பி.ஐ.யால் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். தான் எந்த விதக் குற்றமும் செய்யவில்ல என்று ஷாவும், அவர் மீது எந்தத் தவறும் இல்லை, அவர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட மாட்டார் என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும் கூறியிருக்கிறார்கள்.

மாதவபுர் வங்கியை 1030 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பரேக் என்பவரை அக்குற்றத்திலிருந்து தப்பிக்க வைக்க அமித் ஷா 2.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று குஜராத் புலனாய்வுத் துறை அறிக்கை சமர்ப்பித்த போது இதே மோடிதான் கடந்த ஐந்து வருஷங்களாக அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறார். அந்த அறிக்கையைச் சமர்ப்பித்த அதிகாரியையும் அந்தப் பதவியிலிருந்து முக்கியமல்லாத ஒரு பதவிக்கு மாற்றினார். இந்த ஊழலால் அந்த வங்கி செயலற்றுப் போனதுமல்லாமல் அதில் முதலிட்டிருந்த 75 சிறு கூட்டுறவு வங்கிகளும் அடைபட்டுப் போய், பலர் தங்கள் பணத்தை இழந்திருக்கிறார்கள். வங்கியைக் கோடிக்கணக்கில் ஏமாற்றிய பரேக், எந்தவிதத் தண்டனையும் இல்லாமல் சிறைக்கு வெளியே உலவிக்கொண்டிருக்கிறார்.

இப்போது ஷோரப்புதின் கொலை வழக்கில் தன்னைக் குற்றம் சாட்டி சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தி வரும் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், குஜராத் மாநில முதலமைச்சர் மோடியின் புகழைக் குறைக்கவே இந்த ஏற்பாட்டைச் செய்துவருகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.  உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு ஜனவரியிலேயே உத்தரவிட்டுவிட்டதாகவும் இன்று வரை பி.ஜே.பி. தலைவர்கள், அதன் வழக்கறிஞர் அருண் ஜேட்லி உட்பட ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை என்றும் கேட்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சி.பி.ஐ. தங்கள் முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு அமித் ஷா சி.பி.ஐ. முன் ஆஜராகியிருக்கிறார். உள்துறை அமைச்சராக இருந்த ஒருவருக்கு இப்படித் தலைமறையாகிவிடுவது சட்டப்படி குற்றம் என்று தெரியாதா? அமித் ஷாவைச் சிறையில் அடைத்ததும் சி.பி.ஐ.யை எதிர்த்து பி.ஜே.பி. கட்சித் தொண்டர்கள் அகமதாபாத்தில் ஒரு மௌன ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சில பெரிய நகரங்களிலும் இம்மாதிரி ஊர்வலங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். எப்படிப்பட்ட ஜனநாயகம் இந்திய ஜனநாயகம்!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் இந்த அளவிற்காவது பி.ஜே.பி. தலைவர்கள் செய்யும் அட்டகாசங்கள் வெளியே வந்திருக்கின்றன. அங்கும் பி.ஜே.பி. ஆட்சி நடந்து வந்தால் என்ன ஆகியிருக்கும்?

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகத் தன் வாழ்க்கையையே பலி கொடுத்த காந்திஜி பிறந்த குஜராத் மாநிலத்தில் இந்து மத வெறியர்களைத் தூண்டிவிட்டு எத்தனையோ முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருக்க, எப்படி மோடி போன்றவர்களுக்குச் சாத்தியமாகிறது?

காங்கிரஸில் ஊழல் மலிந்ததை எதிர்க்க ஏற்பட்ட பி.ஜே.பி. என்னும் அரசியல் கட்சித் தலைவர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால் அரசியல் என்று வந்துவிட்டாலே ஊழல் புரிவதிலோ, அக்கிரமங்கள் புரிவதிலோ எந்தக் கட்சியும் எந்தக் கட்சிக்கும் சளைத்ததில்லை என்பது புலனாகிறது.  அரசியல் என்ற சாக்கடையில் இறங்கிவிட்டால் எல்லாக் கட்சிகளும் இப்படித்தான் செயல்படுவார்கள் போலும். ஒரு வித்தியசமான கட்சி என்று தம்பட்டம் அடித்துகொண்டு களத்தில் இறங்கிய கட்சி, இந்தக் குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாம் ஒன்றுதான் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

பாரதத் தாயே, என்று நீ நிமிர்ந்து நிற்கப் போகிறாய்? உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.