ராகவன் தம்பி

மலைமுழுங்கி என்பது அவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் அல்ல. அவர் செய்து வருகின்ற காரியங்களை முன்வைத்த காரணப் பெயரும் அல்ல.  யாரும் அவரை அப்படிக் கூப்பிடாத போது அவரே தன்னைப் பற்றி ஜம்பம் அடித்துக்கொள்ளவும் சாதுவான ஆட்களைக் கொஞ்சம் மிரட்டி வைக்கும் நோக்கத்துடன் “என்னை என்னன்னு நெனச்சிக்கிட்டே? எல்லோரும் என்னை எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா? ஜாக்கிரதையா இருந்துக்கோ”

இப்படியாகத் தனக்குத்தானே பட்டப் பெயர் கொடுத்துக்கொண்டு ஊரில் தோளை நிமிர்த்தி உலா வரப்போக, அதுவே அவருடைய பட்டப் பெயர், காரணப் பெயர் என்ற கட்டங்களைத் தாண்டி மலைமுழுங்கி என்று காலப்போக்கில் அதுவே அவருக்கு நிஜப் பெயராகவே மாறிவிட்டது.

மாதவன் என்கிற மலைமுழுங்கியின் பெற்றோர் வைத்த பெயரை நாளடைவில் பலரும் மறந்து போகத் தொடங்கினார்கள்.

ஊரில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் யாருடைய அனுமதியும் இல்லாமல் தன்னுடைய பெயரை வெட்கமில்லாத வகையில் எப்படியாவது உள்ளே செருகிக்கொள்வார். யாரோ செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஒரு வகையான பொய்மை பொங்கி வழியும். போலியான பெருமையை வலியத் தேடிக்கொள்வதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது.

வாயைத் திறந்தால் சாப்பிடுவதற்கும் பொய் சொல்வதற்கும் தவிர வேறு எதற்காகவும் இருக்கக் கூடாது என்று யாருடைய தலைமீதோ அடித்து சத்தியம் செய்து கொடுத்தது போல அமைந்திருக்கும் மலைமுழுங்கியின் சவடால் கலந்த சொல்விளையாட்டுகள்.

“நேத்து காமராஜர் சிலைக்கு மாலைபோட்டு வந்தோம். பெருந்தலைவர் பிறந்த நாள் பாருங்க”

என்று யாராவது மலைமுழுங்கியை வைத்துக்கொண்டு சொல்லித் தப்பிக்க முடியாது.

“அந்தச் சிலையை அங்கே வச்சது யார்னு உனக்குத் தெரியுமோ? உயிரைப் பணயம் வச்சு தலைவரோட சிலையை அங்கே வச்ச என்னைத் தள்ளி வச்சிட்டு, கண்டவனையும் விட்டு மாலை போட வைக்கிறாங்க. அந்தச் சிலையை அங்கே வைக்கிறதுக்கு அந்தக் காலத்துலேயே லட்சக்கணக்கில் செலவு செய்தவன் நான்” என்று அவருடைய சவடால் கலந்த பொய்கள் அவருடைய ஜிப்பா பாக்கெட்டுகளில் இருந்து கசிந்து வழியும்.

இதைப் பக்கத்தில் இருந்து கேட்கும் நபருக்கும் மலைவிழுங்கி பீலாதான் விடுகிறார் என்பது நன்கு தெரிந்து இருந்தும் அதை மறுத்துப் பேசும் தைரியம் இல்லாமல் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

மலைமுழுங்கியின் மகாத்மியம் தெரிந்த யாரும் அவரை எந்த இடத்திலும் நிறுத்த முடியாது. அப்படி அவரை நிறுத்தி ஏதாவது கேள்விகள் கேட்டுவிட்டால் அடுத்த நாளில் இருந்து கேள்வி கேட்ட நபர் பற்றிய சேறு பூசப்பட்ட அவதூறுகளை வீடுவீடாகத் தேடித் தேடி வீசத் தொடங்கி விடுவார்.

எதற்கு மலத்தின் மேல் கல் எறிய வேண்டும் என்ற தயக்கத்தில் அனைவரும் தாங்கிக்கொள்ளும் இவருடைய பொய்களை ஒரு கட்டத்தில் உண்மை என்று மலைமுழுங்கியே நம்பத் தொடங்கி விடுவார்.

தமிழ் மன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது வெளியூர்ப் பிரமுகர்கள் யாராவது வந்துவிட்டால் மலைமுழுங்கியின் உற்சாகத்துக்கு அளவே இருக்காது. உள்ளூர் பிரலாபங்கள் தெரியாத அந்தப் பிரபலங்களிடம் மலைமுழுங்கி அளந்து விடும் சரடுகள், மைல் கணக்கில் நீளும்.

“இந்த மன்றம் இப்போ நிக்கற கட்டடத்தைக் கட்டுறதுக்குக் கடன் ஏற்பாடு செஞ்சு குடுத்தவனே நான்தான். நான் வேலை பார்த்த வங்கியிலே எக்காரணத்தைக் கொண்டும் இந்த மூஞ்சிகளுக்குத் தரமாட்டேன்னு சொன்னாங்க. பொண்டாட்டியோட நகைகளைக் கொண்டு போய் மேனேஜர் முகத்துலே வீசி எறிஞ்சி, கடனுக்கு ஏற்பாடு செஞ்சேன். இன்னிக்கு தகுதியே இல்லாத எவனோ தலைவனா இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கான்” என்று தொடங்குவார் மலைமுழுங்கி.

தமிழ் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களே அவருடைய பொய்களை வேறு வழியின்றி வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்தத் தமிழ் மன்றத்தில் சாதாரணச் செயற்குழு உறுப்பினராகக் கூட தேர்வு செய்யப்படாமல் தேர்தலில் நிற்கும்போதெல்லாம் ஒரு கை விரல்களுக்குள் அடங்கும் வாக்குகளை மட்டுமே அவர் வாங்கும் வெளிப்படையான ரகசியத்தை எந்தப் பிரபலத்திடமும் சொல்ல யாருக்கும் அங்கே தைரியம் இருக்காது.

மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அல்லது அரசியல் தலைவர்கள் யாராவது தமிழ் மன்றத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு செய்திருந்தால் மலைமுழுங்கியும் உடனடியாக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார். காதி பவனுக்கு சென்று விசித்திரமான வண்ணங்களில் ஜிப்பாக்களை உடனடியாக வாங்கி மாட்டிக்கொள்வார். எதிரில் வருபவர்களை வம்படியாக நிறுத்தி வைத்து இப்படிப் பேசுவார்.

“இந்தத் தமிழ் மன்றத்தில் நியாயத்தை நிலைநாட்டாமல் விட மாட்டேன். தேர்தலில் ஜெயித்து எல்லாரையும் ஓட ஓட விரட்டலைன்னா நான் மலைமுழுங்கியாடா? தலைவருக்கு நிக்கிற அந்த ஆள் நிறுத்தாம போன் பண்ணிக்கிட்டே இருந்தான். நான் மூணு நாளா எடுக்கலை.  இன்னிக்கு போனா போகட்டும்னு எடுத்தா தயவு செய்து உன்னோட மனுவை வாபஸ் வாங்கிக்கிட்டு என்னை ஒரு தடவையாவது தலைவராக விடணும்னு கெஞ்சறான். தான் வகிக்கிற பதவிக்குக் கூட மரியாதை இல்லை அவனுக்கு. இங்கே தலைவனா வந்து என்ன பண்ணப் போறான்?’’

அன்று மாலையே அந்தப் பிரமுகரைத் தனியாகச் சந்தித்து, அவருடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, இந்தத் தமிழ் மன்றத்துலே ஊழலை ஒழிக்கணும்னு தான் நான் வேட்பு மனு தாக்கல் செஞ்சேன். எனக்கு இங்கே தலைவர் ஆகணும்னு ஆர்வம் ஒண்ணும் கிடையாது. எனக்கு என்னோட அமைப்பு இருக்கு. நாப்பது வருசமா நடத்தி வர்றேன். தர்ம தேவனான நீங்களே நிக்கறதனாலே உங்களுக்கு ஆதரவு குடுத்து நான் வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று பில்டப் கொடுத்துக்கொள்வார்.

அந்தப் பிரமுகருக்கும் மலைமுழுங்கியின் மகாத்மியம் கண்டிப்பாகத் தெரிந்து இருக்கும். ஒரு கேலி கலந்த புன்சிரிப்புடன் நன்றி சொல்லி அவரை வழியனுப்பி வைப்பார்.

மலைமுழுங்கி வெளியில் வந்ததும் நேராகப் பலரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு “அந்த ஆளு என்னைப் பிச்சைக்காரத்தனமா கெஞ்சினான்யா. போய்த் தொலையட்டும்னு நான்தான் வாபஸ் வாங்கிட்டேன்” என்பார்.

அதே நேரத்தில் இன்னொரு அணியில் நிற்பவர்களையும் மறக்காமல் தேடிக்கொண்டு போவார். “இதோ பாரு. நீதான் மதிப்புக் கொடுத்து என்னைத் தலைவரா நிக்கறயான்னு கேக்கலை. இப்போ உங்களுக்காகத்தான் நான் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று சொல்வார்.

ஒவ்வொரு முறையும் தமிழ் மன்றத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் அவருடைய அலம்பல்களுக்கு அளவே இருக்காது. புதிதாக முதன்முறையாக அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்க்கிறவர்களுக்கு அவர் ஏதோ நியாயத்தை நிலைநாட்ட அவதரித்த நாடோடி மன்னன் எம்ஜியாராகவே காட்சியளிப்பார்.

இவரைக் கண்டு வாயைப் பிளக்கும் புதிய அப்பாவிகள் யாருக்கும் மலைமுழுங்கி சொந்தமாக ஒரு அமைப்பை வைத்து இருப்பதும் அந்த அமைப்புக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தேர்தலையும் நடத்தாததும் அந்த அமைப்பின் கணக்கு வழக்குகளை யாரிடமும் காட்டாமல் டகால்டி வேலைகள் செய்து வருவதும் யாருக்கும் கேட்கத் தோன்றாது.

தன்னுடைய அமைப்பையும் தன்னையும் எதிர்த்து யாரும் கேள்விகள் கேட்க இயலாத வண்ணம் மிகப் பெரிய அதிகாரப் பொறுப்பில் இருக்கும் அப்பாவி அதிகாரி யாரையாவது தலைவராக்கி, அவருடைய பெயரைச் சொல்லி அடுத்தவர்களை மிரட்டி வாயடைத்து வைப்பார்.

மலைமுழுங்கி பொறுப்பில் இருக்கும் அமைப்புக்கு தன்னுடைய சவடாலையும் தலைமைப் பொறுப்பில் இருந்த அப்பாவி அதிகாரிகளின் செல்வாக்கையும் வைத்து, நகரின் பிரதானமான இடத்தில் கட்டடம் கட்ட இடம் வாங்கி இருபத்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அப்படியே போட்டு வைத்து இருப்பதையும் அந்தக் கூட்டத்தில் யாருக்கும் கேட்கத் தெயாது. அந்த இடத்தில் சாதுரியமாக தனக்கும் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள மலைவிழுங்கி சமயம் பார்த்துக் காத்திருப்பதையும் யாரும் கேட்க முடியாத வண்ணம் அமைந்த தன்னுடைய அதிருஷ்டத்தில் காலத்தை ஓட்டி வருகின்றவர் என்பது அந்தத் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அவரைத் திருப்பிக் கேள்வி கேட்க பயந்து, அவர் காட்டும் எல்லா உதார்களையும் யாருக்கும் தெரியாத ஒரு காரணத்துக்காக அந்தப் பொறுப்பாளர்கள் பொறுத்துக்கொண்டிருப்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தன.

இத்தனை வீரதீரப் பிரதாபங்கள் நிறைந்த மலைமுழுங்கி, ஒருநாள் சர்வநாடியும் ஒடுங்கி மிகவும் பவ்யமாக நின்றுகொண்டிருந்தார். அவர் குடும்ப சமேதராகத் தங்கியிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குப் பின்புறமாக உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கியிருக்கும் ஆட்டோ டிரைவர் தாமோதரன், ஏதோ சாமி வந்தது போல ஆடிக்கொண்டு இருந்தான். சுற்றி ஒரு சிறிய கூட்டம் நின்றுகொண்டிருந்தது.

“ஓத்தா, உன்னோட யோக்கியதையை நான் எல்லோருக்கும் சொல்லணுமா? இங்கே இந்த எம்.பி.க்கு என்னென்ன சப்ளை செய்யறேன்னு ஊருக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்காதே. பாவம் அந்த அப்பாவி சலவைப் பொட்டிக்காரனுக்கு விஷயம் தெரியாது. போட்டுக் குடுத்தேன்னா உன்னைச் செவத்தோட வச்சுத் தேய்ச்சுடுவான் தெரிஞ்சிக்கோ’’

வழக்கமாக எப்போதுமே மலைவிழுங்கி பேச மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மற்றவர்களை வைத்து இருப்பார்.  அன்று தாமோதரன் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தான். அவரை நகர விடாமல் நிறுத்தி ஏசிக்கொண்டு இருந்தான். மலைமுழுங்கி அமானுஷ்யமான புன்னகையுடன் கஷ்டப்பட்டு தன்னுடைய கைநடுக்கத்தை மறைத்துக்கொண்டு நின்றிருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த ஓருவர் நல்ல வேளையாக வெளியூர்க்காரர்கள். அதிகமாக உள்ளூர் ஆட்கள் சேருவதற்கு  முன்பு இவனை அங்கிருந்து விரட்டவேண்டும்.

வழக்கமான அஸ்திரத்தைக் கையில் எடுத்தார்.

“இதோ பாரு தாமோதரா. நாம உக்காந்து பேசணும். அந்த மயிராண்டி உனக்கு தப்பா போட்டுக் குடுத்து இருக்கான். அவனுடைய யோக்கியதை உனக்குத் தெயாது. அவன் ஆபீஸ்லே என்ன நடந்தது தெரியுமா? எல்லார் கிட்டயும் பேங்கிலேருந்து விஆர்எஸ் வாங்கினதா கதை விடுறான். ஆனா அவன் மேலே கரப்ஷன் சார்ஜ் போட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க தெரியுமோ. அவனும் நீயும் சண்டை போட்டுக்கக் கூடாதுன்னுதான் நான் உங்க ரெண்டு பேர் நடுவிலே இத்தனை லோல் படறேன்.’’

“மயிரு… ஏன்யா பொய் சொல்றே. அருணாச்சலம் தன்னோட ஆபீஸ் பேப்பர் எல்லாத்தையும் கையிலே வச்சிக்கிட்டு உன்னைச் செருப்பாலே அடிக்கத் தேடிக்கிட்டு இருக்கான். ஊர்லே நாலு பேரை வச்சிக்கிட்டு உன்னைச் செருப்பாலே அடிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான். நான் என் பேச்சை எடுத்தா அவன் பேச்சை எதுக்குய்யா எடுக்கறே? என்னைப் பத்தி எம்.பி. கிட்டே என்ன போட்டுக் குடுத்தே? என்னோட பொண்ணுக்கு பரீட்சை இருக்கு தெயுமா? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு அந்த எம்.பி. நாளைக்கு என்னை வீட்டைக் காலி பண்ணச் சொல்றான். அருணாச்சலம் கதையை அப்புறம் வச்சுக்கலாம். உன் கதையை இப்போ பேசலாம். நான் இப்போ உன்னை இங்கேயே நிறுத்தி வச்சு செருப்பால அடிச்சா என்ன செய்வே”

உண்மையில் பயந்துவிட்டார் மலைமுழுங்கி. இவன் முட்டாள். அதிகம் படிக்காதவன். லேசாகக் குடித்தும் இருக்கிறான். அடித்தாலும் அடித்துவிடுவான். எதற்கும் கொஞ்சம் மிரட்டிப் பார்க்கலாம் என்று முயன்றார். “இதப் பார்றா, ஏன்டா இப்படி கெட்டு அலையறே? உன் பொண்டாட்டிதான் என்கிட்டே கண்ணீர் விட்டு அளுதா. மாமா, அவரை இங்கேருந்து அளைச்சுக்கிட்டுப் போயிடணும். சகவாச தோஷத்துலே தினமும் குடிச்சிட்டு வர்றார்னு. அந்த கல்காஜி மாமியோட நீ அலையறதும் அவளுக்குத் தெஞ்சிருக்கு. அந்த அருணாச்சலம்தான் அவகிட்டே போட்டுக் குடுத்திருக்கான். ஒருநா உன்னையும் அந்த மாமியையும் சேர்த்து வச்சு பப்ளிக்லே தொடப்பக் கட்டையாலே வெளுக்கறேன்னு சொன்னா.  நான்தான் உன் பொண்டாட்டி கால்லே விழுந்து அவளை அடக்கி வச்சிருக்கேன். நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணாகி ஒம்பொண்டாட்டி   தகராறு பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே கௌம்பினா, ஒம் பொண்ணோட படிப்பு என்னடா ஆகறது? ஏன்டா இப்படி நிர்மூடனா இருக்கே கொரங்குக் கம்மனாட்டி..” என்று உருக்கத்துடன் கரையத் தொடங்கினார்.

அஸ்திரம் லேசாக வேலை செய்கிற மாதி இருந்தது. கொஞ்சம் சுருதி இறங்கினான் தாமோதரன். “இதோ பாரு சாமி. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லே. என் பொண்ணுக்கு பரீட்சை முடியட்டும்யா. நானே காலி பண்ணிட்டு போயிடறேன்.”

மலைமுழுங்கி மீண்டும் உல்டா கியர் போடத் தொடங்கினார்.

“தாமோதரா, நீ அந்த அருணாச்சலம் கம்மனாட்டி பேச்சைக் கேட்டு ஆடினேன்னு எனக்குத் தெரியும். அவனுக்கு பேங்குலே வேலை வாங்கிக் குடுத்ததே நான்தான். அந்த நாய் என்னை இங்கிருந்து கிளப்பப் பாக்குது. நீ அவனை என்னோட காது குளிர என்னைத் திட்டின மாதிரி அவனைத்  திட்டணும். அப்போதான் நான் எம்.பி. சார் கிட்டே பேசி அட்ஜஸ்ட் செய்ய முடியும். அந்தக் கல்காஜி மாமி விவகாரத்துலே இருந்து உன்னைக் காப்பாத்தற பொறுப்பு எனக்கு இருக்குடா மசுராண்டி”

அப்போது மலைமுழுங்கி கீழே இறங்கின மாதிரி தெரிந்தாலும் அவருடைய கடமையை அவர் சரியாகத்தான் செய்து முடித்திருந்தார். எத்தனை மன்றாடிப் பார்த்தும் தாமோதரனுக்கு இரண்டாம் நாளே அந்த எம்.பி.யின் ஊழியர் குடியிருப்பில் இருந்து வீட்டைக் காலி செய்து எங்கோ காஜியாபாத் தள்ளி இருக்கும் அவனுடைய சொந்த வீட்டுக்குக் குடிபெயர வேண்டிப் போனது.

அவனுடைய மனைவியும் கோபித்துக்கொண்டு பரீட்சையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மகளையும் இழுத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டாள்.

தாடியை வளர்த்துக்கொண்டு இன்னும் அதிகமாகக் குடித்து அலைந்துகொண்டிருந்தான் தாமோதரன்.

அருணாச்சலம் அவனுக்குப் பயந்து தலைமறைவாக மறைந்து திரிந்து கொண்டிருந்தான். ஆனால் தாமோதரன், அருணாசலத்தை விட்டு மலைமுழுங்கியை முன்னுக்கு இன்னும் அதிகமாகத் திட்டிக்கொண்டு திரிந்தான்.

மலைமுழுங்கியின் பல ரகசியங்கள், தாமோதரன் வழியாக வெஸ்ட் அவென்யூ சந்துபொந்துகளில் எல்லாம் கசியத் தொடங்கின. மலைமுழுங்கி தொடர்பான ரகசியங்களின் இலவச இணைப்பாக அவரைத் தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்த எம்.பி.யின் வில்லங்கமான ரகசியங்களும் வெளிவரத் தொடங்கின.

வாரப் பத்திகை மற்றும் தினசரிகளின் கழுகுகளுக்கும் ஆந்தைகளுக்கும் முந்திரிப் பருப்பைக் கொறித்துக்கொண்டே அந்த எம்.பி. தொடர்பான அனைத்து ரகசியங்களைப் பரிமாறிக்கொண்டன. செய்தி ஊடகங்களின் ஷர்மாக்களும் தேசாய்களும் கன்னாட் பிளேஸ் போய் புதிய கோட்டு சூட்டை வாங்கிக்கொண்டு அந்த எம்.பி.யின் வில்லங்கங்களை அக்கு வேறு ஆணிவேறாக டிவியில் அலசிப் பிழிந்து காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்குத் தொடர்ச்சியாக அவர்களுக்கு விஷயம் கிடைத்தது.

ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அந்தக் குட்டிக் கட்சியை சேர்ந்த எம்.பி.க்குத் தலைமை பலத்த எச்சரிக்கைகளை அனுப்பியது.

தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்த எமதர்மராஜனின் நிலைக்குத் தள்ளப்பட்டார் எம்.பி. மலைமுழுங்கி இதில் எல்லாம் பாதிக்கப்படாதவராக முன்னைக்கு அதிகமாக கலர் கலரான கதர் ஜிப்பாக்களை அணிந்துகொண்டு டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் இன்னும் அதிக வீரியமுள்ள பீலாக்களுடன் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தார்.

“அந்த தாமோதரன் பெரிய கிரிமினல் சார். அவனுக்கு எத்தனையோ சொல்லிப் பாத்தேன். கேக்கற மாதி இல்லை. என் கிட்டேயே மோதினான்.  நான் யாரு? மலைமுழுங்கி. இப்போ பாருங்க தெருத்தெருவா அலையறான். பாவம். அவனுக்கு நான்தான் ஏதாவது செய்யணும்” என்று வெஸ்ட் அவென்யூ முழுக்க சொல்லிக்கொண்டு திரிந்தார்.

அவரை எதிர்த்துப் பேசவோ, கேள்விகள் கேட்கவோ திராணியற்று, சத்தமின்றி சபித்துக்கொண்டு அலைந்தார்கள் வெஸ்ட் அவென்யூவின் ஜீவராசிகள்.

வெஸ்ட் அவென்யூவில் தங்கியிருந்தபோது பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு அல்வாத் துண்டுகள் போலக் கிசுகிசுக்களை விநியோகித்து வந்தான் தாமோதரன். பத்திரிகை ஆட்கள் மலைமுழுங்கியை விட்டு அவரைச் சுற்றியிருந்த செய்திகளில் அவருக்கு இடம் தந்த எம்.பி.யைத் தொடர்புபடுத்தி கிசுகிசுத் தீயை தங்கள் பத்திகைகளில் கொழுந்து விட்டு எரிய வைத்தார்கள்.

ஊடகங்கள் மற்றும் செய்தி இதழ்களின் கிசுகிசுப்பின் ஓலம் தாங்காது, அந்தக் குட்டிக் கட்சி தங்கள் எம்.பி.யைப் பலியாடு ஆக்கி மந்திரி சபையில் தொங்கிக்கொண்டு இருந்த இரண்டு இணை அமைச்சர் பதவிகளைத் தக்க வைத்துக்கொண்டார்கள். அந்த எம்.பி.யும் சத்தம் காட்டாது உத்தரபிரதேசத்தின் சிறிய கிராமத்தில் மீண்டும் தன்னுடைய செல்லமான எருமைகளை இன்னும் போஷாக்குடன் வளர்க்கக் கிளம்பினார்.

“அந்த எம்.பி.க்கு நான் எத்தனையோ புத்தி சொன்னேம்பா. கேட்ட மாட்டேன்னுட்டுது சனியன். இப்போ அனுபவிக்குது. அந்த தாமோதரன் நாய் பேச்சைக் கேட்டு என்னை அங்கிருந்து காலி பண்ணப் பார்த்தது. நான் விடுவேனா? சமயம் பாத்து பிரைம் மினிஸ்டர் கிட்டே இதோட வண்டவாளங்களை இழுத்து விட்டேன். நான் யாரு? மலைமுழுங்கி”

அதே வெஸ்ட் அவென்யூவின் வேறொரு எம்.பி.யின் வீட்டை நடு நாயகமாக ஆக்கிரமித்துக்கொண்டு தன்னைக் காண வந்த அப்பாவிகளிடம் வழக்கமான சரடுவிட்டுக் கொண்டிருந்தார் மலைமுழுங்கி. அவருடைய பத்தாயிரம் சரவெடிக்கு ஈடான பீலாக்களை நடுமுதுகுத் தண்டு சிலிர்க்க கேட்டுக்கொண்டிருந்தார்கள் அந்த அப்பாவிகள்.

அந்த இன்னொரு எம்.பி.யின் ஊழியர் குடியிருப்பில் இன்னொரு தாமோதரன் தன்னுடைய குடும்பத்தின் வருங்கால நிலையை அறியாது மலைமுழுங்கியை மரியாதை நிமித்தம் சந்திக்க ஆயத்தமாகிக்கொண்டு இருந்தான்.

*************************

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “மலைமுழுங்கி

  1. yaru andha malaimulungi? Kadhai ya delhi il nadukum nijama? oru malaimulungi thana? neeraiya neeraiya irukangha.

  2. யதார்த்தா பெயரிலே மட்டும் இல்லை. கதையிலும். அதுவும் இன்றைய அரசியலை அப்படியே பிரதிபலிக்கிறது. நல்ல கதைக்கு நன்றி.

  3. It appears that it is the narration of a true incident that must have taken place in the North Avenue of the capital city of Delhi in short story style. One cannot deny the facts that were set out in the said story.

  4. Indha kadhai oru unmai kadhai pol irundhadhu..ungal eluthe thiran nandraga ulladh..It was very interesting till the end..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.