பால் நிலா
– ராமலக்ஷ்மி
மொட்டு அது தானாகக்
கட்டவிழும் முன்னே
பட்டுடுத்தி அலங்கரித்துப்
பாதந்தனைப் பற்றியெடுத்து
அம்மிமேல் வைத்தழுத்தி
அருந்ததியைப் பார்க்கவைத்து
கட்டிவைக்கிறார் அவசரமாய்
கடமையை முடித்திட..!
ஈரைந்து திங்களிலே
ஆடுகிறது தொட்டில்.
தொலைத்திட்ட அவள்
பருவம்போலத் துலங்குகின்ற
பால் நிலவை-
அழைக்கின்றாள் தேன்குரலில்
அழகாகத் தன் தாலாட்டில்
குழந்தைக்கு அமுதூட்டத்
துள்ளியோடி வருமாறு..!