சென்னை பெட்ரோலியம் நிறுவனம், ரூ.512 கோடி லாபம் ஈட்டிச் சாதனை
சிபிசிஎல் (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.511.52 கோடி நிகர லாபம் ஈட்டிச் சாதனை படைத்துள்ளது. சிபிசிஎல்லின் இயக்குநர் குழுமம், சென்ற நிதி ஆண்டிற்கான டிவிடென்ட் 120 சதவீதம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது என்றும் சிபிசிஎல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கே. பாலசந்திரன் சென்னையில் 2011 மே 24 அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
கே. பாலசந்திரன் மேலும் கூறியதாவது:
சிபிசிஎல் ஆலை சென்ற நிதி ஆண்டில் ரூ.38128.26 கோடி அளவிற்கு எண்ணெய் சுத்திகரித்து விற்பனை செய்துள்ளது 2009-10ஆம் ஆண்டை நோக்குகையில் இது ரூ.29,183.84 கோடியாகும். சிபிசிஎல் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.763.52 கோடியை ஈட்டியது அதாவது வரிக்குப் பின் நிகர லாபம் ரூ.511.52 கோடி அளவுக்கு லாபம் ஈட்டிச் சாதனை படைத்துள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பைப் பொறுத்த வரையில் சிபிசிஎல் ஆலை சென்ற நிதி ஆண்டில் 10.73 டிஎம்டி கச்சா எண்ணெயைச் சுத்திகரித்துச் சாதனை படைத்துள்ளது.
அதேபோன்று மணலியிலுள்ள எப்சிசி பிரிவில் 1006 டிஎம்டி சுத்திகரிப்பு செய்து இதுவரை கண்டிராத சாதனையை எட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இது 917 டிஎம்டி ஆகும். காவிரி படுகை சுத்திகரிப்பு ஆலையில் இதுவரை கண்டிராத அளவு எரிவாயு பதப்படுத்துதலில் 33 டிஎம்டி அளவை எட்டி சாதனை புரிந்துள்ளது. இதன் மூலமாக இதுவரை கண்டிராத அளவு புரோபேன் உற்பத்தி 1800 மெட்ரிக் டன் அளவை எட்டியுள்ளது.
சிபிசிஎல் ரூ.1765.22 கோடி அளவிற்கு கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து நேரடி விற்பனை செய்துள்ளது. அத்துடன் 3209 கோடி அளவிற்கு பெட்ரோலியப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. சிபிசிஎல் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 1335 கோடி முதலீட்டிலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
சென்னை துறைமுகத்திலிருந்து மணலி ஆலைக்கு 42 அங்குல அளவிலான ஒரு புதிய கச்சா எண்ணெய் குழாய் ரூ.126 கோடி மேற்கொள்ளப்பட உள்ள திட்டம், காரைக்கால் துறைமுகத்திலிருந்து சிபிஆர் ஆலைக்கு ரூ.10 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் தருவிக்க உதவும் புதிய குழாயினைத் தற்போதுள்ள குழாயுடன் இணைக்கும் திட்டம், சிபிசிஎல்லின் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஐஓசிஎல் நிறுவனம் டீசலை விரைவாக திருச்சிக்குக் கொண்டுவர 114 கிமீ அளவுக்கு ரூ.98 கோடி மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்ற நிதி ஆண்டில் சிபிசிஎல் நிறுவனம் மணலி மற்றும் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலையைச் சார்ந்த பகுதிகளில் சுற்று வட்டார மக்களின் மேம்பாட்டிற்காகக் கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு, தொழில் பயிற்சி, விளையாட்டு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3 கோடியே 80 லட்சம் செலவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இத்தகைய பணிகளுக்காக நான்கு கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என்று கே. பாலசந்திரன் தெரிவித்தார். இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் இந்தியன் ஆயில் குழுமத்தின் தலைவர் ஆர். எஸ். பட்டோலா, முதன்மை மேலாளர் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
===============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை