குறவர் நாகரிகம்-அறிமுகம் 

 

அவதார இராமனுக்கும் வனவாசம் தண்டனை,

அழகான பாண்டவர்க்கும் வனவாசம் நிந்தனை,

அகிலத்தை ஆண்டவர்கள் கொள்ளாத சிந்தனை,

அன்புற்ற குறவர்க்குக் கானகமே அரண்மனை!                                                                                   11

 

ஆழிசூழ் அகிலம் காத்து நிற்க,

ஆண்டவன் படைத்தான் அடர் கானகம்,

ஆதிநாள் முதற்கொண் டதனைத் தொழுது,

ஆலயமாய்க் காக்கும் குறவர் கூட்டம்!                                                                                                   12

 

இயற்கை வகுத்த இலக்கணம் காத்து,

இலக்கை வகுக்கும் இன்னலை நீத்து,

இரைப்பை நிறைத்து இலகுவாய் வாழ்ந்து,

இரண்டற இயற்கையில் கலந்த நல்வாழ்க்கை!                                                                  13

 

ஈரிதழில் புன்னகையை இன்புற்று ஏந்தி,

ஈசனுக்கு மந்திரத்தை மனமாரச் சொன்னவனின்,

ஈடற்ற திருவடியைப் பற்றோடு பற்றி,

ஈகைகுணம் மேலோங்க வாழ்ந்திடுவர் குறவர்!                                                                 14

 

உமிழ்நீரைச் சிலநேரம் உணவாகக் கொண்டாலும்,

உதிர்ந்திலைகள் சருகாகிக் கானகமே வறண்டாலும்,

உதிக்கின்ற கதிரவனால் உதிரமது உலர்ந்தாலும்,

உழைக்கின்ற எண்ணத்தைத் தொலைக்காத குறவர்!                                                                      15

 

ஊழ்வினைபோல் தொடர்ந்த வறண்டகாலம் நீங்கி,

ஊனம் கொண்டிருந்த கானகமும் மாறும்,

ஊறும் செவ்வுதிரம் உடலுக்குள் ஏறும்,

ஊழியம் செய்திடுவான் குறவனவன் மீண்டும்!                                                                                  16

 

எளிமையான வாழ்க்கையை ஏக்கமின்றி வாழ்பவன்,

எதிர்மறையாய் வறுமையிலும் எண்ணிடாத எளியவன்,

எண்ணிலாத கானமுதைக் கண்ணில் கண்டபோதிலும்,

என்றுமதனை அபகரிக்க எண்ணிடாத தூயவன்!                                                                                17

 

ஏர்பிடித் துலகம் பழகும் முன்னே,

ஏற்பது இகழ்வென் றேற்றுக் கொண்டவன்,

ஏற்ற இறக்கங்கள் எதிர்வரும் போதும்,

ஏமுற மறவா திதயம் கொண்டவன்!                                                                                                          18

 

ஐய மென்னும் தீ இன்றி,

ஐம் புலனும் நோ யின்றி,

ஐய னென்னும் அறு முகனை,

ஐங்கரனின் இளையவனைத் துணைகொண்ட குறவர்!                                                  19

 

ஒல்லாமை வரும்போதும் நில்லாமல் உழைப்பவன்,

ஒவ்வாமை ஏதுமின்றிக் கானோடு வசிப்பவன்,

ஒருபானைக் கூழையும் ஓர் நொடியில் குடிப்பவன்,

ஒரு நாளும் உழைக்காமல் உண்ணாத குறவன் !                                                                            20

 

ஓமெனும் மந்திரத்தைச் சொன்னவனின் தோழன்,

ஓங்கிநிற்கும் கானகத்தைக் காக்கின்ற வீரன்,

ஓரிரு மணித்துளியும் ஓயாது தினமும்,

ஓடோடி உயிர்வளர்க்கும் காடோடிக் குறவன்!                                                                                     21

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குறவன் பாட்டு – 2

  1. அகரவரிசையில் அறிமுகப்படுத்திய குறவரின் நாகரிகம் சிறப்பு.  கானகத்தில் இயற்கையுடன் இசைந்த வாழ்வை வாழ்பவர்கள் அந்த வாழ்க்கையை தண்டை என்று கருதுவதில்லை என்ற கோணத்தில் நான் இதுவரை சிந்தித்ததில்லை.  அருமையான பாடல் தொகுப்பு. நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. உண்மையான குறவர் நாகரிகம் தன்னை அகர வரிசையில் , அற்புதமான வரிகளால் அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

    /////எளிமையான வாழ்க்கையை ஏக்கமின்றி வாழ்பவன்,
    எதிர்மறையாய் வறுமையிலும் எண்ணிடாத எளியவன்,
    எண்ணிலாத கானமுதைக் கண்ணில் கண்டபோதிலும்,
    என்றுமதனை அபகரிக்க எண்ணிடாத தூயவன்!   //////
    எண்ணத்தினால் கூட பிறருக்கு தீங்கு நினையாதவர்கள் குறவர் பெருமக்கள். ஆகவே அவர்கள் நெஞ்சில் சத்தியத் தெய்வம் குடி கொண்டது. அவர் சொன்ன வாக்கு பலிக்கும் என்பது பழந்தமிழ் மக்கள் நம்பிக்கை. எனவே அவரிடம் குறி கேட்கும் வழக்கம் இருந்தது. அருமையாகத் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலோடு காத்திருக்கின்றேன்.

  3. கவிதைகளைத் தொடர்ந்து படித்து, கருத்துகளை வழங்கி வரும் திருமதி தேமொழி மற்றும் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.