தேடுபொறி உகப்பாக்கம்: பாலாஜி ராமநாதன் உடன் நேர்காணல்

0

செவ்வி – அண்ணாகண்ணன்

இணையத் தேடுபொறிகள், தேடுபொறி உகப்பாக்கம் (Search Engine Optimization) ஆகியவை குறித்து, டிஜிகிளிஃப் (http://digicliff.com) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாலாஜி  ராமநாதன் 2010ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வல்லமை ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அண்ணாகண்ணனின் ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வேட்டில் இந்த நேர்காணல், இடம்பெற்றுள்ளது.

Balaji Ramanathan

இணையத் தேடுபொறி எவ்வாறு இயங்குகிறது?

இணையத் தேடுபொறி, வெப் ஸ்பைடர்கள் மூலமாக இணையத்தளங்களின் பக்கங்களில் உள்ள உள்ளடக்கஙகளைக் குறிச்சொற்களாக(Keywords)ப்  பிரித்து அதன் தரவுப் பெட்டகத்தில் (Database) பதிந்துகொள்கிறது. பின்னர் இணையத் தேடுபொறியில் குறிச்சொற்களைத் தேடுகையில் இணையத்  தேடுபொறியின் அல்கரிதத்தின்படி இணையத்தளப் பக்கங்களை வரிசைப்படுத்தி, இணையத் தேடுபொறி காட்டுகிறது. ஒவ்வோர் இணையத்  தேடுபொறியும் அதன் அல்கரிதத்தின்படி இணையத்தள பக்கங்களை வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை வெப் ஸ்பைடர், உள்ளடக்கத்தைத் தேடும்?

ஒவ்வோர் இணையத்தளத்தின் உள்ளடக்கம் இற்றைப்படுத்தப்படும் அளவைப் பொறுத்து, வெப் ஸ்பைடர் கிராலிங் ரேட் அமையும். உள்ளடக்கம்  மிகுதியாக இற்றைப்படுத்தப்படும் இணையத்தளங்களை வெப் ஸ்பைடர் ஒரு நாளைக்குப் பல முறைகளும் உள்ளடக்கம் குறைவாக  இற்றைப்படுத்தப்படும் இணையத்தளங்களை வெப் ஸ்பைடர் பல மாதங்களுக்கு ஒரு முறையும் கிரால் செய்யும்.

உள்ளடக்கங்களை குறிச்சொற்களாக (Keywords) எப்படி, எந்த அடிப்படையில் பிரிக்கும்? உள்ளடக்கத்தில் உள்ள அனைத்துச் சொற்களுமே  குறிச்சொற்கள் ஆகுமா?

உள்ளடக்கத்தில் உள்ள அனைத்துச் சொற்களையுமே குறிச்சொற்களாக இணையத் தேடுபொறி, தரவுப் பெட்டகத்தில் பதிந்துகொள்கிறது.  இணையத்தளத்தின் பக்கங்களில் உள்ளடக்கத்தில் சில சொற்களின் குறிச்சொற்கள் அடர்த்தி (Keyword Density) அதிகமாக இருக்கும். அந்த  சொற்களுக்கு இணையத் தேடுபொறியின் அல்கரிதத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

குறிச்சொற்கள் அடர்த்தி என்பது, ஒரே சொல் மீண்டும் மீண்டும் வருவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறதா?

குறிச்சொற்கள் அடர்த்தி என்பது, இணையத்தளப் பக்கத்தில் குறிச்சொற்கள் எவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பொறுத்து  மாறுபடும். உதாரணத்திற்குக் குறிச்சொற்கள் இணையத்தளப் பக்கத்தின் தலைப்பில் உபயோகப்படுதப்பட்டால் குறிச்சொற்களுக்கு இணையத்  தேடுபொறியின் அல்கரிதத்தில் முன்னுரிமை கொடுக்கபடுகிறது.

சம நேரத் தேடுபொறி (Real Time Search engine) பற்றிச் சொல்லுங்கள்? http://www.collecta.com என்ற தளம், தன்னைச் சம நேரத் தேடுபொறி என அறிவித்துள்ளதே?

சம நேரத் தேடுபொறி என்று எதுவும் தனியாக இல்லை. இக்காலத்தில் அனைத்துத் தேடுபொறிகளுமே சம நேரத் தேடுபொறிகளே. சம நேரத்  தேடுபொறிகளிலும் தரவுப் பெட்டகத்தில் உள்ளடக்கங்களைக் கொணர்ந்து, பிறகுதான் முடிவுகளைக் காட்டுகிறது. ஆனால் சம நேரத்  தேடுபொறிகளில் ‘அண்மைய முடிவுகளைப் பட்டியலிடும்’ (சார்ட் பய் ரீசன்ட்) முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது சம நேரத்தில் குறிச்சொற்கள்  சார்ந்த செய்திகளை எடுத்துக் காட்டுகின்றது. இக்காலத்தில் அனைத்துத் தேடுபொறிகளும் அண்மைய முடிவுகளைப் பட்டியலிடுகின்றன. 2009  டிசமபர் மாதத்திலிருந்து கூகுளும் டுவிட்டரும் இணைந்து சம நேரத் தேடல் முடிவுகளைக் காட்டுகின்றன.

சிறந்த 10 (டாப் 10) தேடு பொறிகள் எவை எவை?

சிறந்த தேடுபொறிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். உலக அளவில் 70%க்கும் மேலானோர் கூகுள் (Google) பயன்படுத்துவதால் கூகுள் முதலிடம்  வகிக்கிறது. இரண்டாவதாக 15%க்கும் மேல் யாஹூ (Yahoo) பயன்படுத்துகின்றனர். மூன்றாவதாக எம்எஸ்என் (MSN), பிங் (Bing) ஆகியவை  உள்ளன. சீனாவில் http://www.baidu.com என்ற தேடுபொறிதான் அதிகம் பயன்படுகிறது. மற்ற தேடுபொறிகளின் உபயோக அளவு, மிக மிகக்  குறைவு.

சிறந்த தேடு பொறி என எவற்றைக் கொண்டு தீர்மானிக்கிறார்கள்?

மக்களின் உபயோக அளவை வைத்துச் சிறந்த தேடுபொறிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

கூகுள் என்றாலே தேடுதல் என்று வந்துவிட்டதே! கூகுளின் தனித் தன்மைகள் என்னென்ன?

1. முதல் சிறப்பு, கூகுளின் அல்கரிதம் (Algorithm)தான். இது, பயனருக்குச் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

2. தனி நபருக்கு ஏற்ற தேடுதல். குறிப்பிட்ட தனி நபரின் தேடு வரலாற்றைப் பார்த்து, முடிவுகளை எடுத்துக் காட்டுகிறது. அவர் எதை அதிகம்  பார்க்கிறாரோ அதற்கு முன்னுரிமை அளிக்கிறது. இதனால் கூகுள் கணக்கில் நுழைந்து தேடினால் ஒரு வகை முடிவுகளும் நுழையாமல் தேடினால்  வேறு வகை முடிவுகளும் கிடைக்கும். மேலும் தானியக்கப் பரிந்துரைகளையும் (Auto Suggestion) அளிக்கும். நீங்கள் இதைத் தேட விரும்புகிறீர்களா  எனத் தன் தரவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துக் காட்டும். இந்தப் பரிந்துரைகளை இப்பொழுது கூகுள் தவிர, யாஹூ உள்ளிட்ட சிலவும் தருகின்றன.

3. நாட்டுக்கு நாடு வேறுபடும் முடிவுகள். Movies, Shopping என்று தேடினால் தேடியவரின் நாட்டில், வட்டாரத்தில் உள்ள முடிவுகளை முதலில் காட்டும்.

4. தேடல் முடிவுகளின் தரம் உயர்வாக உள்ளது.

5. நச்சு நிரல் (Malwares) உள்ள தளங்கள், மாரீச வலைத்தளங்கள் (Phishing sites) போன்ற தீங்கு விளைவிக்கும் தளங்களை அடையாளம்  காட்டுகிறது. http://stopbadware.org என்ற தளத்துடன் இணைந்து, கூகுள் இந்தச் சேவையை அளிக்கிறது. இதன் மூலம் பயனருக்குக் கூடுதல்  பாதுகாப்பு கிட்டுகிறது.

6. பக்க மதிப்பு நிலை (Page Rank) என்பதைக் கூகுள் அறிமுகப்படுத்தியது. இதன்படி அதிக இணைப்புகள், உள்ளடக்கம், பயனர் வருகை ஆகியவற்றை  வைத்து, இணையத்தளப் பக்கத்திற்கு 10க்கு இவ்வளவு மதிப்பெண் எனக் கொடுத்தார்கள். இந்த மதிப்பெண், மொத்தத் தளத்திற்குமானது இல்லை;  அந்தக் குறிப்பிட்ட பக்கத்திற்கானது. ஆனால், இப்பொழுது, தேடல் முடிவுகளில் இந்தப் பக்க மதிப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில்லை.

தேடுபொறி உகப்பாக்கம் (Search Engine Optimization) என்றால் என்ன? இது ஏன் தேவை?

ஒவ்வோர் இணையத்தளத்திற்கும் பயனரின் வருகையே வெற்றி. பயனரின் வருகையைப் பொறுத்தே, அந்தத் தளத்திற்கு விளம்பர வருவாயும்  கூடுகின்றது. அந்த வகையில் இப்பொழுது எல்லா இணையத்தளங்களுக்கும் 30 – 40% பயனர்கள், தேடுபொறி வாயிலாகவே வருகின்றனர். ஆகவே,  அதற்கு ஏற்ற மாதிரி தளத்தை உகப்பாக்கம் செய்தால், பயனர் எண்ணிக்கையை அதிகரித்து, அதிக வருவாய் ஈட்டலாம். தேடுபொறிச்  சந்தைப்படுத்தல் (SEM – Search Engine Marketing) என்பது, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குச் சந்தைப்படுத்தல் கருவியாகப் பேருதவி புரிகின்றது.

எப்படி தேடுபொறி உகப்பாக்கம் (SEO) செய்கிறார்கள்?

நம் இணையத்தளப் பக்கத்தில் (On Page), நம் இணையத்தளப் பக்கத்திற்கு வெளியே (Off Page) என இரு விதங்களில் தேடுபொறி உகப்பாக்கம்  செய்யலாம். முதல் வகையில் நம் இணையத்தளத்தின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும். மெடா டாக் (Meta Tag), குறிச்சொல் அடர்த்தி  (Keyword Density), சுட்டிக் கட்டமைப்பு (URL Structure), உட்பக்கங்களுக்கு நகருதல் (Navigation)… உள்ளிட்டவை இதில் அடங்கும். தளத்தில் உள்ள  படங்களுக்கு மாற்று உரை (Alt Text) அளிக்க வேண்டும். தலைப்பாக வரும் சொற்களை, H1 குறியுடன் இட வேண்டும்.

நம் இணையத்தளத்திற்கு வெளியே செய்யக்கூடிய உகப்பாக்கத்தில் இணைப்புகளை ஏற்படுத்தல் முக்கியமானது. ஒரு வழி இணைப்பு, இரு வழி  இணைப்பு, மூவழி இணைப்பு, குறுக்கு இணைப்பு உள்பட பல்வேறு வகை இணைப்புகள் உண்டு. 6 மாதங்களுக்கு மேல் ஒரு தளத்தில் ஓர் இணைப்பு  இருந்தால் அது, நிலையான இணைப்பாகக் கருதப்படும். சமூக வலைச் சந்தைப்படுத்தல் (Social Media Marketing), இணையத்தள முகவரிகள்  தொகுப்பு (Directory), நம் இணையத்தளம் தொடர்பான செய்தி வெளியீடுகள், கட்டுரை ஆக்கங்கள், வரி விளம்பரங்கள் ஆகியவை இந்த வகையில்  அடங்கும்.

வணிகத்திற்கும் விளம்பர வருவாய்க்கும் தேடுபொறி உகப்பாக்கம் எப்படிப் பயன்படுகிறது?

ஒரு வணிக நிறுவனத்தில் தேடுபொறியின் மூலம் முதலில் 3% பயனரே வந்தனர். தேடுபொறி உகப்பாக்கம் செய்த பிறகு 40%க்கும் மேல் பயனர்  வந்தனர். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் கணிசமாக உயர்ந்தது.

உள்ளடக்கம் முதன்மையாக உள்ள தளம், வணிகம் முதன்மையாக உள்ள தளம் எனப் பல வகைகளாகப் பிரிக்கலாம். உள்ளடக்கம் முதன்மையாக  உள்ள தளம் ஒன்றுக்குப் பயனர் வருகையைப் பொறுத்தே விளம்பர வருவாயும் உயரும். ஒரு தளத்தினுள் நுழையும் பயனர், 5 பக்கங்களைப்  பார்க்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பக்கத்தில் 3 விளம்பரங்கள் இருப்பதாகக் கொண்டால், ஒரு பயனர் 15 முறைகள், விளம்பரங்களைப்  பார்க்கிறார்.

விளம்பர நிறுவனங்கள், 1000 பதிவுகளுக்கு (CPM  – Cost Per 1000 Impression) பொதுவாக ரூ.20 -25 அளவில் கட்டணம் அளிக்கின்றன. நிதி  சார்ந்த தளங்களுக்கு 80 பதிவுகளுக்கே கட்டணம் அளிக்கின்றன. http://www.moneycontrol.com தளத்திற்கு விளம்பர நிறுவனங்கள் ஒவ்வொரு 120  பதிவுகளுக்கும் கட்டணம் அளிக்கின்றன. இது தவிர, விளம்பரத்தைச் சொடுக்கினால் கட்டணம் (CPC – Cost Per Click), விளம்பரத்தைச் சொடுக்கிச்  சென்று பொருளை / சேவையைப் பெற்றால் கட்டணம் (CPA – Cost Per Action) எனப் பல வகைக் கட்டண முறைகள் உண்டு. இவை தவிர  விற்பனையுடன் இணைந்த சந்தைப்படுத்தல் (Affiliated Marketing) என்ற முறையும் உண்டு. இதில் நம் தளம் மூலமாக நிகழும் விற்பனையில் 30 – 40%  தரகுத் தொகை பெறலாம்.

வணிகம் முதன்மையாக உள்ள தளத்தில் அதற்கு ஏற்ற வருவாய் முறைகள் உண்டு. சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களை மையமாகக் கொண்ட  தளங்களில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லப் பேருந்து – தொடர் வண்டி – விமானப் பயணச் சீட்டு ஆகியவற்றை விற்கும் விதமாக  விளம்பரங்கள் அமையும். அந்தப் பயனருக்கு அந்த விளம்பரத்தின் மூலம் பயன் கூடுதலாக இருக்கும். விளம்பர நிறுவனங்களுக்கும் தள  உரிமையாளருக்கும் இதன் மூலம் வருவாய் கிட்டும்.

தேடுபொறி உகப்பாக்கத்தில் தலைப்பு (Title), குறிச்சொற்கள் (Keywords), விளக்கக் குறிப்புகள் (Description) ஆகியவை வகிக்கும் பங்கு என்ன?

இந்த மூன்றுக்கும் சேர்த்து 10 – 20% முக்கியத்துவம் உண்டு. தலைப்பு, 80 எழுத்துகளுக்குள்ளும் விளக்கக் குறிப்புகள் 150 எழுத்துகளுக்குள்ளும்  குறிச்சொற்கள் 250 எழுத்துகளுக்குள்ளும் இருக்க வேண்டும். விளக்கக் குறிப்புகளும் குறிச்சொற்களும் மெடா டாக் என அழைக்கப்படும். இந்தத்  தலைப்பில் ஏழெட்டு சொற்கள் இருப்பதாகக் கொண்டால், முதல் சொல்லுக்கும் ஏழாம் சொல்லுக்கும் கூட முக்கியத்துவம் மாறும்.

தேடுபொறி உகப்பாக்கத்தில் தள முகவரி வகிக்கும் பங்கு என்ன? புதிய இணையத்தளமோ, வலைப்பதிவோ தொடங்குவோர் தங்கள் தள  முகவரியை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?

மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தை TNEB, Tamilnadu Electricity Board என்ற இரண்டு  முறைகளில் எந்த முறைகளில் சொன்னால் மக்களுக்கு உடனே புரியும் என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும். இது, அவரவர் கணிப்பினைப்  பொறுத்ததே. திரைப்படம் சார்ந்து தளம் தொடங்குவோர், Movie, Movies ஆகிய இரு சொற்களில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.  இங்கு ஓர் எழுத்து கூடினால்கூட அதன் மூலம் அவர்களுக்கான தேடல் முடிவுகள் மாறுபடலாம்.

இணையத்தளங்கள் நடத்தும் சிலர் போலியான குறிச் சொற்களைக் கொடுத்து, தேடுபொறிகளை ஏமாற்றுகிறார்களா? இதற்கு வாய்ப்பு உண்டா?

கூகுளின் அல்கரிதம், மிகச் சிறப்பானது. அது தலைப்பு, குறிச் சொற்கள், விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றுடன் உள்ளடக்கத்தையும் சேர்த்துப்  படிக்கிறது. அதனால் அதை ஏமாற்ற முடியாது. 80 – 90% இணையத்தளங்கள், கூகுளுக்கு ஏற்ப உகப்பாக்கம் செய்துள்ளார்கள். எனவே கூகுளின்  விதிமுறைகளுக்கு ஏற்பவே தளங்களைக் கட்டமைத்துள்ளார்கள்.

தேடுபொறிச் சந்தையாக்கம் (Search Engine Marketing) பற்றிக் கூறுங்கள்?

கூகுளின் தேடல் முடிவுகளில் இலவச முடிவுகள் ஒரு புறமும் கட்டணம் செலுத்திய முடிவுகள் ஒரு புறமும் தோன்றும். நாம் நம் தளத்திற்குத்  தேடுபொறி உகப்பாக்கம் செய்தால், அது, இலவசப் பட்டியலில் தோன்றும். தேடுபொறிச் சந்தையாக்கம் செய்தால், கட்டணப் பட்டியலில் தோன்றும்.  இதற்காக வணிக நிறுவனங்கள், கூகுளுக்குக் கட்டணம் செலுத்துகின்றன. ஒவ்வொரு சொடுக்கிற்கும் (PPC – Pay Per Click) என்ற அடிப்படையில்  இந்த நிறுவனங்கள் கட்டணம் செலுத்துகின்றன. குறிப்பிட்ட சொல்லுக்கு ஒரு சொடுக்கிற்கு எவ்வளவு தொகை என்பதை ஏல முறையில்  தீர்மானிக்கிறார்கள். இதற்கான கூகுளின் சேவைக்கு அட்வேர்ட்ஸ் (Adwords) என்று பெயர். ஒவ்வொரு தேடுபொறி நிறுவனத்திலும் இவ்வகைச்  சேவை உண்டு. இந்த அட்வேர்ட்ஸிலும் தேடுபொறி உகப்பாக்கம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தேடல் முடிவுகளில் முதல் சில  இடங்களுக்குள் தோன்றலாம்.

மாரீச வலைத்தளங்களைத் தேடுபொறி கண்டுகொள்ளுமா?

நச்சு நிரல் உள்ள தளங்களை மட்டுமே கூகுள் கண்டுபிடித்துக் கூறும். மாரீச வலைத்தளங்களைப் பொறுத்தவரை மக்கள்தான் விழிப்புடன் இருக்க  வேண்டும்.

எழுத்துகளுக்குப் பதில் புகைப்படங்களைக் கொண்டும் ஒலியைக் கொண்டும் தேடும் வசதி எந்த அளவில் உள்ளது?

படத்தினைப் பொறுத்த வரை அதற்கு மாற்று உரை, விளக்கக் குறிப்புகள், தலைப்பு ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். அவை கூடுமானவரை  கூர்மையாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகக் கொடுத்தால் கூகுள் அதைத் தடை செய்துவிடும்.

தேவைக்கு அதிகமான உகப்பாக்கம் அனைத்தையும் கூகுள் தடை செய்துள்ளது. குறிச் சொற்களை அதிகமாகக் கொடுப்பது (Keyword Dumping,  Keyword Stuffing), தளத்தின் பின்னணி நிறத்திற்கு ஏற்பக் குறிச்சொற்களைக் கொடுப்பது (Black Hat Techniques), செயற்கையான சுட்டி அமைப்பு,  பயனருக்கு ஒரு முகம், தேடுபொறிக்கு ஒரு முகம் என இரட்டை முகம் காட்டுவது (Clogging) ஆகியவற்றுக்குக் கூகுள் தடை விதித்துள்ளது.

படங்களைப் போலவே ஒலி – ஒளிக் கோப்புகளுக்கும் உகப்பாக்கம் செய்யலாம்.

தேடுபொறி நுட்பத்தின் எதிர்காலத் தேவை, வளர்ச்சி ஆகியவற்றை மதிப்பிட முடியுமா?

சமநேரத் தேடல், தனி நபருக்கான தேடல் ஆகியவை எதிர்காலத்தில் இன்னும் கூடுதல் வலுப் பெறும். இப்பொழுது ஒரு தேடலுக்கு அந்தந்த  நாட்டுக்கு ஏற்றவாறு முடிவுகள் காட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் அது, அந்தந்த நகரத்திற்கு ஏற்றவாறு முடிவுகளைக் காட்டலாம்.

தமிழக அரசுத் தளங்கள், தேடுபொறி உகப்பாக்கம் செய்துள்ளனவா?

பெரும்பாலும் இல்லை.

எந்த அடிப்படையில் இந்த முடிவிற்கு வந்தீர்கள்?

1. தலைப்புச் சொற்கள் சரியில்லை. Welcomes you என்றெல்லாம் இருக்க வேண்டியதில்லை.

2. எல்லாப் பக்கங்களுக்கும் ஒரே தலைப்புச் சொற்கள் வருகின்றன; இது, அந்தந்தப் பக்கத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.

3. படங்களுக்கு மாற்று உரை (Alt Text) இல்லை.

4. பல தளங்களில் தள வரைபடம் (Site Map) இல்லை.

5. Robats.txt இல்லை. இதில் எந்தப் பிரிவுகளை / அடைவுகளைத் தேடுபொறி தேடலாம் எனப் பிரித்து அளித்திருப்பார்கள். அத்தகைய பிரிவு  இல்லை.

அதே நேரம் சுட்டிக் கட்டமைப்பு (URL Binding) இருக்கிறது. குறுக்கு இணைப்புகளும் உள்ளன. http://www.tn.gov.in என்ற தளத்திற்குப் பிற 392 இணையத்தளங்களில் இணைப்புகள் உள்ளன. இது மோசமான எண்ணிக்கை இல்லை. அதே நேரம், http://www.india.gov.in என்ற தளத்திற்கு 1890 இணைப்புகள் உள்ளன.

PHP, ASP, Dot Net, Java  ஆகியவற்றில் இணையத்தளத்தை உருவாக்குவதை விட HTML வடிவில் உருவாக்கிய பக்கங்களுக்குத் தேடுபொறி  உகப்பாக்கத்தில் முன்னுரிமை கிடைக்கும். ஆனால், PHP பக்கத்தை HTML பக்கமாக மாற்றிக் காட்டலாம். நிலைமாறு (Dynamic) பக்கத்தை நிலையான  (Static) பக்கமாக மாற்றிக் காட்டலாம்.

அரசுத் தளங்களில் பல்வேறு ஆவணங்கள், பி.டி.எப். வடிவில் உள்ளன. இது, தேடுபொறிக்கு ஏற்றதா?

‘பி.டி.எஃப்’ வடிவ உள்ளடக்கத்தைத் தேடுபொறி எடுத்துக்கொள்ளாது. ‘பி.டி.எஃப்’ மட்டுமின்றி, பிளாஷ், ஜாவா, படக் கோப்பு, ஒளிப்படக் கோப்பு  ஆகியவற்றில் உள்ள தரவுகளையும் தேடுபொறி எடுத்துக் காட்டாது. ஆயினும் இவற்றில் தலைப்பு, மெடா குறிப்புகள் ஆகியவற்றைச் சேர்த்தால்,  தேடுபொறியினால், அவற்றைத் தேடி எடுத்துக் காட்ட முடியும். ஆயினும் இது, மிகுந்த நேரம் தேவைப்படும் பணியாகும்.

பயனருக்கு ஏற்ற வடிவில்தான் உள்ளடக்கத்தைக் கொடுக்க வேண்டும். தேடுபொறிக்கு ஏற்ற வடிவில் கொடுக்கக் கூடாது. அந்த நோக்கத்தில் ‘பி.டி.எஃப்’  வடிவம், பயனருக்கு வசதியானது எனில் அதில் தரவுகளை அளிப்பது தவறில்லை.

தமிழக அரசுத் தளங்கள், தேடுபொறியில் எந்த நிலையில் தோன்றுகின்றன?

online electricity bill எனத் தேடியபோது http://www.tneb.in என்ற தமிழக மின்வாரியத் தளம், 8ஆவது இடத்தில் தோன்றியது. இதே தளம், online  electricity payment எனத் தேடியபோது, 5ஆவது இடத்தில் தோன்றியது. Tamilnadu electicity, electicity board, tneb ஆகிய சொற்களைக் கொண்டு  தேடியபொழுது முதல் இடத்தில் தோன்றியது. இது, மேலே தோன்றுவதால் இதற்குத் தேடுபொறி உகப்பாக்கம் செய்துள்ளார்கள் எனக் கருத  முடியாது. இந்தச் சொற்களுக்கு வேறு யாரும் உகப்பாக்கம் செய்யவில்லை என்றே கருத வேண்டும். வேறு யாரும் உகப்பாக்கம் செய்யும்பட்சத்தில்  இந்தத் தளம் கீழே செல்ல வாய்ப்புண்டு. எனவே முன்கூட்டியே தொலைநோக்குடன் உகப்பாக்கம் செய்வது நல்லது.

தேடுபொறி சந்தையாக்கம், மின்னஞ்சல் சந்தையாக்கம் ஆகியவை அரசுக்கு எந்த வகையில் உதவும்?

வருமான வரித் துறையினர், மின்னஞ்சல் சந்தையாக்கம் செய்யலாம். முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்தியவர்களுக்கு மின்னஞ்சல்  அனுப்பி, நினைவூட்டலாம்.

பல்வேறு நோக்கங்களுக்காகப் பிரசாரங்கள் மேற்கொள்ளலாம்.

சுற்றுலாத் துறை, சிறப்புச் சலுகைகளை மின்னஞ்சல் மூலம் தனி நபர்களுக்கு அனுப்பலாம்.கடந்த ஆண்டில் ஐதராபாத்திலிருந்து ஒரு லட்சம் பேர்,  தமிழகத்திற்குச் சுற்றிப் பார்க்க வந்தால், அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் குறித்து மின்னஞ்சலிலும் செல்பேகள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.  இந்த ஆண்டு வந்தால், இவ்வளவு கூடுதல் இடங்களைப் பார்க்கலாம்; இன்னின்ன வசதிகள் உள்ளன என ஆர்வத்தைத் தூண்டலாம்.

தனியார் துறையினரின் அனைத்துச் சந்தையாக்க உத்திகளையும் அரசும் பின்பற்றலாம். இதன் மூலம் நல்ல பயன் கிட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *