திவாகர்

இந்திய சுதந்திர சரித்திரம் என்பது இன்றைய தலைமுறையினருக்கு எப்படி புரியவைக்கப்படுகின்றது என்பதில் ஏகப்பட்ட கேள்விக்குறி உள்ளது. பொதுவாக இந்திய சுதந்திரம் எனும்போது காந்தியடிகள் முதலான தேசத்தலைவர்களே அதிகம் பேசப்படுவதும் தேசத்துக்கான சுதந்திரம் ஏதோ சுலபமாக அஹிம்சை முறையில் பெற்றதுமாகவும் கத்தியின்றி ரத்தமின்றி பெற்றதுமாகவும் அதிகம் புரியப்படுகின்றது. தேசம் சுதந்திரம் ஆன கால கட்டத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மதக் கலவரங்களும், பாரதமக்களின் ரத்தமானது ஆறு போல புரண்டு ஓடியதையும் நாம் மறந்து விடுகிறோம்.

இது இப்படியே இருக்க, தேசச் சுதந்திரப் போராட்டமானது ஏதோ 1857 ஆம் ஆண்டில் முதல் இந்திய சுதந்திரப் போராக தேசத்து வடபுலத்தில்தான் ஆரம்பமாகி பிறகு காங்கிரஸ் தோன்றி அதைப் பெரிதாக்கியது என்று இப்போது அரசாங்க ஆதரவுடன் எழுதி வருகிறார்கள். ஆனால் உண்மையில் தென்னகத்தில்தான் மிகப் பெரிய விதத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் 1725 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது, இவ்வரலாற்றை பழனியப்பா பிரதர்ஸ் ஆங்கிலத்தில் புத்தகமாகக் கூட கொண்டு வந்துள்ளார்கள்.

இதுவும் இருக்கட்டும், ஏற்கனவே சொன்னது போல இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் வரலாறு மிக விஸ்தாரமாக சொல்லப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. சுப்ரமணிய பாரதியார், வ.உ.சி போன்றோர் (உபயம் தமிழ் சினிமா) போன்றோர் பற்றி ஏதோ சுமாராகத் தெரிந்தாலும் முக்கியமாக தேசத்துக்காக உயிர் நீத்த திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பற்றி கூட நம் இளைஞர்களுக்கு இன்னமும் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.

இப்படி இருக்கையில் சுவாமி ஓம்கார் எனும் நீலகண்ட பிரம்மச்சாரியைப் பற்றி ஒரு பதிவு கண்டேன். அதை அப்படியே கீழே தருகிறேன்.இது நீலகண்ட பிரும்மச்சாரியின் சுயசரிதம்

சென்னையில் 566, பைக்கிராப்ட்ஸ் ரோடில் ஒரு வாடகை இடத்தில் தங்கிக் கொண்டு வாயப்பிள்ளைத் தெருவில் 8ஆம் நம்பரில் உள்ள காசி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 1921-22ஆம் ஆண்டில் நான் உண்ண உணவின்றியும், கையில் காசு இல்லாமலும் கஷ்டப்பட்ட நாட்கள் பல உண்டு. சில சமயம் ஒருவரும் அறியாமல் இரவில் பிச்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு பகலில் சுதேசிப் பிரச்சாரமும் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

ஒரு நாள் கையில் காசும் இல்லை, அதனால் சாப்பிடவும் இல்லை. பிறரிடம் கையேந்த மனமும் வரவில்லை. பசியின் கொடுமையைத் தாளமுடியாமல் சோர்வுற்றிருந்த சமயம் மகாகவி பாரதியின் ஞாபகம் வந்தது. மெதுவாக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னை குதூகலமாக வரவேற்று அளவளாவினார். இந்த அன்புப் பிடியில் சிக்கிய நான் அவரிடம் என் நிலையைக் கூற மனம் துணியவில்லை. ஆனால் பசியோ வயிற்றைக் கிள்ளுகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி, “ஒரு நாலணா இருக்குமோ?” என்று கேட்டு விட்டேன். அவர் “திடுக்கிட்டு, ஏன்? ஏன்?” என்றார். நான் அன்று பூராவும் சாப்பாட்டைப் பாராதது பற்றிக் கூறவே அவர் பதறிப்போய் நாலணா கொண்டு வந்து கொடுத்து, “பாண்டியா! உடனே போய் சாப்பிட்டு வாரும்” என்று கூறினார். அப்போது அவர் பாடிய பாட்டுதான் “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்பது. என்னால், என் நிலைக்காக கவியின் உள்ளத்தில் சுரந்த ஊற்றுதான், அந்த ஆவேசம் நிறைந்த பாட்டு. அகாகா! எவ்வளவு அன்பு! எவ்வளவு பாசம்! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! இந்த ஏழையால் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? அந்தப் புரட்சிக் கவிஞர் அகால மரணமெய்திய போது உடனிருந்து, அவரது மயான யாத்திரைக்குத் தோள் கொடுத்த நால்வரில் நானும் ஒருவன். அவரது உயிரற்ற உடலை சுமக்கும் பாக்கியமாவது என் தோளுக்குக் கிடைத்ததே என்று நான் பெருமைப்படுவது உண்டு.

இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்.

இவ்வளவு கஷ்டப்பட்டும் “புரட்சி புரட்சி” என்ற ஒரு குரல் என் உள்ளத்தின் அடியில் சதா ஒலித்துக் கொண்டே இருந்தது. என்னால் சும்மா இருக்கவே முடியவில்லை, என்ன செய்வேன்.

நாட்டின் உயர்விற்கும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கும், கம்யூனிசத்தை நாட்டில் பரப்புவது ஒன்றே வழி எனத் தேர்ந்தேன். சென்னையில் சிங்காரவேலருடன் தங்கிக் கொண்டு, கம்யூனிசம் பற்றி ஒரு சிறு நூல் வெளியிட்டேன். அன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கண்டித்ததுடன், அன்றைய சட்ட திட்டங்களும், நீதிமன்றங்களும், நீதிபதிகளும், முதலாளித்துவ அமைப்புகளுக்கு அனுசரணையாகவே இருப்பதால் இவற்றையும் அடியுடன் தகர்த்தெரிய வேண்டுமென்று அதில் தெரிவித்திருந்தேன்.

என் கம்யூனிச நடவடிக்கைகாகவும் வர்க்கப் போராட்டத்தைத் தூண்டியதற்காகவும், நீதிமன்றங்களைத் தாக்கியதற்காகவும் 1922ஆம் ஆண்டில் திரும்பவும் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டேன். இந்தியாவிலேயே முதல் கம்யூனிஸ்ட் நான் தான். இந்தத் தடவை தென்னாட்டில் என்னை எங்கும் வைக்காமல் வட நாட்டுச் சிறைகளுக்குக் கொண்டு சென்றனர். ஏனெனில் அப்போது நான் ஒரு கருப்புக் குல்லாய்! அதாவது முன்னமே சிறை தண்டனை பெற்றவன். அதனால் அதற்குத் தகுந்த மரியாதையை அரசாங்கம் எனக்குக் காட்டாமல் இருக்க முடியுமா?

இப்போது பாகிஸ்தானில் உள்ள மாண்ட்கோமரி ஜெயிலிலும், மூல்தான் சிறையிலும் 5, 6 ஆண்டுகள் இருந்தேன். இறுதியாக மீதி காலத்தை ரங்கூன் சிறையில் கழித்துவிட்டு 1930ஆம் ஆண்டு விடுதலை பெற்று வெளிவந்தேன். எனது சிறைக் காலங்களில் யாரும் என்னிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. எந்தவிதமான துன்புறுத்தலும், பயமுறுத்தலும் என்னை பணிய வைக்காது என்பதை சிறை அதிகாரிகள் உணர்ந்திருந்ததுதான் அதற்குக் காரணம். அதனால் சிறை வாழ்க்கையில் நான் துன்புறுத்தப்பட்டேன் என்றோ, என் சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படும் காரியங்களை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்றோ கூறமுடியாது. எல்லாச் சிறை அதிகாரிகளும், எல்லா இடத்திலும் என்னை கெளரவமாகவே நடத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும். நான் தேசத்தின் வடகோடி சிறையில் இருக்கும்போது நான் தமிழகத்தைச் சார்ந்தவன் என்பதை உணர்ந்து, என் சமையலுக்குத் தென்னாட்டிலிருந்து புளி வரவழைத்துக் கொடுத்தார்கள் என்றால், அதிகாரிகள் என்பால் எவ்வளவு சிரத்தையுடன் நடந்து கொண்டார்கள் என்று நான் கூறத் தேவையில்லை.

ஓம்கார் ஆஸ்ரமம்.

என் தாய்மாமன் வெங்கட்டராம சாஸ்திரி பி.ஏ.,எல்.டி. மாயவரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவரிடம் நான் அடிக்கடி வேதாந்த விசாரம் செய்வதுண்டு. சிறையில் தனிமையாகப் பல வருஷங்களைக் கழித்ததால், அவ்வப்போது வேதாந்த கருத்துக்களும் என் மனதில் உதிப்பதுண்டு. சிறுகச் சிறுக அது என்ன, நான் அறியாமலேயே கைப்பற்றி கொண்டு வந்திருக்கிறது.

விடுதலை அடைந்து வெளி வந்தபோது பல வழிகளில் நான் மாறியிருப்பதை உணர்ந்தேன். இரண்டு ஆண்டு காலம் கால்நடையாகப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தேன். தி இந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளுக்கு எழுதி, என் எழுத்தை விற்று காலக்ஷேபம் செய்து வந்தேன்.

பின் சாது, துறவியாக மாறினேன். விஜயநகர ராஜ்யத்திற்குட்பட்டிருந்த ஆனைக்குன்று மலையில் சிறு ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு சில காலம் வாழ்ந்தேன். 90 வயது நிரம்பிய விஜயநகர ராஜ்ய ராணி ஒருவர் என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டி உதவினார். அந்த அன்புப் பிடியில் சிக்க மனமில்லாததால் யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென ஒரு நாள் புறப்பட்டு பத்து மைல் தூரம் நடந்து ஹோஸ்பெட் எனும் ஊரை அடைந்தேன். கையில் இரண்டு ரூபாய் மட்டுமே இருந்தது. எனது கலெக்டர் சீடர் தம்பிதுரைக்குத் தந்தி கொடுத்துப் பணம் பெற்று, திரும்பவும் பல இடங்களைச் சுற்றி முடிவாக நந்தி மலை (Nandi Hilla)வந்து அடைந்தேன்.

கர்நாடகத்தின் வனப்புமிக்க கோடை வாசஸ்தலம் நந்தி மலை. அதற்கு வடக்கே அதனை ஒட்டினாற்போல அமைந்திருப்பது சென்னகிரிமலை. பெங்களூரிலிருந்து முப்பது மைல் தொலைவில் நந்தி கிராமத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலும், சுல்தான்பேட்டையிலிருந்து அரை மைல் வலப்புறமும் ஒரு மலைச்சரிவில் அமைந்திருப்பதுதான் ஓம்காரேச்வரருடைய (சென்னகேஸ்வரர்) திருக்கோயில். இதற்கு நேர் எதிரில் சில அடி தூரத்தில் சென்னகிரி குன்றின் ஓர் பாறையைப் பிளந்துகொண்டு அதன் கீழாக ஓடி வருவதுதான் தென்பெண்ணை (தக்ஷிணபினாகினி) ஆற்றின் உற்பத்தி ஸ்தானம். எக்காலத்தும் அதன் வழியாக நல்ல தெளிவான ஊற்று நீர் சதா வந்து கொண்டிருக்கும்.

இந்த இடத்திற்கு நான் வந்தபோது அங்கிருக்கும் லிங்கம் ஒரு புற்றால் மறைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அதற்கு ஓர் சிறு கோயிலும் கட்டினேன். அது அமைதி நிறைந்த இடமாக இருந்ததால் அதனையே என் வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்டேன். என் பெயரிலுள்ள நீலகண்டன், பிரம்மச்சாரி எல்லாம் மறைந்து சாது ஓம்கார் ஆனேன்.

காந்திஜியுடன் சந்திப்பு.

அங்கு சென்றபோது சென்னகிரி மலையின் உச்சியில் காய் கனிகளைப் புசித்துக் கொண்டு சில வருஷங்கள் தவமிருந்தேன். அப்போது ஒரு நாள் 1936ஆம் ஆண்டு மே மாதம் ஜே.சி.குமரப்பா அங்கு என்னைத் தற்செயலாக சந்தித்தார். மகாத்மாஜி ஓய்வு எடுப்பதற்காக தனது கோஷ்டியுடன் நந்திமலையில் வந்து தங்கியிருப்பதாகவும் கூறினார். மறுநாள் சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய் இவர்களை அழைத்துக் கொண்டு திரு குமரப்பா அவர்கள் திரும்ப வந்தார். என்னுடன் நெடுநேரம் அவர்கள் ஆன்ம விசாரணை செய்துவிட்டு திரும்பினார். அடுத்து மகாதேவ தேசாயிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் மகாத்மாஜி என்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கண்டிருந்தது. 1936ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு நந்திமலை சென்று மகாத்மா காந்தியடிகளுடன் இரண்டு மணி நேரம் தங்கி ஆன்ம விசாரணை செய்துவிட்டுப் பூரணத்திருப்தியுடனும், மனச்சாந்தியுடனும் திரும்பினேன். அது சமயம் வடநாடு யாத்திரை வரும்போது, சேவாகிராமம் வருமாறு காந்திஜி எனக்கு அழைப்பு விடுத்தார்.

தற்போதுள்ள ஓம்கார் ஆஸ்ரமத்தில், சாது ஓம்காராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். 3 ஆண்டுகள் புரட்சியாளனாக இருந்தேன். மூன்று ஆண்டுகள் கம்யூனிஸ்டாக இருந்தேன். பதினேழரை ஆண்டுகள் சிறைக் கைதியாக இருந்தேன். இந்த நீண்ட எனது 85 ஆண்டு கால வாழ்க்கையில் சிறப்பான பகுதி எது?

VGopalan (1)என் வாழ்க்கைப் படிக்கட்டுகளில் பெருமைக்குரிய படிக்கட்டு எது? இளைஞர்கள் நன்கு சிந்தித்து ஒரு முடிவிற்கு வரவேண்டுமென்பது என் ஆசை. வாசகர்கள் அனைவருக்கும் என் நல்லாசிகள். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(நந்தி மலையில் சாது ஓம்காரைச் சந்தித்து உரையாடி அவர் சொல்லியதை கட்டுரையாக்கியவர் தியாகி அரியலூர் L. சபாபதி அவர்கள். 1976இல் தியாகி அரியலூர் சபாபதி “இந்திய சுதந்திரப் போர்” எனும் பெயரில் திருச்சி ஜில்லா சுதந்திரப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ் கமிட்டி, குளித்தலை எனும் முகவரியில் இருந்து வெளியிட்ட நூலில் இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. அரியலூர் L.சபாபதி அவர்கள், ஆசிரியராகவும், திருச்சி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் காங்கிரசில் பொதுச் செயலாளராகவும் இருந்தவர்.)

இதை இந்த வாரத்தில் நமக்குத் தந்தவர் தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர். அற்புதமான ஒரு வரலாற்றில் எத்தனை புதிய செய்திகள் அடங்கியிருக்கின்றன பார்த்தீர்களா.. இந்த சரித்திரத்தை நமக்குத் தந்து பல நல்ல விஷயங்களை வெளிக்கொணர்ந்த தஞ்சை திரு கோபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: ’ரசனையின் சிலிர்ப்பு’ திருமதி தி.சுபாஷிணி:
சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும் ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளும்,

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. அறிய பல பொக்கிஷங்களை இளைஞர்களுக்கு நாளைய தலைமுறைக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் ஐயா தஞ்சை கோபாலன் ஐயா அவர்களை கெளரவம் செய்யும் இந்தத் தேர்வு மகிழ்வைத் தருகிறது.

    இந்த நீலகண்ட சாஸ்திரியப் பற்றிய மேலும் ஒரு சுவையான செய்தியை இங்கே பகிர விரும்புகிறேன்

    நாட்டில சொல்லுவாங்க வெள்ளைக் காரன் காலத்திலே காலையில கடனை முடிக்க ரயில் ரோட்டுக்குப் போய் போலீசில்மாட்டி ரெகார்டில் பெயர் வந்து தியாகி என்று பேராகி சன்மானம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கேலி செய்வார்கள் சிலரை.

    இந்த தியாகி எவ்வளவு உயர்ந்தவர் என்பதை இங்கே காணலாம். இந்த மகானின் இளைய சகோதரர் நாராயண சாஸ்திரி என்பவர் அவருக்கு சுவாமிகள் ஒருக் கடிதம் எழுதி இருக்கிறார் அது 16.02.1974. தேதி இட்டது. அதிலே நீ காமராஜரிடம் சென்று என்னைப் பற்றி சிபாரிசு செய்திருப்பது எனக்கு பெரும் அவமானமாக இருக்கிறது. எனக்கு எவருடைய சிபாரிசும் தேவையில்லை. என்னுடைய பெயரும் செய்கைகளும் இந்நாட்டுச் சரித்திரத்தில் ஒரு முக்கியமாக ஏற்கனவே அமைந்திருக்கிறது. உன் சிபாரிசு அதன் முன் அல்பமானது. நீ உனது சொந்தக் காரியங்களை பார்த்துக் கொள்ளவும். என்னைப் பற்றி எந்தவிதமான சிபாரிசுகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ……………………………………………………………………….. அப்படி இனி ஏதும் செய்வாயானால் உன்னிடம் உள்ள கடிதப் போக்குவரத்தையும் நிறுத்தி விடுவேன் என்றும் தனது தம்பியை கண்டிப்புடன் எச்சரிக்கிறார்.

    அவர் ஆற்றியத் தொண்டுகளை தனது கடமையாக இறைவன் நம்மைப் படைத்ததே இதைச் செய்ய என்றெண்ணி யதால்  தானே இப்படி இந்த விளம்பரங்களை எல்லாம் தவிர்த்தார்…

    செயற்கரிய செய்வார் பெரியர்…. வாழ்க எம்மான் புகழ்.

    கவிச் சக்ரவர்த்தி கம்பனுக்கே தனது மீசையை தந்தவர் இந்த டி .கே.சி. என்பர்..

    அவரின் பிறந்தநாளை குறிப்பிட்டு கடைசி பாராவில இடம்பெற்ற சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.  

  2. பெருமகிழ்வு தரும் செய்தி. திரு.தஞ்சை.வெ.கோபாலன் அவர்கள் செய்து வரும் பணிகளைப் பட்டியலிட்டு மாளாது. பாரதி பயிலகம், பாரதி  இலக்கியப் பயிலகம், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்ட வலைப்பூக்களை நடத்தி வருவதோடு கம்ப இராமாயணத்துக்கென தனி வலைப்பூவை(‘கம்ப இராமாயணம் (இராம காதை) உரைநடையில்’) ஏற்படுத்தி பகிர்ந்து வருபவர். என் போன்ற எத்தனையோ எழுத்தாளர்களை எழுத ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாக இருந்து வருபவர். அவருக்கு அளிக்கபட்ட இந்த விருது, மிக அதிக சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களும்.

    திருமதி.தி.சுபாஷிணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  3. எனது ஆசான் தஞ்சை கோபாலன் ஐயா, அவர்கள் வல்லமையாளராக அறிவிக்கப்பட்டதில் அவரைவிட அதிக மகிழ்சிகொள்பவன் நான். பாரதியின் பித்தனான இவர் பிரதி பலன் பார்க்காமல் அவர் தன் வலைப்பூக்கள் வழி ஆற்றி வரும் தமிழ் தொண்டு ஏராளம். அதிலும் தமிழவரலாறு பற்றிய விவரங்களுக்கு வரலாற்று ஆசிரியர்களே திகைக்கும் அளவுக்கு தகவல்கள் வைத்திருப்பவர்.

    நல்ல தமிழ்ஞானம் கொண்டவர். சிறந்த எழுத்தாளர், சிறந்த கதாசிரியர், ஆண்டுதோறும் திருவையாறு நாட்டியாஞ்சலி தலமை ஏற்று நடத்துபவர். அதில் மாணவ மாணவியருக்கு, பேச்சு, கதை,கவிதை போட்டி நடத்தி, ஊக்குவித்து பரிசளிப்பவர்,

    இவரிடம் உள்ள நூலகம் என்னை வியப்பில் ஆழ்த்திய ஒன்று. இவரின் பாரதிபயிலகம் வலைப்பூ வரலாற்று தகவல்கள் அடங்கிய பொக்கிஷம்.

    சமீபத்தில் “தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு” எனும் வரலாற்று நூல் எழுதி வெளியிட்டுள்ளார். இன்னும் பலப்பல தமிழுக்காக செய்யும் ஐயா அவர்களை தேர்ந்தெடுத்த
    வல்லமை குழுவுக்கும் திவாகர் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஆசானை மாணவன் பாராட்ட முடியுமா கோபாலன் ஐயா அவர்களுக்கு
    அன்புடன் என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தாங்களின் ஆக்கங்கள் வல்லமையிலும் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மதிப்பிற்குரிய சுபாஷினி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  4. இந்த வாரம் வல்லமையாளர் விருதை அலங்கரிக்கும் நமது பெருமதிப்பிற்குரிய தஞ்சைப் பெரியவருக்கு அடியேனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எத்துணை பிழைகளோடு கூடிய படைப்பினை என்போன்ற சிறார் படைப்பினும் பிழைகளை மென்மையாகச் சுட்டி ஊக்குவித்து தட்டிக்கொடுக்கும் அவர்தம் பண்பு போற்றுதலுக்கு உரியது.
    அவருக்கு எனது வணக்கங்கள்.

    திருமதி சுபாஷிநிக்கும் அடியேனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  5. வணக்கம்
    தஞ்சையார் கட்டுரை நெஞ்சைத் தொட்டது, சிரம் தாழ்த்திக் கரம்கூப்பி வணங்குகிறேன்
    அன்புடன்
    நந்திதா

  6. எப்படியாப்பட்ட தகவல் பொக்கிஷம் நமக்குக் கிடைத்து இருக்கிறது. இதுபோன்ற மேலும் பல அறிய தகவல்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்த்து நம் எதிர்கால சந்ததியினருக்கு இவற்றை முறையாகக் கொண்டு சேர்க்க வேண்டியது அரசின் கடமை என்றே கருதுகிறேன். தமிழ்ப் பெரியோகள் இதற்கு ஆவண செய்ய வேண்டும். இதுபோன்ற செயற்கரிய பணியைச் செய்துவரும் வல்லமையாளர் தஞ்சை.திரு.கோபாலன் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    இரசிகமணி அவர்களின் நினைவில் நம்மைத் திளைக்கச் செய்த திருமதி.சுபாஷினி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.