ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1

அண்ணாமலை சுகுமாரன்


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் –   பகுதி    1


முகப்புரைAnnaamalai_sugumaran

குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும்  திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .

ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக   மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.

திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம்  310   எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.

திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.

அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக்  கூறுகிறது .

இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும்  ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.

யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457   புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.

சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 %  சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .

ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள்  இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.

ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.

தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..

அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .

அந்த  சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.

ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.

இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில்  கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?

மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.

நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .

விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .

 

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு  —திருக்குறள் -358


அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம  என்கிறார் திருவள்ளுவர் .

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்

இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு

இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும்  விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.

 

-தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1

  1. நல்லதொரு தொடக்கம், திரு, சுகுமாரன். சங்ககாலத்து ஒளவை மிகவும் மதிக்கப்பட்டவர். அவரின் புலமை அரசர்களை கவர்ந்தது. அவரது அறிவியல் அரசர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. ஆரம்பப்பள்ளியில் மனனம் செய்யப்படும் ஒற்றை வரி கொன்றை வேந்தன், வாழும் நெறியின் முகப்பு எனலாம்.

  2. மிக அருமையான ஆரம்பம்.  ஒளவையாரின் குறள்களுக்கு விரிவுரையும் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  3. மெய்யன்புள்ள அண்ணா வணக்கம்.
    இறைவன் திரு அருளால் வீடுபேறு என்னும் நித்திய பேரானந்தம் அனுபவித்து முக்தி மற்றும் சீவசமாதி நிலையை அடைந்து இன்புற்று வாழ்வாங்கு வாழ இறையருள் துணைபுரிய வேண்டுகிறேன்.
    தொடர்பு கொள்ளவும் : 9489182357
    http://www.adhiyoga.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *