சச்சிதானந்தம்
குறத்தியின் பயணம்
அறிமுகம்
கண்ணகிக்குக் கற்கோயில் எடுக்கவைத்த குலத்தில்,
தென்னகத்துக் கொற்றவையை வணங்கும் இனத்தில்,
புன்னகையும் நற்குணமும் கொண்ட குறத்தி,
தன்னலமே அற்றளாய்த் தோன்றி னாளே! 84
குறத்தியின் வருகை
அந்தி வானச் சிவப்புடன், ஒளி
மஞ்சள் கலந்த நிறத்துடன், எழில்
அங்கம் கொண்டு சிறப்புடன், குற
மங்கை மலர்ந்த முகத்துடன் வருகிறாள்! 85
நாவல் பழமெடுத்து மண்ணூதித் தின்றுவிட்டு,
சேவல் சிறகெடுத்து காதின் மெழுகெடுத்து,
பூவின் தேனெடுத்து இதழிரண்டில் இளித்துவிட்டு,
இனிக்கும் சாயமிட்டு, இடையாட்டிக் குறத்தி வந்தாள்! 86
கழுத்தில் கண்கவரும் வண்ணவண்ண மாலையிட்டு,
வழுக்கும் தோளிரண்டை வாடாமல் மூடிவைத்து,
இழுக்கும் கண்ணிரண்டை இங்குமங்கும் அலையவிட்டு,
செழிக்கும் கானகத்தைச் சீராகச் சுற்றி வந்தாள்! 87
தேன் நிறத்தில் தேகங்கொண்டு, நீல
வான் நிறத்தில் விழிகள் கொண்டு, நீண்ட
கான் கொடுத்த கவினைக் கொண்டு, நல்ல
மேன்மக்கள் குணங்கொண்டு குறத்தி வந்தாள்! 88
பச்சைக் காய்கனிகள் தினமும் உண்டு,
இச்சை என்பதை அளவாகக் கொண்டு,
கச்சையில் பற்பல வண்ணங் கொண்டு,
உச்ச அழகுடன் குறத்தி நடந்தாள்! 89

Leave a Reply