ஆன்மீகத்தின் அடிவாரத்தில்

4

subashiniதி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு, கோவைக்குச் சென்றதிலிருந்தே, கோவைமேல் எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. அப்போது நாங்கள் ரயில்வே நிலையத்திற்கு எதிராக ஒரு ஹோட்டலில், மூன்றாவது மாடியில் தங்கியிருந்தோம். அங்கிருந்து பிரெஞ்சு ஜன்னலில் கோவையின் காலை அழகை பருகியிருக்கின்றேன். ஊரைச்சுற்றிய ஒரு மலைத்தொடர்கள், அதன்மேல் விழுந்து புரண்டு விளையாடி தன் வடிவத்தையும், வண்ணத்தையும் மாற்றி மாயவித்தைகள் காட்டும் மேகக்கூட்டங்களும், கண்ணுக்கெட்டிய பச்சை மரங்களும், தூரத்தில் தெரிந்த கிறித்துவ வயலட் நிறச் சிலுவையும், பார்க்கப் பார்க்கப் பரவசத்துடன் என்னை மறந்து நின்றிருக்கின்றேன். அங்கு வீசும் குளிர்காற்றும், அன்னபூர்ணாசின் உணவும்… அப்பப்பா… சொல்லில் கட்டிக் கொடுத்திட இயலாது.

அங்கு சென்று வந்ததிலிருந்து, கோவையில் எனக்கு இருக்கும் நண்பர்கள், உறவுகள் தெரிந்தவர்கள், எனப் பட்டியலிட்டேன். பின்புதான் எனக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அறிமுகமானார். நல்லவேளை அதற்குமுன் என்றால், நான் கோயம்புத்தூரில் இல்லை என்று அம்மா நாட்டின்போது கூறியிருப்பார். எல்லாம் நன்மைக்குத் தான்.

மீண்டும் கோவைக்குச் செல்லும் வாய்ப்பிற்காகக் காத்திருந்தேன். ஏப்ரல் மாத இறுதியில் என் இரண்டாவது மகள் திருமண விஷயமாக கோவை செல்ல நேரிட்டது. ஒரு வெள்ளியன்று, நானும் என் மகளும் கோவைக்கு துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயிலில் புறப்பட்டோம். அது அதிகாலை 6.50 மணிக்குப் புறப்படும் இரயில். சதாப்தி எக்ஸ்பிரஸ் போல் இதில் & காபி, உணவு எல்லாம் கொடுப்பார்கள் என்று சொன்னார்கள் என்று நாங்கள் வீட்டில் காபி குடிக்காமல் சென்றுவிட்டோம். இரயில் கிளம்பிக் கொஞ்ச நேரத்தில் காபி வந்தது. எப்படியெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபிளாஸ்க். ஒரு கப்பில் இரண்டு ஸாஷேக்கள். என்னவென்று பார்த்தால் அமுல் பால் பவுடர் ஒன்றிலும், இன்ஸ்டண்ட் காபி பவுடர் ஒன்றிலும் இருந்தது. ஃபிளாஸ்கில் இருந்ததோ சூடான வென்னீர். எல்லாவற்றையும் போட்டுக் கலக்கிக் குடிப்பதற்குள் காபி ஆசையே போய்விட்டது. கோவையில் அவர்கள் வீட்டில் போய் நல்ல காபி குடித்துக் கொள்ளலாம் என மனசை சமாதானப்படுத்திக் கொண்டோம். அன்று மதியம் 2.45க்கு கோவை ரயில் நிலையம் அடைந்தோம். என்னைக் கூட்டிச் செல்ல, எங்கள் வருங்கால சம்பந்தியே வந்திருந்தார். வீட்டிற்குப் போனோம். பேசிக்கொண்டிருந்தோம். அன்றையப் பொழுது போய்விட்டது. மறுநாள் ஈஷா போகலாம் என்று திட்டம் என்றார்கள். நாங்கள் இருவரும் வருவதாகச் சம்மதித்தோம். மறுநாள் பன்னிரண்டே முக்காலுக்கு ஒரு கால் டாக்ஸி எடுத்துக் கொண்டு ஈஷா நோக்கிப் பயணித்தோம்.

கார், கான்கிரீட் கட்டிடங்களைக் கடந்து, மெதுவாக இருபக்கமும் மரங்களடர்ந்த சாலைக்கு நழுவியது. அதை உணர்ந்தோம். ஜிவ்வென்று உள்ளம் வரைக் குளிர்ந்தது. இருபக்கமும் தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் உயர்ந்து நின்று கொண்டிருந்தன. தென்னை மரம் தன் சிகையை ஆட்டி ஆட்டி மகிழ்ச்சியாய் வரவேற்றன. நெடிதுயர்ந்த பாக்கு மரங்கள், ‘சரி சரி வாருங்கள்’ என்று உடல் அசைக்காமலே எங்கள் வருகைக்கு அங்கீகாரம் அளித்தன… அதைப்பார்த்துவிட்டு என்னுடன் வந்த தோழி ஒரு கதை கூறினாள்.

“அயோத்தியை விட்டு இராமரும் சீதையும், இலட்சுமணரும் 14 வருட வனவாசம் ஏற்க மரவுரிதரித்து காட்டிற்குப் போகின்றனர். போகின்ற வழியெல்லாம் மக்கள் ஆரா துயரத்தோடு  அவர்களை ‘இனி எப்போது காண்போம்!’ என்று கவலையாய் வழியனுப்பினார்கள். செல்லும் வழியில் வளர்ந்து நிற்கும் தாவரங்கள் யாவும் அழுதன. ஆனால் அப்போதும் இந்த பாக்கு மரத்தில் சிறு சலனமே இல்லையாம். அதனால் கடவுள் ‘அது எப்போதும் நெடுநெடுவெனவே வளர்ந்து நிற்கட்டும்’என்று கூறிவிட்டாராம். அதனால்தான் பாக்கு மரங்கள் நீண்டு வளர்ந்து உச்சியை எங்கோ வைத்துக் கொண்டிருக்கின்றன” என்று கூறினாள். அப்போது பாக்கு மரங்களைப் பார்க்கும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

நட்டநடு மத்தியானத்தில் தான் நாங்கள் ஈஷாவிற்குப் புறப்பட்டோம். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 30 கி.மீ. தூரம் என்றார்கள். சாலை வழங்கிய மர நிழல்கள், வெய்யிலே தெரியாத பயணமாய் இருந்தது. இரு பக்கமும் குளிர்ச்சியை அள்ளி அப்படியே காரில் தெளித்துக் கொண்டே வருவதுபோல் ஒரு உணர்வில் இருந்தோம். இயற்கையின் இன்நிழலின் அனுபவ சுகத்திலேயே ஈஷாவின் வாயிலை வந்தடைந்தோம்.

ஈஷா மையத்தில் நுழைந்த உடன் இடதுபக்கம் லிங்க பைரவி கோயில் இருக்கின்றது. இது ஈஷாவின் ஆன்மீக ஆன்மாவாகிய தியான லிங்கக் கோயிலுக்கு தென்மேற்கே அமைந்திருக்கின்றது. இந்த இருசமபக்க முக்கோண வடிவில் இருக்கும் கோயிலில், பெண் வடிவமாய் லிங்க வடிவில் ஒரு தனித்துவமாய் நிற்கிறார். தியான லிங்கத்தின் பெண் வடிவாய்த் திகழ்கின்றார். இதில் சத்குருவின் படைப்பாற்றல் மிளிர்கிறது. அந்த ஒளியில் நாமும் ஒளிர்கின்றோம். தியான லிங்கம் ஆன்மீக ஆற்றலை அளிக்கும் என்றால், லிங்க பைரவி, கருணையையும், நம் யதார்த்த வாழ்வில் உடல் ஆரோக்கியம் உட்பட்ட பொருள் வாழ்வை உயர்த்துமுகமாய், ஒரு முழுமையான பெண்மையின் வடிவமாய் வடித்திருக்கிறார்கள். அந்தக் கோயிலை விட்டு வெளிவரும்போது, கோயிலிலிருந்த ஒரு பெண் தன் உடல் தரையோடு தரையில் படும்படி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி, படுத்திருந்தாள். தரையோடு தரையாய் பூமியை முத்தமிட்ட பரவசத்திலும், லிங்க பைரவியிடம் தன்னை முழுவதுமாக ‘சரணாகதி’யாய் ஒப்புக்கொடுத்த அனுபவத்திலும் திளைத்துக் கொண்டிருப்பாள். ஆம், உலோகச்சிலையை அப்படியொரு உயிரோடு அமைத்திருப்பார்கள். இவளைப் பார்த்தாளே, உள்ளிருக்கும் அவளின் இயல்பு தெரிந்து விடும் நண்பர்களே!

இதனை அடுத்து தீர்த்தகுண்டத்திற்குச் சென்றோம். ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியாக நேரங்கள் தருகிறார்கள். ஒரு நபருக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். இதை தியான லிங்கத்திற்கு வடக்குப் பக்கம் அமைத்திருக்கிறார்கள். பூமியிலிருந்து 35 அடி ஆழத்தில் இந்த தீர்த்தக்குண்டம்  உள்ளது. இதன் நடுவில், பழமையான இந்திய ரசவாத முறையால் பாதரசத்தைத் திடப் பொருளாக்கி, பாதரசலிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் கூரை பிரம்மாண்டமாக நாம் பிரைகள் உள்ளதாக இருக்கின்றது. அதில் மகா கும்பமேளாவின் ஓவியங்கள் முதல் வகையில் வடித்திருப்பதும், நாம் வியக்கும் வண்ணம் இருக்கின்றது. பாதரச லிங்கத்திலிருந்து வெளிவரும் அதிர்வுகள், நம் உடலிலுள்ள உயிரை ஆன்மீகத்தைப் பெறுவதற்கும், உடலால், உள்ளத்தால் வளமாக விளங்குவதற்கும், உயிர் சமநிலைப்படுவதற்கும் உதவுகின்றன. இந்நீர்நிலையில் நாம் இறங்கி, லிங்கத்தைத் தொட்டு அதன் அதிர்வுகளை ஸ்பரிசிக்கலாம். அதற்குத் தனியாக காவி நிறத்தில் கவுன் ஒன்று பெண்களுக்குத் தருகிறார்கள். ஆண்களுக்கு காவி நிறத் துண்டு கொடுக்கிறார்கள்.  நாம் அங்கு ஒதுக்கப்பட்ட மறைவிடத்திற்குச் சென்று, காவிக்கவுனை அணிந்து கொண்டு தீர்த்தகுண்டம் இறங்கலாம். அதிகப் படிகள் உள்ளன. முடியாதவர்கள் அவ்வதிர்வு நிறைந்த தண்ணீரை மேலே தெளித்துக் கொள்ளலாம். என்னுடைய 82 ரி.நி. எடையை நான் தூக்கிக் கொண்டு…. பாவம் அந்த நீர் அதிர்ந்து விடும் என்று எண்ணி, மெதுமெதுவா என் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு இறங்கி, இறுதிப் படியிலிருந்து, நீர் எடுத்து என் தலையில் தெளித்துக் கொண்டேன். அப்பப்பா! அந்த தண்ணீர் ‘ஜில்’ என்று உள்ளம் வரை குளிர்ச்சியாய்  இருந்தது. தீர்த்தக் குண்டத்திலிருந்து, மெதுவாகப் பிடித்துக் கொண்டே வெளியில் வந்து, தியான லிங்கக் கோவில் இருக்குமிடம் சென்றோம்.

கோயிலுக்குப் போகும் வழி நந்தவனமாக இருக்கின்றது. அழகான புல்வெளி நிறைந்த பசுமை நிறைந்ததாய்க் காணப்படுகிறது. அங்கு கலையழகுமிக்க ஆறு தூண்களால் ஆன மண்டபத்தைப் பார்த்தோம். அங்கும் உட்கார்ந்து தியானம் செய்யலாம். மரத்தால் ஆன அழகான வளைந்த பாலங்கள் இரண்டு அங்குள்ள நீர்நிலையை இணைக்கின்றன.

தியான லிங்கம் எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை. அதன் அதிர்வுகளை உணர்வதற்கு கடவுள் நம்பிக்கை வேண்டும் என்கின்ற தேவையில்லை. இதை உணர்த்தும் வகையில் 17 அடி உயரமுள்ள ‘ஸர்வதர்ம ஸதம்பம்’ ஒன்று வாயிலிலேயே நிறுவப்பட்டிருக்கின்றது.

அந்தத் தூணின் மூன்று பக்கங்களில் பல சமயச் சின்னங்களும் மற்றொரு புறத்தில் மனித உடலிலுள்ள 7 சக்கரங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதன் உச்சியில் ஒய்யாரமாய்த் திகழும் சூரிய முகம், இத் தியானலிங்கத்தை நாடி வருபவர்களுக்குள் ஒரு புதிய உதயம் நிகழப் போவதைச் சொல்லாமல் சொல்லி ஒளிர்கின்றது. இதனையடுத்து தமஸ், ரஜஸ், ஸத்வ குணங்களைக் கடப்பதின் அடையாளமாக மூன்று படிக்கட்டுக்கள் மெல்லிய கல்மொட்டுக்களைக் கொண்ட இந்தப்படிக்கட்டுகள் மதங்களின் நரம்புகளைத் தூண்டி தியானத்திற்குத் தயார்படுத்துகின்றன.

நாங்கள் கோயில் உள்ளே சென்றோம். இடது பக்கத்தில் யோகக்கலையின் தந்தையான பதஞ்சலி முனிவரின் திரு உருவச்சிலை அமைக்கப்பட்டிருக்கின்றதைக் கண்டோம். 11 அடி உயரமுள்ள இச்சிலை 5 அடி நிலத்திற்குக் கீழேயும், 6 அடி நிலத்தின் மீதும் உள்ளது. பதஞ்சலியின் சிலை பாதி பாம்பு, பாதி மனித உருவம். குண்டலினி சக்திக்கான குறியீடு இது.

தியான லிங்கத்தின் அதிர்வுகளில் ஆண் தன்மை அதிகம் இருக்கும் என்பதால், அதனைச் சமப்படுத்தும் நோக்கில், பதஞ்சலி முனிவர் திருவுருவிற்கு நேரெதிரே பெண் தன்மையாக வனஸ்ரீயின் திருவுருவம், ஒரு தங்க இலையுள்ள மரத்தின் வடிவில் வடித்திருப்பதை, நாங்கள் கண்டு களித்தோம்.

காலங்காலமாக மரங்களை வழிபடும் மரபு உண்டென்பதால், அதனைப் புதுப்பித்து தாய்மைப்பண்புள்ள மரத்தை பெண்மையாக்கி பெருஞ்சக்தியாக்கி ‘வனஸ்ரீ’ என வடிவம் கொடுத்து விட்டார் சத்குரு. இவ்விரு சிலைகளும், தியான லிங்கத்திற்கு 15கு கோணத்தில் அமைத்து சக்தியுள்ள முக்கோணமாய் அமைத்திருக்கிறார்கள்.

இவற்றைக் கடந்து சென்றோமானால், இருபுறங்களிலும் அழகிய கற்சித்திரங்களைச் சமைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளைக் கூறுவனவாக அமைந்திருக்கின்றன.

அப்படியே நம்மை தியான லிங்கத்தை நோக்கி இவை அழைத்துச் செல்கின்றன.
அந்த தெய்வீகம் கமழும் லிங்கத்தின் முன்நிற்கின்றோம். முதலில் நன்கு அதன் வடிவத்தை நம்முள் உள்வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்கள். பின் கண்களை மூடி அதனில் அமிழச் சொல்கிறார்கள். சுற்றி நாம் சுவற்றின் அருகில் அமர்ந்து கொள்ளலாம்.

நான் முதலில் அதன் வடிவத்தை, அந்தப் பொலிவை, ஒளியை, அங்கு நிலவும் அதிர்வுகளை என்னுள் வாங்கிக்கொள்ள முயற்சித்தேன். என்முன் அது, யோக அறிவியலின் சுரமாக நின்றது. அதன் பிரமிப்பில் நான் இருந்தேன். அதன் ஏழு சக்கரங்களுடைய ஆற்றலின் முழுவீச்சில் தூண்டப்பட்ட நிலையில் இது இருக்கிறது என்றும், இதை உணரும் மனநிலையில் திறந்த மனத்துடன் நாம் வந்தோம் எனின், நம்மை உணரும் நிலைக்கு இது நம்மைக் கொண்டு செல்கிறது என்கிறார்கள். இது, ஒரு குரு நம் அருகில் இருந்து நம்மை நடத்திச் செல்லும் வழிகாட்டலுக்கு ஒப்பானது என்றும் கூறினார்கள்.

“சமய நெறிக்கு அப்பாற்பட்டு ஒரு பொதுத்தன்மை வாய்ந்தது தான் லிங்கம். எரியும் நெருப்பின் ஜ்வாலை லிங்க வடிவத்தைத்தான் நம் கண்ணில் காட்டுகிறது. எனவேதான் அறியாமை என்னும் இருளை அகற்றும் வடிவமாகவே லிங்கம் வடிக்கப்பட்டது எனலாம். லிங்கம் என்றால் சுயமாக ஒளிவீசும் எனப் பொருள்படும்.

என்னையறியாது மேலே பார்த்தேன். ஒரு அரை வட்டவடிவமான கோணத்தினுள் நாங்கள் இருந்தோம். இது முற்றிலும் செங்கலால் கட்டப்பட்டு இருக்கிறது. இரும்போ கான்கிரீட்டோ கிடையாது.

இத்தியான லிங்கம் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றார்கள். யோகா அறிவியலின்படி ஒரு இடத்துக்கோ அல்லது ஒரு பொருளுக்கோ முழு சக்தி அல்லது ஆயுளைக் கொடுத்து அந்த சக்தி நிலை பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்படி செய்ய இயலும். அந்த வகையிலே, இது சக்தியூட்டப்பட்டு, மனிதனை பலவித செயலுக்குத் தூண்டும் ஏழு சக்கரங்களும், தியான லிங்கத்தில் பூட்டப்பட்டுவிட்டால், தியான லிங்கத்துக்கு பூஜைகளோ, சடங்குகளோ தேவையில்லை. இது ஒருவரது சாதகத்தில் விளைந்த நிகழ்வல்ல. மூன்றுபேர் முக்கோண சக்தி நிலையை உருவாக்கி சாதகம் செய்து லிங்கத்துக்குச் சக்தியூட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடகாலம் இந்தப்பிரமிப்பூட்டும் பணி நடந்திருக்கின்றது.

முக்கோணச் சமநிலையில் ஈடுபட்டுவரும் உள்ளம் மற்றும் உணர்வில் ஒருவராக மாறி விட்டார்கள். இந்த யோக நிலையில் ஆழ்ந்த சாதகம் செய்யுங்கால், இவ்வேள்வியில் இருக்கும் ஞானிகள் இறுதியில் உயிரை இழக்கும் ஆபத்தும் உண்டு. கடந்த 2000 ஆண்டுகளில் பலமுறை முயன்று தியான லிங்கம் ஞானிகளால் கைகூடவில்லை தன் குருவின் கட்டளையால், சத்குருவிற்கு கைகூடிவந்த இந்த தியானலிங்கம்தான், 300 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று பிறவிகள் கடந்து இது சாத்தியமாகியிருக்கிறது என்று விளக்கியது என் நினைவில் வர இந்த லிங்கத்தின் அருமை, அற்புதம், அதிசய ஆற்றலின் அலைகளில் என்னை மறந்து இருந்தேன். அதன் அலைகளின், ஆனந்த அதிர்வுகளில் என்னை இழந்து, மிதந்து இருந்தேன். அப்போது மெல்லிய மணியொலி அதிர்ந்தது. என்னிலை தன்னிலைக்கு வந்தது. அமைதியாய் லிங்கத்தைப் பிரதட்சணம் பண்ணி, பூமிதொட்டு வணங்கி, வெளியேறினோம்.

ஆன்மீக மேம்பாட்டிற்கும், தியான லிங்கத்தின் அதிர்வலைகள் வாரத்தின் 7 நாட்களுமே உறுதுணையாக இருக்கும். அதேநேரத்தில் பொருள் வளத்திற்கும், உடல் நலத்திற்கும், வாழ்வியல் தேவைகளுக்கும், தேடல்களுக்கும் துணைபுரியும் வகையில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் லிங்கத்திலிருந்து விதம்விதமான அதிர்வுகள் வெளிப்படுகின்றன.
திங்கள்& பூமி& வளர்ச்சியின் குறியீடு. உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும். ஆன்மீகத்தின் தொடக்கம்.
செவ்வாய்& தண்ணீர்& படைப்பாற்றலைத் தூண்டுதல்& கற்பனை&மனவலிமை&மனித உறவுகளுக்கு உதவுதல்&மன அழுத்தத்திற்கு மருந்து.

புதன்& நெருப்பு&  உடல் வளமும், செல்வமும்  அளிக்கும் ஆற்றல்&சுயநலமின்மை, கர்மத்திலிருந்து விடுபடுதல், உடலை ஆழமாக அறியத் தூண்டும் கற்றல்.

வியாழன்& காற்று& தெய்வீக அன்பின் நிலையை அடையத் தூண்டும் கற்றல்.
வெள்ளி& ஆகாயம்& எதிர்மறை ஆற்றல்களாலான, மாயமந்திரம், கறுப்பு மாறாக, கெட்ட அதிர்வுகள் ஆகியவை அளிக்கும் அல்லல்களிலிருந்து காப்பாற்றுதல், ஞாபகசக்தி, தீவிர கவனம், உற்று நோக்கும் சக்தி, பொறுமை, தன்னம்பிக்கை, இயற்கையோடு இணையும் மனம் ஆகிய ஆற்றல் வளர்ச்சிக்கு உதவும்.

இனி தியான லிங்கக் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நாம் பார்க்கலாம்.

நாத ஆராதனை: பிரபஞ்சத்தை, அதன் அதிர்வின் ஒளியிலிருந்தே உணரலாம். ஆதலால், தினந்தோறும் காலை 11.50 முதல் 12.10 வரையிலும், மாலை 5.50 முதல் 6.10 வரையிலும் நாத ஆராதனை நடைபெறுகிறது. இசைக்கருவிகளின் இசையின் அலைகளையும், வார்த்தைகளற்ற குரலிசை மற்றும் மத்தள ஓசை இவைகளைப் புனைந்து, அவைப் புனைந்ததில் வெளிப்பாட்டின் புதிய பரிமாணத்தில் பிறக்கும் நாத சுவைக்கொண்டு ஆராதனை, மைய நண்பர்களால் லிங்கத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இவ்வமயம், லிங்க வளாகத்திற்குள் இருக்கும் போது, லிங்கத்தின் தன்மை, அதனின்று வெளிவரும் அதிர்வுகள் அனைத்தையும் இந்நாதத்தின் துணை கொண்டு உணர இயலும்.

ஓங்கார தீட்சை: தியான லிங்கத்திற்கு வருகை தருபவர்களுக்குத் தினமும், விருப்பமுள்ளவர்களுக்கு தினமும் மதியம் 12.30 முதல் 1.15 வரை ‘ஓங்கார தீட்சை’ வழங்கப்படுகிறது. இந்த ஆதியும் அந்தமும் இல்லா மந்திரம், தீட்சை பெறுபவரின் மன நிலையை சமநிலையாக்கி, அமைதியை அளிக்க வல்லது. ஆனால் இது இதற்குரிய முறையில் தியானம் செய்ய வேண்டும்.

அமாவாசை &பௌர்ணமி:& இவ்விரு நாட்களில் மனித உடலின் சக்திநிலை இயல்பாகவே, மேம்பட்ட தன்மையில் இருக்கும். ஆத்ம சாதகருக்கு இது மிகவும் அனுபவமான நாட்கள் ஆகும். இந்நாட்களில் வருபவர்கள், தங்கள் கரங்களால் தியான லிங்கத்திலிருந்து காலை 6.30 முதல் 1.00 வரைப் பாலும், மதியம் 1.00 முதல் இரவு 8.00 மணி வரை மலையருவி நீரும் அர்ப்பணிக்கும் பேற்றினைப் பெறுவார்கள்.

மஹாசிவராத்திரி:& இந்நாளின் இரவு முழுவதும் விழிப்பு நிலையில் இருப்பது நல்லதெனப் பாரம்பரியத்தில், அறிவியல் அடிப்படையில் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் தீவிரமான தியானம், துடிப்புமிக்க நிகழ்ச்சிகள், மஹா அன்னதானம் போன்றவை சத்குரு முன்னிலையில் நடைபெறுகின்றன. பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளைப் பிரபல கலைஞர்கள் நிகழ்த்துகின்றனர்.

கலையழகின் வழி ஆன்மீகத் தேடலை அடையலாம் என்பது போல், ஈஷா மையம் மிகவும் கலையழகோடு பொலிவு பெறுகிறது. சத்குருவின் கலை ஈடுபாட்டை நாம் நன்கு உணரலாம். மூன்று நிலையினுள் சிவன், ஒரு நல்ல கலைப்படைப்பு. அங்குள்ள அமரும் பெஞ்ச், மரத்துண்டால் ஆனது (ஷ்ஷீஷீபீமீஸீறீஷீரீs). அங்குள்ள நாற்காலியும் மேசையும் தனித்துவமான வடிவம் கொண்டது. சத்குருவின் நூல்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும். கைவேலைப்பாடுடைய பொருட்கள், இயற்கை மணத்தோடு இயற்கையாய் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவையாய் இருக்கின்றன. தேங்காய்ச் சிரட்டையில் தயாரிக்கப்பட்ட தேநீர்க் கப்புகளும், ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ளும் ஜாடிகளையும் அங்கு கண்டோம். அவை எங்களைப் பார்த்து சிரித்தன. ஏனெனில் என் மகள் அவள் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியில் நடந்த பொருட்காட்சியிலிருந்து ‘டீகப்செட்’ ஒன்று வாங்கி வந்திருந்தாள். நாங்கள் அதை மதிக்கக்கூட இல்லை. பாவம், அதற்குப் பதிலாக இப்போது ஒரு செட் வாங்கிக் கொண்டேன்.

மேலும், ஈஷா மையத்தைச் சுற்றி விளையும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கும் சத்துள்ள விற்பனை மையமும் அங்கு இருக்கின்றது.

ஆன்மீக அதிர்வுகள், யதார்த்த பாதிப்புகள், கலையழகின் எழில் அலைகள் ஆகியவை கலந்த ஒரு நிலையில் நான் அங்கிருந்தேன்.

சத்குருவின் தீட்சண்யமான அந்தக் கண்களும், அவருடைய ஆடையணியும் கலை நேர்த்தியும் ஒன்றையொன்றுக்குப் போற்றும் விதமாய் இருப்பது எனக்குப் பிடித்தமானவை. தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வரும் கலாச்சாரம், நம் வாழ்வின் மதிப்பீடுகளில் ஆன்மீகத்திற்குத் துணை புரிந்து கொண்டே இருக்கின்றன என்றும் இம்மையத்தின் அடிநாதமும், நம்முடைய உயிர்த்தன்மையும் இணைந்தே பயணிக்கின்றன என நான் என் அளவில் புரிந்து கொண்டு இருக்கின்றேன்.

ஞானிகளிடமிருந்து நீங்கள் கேட்டுக்கொண்டவை, மாயாஜால உலகின் ஓசைகளாய்த் தோன்றுகின்றன உங்களுக்கு. அறியாமையின் பிணைப்பில் வாழ்க்கையே மாயமாய்த் தோன்றும் மேலோட்டமாய் வாழும் உயிர்களே, வாழ்வின் ஆழங்களை எப்போதும் தேடுவீர்கள்?
&சத்குரு.
“ If use the power of your muscle or mind, your work has  certain life span. If you the power of your innermost care, your work is eternal”
-sadhguru.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஆன்மீகத்தின் அடிவாரத்தில்

  1. Arpudamana padaipu..Sathpthi coffe kindal, coimbatore thendral, eesha vin magimai agiya anaithume azhgaga vandulladu. nerile parthadu pol irukiradu. congrats Prabha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *