நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… பாகம்- 3

3

ரிஷி ரவீந்திரன்.

ரிஷி ரவீந்திரன்

ரங்கராஜ் நகைத்தான்.

பில்லிசூனியமாவது மண்ணாங்கட்டியாவது…. இந்த விஞ்ஞான உலகில் இதெல்லாம் வெறும் புரூடா. வேலையற்ற வீணர்களின் வீண் பயமுறுத்தல்.
பில்லிசூனியம் பலிக்கட்டும். வா… நீ என்னிடம் வா…? எப்படி என்னிடம் நெருங்குகின்றாய் எனப் பார்க்கின்றேன்.  அதனை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ச்சி செய்யவேண்டும். என்ன நடந்துவிடும்…? மிஞ்சி மிஞ்சிப் போனால் மரணம்தானே…? அதையும் ஒரு கை பார்த்துவிடலாம்.

மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும். The Art of Dyeing என ஓஷோ அழகாய் மரணத்தினைப் பற்றி விவரிப்பாரே…! மரணம் ஒரு சுகானுபவம். ஆனால் மனிதன் மரணத்தினைக் கண்டு பயப்படுவதேன்…?
ஒரு மனிதனின் மரணம் சக மனிதனைக் கடுமையாய் பாதிக்கும். அது தனக்கும் நிகழும் என்று தெரிந்திட்டபொழுதினும் எவரும் நம்பத் தயாராயிருப்பதில்லை.

ஒவ்வொரு முறையும் ரயிலேறும்பொழுதும் விமானம் ஏறும்பொழுதும் இனம்புரியா ஒரு பயம் ஏற்படுவதைப்போல… பிரிவைக்கண்டு பயம்; புதியனவற்றைக் கண்டு பயம்; புது இடங்களைக் கண்டு பயம்; புது இலட்சியங்களைக் கண்டு பயம்….

ஏன் பயம் ஏற்படுகின்றது…?

எதன் மீது அறியாமையும் ஐயமும் ஏற்படுகின்றதோ அதன் மீது பயம்.
கற்காலங்களில் மனிதன் சூரியனைக் கண்டு பயந்தான். சூரிய பகவான் என வழிபட்டான். பாம்பினைக் கண்டு பயந்தான். நாகதேவதையாக்கி வணங்கினான்.

நெருப்பினைக் கண்டு பயந்தான்; அக்னி தேவனாக்கினான்; காற்றினை வாயு பகவனாக்கினான்; மழையினை வருணபகவானாக்கினான்.
எதுவெல்லாம் தனக்குத் தீங்கினை ஏற்படுத்துகின்றதோ அதனை மரியாதை செய்து நட்பு பாராட்டினான்.

ஏன்…?

அப்படிச் செய்வதால் அவை தம்மை அழிப்பதில்லை என்ற ஒரு நம்பிக்கை. இது அறியாமையிலிருந்து வருகின்றது.

இதேபோல்தான் இந்த சாமியும் பூதமும் பில்லி சூனியமும்.
வருங்காலத்தில் ஐஐடியில் படித்து விஞ்ஞானியாகப் போகின்ற நானே இன்னமும் கடவுளையும் பில்லிசூனியத்தினையும் நம்பிக்கொண்டிருந்தால்….? என்னை மாதிரி ஒரு முட்டாள் இவ்வுலகிலேயே இருக்கமுடியாதில்லையா….?

குடுகுடுப்பைக்காரனுக்கு எல்லாமும் தெரியுமா என்ன…? அப்படியெனில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுது நானும் ஜனகராஜும் கம்பளி போர்த்திக்கொண்டு நடு ஜாமத்தில் குடுகுடுப்பைக்காரனின் முன் மொட்டைமாடியிலிருந்து குதித்தோமே…? பின்னங்கால்கள் பிடரியில்பட குடுகுடுப்பைக்காரன் ‘குய்யோ…முறையோ…’ வென ஓடியவன்தானே….? நாங்கள் குதிக்கப்போகின்றோம் என ஏன் ஜக்கம்மா அவனிடம் சொல்லவில்லை…? இதெல்லாம் ஏமாற்றுவேலை.

முதலில் நாளை காலையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகேயுள்ள திருவண்ணாமலைக் கோவிலுக்குச் சென்று மொட்டையடிக்க வேண்டும். ஏற்கெனவே மாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பவேண்டும். என்னுடைய பிசிக்ஸ் ப்ரைய்னை உபயோகிக்கவேண்டும்.

கோபால்சாமித் தாத்தா ரங்கராஜினை அருகேயிருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். மூலஸ்தானை அடையும் முன் ஆண்கள் தங்களது மேலாடைகளைக் களைந்து இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டனர்.
ஏன் அநேகமாக எல்லா விஷ்ணு கோவில்களிலும் மேலாடையைக் கழட்டச் சொல்கின்றனர்…? ரங்கராஜ் யோசித்துக்கொண்டே தரிசனத்திற்காக நின்றான்.

மூலவருக்கு பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. மூலஸ்தானம் மூடப்பட்டிருந்த்து. சமஸ்க்ருதத்தில் மந்திரங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. மந்திரங்கள் ஒருவித அதிர்வலைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தன.
ஏன் மூலஸ்தானத்தினை மூடி மந்திரங்கள் ஜபிக்கவேண்டும்…? அது ஏன் சமஸ்க்ருதத்தில்தான் சொல்லவேண்டுமா….? புரியாத பாஷையில் ஏன்….? ‘ஹேய்… கிருஷ்ணா… நீ நலமா…? நான் செளக்கியமா….? ‘ என ஏன் நமக்குத் தெரிந்த மொழியில் பேசக்கூடாது….?

ரங்கராஜ் தரிசிக்கும் வேளையில் யோசித்துக்கொண்டிருந்தான்.
அங்கே என்ன நடக்கின்றது….? இந்த மந்திரங்கள் பெளதிகத்தில் சொல்வது போல் ஒத்ததிர்வு அலைகளை (Resonant Frequency) ஏற்படுத்துகின்றனவோ….? அதனால்தானோ இராணுவத்தினில் ஒரு பாலத்தினைக் கடக்க்கும்பொழுது வீரர்கள் தொடர்ந்து ஓடினால் பாலம் இடிந்து விழுகின்றதோ…? வயலின் இசைத்தே தூரத்திலிருக்கும் கண்ணாடியை உடைப்பது இந்த Resonant Frequency தானோ….? அப்படியெனில் அது தீதன்றோ…? ஒருக்கால் இப்படி இருக்குமோ….?
Short Waves என்றழைக்கப்படும் மின்காந்த அலைகள் (Electromagnetic Waves) உற்பத்தியாக்கப்படுகின்றனவோ….? அதன் மீது பண்பேற்றம் ( Modulation) செய்யப்படுகின்றதோ…? எது பண்பேற்றம் செய்யப்படும்…? ரேடியோ அலைகளா…? இங்கே என்ன இருக்கின்றது…? என்ன பயன்…? ஏன் அபிஷேகம் செய்யவேண்டும்…? ஏன் தேங்காய்பழம் உடைக்கவேண்டும்…? மூலவரின் அறை ஏன் கும்மிருட்டாய் இருக்கின்றது….?

நுழைவுவாயிலில் ஏன் கொடிமரம் இருக்கின்றது….? ஏன் நரசிம்மரை எந்தப் பிரச்சினையானாலும் ஒரு 48 நாட்களுக்கு உபவாசமிருந்து அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்து சுத்தச் சொல்கின்றனரே… சுந்தரகாண்டம் தினமும் 15 ஸர்க்கமாய் 48 நாட்களுக்குப் படிக்கச் செய்து இறுதியில் ராமர் பட்டாபிஷேகம் செய்விக்கின்றனரே.. அது ஏன்…? இப்படியெல்லாம் செய்தால் எப்படி காரியம் நிறைவேறும்…? நாம் நினைப்பதை அடையலாம் என்கின்றனரே…இது அறிவியலில் எவ்வளவு தூரம் உண்மை….?
யோசித்து யோசித்து ஒன்றும் புரியாமல் குழம்பினான்.

தரிசனம் எல்லாம் முடிந்து பட்டரிடமிருந்து விடைபெற்று செல்லும்பொழுது எதிரே வந்த ஜீயர் கோபால்சாமி தாத்தாவுடன் பேச, ரங்கராஜனை விசாரித்தார்.

தனக்கு சில துன்பங்கள் இருப்பதாயும் தன் குறிக்கோளை அடையமுடியாமல் தவிப்பதாயும் வருந்தினான். அனுமாருக்கு சனிக்கிழமை விரதமிருக்கச் சொன்னார். சுந்தரகாண்டம் தினமும் படித்து முடித்தவுடன் ராமர் ஜாதகத்தினை ஒரு முறை மனதினில் நிறுத்தி பிரார்த்தனை செய்யச் சொன்னார். ஜீயர்,

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் !
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் !!’

என மந்த்ரராஜ பத ஸ்தோத்திரத்தின் பெருமைகளை ஸ்லோகமாய் சொல்லிக்கொண்டிருந்தார். இதில் 11 பதங்கள் இருப்பதாயும் அனுஷ்டுப் சந்தஸ்ஸிற் கேற்ப 32 அக்ஷரங்கள் இருப்பதாயும் ‘ஸ்ரீமந்த்ரராஜன்’ எனப் போற்றப்படும் ஸ்ரீந்ருஷிம்ஹாசுஷ்டுப் மந்திரத்திற்கு ஈடு இணையே இல்லை எனவும் ஸ்ர்வஜ்ஞனான ஸ்ரீருத்ரபகவான் இம்மந்திரத்தைக்கொண்டு ‘ஸ்ரீம்ந்த்ர்ராஜபத ஸ்தோத்ரம்’ என அருளியுள்ளான் எனவும் இது அனைவராலும் பரம ப்ரமாணமாக ஒப்புக்கொள்ளப்பட்டது  எனவும் இந்த ஸ்தோத்திரத்திற்கு பலனை எழுதி முடியாது எனவும் இதனால் என்ன கிடைக்கும் என்பதைவிட எதுதான் கிடைக்காது என உணர்வதே சாலச் சிறந்தது எனவும் இதை தினமும் பாராயணம் செய்து ஸகல நலன்களையும் அடையலாம் எனவும் அறிவுறுத்தினார்.

கோவிலினுள் அருகேயிருந்த திண்ணையில் அமர்ந்தனர். தரிசனம் முடிந்தவுடன் ஏன் அனைவரும் சிறிதுநேரம் கோவிலுனுள் அமரவேண்டும்….? தன் சந்தேகங்களை தாத்தாவிடம் கேட்டான்.
தாத்தா ஒரு மென் புன்முறுவலொன்றை உதிர்த்தார்.

‘கடவுளிடம் உன் ஆராய்ச்சியை வைக்காதே…அப்படியே நம்பு….’
‘அதுதான் ஏன்….? ஏன் கேள்விகள் கேட்கப்படக்கூடாது….? கேள்விகள் இல்லையெனில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் வந்திருக்குமா…? வள்ளுவரே மெய்பொருள் காண்பதறிவு என்றுதானே சொல்கின்றார்….’
‘சரி உன் சந்தேகங்களைக் கேள். என்னால் இயன்றளவு பதில் சொல்கின்றேன்…’

‘மூலஸ்தானம் ஏன் எப்பொழுதும் இருட்டாகவே இருக்கின்றது….?’
‘அது இறைவனின் உண்மையான நிலை. இறைவன் இருள் வடிவானவன் என்பதை சிம்பாலிக்காக்க் குறிப்பிடுகின்றனர். கோயிலே ஒரு டீச்சிங் எய்டுதான்…. உண்மையில் கடவுளர் யாரும் நாம் நினைக்கும் இந்த வடிவினில் இல்லை….’

‘பின் எதற்கு இத்தனை கடவுள்கள்….? இத்தனை கோயில்கள்….?’ஆச்சர்யத்தில் ரங்கராஜின் புருவங்கள் உயர்ந்தன.
‘எல்லாம் மனதினை நம்ப வைப்பதற்குத்தான்…. மனம் எதையுமே படமாகப் பார்க்கவல்லது. ஃபேன் என்றால் உன் மனதினில் என்ன தோன்றுகின்றது….?’

‘நம் வீட்டினிலிருக்கும் பழங்காலத்து ராலே ஃபேன்தான்.’
‘ஏன் உன் மனதினில் F     A    N   என்ற எழுத்துக்கள் தோன்றவில்லை…..?  மனம் எதையுமே படமாகப் பார்க்கவல்லது. அதனால்தான் கடவுளுக்கு உருவம் கொடுத்தோம்.’

‘சரி எதற்கு இத்தனை கடவுள்கள்….? ஒருவர் போதுமே….?’
‘அவரவர் தேவைகளுக்கேற்ப கடவுள்கள் உருவாக்கப்பட்டனர். கல்வியில் ஞானம் பெற ஒரு ஹயக்ரீவர் உருவாக்கப்பட்டார். பொருள்வளம் பெற்றிட ஒரு லட்சுமி… இப்படி அவரவர் தேவைகளுக்கேற்ப….’

‘அதெப்படி ஹயக்ரீவரை வழிபட்டால் நான் சிறந்த அறிவாளியாய் ஆகமுடியுமா….? இதெல்லாம் விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது. சுத்தப் பேத்தல்…’

‘இதெல்லாம் மனோதத்துவத்தில் இயல்பூக்க நியதிப்படி சரியே…. கீதையும், ‘நீயே அது’ என்கின்றது.

யத் பாவம் தத் பவதி : (நீ என்ன நினைக்கின்றாயோ…. அதுவாகவே பரிணமிக்கின்றாய்…)

.யாத்ரு ஸீ பாவ நாயஸ்ய….ஸித்திர் பவ தாத்ருஸீ: (நீ எதை அகக்கண்களால் காண்கின்றாயோ…. அதனை நோக்கி நகர்ந்து அடைவாய்….அவ்விதமாய் சம்பவங்கள் சம்பவிக்கும்….)
யா மதிஹி….ஸா கதிஹி : (உன் மனதினிலிருக்கும் எண்ணங்களே… உன் வாழ்க்கையை அமைக்கும்…)’

‘தாத்தா யூ மீன் புரபசர் ரைன் ட்யூக் பல்கலைக்கழகத்தில் ஒரு 25 வருடங்கள் மனதினைப் பற்றி ஆராய்ந்து Visualization Techniques ஐ முதன் முதலில் அறிமுகப்படுத்தி பின்னர் Jose Silva அதனை Silva Mind Control Techniques  என பிரபலத்தினாரே… அதுவா….?’

‘எல்லாம் இங்கிருந்து போனதுதான்….’

கொடிமரம் என்பது குண்டலினி யோகாவின் ஒரு தத்துவம் எனவும் கோவில்களே குண்டலினி யோகாவிற்கு ஒரு டீச்சிங் எய்டு எனவும் தாத்தா சொல்லிக்கொண்டிருந்தார். வேளுக்குடி கிருஷ்ணன் தூரத்தில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்.

ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஸ்த்ருகர்ஸந : |
இயேஷ பத மந்வேஷ்டும் சாரணாசரிதே பதி ||

என ஒரு ஸ்லோகம் சொல்லி வியாக்கியானம் செய்துகொண்டிருந்தார்.
‘அளவற்ற காந்தியையும் வீரியத்தையுமுடைய வாயுபுத்திரர் கோட்டை வாசல் தாழ்ப்பாளைப் போன்ற புஜங்களைப் பூமியில் பலமாக ஊன்றி, இடுப்பைச் சுருக்கி, கால்களை மடக்கி, புஜங்களையும் கழுத்தையும் வளைத்து, தேஜஸையும் ஸ்தவத்தையும் வீரியத்தையும் விருத்தி செய்தார். வெகு தூரம் வரையில் தான் போகும் வழியை நிமிர்ந்து உற்றுப் பார்த்து, ஆகாசத்தை நோக்கிப் பிராண வாயுக்களை ஹ்ருதயத்தில் நிறுத்தினார். கால்களை உறுதியாக ஊன்றி, காதுகளை மடக்கிக்கொண்டு, அந்த மஹாபலசாலியான வானர சிரேஷ்டன் ஆகாசத்தில் தாவும் மையத்தில் வானர வீரர்களைப் பார்த்து, இவ்விதம் சொன்னார்…..’ என அவரின் பிரசங்கம் நீண்டு கொண்டிருந்தது.
வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

தடாகத்திலிருந்த தாமரை மலர்கள் மலர்ந்து அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தாமரை இலையின் மேற்பரப்பில் நீரானது ஒட்டமுடியாமல் ஒரு குமிழியாக உருண்டு திரண்டு அங்குமிங்கும் ஓடி அதில் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிநிறப்பிரிகை அடைந்து வானவில்லாகியிருந்தது.

பறவைகள் கூட்டமாய் ஸ்கூலிலிருந்து வெளிவரும் குழந்தைகளைப் போல் க்ரீச்சிட்டுக் கத்தி மகிழ்ந்தவண்ணம் மேலே வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.  அவைகள் ஒரே லயமாக ஒரே சீராக சிறகுகளை அடித்துக்கொண்டும் பின்னர் அசைவில்லாமல் காற்றில் நீண்ட நேரம் நீந்திக்கொண்டும் பயணித்தன.

கோபால்சாமி , 100 வயதினைக் கடந்த பெரியவர். தாத்தா வீட்டினிலே திறந்த நில வெளியினில் ரேழியிலிருந்த ஊஞ்சலில் ஊசலாடிக்கொண்டே டபராவிலிருந்த ஃபில்டர் காஃபியை கண்களை மூடிக்கொண்டு துளித்துளியாய் அனுபவித்து நாக்கின் மொட்டுகளுக்கு பரிச்சயம் செய்து தொண்டைக்குழியின் செல்களில் அதன் தித்திப்பையும் கசப்பினையும் ஈர்த்து உணவுக்குழல் வழியே ஒவ்வொரு செல்லும் காஃபியின் சுவையை ஸ்பரிசித்து இரைப்பையை அடைவதை உணர்ந்தார். ஏறக்குறைய காஃபி குடிப்பதனையே ஒரு தவம் மாதிரி செய்துகொண்டிருந்தார்.

சுவற்றில் விநோபா புகைப்படமாய் சிரித்தார். காந்திஜி, வல்லபாய் பட்டேல், பாலகங்காதர திலகர்,வ.உ.சி, பாரதியார் என அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களும் அணிவகுத்திருந்தனர். கம்பீரமாய் வீட்டின் மேல் ஒரு தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது.

ரேழிக்கருகேயிருந்த திண்ணையில் அகன்ற வாய்கொண்டதும் தட்டையான மண்சட்டியில் நீர் நிரம்பியிருந்தது. நடுவே சின்னச் சின்ன மண்விளக்குகள் எரிந்துகொண்டும் அதனைச் சுற்றிலும் தாமரை மலர்கள் வைக்கப்பட்டு ஒரு செயற்கைத் தடாகம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் விட்டத்தின்மீது ஒரு புல்லாங்குழல் குறுக்காக வைக்கப்பட்டிருந்தது.

புல்லாங்குழலினை எடுத்து ஊஞ்சலிலமர்ந்து கொண்டார்.

இப்பொழுது அந்த புல்லாங்குழல் ஒரு கீர்த்தனையை காற்றில் இசை அலைகளாக பண்பலை செய்துகொண்டிருந்தது.

ஸ்ருதி பிசகாமல் அச்சு அசலாய்… மனமுருகி அந்த ஒலிஅலைகளுடன் தன் மன அலைகளையும் ஒன்றிணைத்து அதில் லயமானார். முயற்சியின்றி எளிதாகியிருந்தது. எந்த ஒரு வேலையும் முயற்சியின்றி எளிதாக அது எக்ஸ்சலெண்ட்டாய் பண்ணுவது எப்படி என்ற அந்த அதிர்வலைகளையும் லயத்தினையும் இவரிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும்.

‘விதாதா தலபுன ப்ரவ வன்ச்சினதி…
அநாதி ஜீவன வேதம்

ஓஓ…..ஓ..ம்ம்ம்ம்ம்…..
ப்ராண நாஹூலகு ஸ்பந்தன ஸ்சொஹினா
ஆதி ப்ரணவ நாதம்…. ஓஓஓஓம்ம்ம்ம்
கணுலோ கொலனுலோ……விஸ்வரூப என்யாசம்….
எதகனு மலலோ ப்ரதித்துவின்ச்சின
வீரின்ச்சி பன்ஞ்ச்சி கானம்ம்ம்ம்ம்ம்ம்ம்…..ஆஅ…ஆ….ஆ….அ..அ…அ…ஆ…

மூச்சுக்காற்று ஸ்வரமாய் பண்பலையேற்றம் ஆகிக்கொண்டிருந்தது. உற்சாகமாய் புல்லாங்குழலுடன் தலையும் ஆடிக்கொண்டிருந்தது. தாத்தா இசையில் லயமாயிருந்தார். இசையை ரசிக்கும்படி வாசித்ததால் சுவற்றிலிருந்த பல்லிகளும் தங்களது உடல்களை அசைத்து இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தன.

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
சரஸசர ஸ்வர ச்சரிகம மன மெள ஸாம வேத ஸாரமிதி…
மே பாடின ஜீவன கீதம்…..     ஈ….கீ(த்)தம்…
நீரின்ச்சினைஹ் நிரஹன்ச்சினஹி…    ஈ…கமலம்…
விபன்ச்சனைஹ்..வினிபிஞ்ச்சினிஹி..    ஈ….கீதம்…

இசையில் வீடே லயித்திருந்தது. இசையின் மூலம் இறவனை அடையலாம் என்பது எவ்வளவு நிஜம் என்பது கோபால்சாமித் தாத்தா இசைக்கும் இந்த இசையே சான்று. அனைவரும் மெய்மறந்து அந்த புல்லாங்குழல் இசையில் லயித்துப் போயினர். புல்லாங்குழலிலிருந்து இசைப் பிரவாகம் வானினை நோக்கிச் சென்றுகொண்டிருந்த்து. அதே சமயம்
வானிலிருந்து ஒரு பாம்பு பொத்தென ஊஞ்சலில் விழுந்தது.

‘தாயுறவுள்ள ஸ்த்ரீயொருத்தி
தனயன் மீது பில்லிசூனியம் ஏவியாச்சு….
விதை வளர்ந்து ஆலமரமாச்சு….
வஞ்சத்தால் வாழ்வு அழியும்…..
ஜக்கம்மா கைவிரிக்கிறா……..’

குடுகுடுப்பைக்காரனின் குரல் ரீங்கரித்தது.

தொடரும்…..

 

நன்றி:
முக்கூர் லஷ்மிந்ருஸிம்ஹ தாஸன்
சுந்தர காண்டம்.

”அகத்திய நாடி. ”  அகத்தியர்.
கங்கையிலிருந்து வால்கா வரை. மாஸ்கோ: யுனெஸ்கோ.
தோழர்.பி.ராமமூர்த்தி. (Late 1960s). ஆரிய மாயையா…? திராவிட மாயையா…? Chennai: CPM.
பேரா.சிவன்பிள்ளை, ம. ம. (1993, ஆகஸ்ட் 21). பயிலரங்க உரை. தவநிலைகளும் அதன் பயன்களும் . மனவளக்கலை மன்றம்.
வேளுக்குடி கிருஷ்ணன்.

சீதாராம சாஸ்திரி
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.
கோபால்சாமி.

Raveendran Krishnasamy,  (2004). The Art of Excellence.

Raveendran Krishnasamy, . (2007, “முத்தமிழ்”). தவமும் அனுபவங்களும்.

இரவீந்திரன் கிருஷ்ணசாமி, கோவிலும் பெளதிகமும்., இயற்பியல் மன்ற உரை (1983)

நிர்வாண நேனோ செகண்ட்ஸ் – 2 நிர்வாண நேனோ செகண்ட்ஸ் -4 (விரைவில்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… பாகம்- 3

  1. While reading the interesting story, I get opportunity to know the answers for my own outstanding queries. God Bless Mr. Rishiraveendran for his wonderful collective efforts.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  2. நல்ல பதிவு.
    எனக்கு நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கின்றன. உங்களிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *