தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 12

0

இன்னம்பூரான்

‘….சோற்றுக்கு அரைக்கால் கால் என்று

தொகைவகையோடு

ஏற்றிப் பணச்சோறு இடுவாரும் —-காற்றுக்கும்

வெய்யிலுக்கும் அஞ்சாமல் வேற்றூரில்

கொண்டுவிற்றுப்

பைமுதற்கு மேல்வரத்துப்பார்ப்பாரும் —–கை சலிக்க…’ [288, 289]

பண விடு தூது (1908)

ஔவ்வையார்‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற ஒளவைப்பாட்டி, கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கவும் சொல்லவில்லை. அதை கடைந்தெடுத்துத் தேங்காய் பால் அருந்தவும் சொல்லவில்லை. தற்காலம், பணம் படுத்தும் பாடு என்ன என்பதை, அதாகப்பட்டது ‘மேருமலையை அணுவாகவும், அணுவை மேரு மலையாகவும்,உறவிலே பகையையும், பகையிலே உறவையும் உண்டாக்கும் என்றும், காட்டை நாடாக்கும், நாட்டை காடாக்கும் என்றும், தேடுங்கால் வாராது; வலியவரும் என்றும், வந்தாலும் தங்காது என்றும், ஒருவன் பணத்தை புதைத்து இறந்து போக, ஆடு முதலியன பலி கொடுத்து அதை ஒருவன் தேடிப்பார்த்தால், கல்லாகவும், கரியாகவும் காட்சி தரும்’ என்றார், நூறு வருடங்களுக்கு முன்னால், ஒரு அநாமதேயப்புலவர், ‘பண விடு தூது’ என்ற சிற்றிலக்கியத்தில். ‘மேல்வரத்து’ என்ற சொல்லை, அவர் கையாண்ட திறனை மெச்சாமல் இருப்பது தகுமோ?

பீகார் மாநிலத்தில் கோசி என்று ஒரு நதியில் வருடாவருடம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் -பணவெள்ளம்! வாராத சகதியை  வாரியதாகக் கணக்குக்காட்டி. நிலக்கரிச்சுரங்கங்கள் நிறைந்த அசன்சால் பகுதியில், வீடுகளுக்கு அடியில் நிலக்கரி தணல் பற்றி எரிவதால், தாங்கொண்ணா சூடு. அதைத் தணிக்க மணல் நிறப்பவேண்டும். இது வரை ‘கொட்டிய மணல்’ தார் பாலைவனத்தின் பரப்பளவை விட அதிகம்!!! நம்ம ஊர் பக்கம் கண்மாய்களில் தூர் வாரும் (?) ‘துர்நாற்றம்’ நாம் யாவரும் கண்கூடாக அறிந்ததே. மேற்படி வகைகளும், மற்றும் பல முறைகேடுகளும், பண விடு தூது (1908) சொல்லும் ‘மேல்வரத்துப்பார்ப்பாரின்’ கைவண்ணம் என்று அறிக. சமூகவிரோதச்செயல்களில், இவை முதலிடம் பிடிக்கின்றன. அதற்கு காரணம், அவற்றின் இருமுனை தாக்குதல். செய்யாத பணிக்கு பெற்ற ‘மேல்வரவு’, வரிப்பணத்தை கொள்ளையடித்தது தான் என்பது ஒன்று, இரண்டாவது முனை: விட்டுப்போன பணியினால் -வாரப்படாத சகதி, தணிக்காத நெருப்பு வகையறா – மக்களின் தவிப்பு. எனது தணிக்கைத்துறை அனுபவங்களில், யான் கண்டவற்றை மட்டுமே பட்டியலிட்டால், ஒரு தடிமனான புத்தகம் ரெடி. 150 வருடங்களாக, அதுவும் கடந்த 50 வருடங்களுக்குள் அந்தத்துறையின் மத்திய/மாநில தணிக்கை அறிக்கைகளில்  கிளறி எடுக்கப்பட்டவற்றை மட்டுமே தொகுத்தால், ஒரு நூலகம். அவற்றை மக்கள் யாவரும் புரிந்து கொண்டால், அரசை உருப்படியாக செயலியற்றுமாறு வற்புறுத்த முடியும்.

சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு ஒரு சான்று. இந்த ஆடிட்காரன் கண்ணில் மட்டுமே இவையெல்லாம், எப்படித்தான் சிக்குகிறதோ என்று நான் வியப்பது உண்டு. ஆயிரம் விஷயங்களை அலசும்போது ஒரு ‘தம்மாத்தூண்டு’ சமாச்சாரமும், தவறாமல், கண்ணில் பட்டு உறுத்துகிறது. டைம்லைன்: 1981. ஆந்திராவில் வேலை. சித்தூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் ஒரு தாலுக்கா ஆஸ்பத்திரி. ரொட்டி வாங்குகிறார்கள், ஒரு ரொட்டிக்கத்தை எட்டு ரூபாய் என்று. அது தான் டெண்டர் கேட்டதில் கிடைத்த மலிவு விலையாம்! அக்காலம், அது ஒரு ரூபாய்க்கு ஹைதராபாத் மார்க்கெட்டில்! ‘மேல்வரத்துப்பார்ப்பாரின்’ கைவண்ணத்தில் ஒரு வகை, இது. கொஞ்சம் கொஞ்சமாக அடித்தால், மற்றவர் கண்ணில் படாது என்ற தகரியம். வாஸ்தவம். லக்ஷக்கணக்கில் முறைகேடுகளை ஆராயும்போது, இது எடுபடாது. ஆகவே, கலெக்டருக்கு ஒரு ஃபோன் போட்டேன். விஷயத்தை கிரகித்துக்கொண்ட அவர், சினமிகுந்து, ஒரு கெட்ட வார்த்தையை உகுத்தார். ‘அதை காரியத்தில் காட்டு’ என்றேன். சில நாட்கள் கழித்து, அவரிடமிருந்து வந்த ஃபோன் உரையாடல், ‘விசாரித்தேன். சப்பைக்கட்டு கட்டினான். நார் நாராக கிழிச்சுப்போட்டேன். அவன் கதறியவையின் சாராம்சம், பெரிய கழுதைகளை முன் நிறுத்துகிறது. கடுமையாக தண்டிப்பேன்.’ என்றார். ‘உனக்கும் மாற்றல் வரும்.’ என்றேன். அவ்வாறே நடந்தது. ஆவணங்கள் ஒன்றும் இல்லை. அவரும் நானும் நண்பர்கள் ஆனோம். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், எல்லா துறைகளிலும் நேர்மையான அதிகாரிகள் உண்டு என்பதை, எடுத்துக்காட்ட.  அண்மையில் ஹிந்து இதழில் ஒரு கட்டுரை படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு கலெக்டர் மஸ்டர் ரோல் ஊழலை களையப்போய், பத்மவியூகம் ஒன்றில் மாட்டிக்கொண்ட கதை.

அதையும் படிச்சுறுங்கோ.

அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தேன் என்ற வகையில் மற்றொரு காட்சி, ஒரிசாவில். குர்தா ரோடு என்ற சின்ன ஊர். மின்கட்டணம் பில் கலெக்டர்கள் மூலம் வசூலிக்கப்படும். நாள்தோறும் வசூலை பட்டியலிட்டு வங்கியில் கட்டிவிடுவார்கள். சில பட்டியல்கள், சுள்ளெறும்பு போன்று நுணுக்கமாகவும், கட்டை எறும்பு போல் தடித்தும், இடதும் வலமுமாகவும், வலமும் இடதுமாகவும் கோணல் மாணலாக இருக்கவே, ஒவ்வொன்றையும் பிரயாசையுடன் கூட்டிப்பார்க்க வேண்டியிருந்தது. அடடா! என்னே நேர்த்தி! ஒவ்வொரு இடுகையும், ரசீதுத்தொகையும் சரி தான். கூட்டல் கணக்கில் தான், 23 + 36 = 97 என்ற வகையில்! பகல் கொள்ளை! என்னடா இது? 59 என்றல்லவா இருக்கவேண்டும். எல்லா பட்டியல்களையும் சரி பார்ப்போம் என்று இரவு முழுதும் கண் விழித்து தணிக்கை செய்தால், ஒரு வருடத்தில் ஒரு சிறிய ஊரில் ‘மேல்வரத்து’ பல்லாயிரம், பல்லாயிரம் ரூபாய்கள்!  விளக்கம் யாது? என்று கேட்டவுடன் ஓடோடி வந்த மாவட்ட பொறியாளர், ‘என்னங்க இது? கை எழுத்து மோசம் என்பதற்காக, இப்படியெல்லாம் குற்றம் சாற்றலாமோ? இது தகுமோ? அந்த பில் கலெக்டர் எம்.எல்.ஏ.யின் சகலை. மானஸ்தன். இன்றே தவறியத்தொகையை கட்டி விடுவார். நீங்களும் விட்டு விடுவது உங்களுக்கும் தான் நல்லது.’ என்றார். புவனேஸ்வரம் திரும்பினால், அக்கவுண்டெண்ட் ஜெனெரல், ‘யாது செய்தாய் நீ? மின்வாரியத்தலைவர் ஃபோனுக்கு மேல் ஃபோன் போடுகிறார். அமைச்சரும் அழுத்தம் கொடுக்கிறார்.’ என்றார். விஷயம் தெரிந்தவுடன், தீவிரம் காட்டச்சொன்னார். செய்தோம். கையாடல் செய்ததை பறிமுதல் செய்து, வழக்கும் பதிவு செய்யச்சொன்னோம். இது எல்லாம் வரப்போகும் ‘தொகைவகையோடு

ஏற்றிப் பணச்சோறு இடுவாரும்’ எனப்படும் செய்திக்கு முன்னால் வரும் மெல்லிய மணியோசை என்க.

டிங்க் டாங்க் பெல்!

(தொடரும்)

பண விடு தூது’ என்ற சிற்றிலக்கியத்தில்.

http://pollachinasan.com/ebook2/2950/index.htm

அதையும் படிச்சுறுங்கோ.

http://www.thehindu.com/arts/magazine/article2090149.ece?homepage=true

படம் 1: இங்கே: ஒளவைப்பாட்டி

இந்த படத்திற்கான வலைத்தளம்

tamilvu.org

படம் 2: இங்கே: ரொட்டி வாங்குகிறார்கள்

இந்த படத்திற்கான வலைத்தளம்

etc.usf.edu
படம் 3:இங்கே: இரவு முழுதும் கண் விழித்து தணிக்கை செய்தால்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.