கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் – கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

பலவகைக் குருடர் இந்தப்Yesunathar Pesinaal Enna Pesuvaar

பரந்ததோர் உலகில் உண்டு

சிலவகைக் குருடர் நோய்க்குச்

செகத்தினில் மருந்தே இல்லை

நிலைபெறும் கண்கள் இல்லா

நிச்சயக் குருடர் தம்மை உலகினைக்

காண வைத்தார் உன்னத இயேசு நாதர்!

வழிவழி செல்லும்போது

தேவனின் மைந்தன் தன்முன்

விழியிலா இருவர் தோன்றி

விளித்தனர் கண்கள் கேட்டார்

அழிவிலா விசுவா சத்தால்

அன்புடன் கேட்டதாலே விழிகளைப் பெறுவீர் !

என்றார் விழித்தனர் குருடர் ஆங்கே!

எத்தனை கோடி செய்திகளோ இங்கு

இயேசுவைப் பற்றிவரும்

அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்

ஆசையில் கற்றவரும்

இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்

இதிலொரு சக்தி வரும்

தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்

தயவுடன் பொறுத்தருளும்!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரை மருந்து

தேவை நித்தியமே

விண்ணர சமையும் உலகம் முழுதும்

இதுதான் தத்துவமே

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

கவியரசு கண்ணதாசன் – இயேசு காவியத்தில்

இம்மண்ணிலே புண்ணியன் தோன்றி எண்ணரும் இன்னல்கள் ஏற்று … மனிதர் பாவங்கள் கழுவிட தனது இரத்தத்தை ஈந்ததாலே இயேசுவை உலகமக்கள் ஏற்றிட்ட கதையைப் பாரீர்!

வாசிக்க பலபேர் பாதிரிமார்கள் சூழ கவிதை யோசிக்கவேயின்றி சரம்சரமாகத் தந்தார் கவியரசர் மொழிபெயர்த்த ஏசுவின் வரலாறு ஒரு காவியம்! இத்தகு மேன்மைதன்னை எடுத்துரைத்த கவிஞரே! உங்களுக்கு காவிரிமைந்தனின் நன்றிகள்!!

அன்புடன், காவிரிமைந்தன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் பம்மல், சென்னை 600 075

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம்

சகோ. மார்கரெட் பாஸ்டின்

கவியரசு படைத்த காவியம் பற்றி சகோதரியின் வெள்ளை அறிக்கை

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் பற்றி சகோதரி மார்கரெட் பாஸ்டின் எழுதியுள்ள இக்கட்டுரை கவியரசு அவர்கள் இயேசுநாதர் மீது கொண்ட பக்தியையும் ஈடுபாட்டையும் பறைசாற்றுகிறது. இதே கவியரசு அவர்கள்தான் இன்றுவரை பல பதிப்புகளைக்கண்டுவரும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற சிறப்பான நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் ஒரே கவிஞரால் போற்றிப் பாராட்டும் வகையில் எழுத முடிகிறது என்றால், அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பாரேயானால், நபிகள் நாயகத்தைப் பற்றியும் நற்றமிழ்க் காவியத்தை எழுதியிருப்பார்.

மதமாச்சரியங்கள் மகாகவிகளுக்குள் இருக்காது. அதனால்தான் அவர்கள் மகாகவிகள்! சொல்லடி சிவசக்தி என்ற பாரதி, அல்லா அல்லா என்றும், இயேசுவின் தந்தை என்றும் கவிதை எழுதினார். இதுதான் மகாகவியின் மாண்பு.

மகாகவி அல்லாதவர்கள் பல மைல்களுக்கு முன்பே பட்டுப் போய், கெட்டுப் போய், விட்டுப் போய் பிறரைத் தூசிப்பார்கள். தங்கள் சமய அருளாளர்களைப் பற்றியே யோசிப்பார்கள்.

கவியரசு கண்ணதாசன் பாரதிக்குப் பின்வந்த மகாகவி. பாரதியோ, வள்ளலாருக்குப் பின்வந்த மகாகவிவள்ளலாரோ, தாயுமானவருக்குப் பின்வந்த மகாகவி. இப்படியே பின்னோக்கிச் சென்றால் கம்பனை, இளங்கோவை, வள்ளுவனை நாம் செல்லும் வழியில் சந்தித்துச்சந்தித்துக்கை குலுக்கிக் கொண்டே செல்லலாம்.

கவியரசு படைத்த காவியம் பற்றி சகோதரியின் வெள்ளை அறிக்கை இது. படியுங்கள். – (பொ.ஆர்.)

மூன்று லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பின்னும் இந்நூல் கிடைக்குமா? என்று கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆவலைத் தூண்டக்கூடிய ஓர் ஒப்பற்ற காப்பியம் வேறு எதுவுமல்ல, கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும்இறவாக் காவியமான இயேசு காவியம்தான்.

இறைவன் உலகை எவ்வளவு அன்பு செய்தார் என்று எண்பிக்கத் தம் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பினார். உலகை மீட்க இறைமகன் இயேசு வருவார் என்பது காலாகாலமாக முன்னுரைக்கப்பட்டது. காலம் நிறைவுற்றபோது அவர் கன்னி மரியிடம் கருவானார். மனித உருவாகி நம்மிடையே வாழ்ந்து நமக்கு வாழ்வளித்ததோடல்லாமல், உலக மக்கள் அனைவரும் இறைமக்களாகும் வழியையும் காட்டிச் சென்றார்.

வரலாற்று நாயகனான இறைமகன் இயேசுவினது வாழ்வு, வாக்கு, இறப்பு மற்றும் உயிர்ப்பைச் சித்தரிக்கும்மறைநூலான விவிலியத்தை கவிதைகளும் இசைப் பாடல்களும் பொதிந்த ஈடிணையற்றக் காவியமாக்கி அளித்தவர் நம் அனைவரின் உள்ளங்களையும் ஒருசேரக் கொள்ளை கொண்ட தனிப் பெருங்கவி கண்ணதாசன் அவர்கள்.

இதனை எழுதி முடித்தபின் திருச்சியில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய அரசவைக் கவிஞர் கண்ணதாசன் இயேசு காவியம் என்பது பேச்சு வாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி. ஆனால் வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப் பீடித்தது, என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம் கைவைத்து விட்டோம் என்று பீதியடைந்தேன். இயேசு பெருமான்தான் எனக்கு அருள் பாலித்தார்! இதுவரை நான் உழைக்காத வகையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து இப்பணியைமுடித்தேனென்றால், நிச்சயம் அது இயேசுவின் கருணையே! என்று வியக்கின்றார்.

இப்பணி நிறைவேறுவதற்கு மிக முக்கியக் காரணமாய் இருந்தவர் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் நிறுவனரும் 25 ஆண்டுகள் அதன் இயக்குனராய் இருந்து திறம்படத் தமது பணியை ஆற்றியவருமான மறைந்த மொன்சிஞோர் எஸ்.எம். ஜார்ஜ் அடிகளாரும்அவரோடு இப்பணியில் உதவிக்கரம் நீட்டிய அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் அடிகளாரும் ஆவர். கலைக்காவிரியையும் கவிஞரையும்இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் அந்நாளைய இந்நிறுவனப் பணியாளர் திருவாளர் சந்திரமோகன் ஆவார்.

உன் வாய்ச்சொல்லைக் கொண்டே உன்னை எடை போடுவேன் என்பது வேதாகம வாக்கு. அதன்படி, செவ்விய தமிழில் சிந்து பயின்றவன்

ஒவ்வொரு சொல்லையும் உருக்கிப் படைத்தவன் கவ்வி இழுத்திடும் கவிதையில் வல்லவன் எவ்விதம் அன்னவன் ஏற்றம் இயம்புவேன்

என்று பிறிதொரு கவிஞரைப் பற்றிக் கண்ணதாசன் அவர்கள் பாடிய கவிதை கவியரசருக்கே முற்றிலும் பொருந்துமென்று இக்காவியம் உருவாகிய கதையில் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் கவிஞரை ஏத்திப் போற்றுகின்றார்.

149 அதிகாரங்களைக் கொண்ட இந்நூல் 432 பக்கங்களால் ஆனது. தனக்குவமையிலாக் கவிஞர் கண்ணதாசனை எதிர்பாராமல் இழந்துவிட்டநிலையில் 1982 ஜனவரி 16ஆம் நாள் 5000 பேர் கூடியிருக்க அந்நாளைய மதுரை பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் இயேசுகாவியம் வெளியிடப்பட்டது.

உலகில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் சார்பாக இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் அந்நாளைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்கள். அவர் தமது வாழ்த்துரையில் இந்த இயேசு காவியத்தை நான் என் கரங்களில்பெற்றுக்கொண்ட நேரம் மங்களகரமானது. இதன்வழி தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கப்போகின்றது என்று கூறியதோடு நில்லாமல், இந்த நேரத்தில் இங்குநான் ஒன்றை ஆணித்தரமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் இயன்றவரை என் தனிப்பட்ட வாழ்விலும்சரி அரசியல் வாழ்விலும் சரி, இனி யாரையும் எனது வார்த்தைகளால் புண்படுத்தமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

இதே ஆண்டு ஏப்ரல் மாதம் பர்மாவிலும் இந்நூல் அச்சிடப்பட்டு வெளியானது. 1982-இல் முதல் பதிப்பாக 28000 பிரதிகளும், 1985&இல் 2&ஆம் பதிப்பாக 50000 பிரதிகளும், 1989-இல் 3-ஆம் பதிப்பாக 200000 பிரதிகளும், 1992-இல் 4-ஆம் பதிப்பாக 20000 பிரதிகளும், 1997-இல் 5-ஆம் பதிப்பாக 5000 பிரதிகளும், 2002-இல் 6-ஆம் பதிப்பாக 5000 பிரதிகளுமாகப் பதிப்பிக்கப்பட்டன.

இவற்றுள் மூன்றாம் பதிப்பானது பிரத்யேகமாக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 அதிகாரங்களை உள்ளடக்கியதாகும்.

எழுதப் படிக்கத் தெரிந்தவர் யாராயினும் இக் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுவே இதன் தனிச்சிறப்பு எனலாம். உள்ளர்த்தம் மாறாமல் இனிய தமிழில் எளிமையாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

பிறவியிலேயே கண் தெரியாத குருடர் இருவர் தமக்குப் பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவை நாடி வருகின்றனர். எடுத்துக்காட்டாய் ஒரு சோற்றுப் பதம் இதோ :

பலவகைக் குருடர் இந்தப் பரந்ததோர் உலகில் உண்டு சிலவகைக் குருடர் நோய்க்குச் செகத்தினில் மருந்தே இல்லை நிலைபெறும் கண்கள் இல்லா நிச்சயக் குருடர் தம்மை உலகினைக் காண வைத்தார் உன்னத இயேசு நாதர்!

வழிவழி செல்லும்போது தேவனின் மைந்தன் தன்முன் விழியிலா இருவர் தோன்றி விளித்தனர் கண்கள் கேட்டார் அழிவிலா விசுவா சத்தால் அன்புடன் கேட்டதாலே விழிகளைப் பெறுவீர் ! என்றார் விழித்தனர் குருடர் ஆங்கே!

இயேசு காவியத்தில் கம்பனின் வார்த்தைத் திறனும் வீரமாமுனிவரது ஆழ்ந்த கருத்துக்களும் பாரதியின் எளிய நடையும் பாரதிதாசனின் சொல் நயமும் இணைந்து காணப்படுவதால் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் கர்நாடகாவில் உள்ள மைசூர்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூரின் கல்வித் துறையும் இதனைப் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள் பலவும் பட்டப்படிப்பின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளன.

சிலர் தங்களது முனைவர் பட்ட ஆய்விற்கே இந்நூலைத் தெரிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள கைதிகளும் கடிதம் எழுதி இந்நூலைப் பெற்றுப் படித்துவருவது இதன் பெருமைக்கு மற்றுமொரு சான்றாகும். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்நூல் வெளிவரவேண்டுமென்று பலர் தங்களது ஆவலை வெளியிட்டிருப்பது கவிஞரின் கவிநயத்துக்குக் கட்டியம் கூறும் சான்றாக உள்ளது.

பலவித சந்தங்களில் சில பகுதிகளை இசை அமைப்புக்கு ஏற்றவாறும் இக்காவியத்தை அமைத்திருக்கிறேன் என்று கவியரசரே கூறியுள்ளார். இதனடிப்படையில் எம் கல்லூரியின் கலைக்குழு இயேசு காவியத்தின் சில பகுதிகளைத் தெரிவு செய்து நாட்டிய நாடகமாகவழங்கியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலினை 10 தொகுதிகளாக எழுதித் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற இம் மகாகவி தமது வாழ்நாட்களின்இறுதியில் இயேசுவுக்கென்று ஒரு காவியம் உருவாக்கியதோடல்லாமல், இறுதி அதிகாரமாக அமைத்துள்ள மங்களப்பாடலில் அவர் தமது உள்ளக் கருத்தை உறுதியான தொனியில், இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

எத்தனை கோடி செய்திகளோ இங்கு இயேசுவைப் பற்றிவரும்

அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம் ஆசையில் கற்றவரும்

இத்தனை வந்தது மாலை தொடுத்தோம் இதிலொரு சக்தி வரும்

தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால் தயவுடன் பொறுத்தருளும்!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரை மருந்து தேவை நித்தியமே

விண்ணர சமையும் உலகம் முழுதும் இதுதான் தத்துவமே

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

பல சமயங்களில் பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் இயேசு காவியம்தான் என்று நான் உறுதியாகக் கூற முடியும் எனத் தன்னுரையில் கண்ணதாசன் அவர்களே கூறியிருப்பதும் இங்குநினைவுகூரத்தக்கது.

திருச்சி மறை மாவட்டத்தின் 125-ஆவது ஆண்டையொட்டி இந்நூலின் ஏழாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றோம்.

— என்றும் அன்புடன்,

காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்)

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

சென்னை 600 075

தற்போது – துபாய் – அமீரகம் 00971 50 2519693

kaviri2012@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் – கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

  1. சிலிர்க்க வைக்கும் வரலாற்று நிகழ்வுகள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *