மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..
கவிஞர் காவிரி மைந்தன்
மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..
அன்றலர்ந்த தாமரைபோல் அழகியநல்முகம்! செக்கர்வானம் தந்துவைத்த பொன்னிறம்! கொடுத்துச்சிவந்த கரங்களால் அவரும் பாரி! பறங்கிமலை அருகினில் தோட்டம்! தோட்டம்! ராமனின் கால்பட்டதால் அகலிகை பெற்ற விமோசனம்போல் எங்கள் ராமச்சந்திரன் வாழ்ந்த காரணத்தால் அது ராமாவரமாய் ஆனதோ? திரையில் தோன்றிய நாயகன் மக்கள் மனதில் வாழ்கிற காவியம்! இதற்கு முன்னோ இதற்குப் பின்னோ இப்படி ஒருவரில்லை! ஈடில்லை. உவமையில்லை!
கும்பகோணத்தில் தன் தாய் ஒரு கவளம் சோறுதர முடியாமல் தவித்த தவிப்பை தன் மனதில் பதி்த்து தமிழகத்தில் எந்த தாய்க்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ஆர்ப்பரித்து சத்துணவுத் திட்டம் விரிவாக்கிய தலைமகன்! வாழ்ந்த நாளெல்லாம் மக்கள்..மக்கள் என்று மக்களை எண்ணியே தான் வாழ்ந்த ஓர் மகன்! அவனுக்குப் பிள்ளையில்லை என்று சொல்வார்கள். அட. அவனே பிள்ளைதானே தமிழருக்கெல்லாம்! எங்கவீட்டுப் பி்ள்ளை என்பது யாரை இங்கே? தமிழுக்குத் தலைவணங்கி தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் இட்டமகன்! தமிழ்க்கவிஞர்களை எல்லாம் கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து பாராட்டி பரிசளித்து அவர்கள் இதயங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்தமகன்! சமுதாயம், நாடு, மொழி, இனம் என்பதற்கு என்றைக்கும் முன்னிலைதந்து முழுமூச்சாய் உழைத்தவன்! ஏழைகள்மீது பரிவுகாட்டுதல், சாதிப்பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தை விரும்பியவன்!
ஆதியிலே பெரியாரும். அடுத்துவந்த அண்ணாவும் திராவிட உணர்வூட்டித்தந்ததனால் தன்னுழைப்பை தவறாமல் தந்தானே! அண்ணாவின் பெயர்தாங்கி கழகம் கண்டு தேர்தல்களம் கண்ட நாள் முதலாய் வெற்றியையே அறிந்தானே! முதல் அமைச்சர் என ஆன 1977முதல் அவன் வாழ்ந்த நாள்வரைக்கும் அவனே ராஜா! வாய்பேச முடியாமல் போனபோதும். மக்கள் வாக்குகளோ அவனைத்தான் சேரும்! சேரும்!! அன்றொரு நாள் அவனுக்கு உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை. ஜப்பான் நிபுணர் முதல் உலக மருத்துவர்கள் கவனம்குறையாமல் காத்திருந்த எங்கள் ரோஜா! வாடிநிற்கும் காட்சி்யைத்தான் ஏடுதனில் பார்த்தோம். ஐயகோ. எங்கள் தங்கத்திற்கா இப்படி ஒரு நிலை? அழகுக்கு இலக்கணம் வகுத்துவைத்த அன்புத்தலைவனுக்கு வரலாமோ என்றெல்லாம் மனமுருக பிரார்த்தனைகள் உலகமெங்கும்!
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் . சிறுசிறு கோயில்முதல் அறுபடைவீடுவரை. எங்குபார்த்தாலும் மதங்களைக் கடந்து மக்களின் பிரார்த்தனை. அனலில்விழுந்து துடித்தனர் ஏழையரெல்லாம்! என்னுயிரை எடுத்துக்கொள். மன்னன் உயிர் காத்திடு என்று ஆயிரமாயிரம் உள்ளங்கள் தொழுதன! அழுதன! ஆண்டவன் காலடியில் விழுந்தன! தமிழகத்தின் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும் அதற்கு முன் இரண்டு பாடல்கள் காட்டப்படுவது எழுதப்படாத விதியானது! நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களது பாடலும் இறைவா உன் மாளி்கையில் எத்தனையோ மணிவிளக்கு . தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு என்கிற கவிஞர் வாலியின் பாடலும். (இரண்டுமே மெல்லிசை மன்னரின் இசை) ஒளிபரப்பானது. இந்தச் சரித்திரத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?
அப்படி ஒரு அதிகாலை அமெரிக்காவிலிருந்து உடல்நலத்தோடு மக்கள்திலகம் வந்து நம் மண்ணில் இறங்குகிறார். என்கிற செய்தி. ஒருசில நாட்களுக்கு முன்னர் எட்ட அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வின் சார்பிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்றத்தினர் சார்பிலும் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் தலைநகரில் அலைமோதியது! அன்று பறங்கிமலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்.
இரவென்றும் பாராமல். பனியென்றும் பாராமல். மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில் திரண்டது ஓரிடத்தில்! எம்.ஜி.ஆர் வருகிறார். எங்கள் தலைவர் வருகிறார். இன்னல்நீங்கி புதுப்பொலிவுடன் தமிழகத்தை ஆள. எங்கள் ராஜா வருகிறார். என்று உணர்வால். உள்ளத்துடிப்பால். கூடிநின்ற கூட்டமது! இரவெல்லாம் மக்களுக்காக மக்கள் திலகம் நடித்த ஐந்து திரைப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன! பொழுது மெல்ல விடிந்தது! பார்வைபடும் இடங்களெல்லாம் மக்கள் தலைகள்! அழகாக அமைக்கப்பட்ட மேடை. அதிலே எளிதாக எம்.ஜி.ஆர் கார் ஏறுவதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள். காத்திருந்த மக்கள் எல்லோர் மனதிலும் வேறெந்த நினைவுகளும் இல்லை. இல்லை! காலை மணி 6.50க்கு சென்னை வானொலியில் செய்திகள். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே தமிழகத்தின் முதல் அமைச்சராய் மூன்றாம் முறை வெற்றிபெற்ற சத்தியத்தாயின் தவப்புதல்வன்! தாயைத் தெய்வமாகப் போற்றியவன்! தமிழகத்தை உயிராக நேசித்தவன்!
அவன் வந்த வானூர்தி தரையிறங்கிவிட்டது. பனிமூட்டம் இருப்பதனால் முதல் அமைச்சர் வருகையிலே தாமதம் என்று செய்திகள் ஒருபக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க. மக்களின் உற்சாகக் கரகோஷம் விண்ணைப்பிளக்க. உயிரையே பெற்றதுபோல் மக்கள் மகிழ. உலக வரலாற்றில் இப்படி ஒரு காட்சி நடந்ததுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! புராணப் புருஷர்களைப் பற்றி கதைகள் புனையப்பட்டு கேள்வியுற்றிருக்கிறோம். அன்று கண்முன்னே கண்ட காட்சி. புரட்சித்தலைவர் என்னும் சாதனைச் சரித்திரத்திற்கு மட்டுமான பிரத்யேக காலப்பதிவு!! இத்தனை உயிரோட்டத்தை நேரிலே கண்டு தரிசித்து திரும்பியது என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
எம்.ஜி.ஆரின் ரசிகன் என்கிற தகுதியோடு. அன்றைக்கு முதல் நாள் அவருக்காக எழுதிய கவிதையொன்று இதயக்கனியே வருக. வருக வென்று! அதனையும் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு வார்த்தை மாற்றாமல் தலைப்பை மட்டும் தர்மங்கள் வென்றது தலைப்பிட்டு வெளியிட்டார்! நான் விவரம்அறிந்த நாள் முதலாகப் பார்த்த பெரும் தண்ணீர் பிரதேசம் காவிரி! கொள்ளிடம்! திருச்சிக்கருகே உள்ள எங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் போதெல்லாம் என் கண்ணில் பட்ட காவிரி நினைவுக்கு வந்தது! மண்ணின் மைந்தன் என்பது போல் நதியின் மைந்தன் ஆனேன். காடு விரி்ந்ததனால் உருவான நதி காவிரி என்று கம்பன் சொல்லுவான். காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயர் புரட்சித்தலைவருக்காக புனைந்த கவிதைக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற இரண்டு வரிகள் என்னால் மறக்க முடியாதவை.
புவியில் கவிதை புறப்பட்டுவிட்டது. உன்
புன்னகை ஒன்றே வெற்றியைத் தொட்டது!