பாரிசில் இலக்கிய விழா – இலக்கியத் தேடல் விழா

1

பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை.  இதற்கு விலக்காக நடை பெற்ற விழா, இலக்கிய விழா-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14  ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது. இதில் மகா கவி தாகூரின்  150 -ஆவது ஆண்டு விழாவும் இடம் பெற்றது.

சரியாக 03 மணிக்கு, திரு. இராமு செயபால் இரட்டையர் குத்துவிளக்குக்கு ஓளியூட்டினர்.  ஆசிரியர் பி சின்னப்பா, திருமதி பவானி இராமு இறைவேட்டலையும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும் இனிமையாகப் பாடினர். செல்விகள் கோதண்டம் சாரா, கோதண்டம் ஒலியா நடேசகவுதம் இசைக்கு நாட்டியம் சிறப்பாக ஆடி,  தம் குரு திருமதி மஞ்சுளா சிறீதரன் பெயரை நிலை நாட்டினர். முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன் வரவேற்புரை வழங்கினார். முன்னிலை வகித்த திருவாளர்கள் சுகுமாரன் முருகையன், தமிழியக்கன் தேவகுமாரன், பேராசிரியர் பா. தசரதன் தம் முன்னுரைகளில் தாகூரைப் பற்றிப் பல செய்திகளை உரைத்தனர்.  புதுவைத் தமிழுலகம், பேராசிரியர் செவாலியே சச்சிதானந்தம் அவர்களை நன்கு அறியும். விழாவுக்கு வந்திருந்த அவரை அவைக்கு அறிமுகம் செய்து பேசினார் அவர் நண்பர் திரு நாரா ராசவேலு.  அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் செவாலியே சச்சிதானந்தம் தாகூரை, பிரஞ்சுக் கவிஞரும் நாவல் ஆசிரியருமான விதோர் யுகோவுக்கு ஒப்பிட்டு உரையாற்றினார்.   தலைமை தாங்கிய திருமிகு அலன் ஆனந்தன் மகா கவி தாகூரின் மாண்புகளை விளக்கினார்.  பட்டிணப் பாலை என்ற சங்க இலக்கியத்தைப் பிரஞ்சில் மொழி பெயர்த்த திரு கோபால கிருட்டிணன் தம் நூலை அறிமுகப் படுத்திப் பேசினார்.  பொன்னாடைக்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசாக அளிக்கும் பழக்கம் இப்போது முதன்மை பெற்று வருகிறது. அதனை ஒட்டி, இவர்கள் அனைவருக்கும் முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத்தேடல் சார்பாக திரு முனுசாமி சந்திரன் நூல்களை வழங்கினார்.

அடுத்து, கருத்துரை அரங்கம்.  தலைமை: பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. முதல் உரை அளித்தவர் திருமதி அமல்ராஜ் எலிசபெத். தலைப்பு: (தாகூர்)’தேசிய கீதம் தந்த விடுதலை வீரர்’.  இந்திய நாட்டின் தேசிய கீதமாக விளங்குவது தாகூர் இயற்றிய பாடல் என்பதைக் கூறி அப்பாடலின் பொருளையும் தமிழில் விளக்கினார். (தாகூர்) ‘சாந்திநிகேதனம் கண்ட கல்வியாளர்‘ என்ற தலைப்பில் எடுப்பான குரலில் மிடுக்காக உரை ஆற்றினார் ஆசிரியர் ப. சின்னப்பா.  கவிதாயினி லினோதினி சண்முகநாதன், சிலப்பதிகாரத்தில் காணும் கலை நயங்களைத் தொகுத்து வழங்கினார்.  தம் தலைமை உரையில், (தாகூர்) ‘கீதாஞ்சலி படைத்த மகா கவி” என்ற தலைப்பில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ மகா கவி பற்றியும் அவர் படைத்த கீதாஞ்சலி பற்றியும் பிறர் அறியா, அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கவியரங்கம். (தாகூர்) ‘ஆன்மிகம் இசைத்த குயில்‘ என்ற தலைப்பில் கவிதை படித்த திருமதி. பவானி கீர்த்தியால், இராமு முதல் முறையாகக் கவியரங்கம் ஏறியவர். சிக்கலின்றி, விக்கலின்றிக் கவிதை படித்தார்.  தாகூர் பற்றித் தாமே இயற்றிய பாடல் ஒன்றை இறுதியில் பாடிக்காட்டி, பாராட்டைப் பெற்றார். திரு புலவர் பொன்னரசு, குறள், வெண்பா ஆகிய மரபுக் கவிதைகளில் கவிதை வழங்கி இறுதியில் பாட்டு ஒன்றுடன் தம் கவிதை அரங்கை நிறைவு செய்தார். இவர் தலைப்பு; (தாகூர்) ‘மானுடம் பாடிய வானம்பாடி‘.

இதனைத் தொடர்ந்து இலக்கியத்தேடலின் 9 ஆம் கூட்டம் நடை பெற்றது.  உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி ஆவது தமிழ் மொழியே என்பதைச் சொல்லாய்வு வழிநின்று விளக்கினார் ஆசிரியர் பி. சின்னப்பா.  அவர் கூற்றுக்கு வலிமை சேர்க்கும் வண்ணம், இலக்கியத் தேடலின் அமைப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ சில பல எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.  இறுதியில் திரு ரவி பாலா நன்றி உரை நவில விழா இனிதே நிறைவு பெற்றது.  இரவு 9 மணிக்கு முடிவு பெற வேண்டிய விழா முன்னதாகவே 8 மணி அளவிலேயே முடிந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இடையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்கள் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, புலவர் பொன்னரசு.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரிசில் இலக்கிய விழா – இலக்கியத் தேடல் விழா

  1. படிக்க, படிக்க, தெவிட்டாத இன்பம். எங்கும் வாழ்க, எங்கள் தமிழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.