பாதுகா வெண்பாக்கள் – நவக்கிரக தோச பரிகாரம்
கிரேசி மோகன்
அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
காதுகளில் காத்திருப்பே னென்று….(1)….
அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
கால்கட்டும் பாதுகாய் காப்பு….(2)….
அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்
சகஸ்ரம் எழுதிய சிங்கம் -நிகமாந்த
தேசிகர் பாதுகையை யாசகமாய்ப் பெற்றுத்தா
வாசகனென் தோஷம் விடுத்து….(3)….
சாவடி ஆவிற்கு பாவடி ஆழ்வார்க்கு
காவடி ஐவர்க்கு , மாபலிக்கு -மூவடி
நீவடி வாவது நெஞ்சமர் ராதைக்கு
சேவடி உன்கால் அணிக்கு….(4)….
வேத புராண இதிகாச சாத்திரம்
ஓதும் உபநிடதம் ஓங்காரம் -ஆதிகள்
நூலணி நான்முகன் தோளணி சம்புதொழும்
காலணி பாதுகையே காப்பு….(5)….
வானத்து கங்கை வருடிடும், அன்று
தானத்தை தோழர்க்குத் தந்திடும் -தூணித்துச்
சாய்ந்திட தூர்த்திடும் ஸ்ரீரங்கன் கால்களை
காய்ந்திடாது காப்போனே காப்பு….(6)….
நின்றாலும் நீண்டு வளர்ந்தாலும் எங்கு
சென்றாலும் சேவடி சேவகரே -அன்றாலில்
கண்ணுறங்கும் போது கழற்றி இருப்பானே
எங்கிருந்தீர் சொல்லும் எமக்கு….(7)….
சேதாரம் இல்லாது செங்கட் திருமாலின்
பாதார விந்தத்தைப் பாதுகாக்கும் -ஆதாரமே
தூதுபோய்க் கண்ணன் ஏதுதான் கூறினான்
பாதுகாய் பகர்வாய் புகன்று….(8)….
நூபுரம் தண்டை நொறுங்கப் பிரபஞ்ச
கோபுரம் தாண்டிக் கிளர்ந்தவன் -மாபரம்பொருள்
மாதவ னோடு மகோன்னதத்தில் பங்குற்ற
பாதுகா சாகசனைப் போற்று….(9)….
மூவா முகுந்தரின் பாதாதி கேசத்தை
நோவாமல் தாங்கி நடத்துவோய் -சேவா
கணத்தில் உமக்கு அனந்தனின் காலை
தினம்தினம் சேவிக்கும் வாய்ப்பு….(10)….
வாளி,சங்கு, சக்கரம், வாள்தண்டு கேடயம்
தோளணி வில்லும் துயரறுக்கும் -கோளரி
மாதவன்கை ஆயுதங்கள் ஆனாலும் பாதுகாக்கும்
மாதவன்கை ஆயுதங்கள் பாதுகாப்ப தென்னவோ
பாதுகையே காலணிந்த கை….(11)….
தூணுதைத்தான் பின்னர் வானளந்தான் பேதை
மானுடனாய் காட்டில் அலைந்தான் -தானுகந்த
நாளாலில் சேயாக வாளாய் இருந்தவன்
காலளவு பாதுகாய் கூறு….(12)….
காதலில் ராதையைக் காண ரகசியம்
சீதையை மீட்க அவசரம் -கோதையைப்
பெண்ணெடுக்கப் போகையில் பின்னைடைந்தீர் பக்தியில்
பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(13)….
பதம்வரையும் வானுமுற்ற பாகவதக் காரன்
பதவுறையாய் சென்ற கதையை -பதவுரையாய்
கூறவல்ல காலணியே வேறுதுணை ஏனெமக்கு
நீரிருக்க நிர்பயமா னேன்….(14)….
தோளணி பூந்துழாய் மேலணி பீலியென
மாலணி ஆபரணம் ஆயிரம் -காலணி
பாதுகைக்கு ஈடாய் படிதாண்டி ஓடிவர
ஏதுகை நெஞ்சே நமக்கு….(15)….
கண்ணிரெண்டால், விண்ணளந்தோன் காணாது போனாலும்
கண்ணிரெண்டு கொண்டோய் குமிழ்களாய் -மண்ணிருந்து
போற்றும் அடியார்கள் புகழ்செலவம் கல்விபெற
சாற்றுன் எஜமான் செவிக்கு….(16)….
வாயுள்ள பிள்ளை வரிசங்கும், ஓயாமல்
கையாலா காதுசுழல் சக்கரமும் -பாயாம்
அரவணையும், வாயில் கரமணைக்கும் சப்த
மரவடியைக் காதால் மடுத்து….(17)….
சகியின் வெளுத்து வளைந்த கழுத்தின்
மகிமையால் சங்கை மறந்தான் -திகிரியை
வாய்க்களித்தான் வேழனுக்கு, வாய்ப்பளித்தான் காலணியே
ஆய்க்குலத்தோன் என்றும் அணிந்து….(18)….
விதுரன் அகத்தில் வினயமும், யுத்த
சதுரங்கத்தில் கீதையும், ராதை -மதுரம்
சுதாமன் சினேகிதம், சந்தித்த தெல்லாம்
பதாம்புயத்துப் பாதுகாய் பேசு….(19)….
காலன் எதிர்வரும் காலம் அணுகிட
மாலன் மலர்த்தாள் முகர்ந்திடும் -காலன்
சகஸ்ரம் உரைத்திட சித்திர குப்தன்
புகஸ்ரமம் கொள்வான் பயந்து….(20)….
கர்ணனின் தாராளம் குபேரன் ஏராளம்
நர்மதை நீர்வேகம் நின்னருளே -வர்ணணை
செய்து வரவழைக்க சொற்களை தேசிகர்போல்
பெய்திட வாக்கைப் பெருக்கு….(21)….
நிற்கையில் மெத்தை நடக்கையில் வாகனம்
வெற்பெடுக்கும் போது வரைதாங்கி -தெற்குநோக்கித்
தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
தாங்கிய யோகத் தெளிவு….(22)….
சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
நாமா வளியயை நவிலவைத்த -ராமா
னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
புஜனே நிஜத்தில் புகுத்து….(23)….
பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
ஏந்திச்செல் என்னை எடுத்து….(24)….
தென்னிலங்கை செல்கையில், தூதுசென்(று) ஐவர்க்காய்
மண்ணளந்து கேட்கையில், மாவலிதன் வரமேற்று
விண்ணளந்த வேளையில், விரகத்தில் ராதைக்காய்
கண்ணலைந்த காலத்தில், காலிருந்த பாதுகாய்
மண்ணளைந்து உண்டவனை என்னகத்திற்(கு) இழுத்துவா….(25)….
பக்திச் சுவை நிறைந்த பாதுகை வெண்பாக்கள் நன்று; நல்ல ஓட்டம் இருக்கிறது. ஆயினும், ‘அன்று தானத்தை’, ’மாபரம்பொருள்’, ’எங்கு சென்றாலும்’,’ அலைந்தான் -தானுகந்த’, ’வேளையில், விரகத்தில்’ ஆகிய இடங்களில் தளை தட்டுகிறது. 25ஆம் பாடல், வெண்பா விதிப்படி முடியவில்லை. உங்களால் இன்னும் சிறப்பாக எழுத முடியும் என நம்புகிறேன்.