நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…4

4

ரிஷி ரவீந்திரன்

பாட்டி  வேங்கடம்மாள் பெரும் கவலையிலாழ்ந்தார்.

இது எதோ தோஷம் எனவும் என்னவோ கெட்ட காரியம் ஒன்று  நடப்பதற்கு  ஒரு சகுனம் என்றும் கூறிக்கொண்டிருந்தார். ஜீயரிடம் இதைப்பற்றி ஆலோசிக்க வேண்டும் என்றார்.

‘ம்…. இதெல்லாம் மூட நம்பிக்கைகள்….’ தாத்தா.

‘இப்டி  வியாக்யானம் பேசாம அடுத்து  என்ன செய்யணும்..னு யோசிங்க….’

ரங்கராஜின்  தாத்தாவும் பாட்டியும் நேரெதிர் துருவங்கள்.

பாட்டி  ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை. தாத்தா எதையும் அலசி ஆராயும் சுபாவம். வட தென் துருவங்கள்.

‘நல்ல சகுனம்….கெட்ட சகுனம்….. அப்படி எதுவும் இல்லை… இதெல்லாம் மனிதனாய் கற்பித்துக்கொண்டது….’ தாத்தா.

’பூனை குறுக்கே போவதும்…. சிலர் எதிரே வருவதும்… இன்னும் இப்படி எத்தனையோ கெட்ட சகுனங்கள் என நாம் குறிப்பிடுகின்றோமே….?’ ரங்கராஜ்.

‘பூனை, பன்றி, நாய்… இவைகளுக்கெல்லாம் உயிர்ச்சுழல் ஆண்ட்டி க்ளாக்வேய்ஸ் டைரக்‌ஷன்ல இருக்கும்…. மனிதனுக்க்கு க்ளாக் வேய்ஸ் டைரக்‌ஷன்…. இதனால் நம் உயிராற்றலில் மின்காந்தக் கலத்தில் ஒரு Short Circuit ஏற்படுகின்றது….. இதனால் மனத்தின் சமநிலையில் சிறு மாற்றம்.

அமைதியற்ற மனதினிலிருந்து வெளிப்படும்  செயல்களின் விளைவுகள் நாம் விரும்பும் பலனைத் தரா. அதனை சமன் செய்யவே நாம் சிறிது நேரம் அமர்ந்து… உயிராற்றலின் சுழலை சீரமைக்கின்றோம்….

இதனையே  ஒரு குண்டலினியோகம் தெரிந்தவர் மூலாதாரத்தினில் உயிராற்றிலினை  கண நொடியில் நிறுத்தி…. மின்காந்தக்  கலத்தில் ஏற்படும் Magnetic Flux ஐ  நிலைப்படுத்தலாம்…’

‘பாம்பு….?

’பாம்புகளின்  தகவமைப்புகளின்படி அவை  உஷ்ணப் ப்ரதேசங்களை நாடிச் செல்கின்றன. அவைகளுக்கு எங்கே  உணவு கிடைக்கின்றதோ அதை  நோக்கி நகரும்…. மேலும் ஒரு  பாதுகாப்பான இருப்பிடத்தினைத் தேடிக்கொள்ளும்… இவைகளெல்லாம் டார்வினின் Survival of Fittest தியரிப்படி சரியே….’

”சரி  தாத்தா… மனிதர்கள் எதிர்  வருவது எப்படி கெட்ட சகுனமாகும்….?”

“ஒரு  புத்தரோ… ஒரு வள்ளுவரோ… ஒரு ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எதிரே வந்தால் அதனை கெட்ட சகுனமாக யாரும் நினைப்பதில்லையே….? அது அவரவர்களின் காந்தக் கலனைப் பொறுத்த விஷயம்…. ”

“………………………………….”

நீண்ட மெளனம்….

ரங்கராஜ்  குடுகுடுப்பைக்காரன் சொன்ன  விஷயத்தினை இப்பொழுது பாட்டியிடம்  சொல்லிக்கொண்டிருந்தான்.

பாட்டி  மிகவும் படபடப்பானார். தாத்தாவை உடனே ஜீயரிடம் விரட்டினார்.

சகுனங்கள்…  வேதங்கள்… கடவுள்கள்….. இதெல்லாம்  மனிதனால் கற்பிக்கப்பட்டவை… சாமியும் இல்லை…. பூதமும் இல்லை… எல்லாம் விஞ்ஞானமே…!

இதெல்லாம் மனம் சார்ந்த நம்பிக்கைகள். உண்மையில் ஒருவன் மனோ வலிமையுடன் இருக்கும்பொழுது எதுவும்  ஒன்றும் செய்ய முடியாது.

அப்படியானால்  நல்லவர்கள் வந்தால் நல்ல சகுனம். கெட்டவர்கள் வந்தால்  கெட்ட சகுனமா…? நல்லவர்  கெட்டவர் என்றால் என்ன….? எண்ணங்களோ….? ஆக எண்ணங்கள் எது வலுவாகின்றதோ… அது ஜெயிக்கும்….

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தன்  எண்ணங்கள் என்ற புத்தகத்தில் சொன்னது ஞாபகம் வந்தது…  “வாழச் சொன்னது வாழ்ந்தது…. “ என இரு பாக்டீரியாக்களை  ஆய்வகத்தில் விஞ்ஞானிகள்  நடத்திய சோதனைகளில் குறிப்பிட்டிருப்பார்.

வலிமையான  எண்ணங்களால் எதையும் சாதிக்கலாம்.

நீ  இக்கணத்தில் எங்கே இருக்கின்றாய்  என்பது முக்கியமில்லை. நீ இக்கணத்தில்  யாராய் இருக்கின்றாய் என்பது முக்கியமில்லை…. நீ இக்கணத்தில்  என்னவாய் இருக்கின்றாய்  என்பது முக்கியமில்லை…. எந்த ஒரு குறிக்கோளையும் வலிமையான எண்ணங்களால் நாம் அடையலாமோ…?

இப்படியாக இப்பொழுது ரங்கராஜின் Magnetic Fieldல் பல Fluxகள்  ஏற்பட்டுக்கொண்டிருந்தன.

எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன….?

மனதிலிருந்து….

மனம்  என்றால் என்ன….?

அது எங்கிருக்கின்றது….?

மருத்துவ  அறிவியல் என்ன சொல்கின்றது….?

எண்ணங்கள் உற்பத்தியாகுமிடம் மனம் என்கின்றனர்….

சிலர் இதயத்தினைக் காட்டுவர். அறிவியல் மூளையைக் காட்டுகின்றது….

அப்படியானால்  மூளை இறந்துவிட்டால் மனம் இறந்துவிடுமா….? ஆனால் இறந்தபின்னும் சிலர் இதே கிராமத்தில் ஆவியாக இன்னொரு உடலில் இறங்கி தான் கொலைசெய்யப்பட்ட விதம் பற்றி விளக்குகின்றனரே…? அது எப்படி….? ஒரே கிராமத்தில் பார்த்த மனிதன் என்பதனாலா…? மல்டிபிள் பெர்சனாலிட்டி…? இல்லை .. இல்லை…

இன்னும் சில நேரத்தில் புரியாத  ஒரியா பாஷையில் பேசி தான் இன்னவிதமாகக் கொலைசெய்யப்பட்டேன் என அந்த ஆவி இறங்கிய உடலிலிருந்து பேசுகின்றதே….? ஒரியா சென்று தகவலை சோதித்தால் மிகத் துல்லியமாக இருக்கின்றதே…?

இறந்த பின்னும் மனம் இறக்கவில்லையோ…?  இதுதான் ஆன்மா என்பதா…?

ஆன்மா என்றால் என்ன….? உயிர் என்றால்  என்ன….? அது எங்கிருந்து  வருகின்றது…? மரணம் என்றால் என்ன….? இதயம் நின்றுவிடுவதா…? மூச்சு நின்றுவிடுவதா…? மூளை இறந்துவிடுவதா…? அப்படியெனில் இவைகளெல்லாம் செயலிழந்தாலும்கூட அனன்ஸெஃபாலிக்காய் இருக்க முடிகின்றதே….?

நாம்  பிறப்பதற்கு முன் நம் நிலை என்ன…? இறந்த பின் நம் நிலை என்ன….? இடையில் இத்தனை அறியாமையா…? ஆனாலும் இந்த அறியாமையில்  எத்தனை அதிகாரங்கள்…? எத்தனை அக்கிரமங்கள்….? எத்தனை தத்துவங்கள்….? எத்தனை ஆர்ப்பாட்டங்கள்….? நான் பெரியவன்…? எல்லாம் எனக்குக் கீழே….  இது என் சொத்து…. இது என் வீடு….

ஒன்றுமே புரியாமல் குழம்பி குழம்பி  ரங்கராஜ் அயர்ச்சியானான்.

தன்னறையில்  படுத்துக்கொண்டு இப்பொழுது யோசிக்கலானான்.

எண்ணங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதனைத் தன் அனுபவத்திலிருந்து  அசைபோடலானான். இந்தியாவின்  ஒரு பிரபலமான பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்திலிருந்தே  பெளதிகத்தில் பெயர் சொல்லிக்கொள்ளும்படியான பல விஞ்ஞானிகள் வெளிவந்திருந்தனர்… அதில் ரங்கராஜ் பெளதிகம் பயின்றபொழுது நிகழ்ந்த ஒரு நிகழ்வு,

ஒரு முறை தான் ஒரு முக்கியமான இறுதி பல்கலைக் கழகத் தேர்விற்குச் செல்லும் பொழுது பூனை குறுக்கேச் சென்றது…. அது மட்டுமின்றி அங்கிருந்த ஒரு பாம்புடன் அது சண்டையிட்டுக் கொண்டிருந்தது…

மிகவும் கெட்ட சகுனம் என எண்ணி  சக மாணவ நண்பர்கள் தங்களது அறைக்குத் திரும்பிச் சென்று நீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தனர். அப்பொழுது ரங்கராஜ் தன் மனதினில் பலமுறை ஆழமாய் சொல்லிக்கொண்டான்….

“இன்று  எனக்கு நல்ல நாள்… நான் எக்ஸாமில்  சிக்ஸரும், ஃபோருமாய் விளாசி விளையாடுவேன்….”

இத்தனைக்கும்  அந்த தேர்வினை எழுத இயலா நிலை. நல்ல காய்ச்சல், தலைவலி, இரத்தப் போக்கு எனப் பல சிக்கல்கள்…. எழுந்து நடமாட முடியா நிலை…..

ஆனால் எண்ணங்களின் வலிமையினால்  எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது.

யோகா, தவம், ப்ரணாயாமம் என அதிகமாய் பரீட்சைக்காகப் பண்ணியதால் இப்படி உடல்நிலை பாதித்தது. அனைவரும் பரீட்சைக்காக இரவு பகலாய் மூன்று மாதங்களாய் மும்முரமாய் படித்துக்கொண்டிருந்தால் இவன் மட்டும் இரவு பகலாய் பரீட்சைக்காக Mind Concentration & Memoryக்காக யோகா,தவம், ப்ரணாயாமம்  என பண்ணிக்கொண்டிருந்தான்.

பொதுவாக அந்த வருடம் முழுதும் விளையாடிவிட்டு பரீட்சைக்கு ஒரு நாள் இரவு மட்டுமே படிப்பது ரங்கராஜின் வாடிக்கை. ஆனால் இம்முறை அதுவும் முடியாமல் போனது. இந்த ஒரு பேப்பர் மட்டுமே மிகவும் கடினமான பரீட்சை. இதை மட்டும் பாஸ் பண்ணினால் போதும். M.S Degree வந்துவிடும்.

சிலபஸ்  ஒன்று இருக்கும். பேராசான்கள் ஒன்று பாடம் நடத்துவர். Prescribed புத்தகங்களையும் வேறு சில புத்தகங்களையும்,  அந்தத் துறையிலிருந்து வெளிவரும் Latest Journals என எல்லாம் Integrate பண்ணி படித்துவிட்டு எக்ஸாமுக்கு சென்றால் இதிலிருந்து ஒரு வினா கூட கேட்கப்படுவதில்லை. இரண்டு வெவ்வேறு மிகப்பெரிய இண்ஸ்டிட்யூட்/யுனிவர்சிடிகளில் தனித்தனியே Valuations.  யாரையும் எளிதில் பாஸ் ஆக்கிவிடமாட்டார்கள். கல்வித் தர நிர்ணயம்.

ஊஹூம்…. ஆண்டவனே இனி நினைத்தாலும் தேர்வு எழுதி பாஸ் பண்ண இயலா நிலை.

ஒரு 20 புத்தகங்களாவது படிக்கவேண்டும். படம் பார்த்துக்கொண்டே புரட்டினாலும்  கூட முடியாது.

பரீட்சைக்கு முன்பு வரை சிலபஸ் என்ன என்று  கூட அறியாமல் ஒரு அசட்டை.

பக்கத்து  அறை நண்பன் கிருஷ்ணா, “நீ  பேட்டை மட்டும் பிடி…. பந்து  சிக்ஸரும் ஃபோரும் பறக்கும்…..”  என்றான்.

அட  அவனே என் மீது இவ்வளவு  நம்பிக்கை வைத்துள்ளானே….?

ரங்கராஜினை  ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். மருத்துவர் உடலினுள் இஞ்செக்சன் மூலம் மருந்து செலுத்தி நன்கு தூங்கி ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். எக்ஸாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

தன் அறைக்குத் திரும்பினான். மணி பார்த்தான். காலை 11:30. மதியம் 2 மணிக்கு எக்ஸாம்.

நோ…. நிலைமை எப்படி வேண்டுமானாலும் எனக்கெதிராக இருக்கலாம்… நான் வாழப் பிறந்தவன்… நான் சாதிக்கப் பிறந்தவன்….

விவேகாநந்தரின்  வீரமுரசு என்ற புத்தகத்தில் பலம் என்ற அதிகாரம் படிக்கப் படிக்க புது ரத்தம் பாய்ந்தது.

Networks Fields and Circuit Theory by J.D.Ryder கையிலெடுத்தான். வேகவேகமாய் பக்கங்களைப் புரட்டினான்…. விவேகாநந்தரை மானசீகமாய் மனதில் உருவகப்படுத்திக்கொண்டான். புத்தகங்களை வேகவேகமாய் படம் பார்ப்பதைப் போல் புரட்டினான். அவ்வளவும் போட்டோகிராஃபிக் மெமரியாக மனதினில் பதிந்தது…. Comma, FullStop உட்பட….

அடுத்து Integrated Electronics by Millman Halkias, Basic Electronics for Scientists by J.Brophy என அடுத்தடுத்த புத்தகங்கள் வெகு விரைவில் படிக்க முடிந்தது. Transmission… Introduction to Electronics.. என பல புத்தகங்கள்… இதில் ஒரு புத்தகம்கூட இதற்கு முன்னால் படித்ததே இல்லை.  இனி Electrnocisல் பந்து எப்படி வந்தாலும் அது சிக்ஸர்தான். ஆனால் இது ஒரு பகுதி மட்டுமே அந்த பேப்பரில். இன்னொரு பகுதி Statistical Mechanics. இதற்கும் ஒரு 50 மார்க். இதையும் எலக்ட்ரானிக்ஸ் போல் ஒரு 20 புத்தகங்களாவது படிக்க வேண்டும்.

இப்பொழுது மணி மதியம் 1:30.

ஊஹூம்….

சத்தியமாய்  பாஸ் பண்ண வழியே இல்லை…..

.இனி  ஒரு 50 மதிப்பெண்களுக்கு Statistical Mechanics படிக்கவேண்டும்…. மினிமம்  50 மார்க் வர வேண்டும் Double Valuationலும். எனவே வெறும் எலக்ட்ரானிக்ஸ்  மட்டுமே எனில் தோல்விதான். இனி கையில் இருப்பதோ  வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே.  எக்ஸாம் ஹாலுக்கு 10 நிமிடங்கள் லேட்டானாலும் 40 நிமிடங்களே ரங்கராஜின் கண்ட்ரோலில் இருந்தது.

இப்பொழுது ரங்கராஜின் ஆழ்மனம் மிகவும்  வேகமாய் இயங்க ஆரம்பித்தது. அவனது ஒவ்வொரு செல்லும் தன் குறிக்கோளை நோக்கி உயிர்ப்புடன் துடிக்க ஆரம்பித்தது.

எளிதில், படிப்பது புரிவதற்காக இந்திய ஆசிரியர்கள் எழுதிய Statistical Mechanics Gupta Kumar Sarma கையிலெடுத்துக் கொண்டான். ஒரு பேனா ஒன்றினை எழுதுகின்றதா என செக் பண்ணி சட்டையில் செருகி வேட்டியிலிருந்து சட்டை பேண்டிற்குப் பரிணமித்து, காலில் அவசரத்தில் ரப்பர் செருப்பை மாட்டிக் கொண்டு எக்ஸாம் ஹாலை நோக்கி விரைந்தான்.

பாதையில்தான்  பூனையும் பாம்பும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

ஒரு கையில் குப்தா குமார் சர்மா  விரிக்கப்பட்டிருந்தது. கண்கள் வேகவேகமாய் அவற்றை மூளைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. ஒரு 30 மார்க்குகளுக்கு நடந்துகொண்டே படித்துவிட்டான்.

எக்ஸாமைத் தவிர வேறு எதுவும் அவன் நினைவிற்கு வரவில்லை. அந்தக் கணத்தினில் வாழ்ந்தான். The Power Of Now.

சரியாக 1:55க்கு எக்ஸாம் ஹாலுக்குள் நுழைய.. மொசைக் தலை விஞ்ஞானிகள்  கம் பேராசான்கள் உடல் நிலை குறித்து விசாரித்து, ‘பரவாயில்லை… அடுத்த வருடம் பாஸாகிவிடுவாய்….’ ஆறுதல் சொல்ல….

வினாத்தாள்  வந்தது. எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே  கண்களில் பட்டது. கண்களில் இருள் சூழ்ந்தது…. படித்ததில் ஒன்று கூட காணோம்….!

முதலில் ப்ராப்ளம் பார்ட்டினைக் கையிலெடுத்தான்.

கண்களை  மூடி கணக்கினை யோசிக்க ஆரம்பித்தான்.

ஆழ்மனம் தானாகவே அந்தக் கணக்கிற்கு விடை காண ஆரம்பித்தது. ஆழ்மனம் தெளிவான பாதையைக் காட்ட அது ரங்கராஜின் அறிவாற்றலுக்கப்பால் நிகழ்ந்து கொண்டிருந்தது

ரங்கராஜின்  மனம் அப்பொழுது அவன் கண்ட்ரோலில்  இல்லை…. எல்லாம் அவன் கைகளுக்கப்பால் நிகழ்ந்தது..

இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்திருந்தது….

இனி தியரி பார்ட்தான்…. கேள்விகளை  உன்னிப்பாகக் கவனித்தான்….

புரிபடவில்லை….

லிங்க்  எங்கோ இருப்பதாய்பட்டது…. பிடிபடவில்லை.,…

எங்கே ஆரம்பிப்பது….?

தெரியவில்லை….

படித்தது  எதுவும் பயனில்லாமல் போனது….

யோசி….யோசி…. யோசனையில்தான் செயல்களின் விதைகள் உறங்குகின்றன…. விதைகளின் உறக்கம் கலைந்து விழிப்பு ஏற்பட்டு அது செயல்களாய் பரிணமிக்க…. விளைவுகள் பிறக்கின்றன….

ஆழமாய்  சிந்திக்கலானான்.

ஏறக்குறைய அது ஒரு Trance State என்றே சொல்லவேண்டும்.

ஆழமாய்  சிந்திக்கும்பொழுது மூச்சு சுத்தமாய் நின்று போகின்றதே…? மூச்சிற்கும் மன ஒருமைக்கும் நேரடியாய் ஒரு தொடர்பிருப்பதாய்பட்டது…. அங்கே ஆழ்மனம் விழிக்கின்றது….

விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புக்களை இங்கிருந்தே பெறுகின்றனர்,…  தங்களது மனதினை பிரபஞ்ச  அறிவுடன் ஒன்றச் செய்கின்றனர்….

ஒரு முறை தையல் எந்திரம் கண்டுபிடித்த விஞ்ஞானி தன் கண்டுபிடிப்பை ஒரு கனவின் மூலமே கண்டுபிடித்தார்….

இவர்  தன் தையல் எந்திரத்தை டிசைன் பண்ணிவிட்டு இறுதியாக ஊசியை  மட்டும் எப்படி வடிவமைப்பது  என்று தெரியாமல் மூளையைக் கசக்கி விடை கிடைக்காமல்  களைப்பினில் தூங்கிப் போனார்.

தூக்கத்தில் கனவு வந்தது. கனவினில் வேடர்கள் வழிமறித்து மிரட்டுகின்றனர். “இன்னும் 24 மணி நேரத்தில் நீ உன் தையல் எந்திரத்தை வடிவமைத்து முடித்திருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் உன்னை இப்படிக் குத்திக் கொன்று விடுவோம்…..” எனக் கையிலிருந்த ஈட்டியால் அருகே துள்ளி ஓடிய ஒரு மான் குட்டியின் வயிற்றினில் குத்தி உறுவிட….  விஞ்ஞானிக்கோ உடல் நடுங்கியது…. அந்த ஈட்டியை மானின் வயிற்றிலிருந்து உறுவும்பொழுது மானின் குடல் சமாச்சாரங்கள் வெளியே வர…. விஞ்ஞானியின் உடல் கனவினில் தூக்கிப் போட… விழிப்பு நிலைக்கு வந்தார்….

கனவு  மனத் திரையில் ஃப்ளாஷியது

ஈட்டி…. வயிறு…. ஈட்டியை உறுவி எடுத்தல்… குடல் வெளியேற்றம்…..

காட்சிகள் டார்டாய்ஸ் கொசு வர்த்தியாக சுருள் சுருளாய் ஃப்ளாஷ்பேக்கின.

இறுதியில் தையல் எந்திரத்திற்கு ஊசியின்  நுண்புழை அதன் அடிப்பாகத்தில் அமைக்கப்பட்டது.

இதே போல் கெகுலே என்ற வேதியியல்  விஞ்ஞானி….

பென்சீன்  என்ற வேதிப் பொருளுக்கு அதன் Physical Structure கண்டுபிடிப்பதில் மிகவும் குழம்பிப்போனார்.  ஒரு மதிய வேளையில் உணவு உண்ட சிறிது நேரத்தில் லேப்பிலேயே ஒரு கோழித்தூக்கம்….

அதில் ஒரு பாம்பு தன் வாலைத் தானே விழுங்குவது போன்ற  ஒரு கனவு…

கனவிலிருந்து  வெளிவந்து யோசித்தபொழுது பாம்பின் வடிவானது ஒரு முழுமையான வட்டமாய் மனதினில் ஃபிளாஷியது. மனதினில் ஒரு மின்னல்… வட்டமாக இருக்குமோ ..? என முயன்றார். அது ஹெக்ஸோகனல் வடிவினில் வந்து நின்றது.

இப்பொழுது ரங்கராஜின் ஆழ்மனம் கூட  ஏறக்குறைய விஞ்ஞானிகள்  இருக்கும் அந்த Trance Stateல் இருந்தது. மூளை மிகவும் ஷார்பாய் வேலை செய்தது. கட கட என அருவியாய் விடைகள் விழ ஆரம்பித்தன….

அந்த  பேப்பரில் யுனிவர்சிடி  செகண்ட் ரேங்க் வந்தது. இப்படி வெறும் இரண்டு மணி நேரமே  படித்து யுனிவர்சிடி செகண்ட்  ரேங்க்… மொத்தமே நான்கு மாணவர்கள் மட்டுமே பாஸ். மற்றவர்களனைவரும் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து ஒழுங்காய் சீரான திட்டத்துடன் தினசரி கடினமாய் உழைத்த மாணவர்கள்.

ஒன்று புரிகின்றது.

மனம்  வலிமையாக இருந்தால் எதையும்  சாதிக்கலாம்….

உலகக் கோப்பையில் கபில் தன்னந்தனியராக  நின்று 175 ரன்கள் குவித்து சாதனை  படைத்து ஃபைனலில் உள் நுழைந்து… ஃபைனலிலும் தோற்கும் அபாயம் இருந்திட்டபொழுதினும் மனோ வலிமையினாலும் எண்ணங்களின் வலிமையினாலும் உலகக் கோப்பையை ஜெயிக்கவில்லையா….?

வலிமை….வலிமை…வலிமை….

வலிமையான  எண்ணங்கள் சாதனை படைக்கின்றன. ஜெயிக்கின்றன. நாம் வலிமையாக இருக்கும் பொழுது இந்த பில்லி சூனியமாவது மண்ணாங் கட்டியாவது….

தன்னுள் நகைத்துக் கொண்டான் ரங்கராஜ். மிகவும் உற்சாகமாயிருந்தான் இந்த நிகழ்வினை மனத் திரையில் ஓட்டியதிலிருந்து.

பாட்டி  சாப்பிட அழைத்தார்.

தனக்குப்  பிடித்த பருப்பும் நெய்யும் மாவடுவும் மோரும் இருந்தது.

ஒவ்வொரு கவள உணவினையும் ரசித்துச்  சாப்பிட்டான். சாப்பிடும்பொழுது அதுவாகவே மாறியிருந்தான். அந்த உணவின் சுவை…. அது உள்ளே பயணிக்கும் விதம்…. என அனைத்தையும் தன்னுணர்வுடன் அனுபவித்துத் தவம் செய்வது போன்றே சாப்பிட்டான்.

சாப்பிட்டு  முடித்தவுடன் அருகிலிருந்த வாஷ் பேசினைத் திருகினான்.

தண்ணீரில் கைகளை நனைத்துக் கழுவிக்கொண்டிருந்தான்.

தண்ணீர் இப்பொழுது கொஞ்சங் கொஞ்சமாக செந்நிறமாக மாறிக்கொண்டே வந்து….

இறுதியில்-

குழாயில் இரத்தம் வந்து கொண்டிருந்தது….!

தொடரும்…….

நன்றி:

The Art of Scientific Inventions By W.G..Bewridge

எண்ணங்கள்.  டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி  1973 வானதி பதிப்பகம்.

Dr. J. B. Rhine, “Scientific Evidence Man has a Soul”,  American Weekly Magazine, August 25, 1946.

Robert G. Jahn, Brenda J. Dunne and Roger D. Nelson, “Engineering Anomalies Research,” (Journal of Scientific Exploration 1, no. 1, 1987): pp. 21-50

Dean Radin, Ph.D. , “The Conscious Universe”, (New York: Harper Edge, 1997).

தவமும்  அனுபவங்களும்…. ரிஷிரவீந்திரன் முத்தமிழ் 2007.

 

படங்களுக்கு நன்றி

பையன்

பூனை

பாம்பு

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…4

  1. நல்ல கதை. நிறைய தெரியாத கேள்விகளுக்கு விடை தெரிகிறது . இந்த பாகம் குறைவாக எழுதிருப்பது ஏன்?
    படிக்க ஆரம்பித்தவுடன் முடிந்துவிட்டது . நிறைய எழுதுங்கள்.

    வித்யா பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.