வல்லமை – சிந்தனை செயல் முன்னேற்றம் – தலையங்கம்

2

பவள சங்கரி

 

கனவு மெய்ப்படல் வேண்டும்!

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிறையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


மகாகவி பாரதியின் உணர்வின் ஊடே உள் நுழைந்து உயிர்ப்பிக்கின்ற உற்சாக மொழிகள். எத்துனையோ சான்றோர்களும் , ஆன்றோர்களும், தியாகச் செம்மல்களும் இதற்குச் சான்றாக நின்று நம்மையும் வழிநடத்தியுள்ளனர்.

இன்றைய விளம்பர உலகில் தான் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்திற்கும் பெரிய பாராட்டும், பட்டமும் எதிர்பார்த்து அந்தக் காரியத்தின் வீரியம் குறையுமளவிற்கு முக்கியமான அடிப்படை விசயத்தில் கோட்டை விட்டு விடுவதையே பெரும்பாலும் காண முடிகிறது. ஆனால் ஒரு சில தன்னலமற்ற தியாகிகள், நாட்டின் முன்னேற்றம் என்ற ஒன்றையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வரும் சில அன்பு உள்ளங்களும், அமைதியாக சில புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாட்டின் இன்றைய தலையாய, தலை போகிற பிரச்சனையே ஊழல் என்பதுதான். எல்லாவற்றிலும் ஊழல்தான் உண்ணும் சோற்றிலிருந்து , வாழும் மண் வரை அனைத்திலும் ஊழல்…..ஊழல்தான். இந்தப் பெருச்சாளிகளைக் களைய வேண்டிய மாபெரும் பணி கண் முன்னே விசுவரூபம் எடுத்து நின்று கொண்டிருக்கிறது.பல நல்லுள்ளம் கொண்ட தன்னலம் கருதாத் தியாகிகளும் ஆக்கப்பூர்வமாக தன்னாலானச் சேவையை அமைதியாகச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அந்த வகையில் தம் பதவிக்காலம் முடிந்த பின்னரும் தம் சேவையை அயராது தொடர்ந்து கொண்டிருக்கும் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களைத் தவிர சிறந்த முன் உதாரணம் வேறு யாராக இருக்க முடியும். நம் நாட்டின் எதிர்காலத் தூண்களான இளம் சிறார்களை பக்குவப்படுத்துவதில் பெரும் முயற்சி மேற் கொண்டிருப்பவர்களில் இவர் ஒரு தனிப்பட்ட பேராசான் எனலாம்.

“ஒவ்வொரு மாணவர்களும் தனித்தன்மையுடன் இருந்தால் உலகம் பாராட்டும் மாணவனாக வலம் வரமுடியும் ஒவ்வொரு மாணவனும் தங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்ள உயர்ந்த குறிக்கோள், தொடர்ந்து தன் துறை சார்ந்த அறிவை வளர்த்தல், கடின உழைப்பு, விடாமுயற்சி இந்த நான்கு பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா 2020ல் வல்லரசாக பத்து தூண்களை பலப்படுத்த வேண்டும். “ என்று மாணவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் தூத்துகுடி பி.எஸ்.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் பேசியுள்ளார்.மிக ஆக்கப்பூர்வமான திட்டங்கள்!

* கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூகப் பொருளாதார இடைவெளியை குறைக்க வேண்டும். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். விவசாயம், தொழில் மற்றும் சேவை துறைகள் ஒருங்கிணைந்து மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். பண்பாடு நிறைந்த தரமான கல்வி சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். விஞ்ஞானிகள், அறிவாளிகள் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

* தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியாளர்களை கொண்ட நிர்வாகம் அமைய வேண்டும். வறுமை ஒழிந்து, கல்லாமை களையப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் ஒழிக்க வேண்டும். இனிமையான, வளமான, பாதுகாப்பான, சுகாதாரமான வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட வேண்டும். உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நாடாகவும், வளமிக்க தலைவர்களை கொண்ட நாடாகவும் உருவாக்க வேண்டும்.

* அந்நிய முதலீட்டை கிராமப்புற சாலைகளை மேம்படுத்துதல், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம்.

* இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் விண்வெளி ஆராய்ச்சியில் 30 சதவீதத்திற்கு மேலாக பணி புரிகின்றனர். நாம் சூரியன், காற்று மற்றும் கடல் அலைகளிலிருந்து ஏராளமான சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம். இன்று 170 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் இருந்து 235 மில்லியன் டன் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். 2020ல் விளை நிலம் 100 மில்லியன் ஹெக்டேராக குறைந்து விடும்

* உணவுப் பொருட்களின் தேவை இரண்டு மடங்காக கூடிவிடும். தண்ணீரின் அளவும் குறைந்து விடும். இதற்கு ஒரே தீர்வு உயர்ந்த தொழில்நுட்பம் மூலம் விளைச்சலைப் பெருக்குவதுதான்.

* ஆரம்ப கல்வி நன்றாக அமைந்தால் தான் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் கல்லூரி படிப்பு நன்றாக இருக்கும். எனவே இதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களையும், ஆசிரியர்களையும் தயார் செய்ய வேண்டும்.

* இன்று இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகளில் உள்ள பெற்றோர் லஞ்சம் வாங்குகின்றனர். மாணவர்கள் தங்களுடைய அன்பால் அவர்களை மாற்றலாம். இதனால் லஞ்சம் இல்லாத நாடாக இந்தியா மாறும் .

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் தன்னலமற்ற இக்கருத்துக்களை சிரமேற் கொண்டு, பெற்றோரும், ஆசிரியப்பெருமக்களும் மற்றும் பொது மக்களும் கடமையாற்றும் எண்ணம் கொண்டாலே போதும் . மனித வளமும், கனிம வளங்களும் நிறைந்த நம் பாரதத் திரு நாட்டில் ஊழலை ஒழித்தால் நாடு வல்லரசாகும் . நம்முடைய கனவு நினைவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

படத்திற்கு நன்றி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வல்லமை – சிந்தனை செயல் முன்னேற்றம் – தலையங்கம்

  1. இன்றைய விளம்பர உலகில் தான் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்திற்கும் பெரிய பாராட்டும், பட்டமும் எதிர்பார்த்து அந்தக் காரியத்தின் வீரியம் குறையுமளவிற்கு முக்கியமான அடிப்படை விசயத்தில் கோட்டை விட்டு விடுவதையே பெரும்பாலும் காண முடிகிறது.

    -நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  2. ஊழல்,லஞ்சம் அறவே இந்நாட்டை விட்டுப் பறந்தோட
    அப்துல் கலாம் அருமையான வழியைக் கண்டு சொல்லியுள்ளார்.
    குடும்பத் தலைவர் லஞ்சம் வாங்கினால் அவரது குழந்தைகளும்
    மனைவியும் எதிர்க்கவேண்டும். “உங்களுடைய சம்பளப் பணத்தில்
    மட்டுமே நாங்கள் வாழ்வோம்! உங்களுடைய லஞ்சப் பணம் ஒரு
    காசு கூட எங்களுக்கு வேண்டாம்” என்று ஒவ்வொரு வீட்டிலும்
    ஆரம்பித்துவிட்டால் சில காலம் அக்குடும்பங்களுக்கு பாதிப்பு
    வரலாம்; ஆனால் நாடு நல்ல காலத்தை நோக்கி வேகமாக
    நகரும் என்பதே உண்மை.” நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!”
    என்பது சங்க இலக்கியப் பாடல். குடியரசு ஆட்சியில் பாரதியார்
    சொன்னது போல “நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்பதை
    எண்ணிப் பார்த்து நன்னடையை நாட்டுக்கு நல்க அடி எடுத்து
    வைப்போம்.
    இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.