கார்த்திகேயன்

கேள்வி : 1

எனக்கு வயது 17 ஆகிறது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு வாயாடி என்றும் திமிர் பிடித்தவள் என்றும் சொல்கிறார்கள். நான் அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவேன். இதனால் என்னை சந்தேகத்துடன் பார்த்து இவளுக்கு கொழுப்பு என்கிறார்கள். மேலும் நான் சிரித்து சிரித்து பேசுவதால் என்னை அது ஒரு அரைக்கிறுக்கு என்று கூறுகிறார்கள். ஆனால் என் தோழிகளை நல்ல பெண் என்று  கூறுவார்கள். என்னை நல்ல பெண் என்று அனைவரும் சொல்ல வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் :

ரொம்ப குழப்பமான மன நிலையாக தெரிந்தாலும் குழப்பம் ஒன்றுமில்லை. அது இயற்கையானது உனக்கு வயது 17 தான். இப்போது சிறுமி பருவத்தில் இருந்து மெச்சுரிட்டி பருவ நிலை வரும் வழியில் வளரிளம் பருவத்தில் நிற்கிறாய். இந்த இரண்டுங்கெட்டான் பருவத்தில் உனக்குள் தோன்றும் ஹார்மோன்கள் மாறுதல்கள் உன்னைக் குழப்பும். அதே நேரம் சமூகமும், நெருக்கமான உன் உறவினர்களும் உன்னை குழப்புவார்கள். எப்படி என்றால் ஒரு சமயம் உடம்புதான் வளர்ந்திருக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தால் உடனே பிள்ளை பெத்துக்குவே. ஆனா இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்கலாம் என்று நினைத்தால் வயதுக்கு தக்கபடி நடந்துக்கிறே, என்பார்கள் ஓகோ அப்படினா நாம் பெரிய பெண் மாதிரி நடந்துக்கலாம் என்று நினைத்தால் வயதுக்கு தக்கபடி நடந்துக்க பெரிய மனுஷி மாதிரி நடந்துக்காதே…….. என்பார்கள். ஒண்ணுமே புரியலையே….. இந்த உலகத்தில் நான் எப்படித் தான் நடந்து கொள்வதாம்? என்ற குழப்பம் உனக்கு மட்டுமல்ல சமூகத்தில் நிறைய 17 வயதுப் பெண்களுக்கு ஏற்படத்தான் செய்யும். இதில் ஒரு பகுவனிலை அடைய வேண்டுமானல் 19-20 வயது ஆக வேண்டும். உன் அக்கா, அம்மா எல்லோரும் உன்னைப் போன்றதொரு குழப்பகால கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறார்கள்.

நீ பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி இல்லை தோழி மாதிரி இல்லை என்றெல்லாம் உன்னைச் சொல்கிறார்கள். அப்படித்தானே. நான் கேட்கிறேன் நீ ஏன் உன் தோழி மாதிரி இருக்க வேண்டும்? நீ நீயாக உனக்கென்று தனித்தன்மை வாய்ந்தவளாக இருக்க வேண்டும் ஒருவர் உயரம், இன்னொருவர் குட்டை உயரத்தைப் போலவும் ஏன் ஆக வேண்டும் அது அவரவர் அளவு. உன் அம்மாவே நீ உன் தோழி மாதிரி இல்லை என்கிறார்கள். உன் அம்மாவும் உன் தோழியின் அம்மா மாதிரியா இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசம் இயற்கை. இதை யாரும் யாருக்காவும் மாற்றிக் கொள்ள முடியாது.

சுற்றி இருக்கிறவர்கள் எல்லோரும் உன்னை நல்லப் பெண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். ஏன் அப்படி எதிர்பார்க்கிறாய்? அனைவரும் சொன்னால் தான் நீ நல்ல பெண்ணா? நீ நல்லதை செய்யும் போது உனக்குள்ளே இருக்கும் நல்லவைகளை நீ உணரும் போதே நீ நல்லப் பெண் தானே மற்றவர்களிடமும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று நினைத்து உன் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஒரு வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக  செய்து முடிக்கும் போது

  • நன்றாக டிரஸ் செய்யும் போது,
  • நன்றாக பேசும் போது,
  •  நன்றாக படிக்கும் போது,
  • மற்றவர்களிடம் நன்றாக நடந்து கொள்ளும் போது.

என் மனதுக்குள் உன்னையே நீ அங்கீகாரம் செய். மகிழ்ச்சி அடை. நான் நன்றாக நடந்து கொண்டிருக்கிறேன் என பெருமிதம் கொள். இதன் மூலம் உன் சக்தி அதிகரிக்கும். நல்லவைகளைச் செய்யும் ஆற்றல் தோன்றும். அப்போது பலரும் பாராட்டித்தானே ஆக வேண்டும்.

கேள்வி : 2

என்னை ஒருவன் காதலித்தான். நானும் அவனைக் காதலித்தேன். என் அப்பாவும் அம்மாவும் அதற்கு சம்மதித்தனர். பிறகு அப்பாவும் அண்ணனும் அவனைப் பற்றி வெளியே விசாரித்தனர். பிறகு அவனைப் பற்றி விசாரித்த தகவல்களை என்னிடம் தெரிவித்தனர். அவன் நடவடிக்கை எதுவும் சரியில்லை எனவும் அவனிடம் இவ்வுலகின் அனைத்து கெட்ட பழக்கங்களும் இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தனர். இதனால் அவனை மறந்து விடும்படி சொன்னார்கள், நானும் என் பெற்றோரின் சொல்படி அவன் உறவை முறித்து விட்டேன். மேலும் எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவருக்கு திருமணம் முடித்த பின் எனது திருமணம் நடக்கும். நான் காதலித்தவனால் ஏகப்பட்ட பிரச்சனைகள். போன் செய்து நான் கல்யாணம் செய்து கொண்டால் அவனைதான் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறான்.. இதுவரை எந்தத் தப்பான விபரீதமும் நடக்கவில்லை.  நான் என்ன செய்ய வேண்டும் என்று நல்ல பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

உங்கள் முடிவுக்குத் தெளிவான பாராட்டுக்கள். கண்மூடித்தனமாகக் காதலித்து ஏமாறாமல் சரியான தருணத்தில் முடிவு எடுத்துள்ளீர்கள். இப்படிப்பட்ட மோசமானவனை நீங்கள் சந்தித்தது உங்கள் துரதிர்ஷ்டமே. அவனுடைய மிரட்டலுக்கு நீங்கள் எக்காரணம் கொண்டும் பணிந்து விடக்கூடாது. அவனால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலையை தெளிவாக எடுத்துக் கூறி அவர்கள் மூலம் இப்பிரச்சனையை நீங்கள் கையாள்வதே நல்லது. உங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உங்களைப் போன்ற துணிச்சலான பெண்களால் தான் இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.

கேள்வி : 3

என்னுடைய தோழியின் வயது 22. அவள் எப்போதும் வாயில் விரல்களில் வைத்து இரண்டு கைகளையும் மாறி மாறி நகத்தையும் சதையையும் கடித்துத் துப்பிக்கொண்டே இருக்கிறாள். இதை நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இந்த கெட்டப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? ஆகவே இந்தப் பழக்கத்தை அவள் கைவிடுவதற்கான வழிகளை சொல்லுங்கள்?

பதில் :

நகம் கடிக்கும் பழக்கம் உங்கள் தோழிக்கோ உங்களுக்கோ யாருக்கு இருந்தாலும் எளிதாக விட முடியும். அதற்கு முதல் வேலை அதென்ன கெட்டப் பழக்கம் இதை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் தான். இன்று முதல் ஒரு நாள் எத்தனை முறை நகங்களை கடிக்கிறீர்கள் என்று நீங்கள் எண்ண வேண்டும். எவ்வாறான நேரங்களில் கடிக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டும். ஆனால் எண்ணிக்கை சூழ்நிலை இரண்டையும் குறிப்பெடுக்க முன் வாருங்கள். எண்ணிக் கொண்டிருக்கும் போதே சிலர் அப்பழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவார்கள். விடுபடாதவர்கள் மொத்த எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு அந்த செயல் மீதே வெறுப்பு கொள்வார்கள். உங்கள் விரல்களுக்கு சற்று அதிக வேலை கொடுங்கள் எழுதுவது, பெயிண்டிங் செய்வது, மெகந்தி போடுவது, தையல் பயிற்சி பெறுவது இப்படிப்பட்ட வேலைகளில் விரலுக்கு வேலை இருக்கும். கடிக்க விரலும் கிடையாது, ஒய்வாக இருக்கும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது இதில் கொஞ்சம் உச்சக்கட்டம்

பொதுவாக ஒரு விஷயம் நகம் கடிக்கிறவர்களிடம் மனக் குழப்பம் அதிகம் இருக்கும் அமைதி இராது. பதட்டம் அடிக்கடி வரும் பதட்டமான நேரங்களில் அப்படியே விரல்களை வாய்க்குள் கொண்டு போய் நகங்களை கடி கடி என கடிப்பார்கள். மன அமைதி இன்மைக்கு என்ன காரணம் என்று பார்த்து அமைதி தேடுங்கள். இப்படியே அடிக்கடி கடித்தால் அழுக்கும் நகத்துண்டுகளும் வயிற்றுக்குள் போய் வயிற்றுப் பிரச்சனையை உருவாக்கப் போகிறது. வாய்க்குள் சுவையான எதையாவது போட்டு மெல்லவோ, சுவைக்கவோ செய்தால் நகம் கடிக்கும் பழக்கம் குறையும்.

சிறு வயதில் பெற்றோரிடம் அதிகம் ஒட்டாமலும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருக்கும். குழந்தைளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் வருகிறது. கை சுவைத்தல், படுக்கையில் சிறு நீர் கழித்தல் போன்றவையும் இது போன்றதே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *