கிரேசி மோகன்

 

கவியோகியார் கந்தரலங்காரம் என்றவுடன் என் நினைவுக்கு கந்தரனுபூதி வந்தது….கபாலி கோயில் ‘’முத்துக்குமாரச்ச்சாமி’’ சன்னிதி சுவற்றில் பொறிக்கப் பட்டிருக்கும் ‘’கமலா குகசூ சுககுங் குமதே’’ சந்தத்தில் அருணகிரியார் எழுதிய ‘’கூகா யெனயென் கிளை கூடியழ….பெம்மான் முருகன் பிறவான் இறவான்….குருவாய் வருவாய் குகனே அருள்வாய்’’ வரிகள்….எனது டாக்டர் திருமணத்திற்காக காளஹஸ்தி போகையில், டிரைவர் பாதி வழியில் ‘’சார்….வலது கை பக்கம் போனா ‘’சிறுவாபுரி முருகர்’’ கோயில் வரும் என்றார்….நேரம் இல்லாததால் போக முடியவில்லை….ஆனால்….பூசலா நாயனார் போல காளஹஸ்தி போய் வருவதற்குள்,மனசுக்குள் ‘’கந்தரனுபூதி’’ மெட்டில் 25 பாடல்கள் எழுதி எனக்கு எழுத்தறிவித்த பூனா நண்பன் சு.இரவியிடம் படித்துக் காட்டினேன்….அவன் ‘’சிறுவாபுரி சதகம்’’ எழுதுமாறு பணித்தான்….எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்….அடியேன் குறையொன்றும் இல்லா கிரேசி….நிறை இருப்பதாக நம்பும் மோகன்…..இத்துடன் அடியேன் வரைந்த முருகர் ஓவியத்தையும் இணைத்துள்ளேன்

————————-
காப்புச் செய்யுள்
———————-
“உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து
தரைசே ரவடித் தருள்வே ழவரே
சிறுவா புரியார் சதகம் எழுதத்
தருவாய் எனக்குத் தமிழும் திறனும்”….

சிறுவாபுரி சதகம்….கந்தரனுபூதி பாதிப்பில்….

 

ஓவியம் : கிரேசி மோகன்
ஓவியம் : கிரேசி மோகன்

“தனியா னைசகோ தரனார் துணையால்
வனமா துடல்மே விடவே டுவனாய்
தனியாய் வருவேல் தணிகா சலனே
வினைதீர்த் திடவா சிறுவா புரியே”….(1)

“அடடா எனவூர் அனுதா பமுற
சுடுகா டுடலே கிடுநாள் துணையாய்
உடனே வருவாய் உமைபா லகனே
இடுவாய் பிறவா இடமே விடநான்”….(2)

“புதனோ டொளிசேர் பொலிவாய் உமையாள்
சுதனே சிவனார் சிறுவா புரிவாழ்
மதலாய் பெருமாள் மருகா வருவாய்
அதுவாய் இதுவாய் எதுவா கிலுமாய்”…(3)

“உனைநா னறிவேன் உமையாள் சுதனா
திணைமா துடன்சேர் தணிகா சலனே
எனைநா னறியேன் எழுவாய் பயனாய்
சினைநான் உயிர்நீ சிறுவா புரியே”….(4)

“பணநா கவணை பெருமாள் மருகா
வானமா துடன்வா னவரா னையுடன்
மனவே கமுடன் மயிலே றிடவே
ஷணமே வருவாய் சிறுவா புரியே”….(5)

“ஆசா பாச மதனால் உலகில்
காசும் புகழும் குறியாய் உழலும்
நீசன் எனையுன் நிலைசேர்த் திடவே
வாஷண் முகனே வழிகாட் டிடவே”….(6)

“நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
உமைச்சி வேலை உடையோய் படையாய்
சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….(7)

“தீயாய் வளியாய் திசைமண் ஜலமாய்
காயாய் மலராய் கனியாய் மரமாய்
வாயாய் ருசியாய் வயிறாய் பசியாய்
நீயாய் மறைவாய் நிருவா கனனே”…(8)

“அய்யோ யெனயென் கிளைகூ டியழும்
அய்யோ மணவா ளரவர் வரவால்
அய்யா அதனால் அனுபூ தியுறச்
செய்யாய் முருகா சிறுவா புரியே”….(9)

“அண்ணா மலையும் அவன்பா திபடர்
உண்ணா முலையும் சிறுவா புரியில்
முன்னால் இருக்க முகநா ணமுறும்
பெண்ணா லோலப் பிடிமால் மருகா”….(10)

“மரணா கதியில் மனிதா செலுமுன்
சரணா கதிசெய் சிவனார் செவியில்
மறையோ தியவன் திருவே ரகனை
சுரர்நா யகனை சிறுவா புரியை….(11)

“அத்திக் கிறைவா அமரா வதியின்
வெற்றிக் குதவும் விசுவேஸ் வரரின்
நெற்றிக் கனலே நெடுமால் மருகா
சுற்றத் துடன்வாழ் சிறுவா புரியே”….(12)

“எதிரா ஜனரின் எஜமா னவனை
பதிநூ றுடன்எண் படர்மால் புகழை
துதிசெய் அருணை கிரிபோல் எழுத
உதவத் தமிழே உடனே வருவாய்”….(13)

“அயனார் அரியார் அறியா நுதல்வாய்
நயனார் புதல்வா நரையும் திரையும்
மயமாய் இவனா குமுனே வருவாய்
பயனாய் சிறுவா புரிவாழ் பொருளே”….(14)

“ஓரா றுமுகம் ஒளிரும் இருதாள்
ஈரா றுபுயம் இறைவா மறவேன்
சேறாம் உலகில் செந்தா மரையாய்
போரா டஅருள் பஞ்சா மிருதா”….(15)

“பாதிக் கொருபெண் பரமேஸ் வரியின்
ஆதிக் கமுறும் அரனார் நுதற்க்கண்
ஜோதிக் கருவே சிறுவா புரியில்
சாதித் தருள்வோய் சரணா கதியை”….(17)

“கிரௌஞ்ச மலையைக்  கூழா கிடவேல்
எறிஞ்ச முருகா என்றும் இளையோய்
குறிஞ்சி மலைவாழ் கிழவா தமிழைத்
தருஞ்சி வைமுலை திகழ்வோய் சரணம் ….(18)

“கூறும் அருணை கிரியின் புகழில்
ஏறும் மயிலோ டெழில்சே வலுடன்
சூரன் பதுமன் சிரம்வாங் கியவா
சேரும் தமிழே சிறுவா புரியே”….(19)

“கல்லா லமர்வோன் காதில் ப்ரணவச்
சொல்லாழ் பொருளை ஸ்லாகித் தவனே
எல்லாம் அறிந்தும் எனைநான் அறியேன்
வல்லான் ரமணர் வழிசேர்த் திடுவாய்”….(20)

“தள்ளா டிவுடல் தடுமா றிடவாய்ப்
பல்லா டிடமண் புதையப் படரும்
புல்லா டிடநான் போகா வகையென்
உள்ளா டிடவா உமையாள் சுதனே”….(21)

“வடமா லையுடன் வனமா லையணி
திடமா ருதிதோ ழனவன் மருகா
கடலா டிடுவாய் குடிபோ கியவா
உடனே வருவாய் உயிர்மெய்ப் பொருளாய்”….(22

“வேதா கமநூல் வழிபோ னதிலை
ஏதா கிலும்செய் துனைஏத் தவிலை
சாதா ரணநென் சகமா யையற
நீதான் வரணும்  நிகமான் தகனாய்”….(23)

“இம்மா மடையன் இறைவாழ் வதனில்
எம்மா திரியும் இசையான் எனவே
சிம்மா சனமுன் சீர்பா தமுற
சும்மா இருயென் றொருசொல் அருளேன்”….(24)

“சொப்பன வாழ்வில் சுகமாய் உறங்கி
இப்புற உலகே இயல்பென் றிருந்தேன்
அப்பர ஞானம் அடியேன் பெறவே
செப்பிட வாராய் சிறுவை முருகா”….(25)

“எஞ்சா மியெனக் கருளே ரகனே
பஞ்சா ம்ருதமே பழனிக் குமரா
அஞ்சாய் எனவுன் அடியார்க் கருளும்
செஞ்சாந் துநிறச் சிறுவை முருகா”….(26)

“சிந்தை மகிழச் சிவனார் செவியில்
முந்தைப் பொருளின் முழுமை உரைத்த
கந்தச் சுவையே செந்தூர் வளரும்
சந்தக் கவியார் சிறுவை முருகா”….(27)

“இருவாட் சிமலர் இருட்கூன் தலணி
குரவாட் சியர்கோன் குலவா ரிசினை
கரிசாட் சியமாய் கரம்கொள் சிறுவா
புரியாட் சியமர் பொலிவே முருகா”….(28)

“அறுகார்த் திகையர் ஒருமூர்த் தியென
உருவாக் கியவா உமைபா லகனே
முறைமா மன்மகள் குறமா தணைய
சிறுவா புரிவாழ் சிவதே சிகனே”….(29)

“மலைவாழ் முகிலே ,அலைவாய் அமுதே
சிலைஜா னகிரா கவனார் மருகா
குலவே டமகள் குறமா தணைய
சிலையா கியருள் சிறுவா புரியே”….(30)

“கண்மாய் தனில்கார்த் திகைமங் கையரால்
ஒண்ணா னவனே ஓமா றுமுகா
என்னா வியுடல் பொருள்யா வையும்நீ
நன்நாள் இதுவே நலம்சேர்த் திடவா….(OR )
அண்ணா சிறுவை அழகா வருக”….(31)

“மயில்வா கனனே அயில்வே லவனே
கயிலா யசிவன் குருவா னவனே
பயிலா தழின்தேன் பரஞா னமதை
மயல்தீர்த் தருள்வாய் முருகா சரணம்”….(32)

“பிடிவா தமுடன் பிழைசெய் திடுமென்
கடிவா ளமிலாக் குதிரைப் புலனை
அடிபோ ட்டதைஆண் டருளச் சிறுவை
வடிவே லவரே வருவீர் குருவாய்”….(33)

“வனபாக் கியமாய் வள்ளி இருக்க
தனபாக் கியமாய் தாரிணி சுரக்க
சினம்போக் கியவா செந்திற்க் கடலில்
மனபாக் கியமாய் வழிகாட் டிடவா”….(34)

“கிழவே டமுடன் குறமா தணையும்
மழுமான் சிவனார் விழிபா லகனே
அழவேண் டிவரும் அடியார் வினையை
விழத்தீண் டிடுவேல் விடுநா யகனே”….(35)

“வானாய் நிலநீர்  வளியாய்க் கனலாய்
ஆணாய் அலியாய் அவளாய் அருவாய்
ஆனாய் ஜடமாய் அறிவாய், ரமணர் (OR )அகந்தை
நானாய்ன் துனைநா டிடவா முருகா”….(36)

“எப்படி வருவான் எமனென் றறியேன்
அப்படி வருமுன் அனுபூ தியினை
இப்படித் தானென் றிரவுக் கனவில்
செப்பிட வாராய் சிறுவை முருகா”….(37)

“முற்றம் வரையில் மனையாள் வருவாள்
சுற்றமும் பெற்றதும் சுடுகா டுவரை
கற்றதும் கொண்டதும் கால்தூ சிபெறா
நற்றமி ழேவா நமனார் வருமுன்”….(38)

“மாவாய் பிளந்த மதுசூ தனர்க்கு
ஆவாய் மருமான் அவன்சோ தரியால்
வாவா எனகா டழைக்கும் தருணம்
போபோ எனவீ டுபுகுத் திடவா”….(39)

“தந்தைக் கொருமந் திரம்தந் தவரின்
சிந்தைக் கபிமா னசிரோன் மணியே
கந்தக் கனலே குருவாய் அருள்வாய்
மந்தப் பயலென் மதம்மாற் றிடவே”….(40)

“வாயிட் டயென்பின் வடித லென்றே
நாயிட் டமொடு நறுக்கும் நாவை
ஆயிற் றதுபோல் அடியேன் வாழ்வு
பாயுற் றுடும்முன் பிணியோட் டிடவா….(41)

“தப்பா னவாழ்க்கை தவறா னசேர்க்கை
இப்பா வியுற்றான் இதனா லெமன்கை
ஒப்பா ரிவைத்தூர் அழுமுன் செவியில்
செப்பாய் முருகா சிவஞா னபோதம்”….(42)

“திருவோ டணையும் திருமால் மருகா
திருவோ  டணையும் திருவா திரையான்
பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)

“வாசத் துழாய்மால் வயிற்றுப் புதல்வி
நேசக் குறத்தி நினைவோய், திருத்தைப்
பூசத்  திறைவா ப்ரணவப் பொருளை
ஈசர்க் குபதே சிகனே இறைவா….(44)

“வருந்தாய் மனமே வருவான் முருகன்
பிருந்தா வனமாய் பொழிவான் அருளை
கருந்தா மரைக்கண் குறத்தி மணாளன்
திருந்தா தவர்க்கும் மருந்தா கிடுவான்”….(45)

“எலிவா கனரின் இளையோய், சபரிப்
புலிவா கனர்முன் பிறந்து வளர்ந்த,
கிலிநா கமுறக் கிளம்பும் அகவல்
ஒலிவா கனரே உடனே வருக”….(46)

“கீரன் துதிசெய் ஆற்றுப் படையை
பேரன் புடனே ஏற்றக்  குகையுள்
சேரும் புலவர் சிறைமீட் டிடவே
கூர்வேல் எரிந்து கிரிசாய் குகனே”….(47)

“சிறுபா லனென மதியா துசெலும்
மறைநான் முகனார் மிகுகர் வமற
சிறைசே றயிடும் சிவதே சிகனே
கரைசேர்த் திடுவாய் கடலா டுகுகா”….(48)

“கன்றா டிடவேய்ங் குழலோன் மருகா
மன்றா டிடுவோன் மகனே புவியில்
குன்றா டிடுவோய் குருவாய் வருவாய்
மன்றா டுகிறேன் மனம்வைத் தருள்வாய்”….(49)

“ஆகா இவனே அதிமே தையென
பாகாய் உருகும் பொருளுள் ளவரை
மோகா சனத்தில் முனியாய் இருக்க
ஏகாக் ரமதை எளிதாக் கிடுவாய்”….(50)

“மாலா டிடும்யவ் வனம்சொப் பனமே
கோலா டிடும்மூப் பதுநிச் சயமே
வாலா டிடும்வாழ்க் கையைவிட் டுவடி
வேலா யுதன்தாள் தலைவைத் திடுவாய்….(OR )
வேலா யுதன்தாள் வனசம் தொழுவாய்”….(51)

“நூறோ டிடவே தேரோ டியமால்
சீரா டிடுமூர் சிறுவை மருகன்
ஈறா றுபுயன் பேரா றுமுகன்
நீறா டநுதல் நினைவாய் மனமே”….(52)

“கள்ளப் புலனைந்த் துறவா லகந்தை
மெல்லப் புகுந்து மமதை மனமாய்
உள்ளத் தறையில் உனைபூட் டிடுவான்
வள்ளிக் கணவன் வாஞ்சைக் கிலைதாள்”….(53)

“புதிராம் புவியில் பொழுதோட் டிடவே
சதிரா டியபின் சலியும் மனமே
எதிரா ளியெமன் எதிரே கிடுமுன்
கதிர்வே லவனே கதியென் றிடுவாய்”….(54)

“மமகா ரமதை மனிதா விடுவாய்
எமனே கிடுமோர் எழிற்கா லையிலே(one fine morning )
சுமையா கிடுவாய் சுடுகா டுவரை;
சமபா வமுற சிறுவா புரிசேர்”….(55)

“பரங்குன் றலைவாய் பழம்வீழ் பொழில்,கோல்
கரங்கொள் பழனி ,குமிழ்வாய் சிவனார்
கரங்கொள் கிரியே ரகமும் தணிகை
வரங்கொள் அடியார் வரவீ டுடையோய்”….(56)

“முத்தாய் அருணை முனிநா எழுதிக்
கொத்தாய் அடைந்தாய் கவிசந் தமதை
அத்தா அதுபோல் அடியேன் அளிப்பு
கத்தா ழையெனின் கமல மெனக்கொள்”….(57)

“கிரியார் கந்த ரனுபூ தியின்மேல்….(OR )
அருணை கிரியார் அனுபூ தியின்மேல்
வெறியால் விளைந்த வடிகா லிதுவே
சரியா தவறா சதகம் அறியேன்
விரிஆர் வமிதை வளர்பக் தியென”….(58)

“பாக்கள் வருதல் பனிமா மலையோன்
தீக்கண் மகனுன் தயவென் றெண்ணி
ஊக்க மடைந்தேன், ஓங்கும் தமிழின்
தாக்க மெனநீ திரைபோ டாதே”….(59)

“அம்பாள் மகனே அரிமால் மருகா
உன்பால் உருகி உனைநான் அடைய
வெண்பா சதகம் வடித்தேன் ,புகழின்
சம்பாத் தியமாய் சொல்லி விடாதே”….(60)

“எமாதி கணமே கிடுநாள் ரமண
சமாதி நிலையில் ஸ்திரமாய் இருக்க
ரமாதி மாலர் ரமிக்கும் மருகா
உமாதி ஈசர்க் குகந்தோய் அருள்வாய்”….(61)

“உள்ளக் கனகல் லையுடைத் தெறிய
மெல்லத் தலைநீட் டிடு(ம்)ஆன்  மவொளி
புல்லைப் புலியாக் கிடுமிக் கலையை
தெள்ளத் தெளிவாக் கிடுதே சிகனே”….(62)

“அலையும் மயிலை, அயில்வேல் அணிசே
வலையும், வனவான் வளையார் தமையும்,
மலையும், மலையே றிவளர்  உனையும்,
முளையும் சதகம் மதிலா டிடவை”….(63)

“தாரா சுரன்தன் தவவாழ் வதனால்
பேரா சையுறப், பலிவாங் கிடவே
வீரா சனத்தோன் விழிவாய் பிறந்த
ஆரா அமுதே அமரர் துணையே”….(65)

“கெட்டாள் திருந்தி குருவாய் அழைக்க
சிட்டாய்  வருவான் சும்மா இருக்கத்
தொட்டோ திடுவான் திருவா சகத்தை
முட்டாள் மனமே முனியச் சிறுவன்”….(66)

“பந்தத் தைவிடு பாசத் தைவிடு
சொந்தத் தைவிடு சோகத் தைவிடு
சிந்தித் துவிடு சிறுவா புரிவாழ்
கந்தத் தனைநீ கயிலா யமுற”….(67)

“சம்பந் தாண்டான் ஸ்தம்பித் திடவே
நம்பும் கிரியார் நவிலச் சந்தம்
கம்பம் தனிலா டியெழும் இளையோய்
உம்பர் துணைக்கு உருவா கியவா”….(68)

“கனிகை கிடைக்க ககனம் சுற்ற
புனிதர் கணேச பிள்ளைக் களிக்க
தணியா சினத்தில் தண்டா யுதனாய்
முனியாய் பழனி மலையே றியவா”….(69)

“அமரா வதியின் அணிகா வலனாய்
சமரால் கொடுசூ ரனுடல் கெடவே
உமையாள் கொடுவேல் உதிர்த்து அலைவாய்
குமரா சுரர்பெண் கரங்கொள் முருகா”….(70)

“எதிர்பார்த் திருந்த எமனே ளுகையில்
சதுர்வே தனைவெஞ்ச் சிறைவைத் திடுவோய்
கதிர்கா மமதில் கனிந்து பழமாய்
உதிர்சோ லைமலை உறவே வருக”….(71)

“பழுதூ றியவாழ் வினில்போக் கிரியாய்
பொழுதோட் டினைஐம் புலனார்  வமதால்
தொழுதேத் திடுவாய் கழுகா சலனை
முழுதாட் கொளவான் மயிலே றிடுவான்”….(73)

“அயலார் சிரிக்க அருகார் வெறுக்க
மயலா டிமகா மடுவீழ் கையிலே
செயலா கிடுசிந்தை தையில்சீர் மிகவே
வயலூர் வளர்வாழ் வதன்தாள் விழுங்கோள்”….(74)

“பதினா றுபெரும் பெருவாழ் வுபெற
அதிகா ரவிடை அமர்வோன் நுதல்நீ
றதுகா யவுதித் தனலாய்ப் பிறந்த
பதியா றுடையோன் பதம்மே விடுவாய்”….(75)

“சேதா ரமிலா செய்கூ லியிலா
ஆதா ரமருள் அயில்வே லவனின்
பாதாம் புயமே பரமார்த் திகமாம்,
பேதாய் மனமே பணிந்தேத் திடுவாய்”….(76)

“மனமா ஸனமாய் மயில்வா கனமாய்
குணம்கோ ழியெழுப் பதிகா லையுமாய்
முனைவேல் மதியாய் மனையுன் மலையாய்
தினமாண் டிடவா திணைமா தணைவோய்”….(77)

“திகழா பரணம் திடமார்  பசைய
நகைபூட் டிடநா டகமே டைதனில்
நகைப்பூட் டிடவா நடுநா யகமாய்
நகைபூத் திடுவாய் நதிபா லகனே”….(78)

“அதிகா ரமவா அழுக்கா றவச்சொல்
குதிகோ பமிலா குணம்வாய்த் திடவே
சுதிவள் ளுவனார் சொலும்வார்த் தையினை
மதியேற் றிடவை மருதா சலனே”….(79)

“மிகவாட் டமுறும் மனிதா ,ரமண
அகநாட் டமுற அங்குஷ் டமென
குகநாட் டியம்காண் குகையாழ் மனதில்
சுகசாட் சியமாய் சும்மா இருநீ”….(80)

“குசனார் லவணார்  அசுவ மதைத்தம்
வசமா கயிரா கவன்வா ளியெதிர்
அசலம் சிறுவா புரிவாழ் அழகா
வசன முரைக்க வருவாய் குருவாய்”….(81)

“சோணை ரமணே சரைப்போல் சதமாய்
ஞானம் பெறநா டிடுசெந் தமிழின்
மோனை எதுகை யெனவள் ளியும்தே
வானை தழுவும் வடிவே லவனை”….(82)

“கங்கா தரனின் கபாலி புரியில்
சிங்கா ரமயில் சுமையாய் அமர்ந்து
மங்காப் புகழை மயிலைக் களித்தோய்
எங்கா துரைக்க சங்கோ சமதேன்”….(83)

“முருகா சரணம் மல்லாண் டிடுவோன்
மருகா சரணம் மனைவீ டுதர
அருகா மையிலூர் சிறுவா புரிவாழ்
குருகா வலதோள் கொடுதோ ழமையே”….(84)

“பிடிவா தகுணப் புலனால் அடைந்த
பிடிவா தகபம் பித்த மஜீர்ண
நொடிநோய் களெமை நெருங்கா தபடி
கொடிகோ ழியைஏந் துகலா பகுகா”….(85)

“காவித் துணியில் கரைவேட் டியினில்
தாவித் திரிந்தேன் திசையே றுமயில்
ராவுத் தனனுன் ரசபா தமதை
சேவித் துணர்ந்தேன் சகமே பரமாய்”….(86)

“பணக் காரனுமே பலசா லியுமே
கணக் காளியுமே கரிநாள் தனிலே
மனக்லே சமுடன் மடிசாய்ந் திடுவான்
மனக்காய் எதற்கு மலைவாழ் பழமே “….(87)

“சூதா டிடுவாய் சுகமேந் திடவே
மாதா டிடுவாய் மனமே ,சுமப்பாய்,
வேதாந் தியென வெறும்கோ வணமாய்
தீதாண் டிடும்தென் பழனிச் சுவையை”….(88)

“பாகத் துமையாள் நெஞ்சார் வமுறும்
போகர் சமைத்த பஞ்சா ம்ருதமே
ஏகப் பொருளே எஞ்சா மியெனக்
காகத் திறவாய் கோயிற் கதவை”….(89)

“தெண்டா யுதமோர் திருக்கை பிடிக்க
கொண்டாய் இடுப்பில் கரமொன் றினைநீ
பண்டா யநிலை பரமார்த் திகத்தை
விண்டோ திடுஆ விநன்வாழ் முருகா”….(90)

“மந்தா கினியேந் திடமா துமைபால்
வந்தாய் பெறவே வடிவேல் தனையே
பந்தா டிடுதே புலனைந் துமெனை
தந்தா யுதன்பின் தவழ்வோய் அருள்வாய்”….(91)

“இக்கா சினியில் இழவே புரிந்து
அக்கா சியில்அந் திமம்கொண் டிடுவாய்
முக்கால் சிவனம் முருகன் அருள்வான்
உக்கார் சிவனே உறும்கா சியதே”….(92

“சுப்ர மணிய புஜங்க மதிலே
சர்ப்பம் எனஆ டினைசங் கரனால்
தர்பை வழித்த தமியேன் திருநா
அற்பம் இதிலா டிடுமண் புழுவாய்”….(93)

“காட்சி கொடுத்து கற்கண் டளித்து
தீட்ச தரின்வாய்  மொழிகீர்த் தனையாய்
ஆட்சி புரிந்தோய், அவர்தம் குருவாய்
தீட்ஷை கொடுத்த தணிகை குகனே”….(94)

“ஒலிபா ஷைவரா துருகித் தவிக்க
கலிவெண் பாவை குமர குருவுக்
அளிசீ ரலைவாய் அகக்கா ரிகளோ(டு)
ஒளியாய் விளங்கும் உயர்வான் பதியே”….(95)

“பழம்காய் இலைஆல் மரம்வேர் விதையாய்
விழபுள் விழுங்கி அதைவே றிடமாய்
புழங்கப் புதைக்கப் புதிதா வதுபோல்
விழுவாய் கனலாய் எழுவாய் புனலில்
தொழும்தாய் வளர்சேய் பழனிக் குமரா”….(96)

“சதிசெய் திடுசங் கரன்கைக் கனியால்
பதியாய் திருவா வினன்வாழ் பரமே
இதிகா சபுரா ணமறை புகழும்
துதிகே சவனார் மருகா துணைவா”….(97)

“சிறுவா புரியில் சதகம் தொடங்கி
திருவா வினன்சீர் தலத்தில் முடிய
நிறைவேற் றியவா நதிவே கமுடன்
மறவேன் உனைமால் மருகா சரணம்”….(98)

“பாலும் பழமும் பஞ்சா ம்ருதமும்
கோலும் இடுப்பில் கரமும் கொடுப்பேன்
நாளும் இவன்நா டகமே டையில்செங்
கோலும் குடையாய் கொடியேந் திடச்செய்”….(99)

“தணிகை ,பரங்குன், ரலைவாய் , திருவா
வினன்கை கனிகொள் பொழிலே ரகமாய்
கனிகை இருக்க இவர்க்காய் அவர்க்காய்
இனிகை ஏந்தாய் ,இறைசேய் பதம்சேர்”….(100)

சுபம்
முடிவு
மங்களம்

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிறுவா புரி சதகம்

  1. இறையருள் இன்றி வருமா இதுபோல்
    “திருவோ டணையும் திருமால் மருகா
    திருவோ  டணையும் திருவா திரையான்
    பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
    சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)
    மோகனின் கவிதை உச்சம்! முருகன் ஓவியம் அற்புதம்.
    கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *