–சக்தி சக்திதாசன்.

சக்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

மற்றொரு மடலில் மனந்திறந்து உங்களுடன் பேசும் ஒரு சந்தர்ப்பம்.

2014ம் ஆண்டு பிறந்ததுதான் தெரியும். இதோ 7 மாதங்கள் ஓடி மறையும் வேளை. வாழ்க்கையை நாம் மாதங்களில் கணக்கிட்டால் கிடைப்பது எமக்கு அதிர்ச்சியே !

இலண்டனில் பலவருடகாலமாக வசித்து வரும் எனது பால்ய நண்பன் ஒருவனுடன் அன்றொருநாள் தொலைபேசியில் உறவாடிக் கொண்டிருந்தேன். மிகவும் சுவையாக பேசக்கூடிய அவன் தந்த ஒரு தகவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையே தந்தது.

அப்படி அவன் என்னதான் கூறி விட்டான் என்கிறீர்களா?

இந்த உலகில் வாழும் மனிதர்களின் சராசரி வயது 70 என்று எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் ஒரு மனிதனின் வாழ்க்கை ஏறக்குறைய 840 மாதங்கள் தானே !

உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்வோம் வாழ்க்கையில் நான் 56 வருடங்களைக் கடந்து விட்டேன் அதாவது 672 மாதங்களை வாழ்ந்து முடித்து விட்டேன்.

சரி மனிதனின் சராசரி வாழ்க்கையோ 840 மாதங்கள் அதிலே 672 போய்விட்டால் எஞ்சி இருப்பதோ 168 மாதங்களே !

அடடா இனிக் கடக்கும் ஒவ்வொரு மாதமும் இந்த 168ல் ஒன்றை எடுத்துச் செல்லப்போகிறது . . . .

எண்ணும் போது கொஞ்சம் அச்சமாக இருக்கிறது இல்லையா ?

இன்னும் பார்க்க வேண்டியது, பழக வேண்டியது, சுவைக்க வேண்டியது வாழ்க்கையில் அநேகம் இருக்கிறதே. ஒருவேளை எனக்கு நேரம் கிடைக்காமல் போய்விடுமோ ? எனும் சந்தேகம் மனதை ஆக்கிரமிக்கிறது இல்லையா ?

இவ்வுண்மையை அழகாக எடுத்துச் சொன்ன என் நண்பன் என் மெளனத்தைக் கண்டதும் பெரிதாகச் சிரித்துக் கொண்டே ” என்ன பயந்து விட்டாயா? “ என்று கேட்டான்.

“இல்லேடா கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது ” என்றேன் சமாளித்துக் கொண்டே.

அட இதைப்போய் ஏன் எமக்கு சொல்கிறான் என்கிறீர்களா? அன்பினியவர்களே ! வாழ்க்கையின் நீளத்தைக் கண்க்கிடும் போதுதான் அதன் உண்மையான அர்த்தம் விளங்குகிறது.

எதையோ தேடி, எங்கோ ஓடி, யார் யாருடனோ தேவையற்ற சில்லறை விடயங்களுக்காக மனஸ்தாபப்பட்டு இதெல்லாம் எதற்காக மீதமிருக்கும் இந்த எஞ்சிய மாதங்களையும் மகிழ்வில்லாமல் ஆக்குவதற்காகவா ?

மனித வாழ்க்கை எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதை மகிழ்வுடனும் அமைதியாகவும் வாழ வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தார்மீகக் கடமையாகிறது..

எனது மகனின் திருமணத்திற்காக மூன்றுவார காலம் சென்னை சென்று கடந்தவாரம் திரும்பி வந்தேன்.

சென்னையில் நான் தங்கி இருந்த சமயம் பல சமயங்களில் பல கால் டாக்ஸிகளில் பிரயாணம் பண்ண வேண்டிய தேவையிருந்தது.

அப்படிப் பயணிக்கும் பொழுதுகளில் பல வித்தியாசமான கார்ச் சாரதிகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையும் எனக்குத் தந்தது புதுப்புது அனுபவங்களே !

வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று எண்ணும் போது அவர்களின் மனத்திடம் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் ஒரு 75 சதவிகிதம், நான் 19 வயது இளைஞனாக இருந்தபோது எனக்கு இருந்திருந்தால் எத்தனையோ சாதனைகள் படைத்திருக்கலாமே. அடடா, இன்னும் சராசரி 168 மாதங்களே எஞ்சியிருக்கும் போது இத்தனை அனுபவப் பாடங்களா ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அத்தோடு சேர்ந்து ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அந்த எல்லாம் அறிந்த ஆதிமூலம் எனக்கு இப்பொழுது  இவைகளை அறியத் தருகிறான். அட எமக்குப் பயன்படாவிட்டால் என்ன எனது அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வைப்பது என் கடமை எனும் எண்ணம் எனக்கு பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது.

சிலநேரங்களில் சில மனிதர்கள் சில வகையினில் எம்மைப் பாதிப்பார்கள் அந்தப் பாதிப்புகளில் இருக்கும் அனுகூலங்களை மட்டும் நாம் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டால் எதிலுமே குறை காணும் சுபாவம் எம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அகலத் தொடங்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொருவருக்காகவும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் காத்திருக்கிறது. அல்லாதவற்றை விலக்கி அவற்றைக் கண்டுகொள்ளும் ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டுள்லோமா?

இதுவே எம்முன்னால் இருக்கும் கேள்வி !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

 

 

 

 

 

 

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *